அத்தியாயம் – 4

ரிஷியை இடுப்பில் வைத்துக் கொண்டு சமையலறையில் மும்மரமாகச் சமைத்துக் கொண்டிருந்தாள் தன்யா. வெகுநாட்களுக்குப் பிறகு அவளது பெற்றோர் வருவதால் மனதில் ஓர் பரபரப்பு. அப்பாவுக்குப் பிடித்த சாம்பார், அம்மாவுக்குப் பிடித்த காய், தங்கைக்குப் பிடித்த பாயசம் என்று பார்த்து பார்த்துச் செய்து கொண்டிருந்தாள்.

அவளது மனம் போலவே அன்று ரிஷியும் அதிகம் அழுது தொந்திரவு செய்யாமல் இருந்தான்.காதல் திருமணத்தைப் பெற்றோர் விரும்பவில்லை என்றாலும்,அவளது இப்போதைய வாழ்க்கையைப் பார்த்து மனமிரங்கி வந்து அவளைச் சேர்த்துக் கொண்டனர்.

அம்மா பேரனை கண்டு எல்லாவற்றையும் மறந்து விட்டார்.ஆனால், அப்பாவின் மனதில் மட்டும் அந்த வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது.பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தையில் அது தெரியும்.

ராகவ் நல்ல மருமகனாகத் தான் நடந்து கொள்கிறார். ஆனாலும் அப்பாவின் மனம் குறையுடன் தான் இருக்கிறது என்று எண்ணியவளுக்குப் பெருமூச்சு எழுந்தது.காலங்கள் தான் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று யோசனையிலிருந்து மீண்டவள்,சமைத்தவற்றை எல்லாம் எடுத்து வந்து டைனிங் டேபிளில் அடுக்கினாள்.

அந்தநேரம் வாயில் மணியடிக்க, வேக நடையுடன் சென்று கதவைத் திறந்தாள்.அப்பா, அம்மாவை எதிர்பார்த்தவளுக்கு அங்கே ராகவைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி.

அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவனிடம் “நான் எதிர்பார்க்கவே இல்ல ராகவ்” என்றாள் மலர்ச்சியுடன்.

அவள் தோள்களில் கையைப் போட்டுத் தன்புறம் இழுத்தவன் விரல்களால் முகவடிவை அளந்து கொண்டே “இந்தச் சிரிப்பை, சந்தோஷத்தை பார்க்க தான் ஓடி வந்தேன்” என்றான் மென்சிரிப்புடன்.

அவன் காதை பிடித்துத் திருகியவள் “நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியாதா?ஷிவானியை பார்க்க தானே வந்தீங்க?” என்றாள் கிண்டலாக.

காலரை தூக்கிவிட்டு “ஐயாவை யார்-னு நினைச்ச? தன்யாவை தவிர யாரையும் பார்க்க மாட்டார்”.

வாசல் கதவு திறந்திருக்க உள்ளே நுழைந்த தன்யாவின் தங்கை ஷிவானி, இருவரையும் பார்த்து “ம்ம்..கதவை திறந்து வச்சிட்டு ரொமான்ஸா?” என்றாள்.

அவள் முதுகில் லேசாகத் தட்டிய தன்யாவின் அன்னை “சும்மா இரு!” என்று அதட்டினார்.

அவர்களைப் பார்த்ததும் “வாங்க மாமா! அத்தை!” என்றழைத்தான்.

மகளின் மலர்ந்த முகமும், மருமகனின் அன்பான வரவேற்பும் தயக்கத்தை விரட்ட “லஞ்சுக்கு வந்தீங்களா மாப்பிள்ளை” என்று கேட்டார் தன்யாவின் அப்பா.

அவரை அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தவன் “உங்களை எல்லாம் பார்க்கலாம்-னு தான் வந்தேன் மாமா” என்றான்.

முகத்தில் மெல்லிய புன்னகை பரவ, மனதிற்குள் மகள் நல்லவனைத் தான் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்று பாராட்டிக் கொண்டார்.

சிறிதுநேரம் குடும்ப விஷயங்கள் எல்லாம் பேசி முடித்துச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான்.

“நான் கிளம்புறேன் மாமா!”

“சரி மாப்பிள்ளை! நாங்க சாயங்காலம் கிளம்பிடுவோம்.தன்யாவை அழைச்சுகிட்டு அங்க நம்ம வீட்டுக்கு வாங்க என்றார்.

“இப்போ புது ப்ராஜெக்ட்ல இருக்கேன்.ஒரு நாலு மாசம் பிஸி மாமா” என்றான் பவ்யமாக.

“சரி எப்போ முடியுதோ வாங்க மாப்பிள்ளை”.

அவர்களிடம் பேசிவிட்டு ஆபிஸ் வந்தவன் வேலையில் மூழ்கிப் போக, மாலை நேரம் வந்ததும் அவனது மனம் சுஷ்மிதாவை நோக்கித் திரும்பியது.அவளுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை தட்டிவிட்டு கணினியை பார்த்துக் கொண்டிருந்தான்.

முதல்நாள் அறிந்த உண்மையில் இருந்து வெளியில் வர முடியாமல் அடுத்தடுத்து அவன் பேசிய பேச்சுகள் மனதையே சுற்றி வர, இரவெல்லாம் விழித்து அழுது கரைந்து, களைத்துப் போயிருந்தாள் சுஷ்மிதா. இன்று ஆபிஸ் போக வேண்டுமா என்ற எண்ணத்துடன் வந்தவளுக்கு,ராகவ் வரவில்லை என்ற செய்தி கேட்டதும் நிம்மதியை அளித்தது.

ஆனால், மதியமே அவன் வந்ததைப் பார்த்ததும் மீண்டும் மனம் சுருங்கிப் போனது. இதோ, மாலையானதும் அவனிடமிருந்து மெசேஜ் வந்துவிட்டது. ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. இனி, தன்னால் அவனைச் சகித்துக் கொள்ள முடியாதென்பது. எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு அவகாசம் வேண்டியிருந்தது. தன்னையறியாமலே மொபைலை எடுத்தவள் ‘எனக்கு ஒருவாரம் அவகாசம் வேண்டும்’ என்று அனுப்பினாள்.

சிறிதுநேரத்திலேயே “வேற வேலை தேட போறியா? ஓகே! ட்ரை பண்ணு நான் தடுக்கமாட்டேன். ஆனா, என்னை ஏன் அவாய்ட் பண்ற?” என்று கேட்டிருந்தான்.

அவன் மேல் கொலைவெறியே எழுந்தாலும், இது நிதானாமாக இருக்க வேண்டிய நேரம் என்று உணர்ந்து பதில் அனுப்பினாள் “ப்ளீஸ்! என்னைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று.

 

அன்று அவனிடம் அவகாசம் கேட்ட பிறகு ஒருநிமிடத்தைக் கூட வீணடிக்காமல் தனக்குத் தெரிந்த எல்லா வழியிலும் வேலைக்கு முயற்சிக்க ஆரம்பித்தாள். மூன்று நாட்கள் கழிந்த நிலையில் எதுவுமே கைவரப் பெறாமால் மனம் சோர்ந்து போனது. ஒருவாரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் அவனது ஆசைக்கு இணங்க வேண்டுமா? என்று கேட்டு கொதிநீரை ஊற்றியது மனம்.

தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் தொடர்பு கொள்ள முனைந்தாள். மனதினுள் ஒரு வெறியே எழுந்தது.கண்டிப்பாக வேலை வாங்கிவிட வேண்டும்.போகும் முன் அவன் குடும்பத்தாரிடம் முகத்திரையைக் கிழித்துவிட்டு செல்ல வேண்டும் என்று எண்ணி தீவிரமானாள்.

நான்காவது நாள் அலுவலகத்தில் இருந்து வரும் போது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த சூப்பர்-மார்க்கெட்டில் சில சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தாள். அப்போது தன்னைக் கடந்து சென்ற ஒருவனைக் கண்டதும், எங்கோ பார்த்திருக்கிறோமே என்றெண்ணினாள்.

விஜய் அம்மா கொடுத்த லிஸ்ட்டை வைத்துப் பொருட்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். தன் அருகில் யாரோ நிற்பது போல் தோன்ற நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவளைத் தெரியவில்லை. எங்கோ பார்த்திருக்கிறோம் என்று மட்டும் தோன்றியது.

அவளோ தயக்கத்துடன் “நீங்க ராகவ்வோட ரிலேஷனா?” என்று கேட்டாள்.

ஓரிரு முறை ராகவ்வை பார்க்க அவன் ஆபீஸ் வந்த போது பார்த்திருக்கிறாள். அவனுக்குச் சொந்தக்காரன் என்று மட்டுமே அறிந்திருந்தாள்.

அவளது கேள்வியில் நெற்றியை சுருக்கியவன் “ஆமாம்…நீங்க?” என்றான்.

“நான் அவர் கொலீக் சுஷ்மிதா” என்று சொல்லி கையை நீட்டினாள்.

அவனிடம் பேச நினைத்தாலும், அவளது உள்மனமோ இவனும் அவனை மாதிரி குணம் உள்ளவனாக இருந்து விட்டால் மேலும் நிலைமை மோசமாகி விடுமே என்றும் எண்ணம் தோன்றியது.

முதலில் சாதரணமாக அவளைப் பார்த்தவன், ராகவின் ஆபிசில் வேலை செய்கிறேன் என்றதுமே நினைவுக்கு வந்தது. ராகவுடன் அவளைப் பார்த்த சம்பவம். ஒருவித முகச் சுளிப்புடன் “ஐ அம் விஜய்” என்று பட்டும் படாமலும் கையைக் குலுக்கினான்.

ஆனால், எது வந்தாலும் மோதி பார்த்துவிட வேண்டியது தான் என்கிற எண்ணத்துடன் “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க ராகவ்க்கு என்ன வேணும்-னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.

இதை எதிர்பார்க்காதவன் சற்று கடுப்புடன் “நான் ராகவ்-கு தம்பி. உங்களுக்கும் அவனுக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கலாமா?” படாரென்று போட்டுடைத்தான்.

அவனது நேரடி தாக்குதலில் அதிர்ந்து போய் அவன் முகத்தைப் பார்த்தவள், மனதிற்குள் ‘சபாஷ்! இவன் சரியான ஆள்! இவனை வச்சு தான் ராகவ்வோட ஆட்டத்தை அடக்கணும்’ என்று நினைத்து “அதைச் சொல்ல தான் உங்க கூடப் பேசணும்-னு சொல்றேன்” என்றாள்.

 

சுஷ்மிதாவுக்குக் கொடுத்த அவகாசம் அன்றுடன் முடிவதால் மனதில் உற்சாகம் பீறிட்டெழ, விசிலடித்துக் கொண்டு தலையை வாரிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த தன்யா “என்ன ஐயாவுக்கு இன்னைக்கு ஒரே கும்மாளமா இருக்கு” என்றாள் கிண்டலாக.

அவள்புறம் திரும்பி இடையைப் பற்றித் தன்னருகே இழுத்தவன், உற்சாக மிகுதியில் நெற்றியில் ஒரு முட்டு முட்டி “சும்மா” என்றான்.

அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு “கிளம்புங்க…கிளம்புங்க..இன்னைக்கு ஒருநிலையில தான் நிக்கிறீங்க” என்று நொடித்துக் கொண்டு சென்றாள்.

அதே உல்லாசத்துடன் ஆபிசிற்கு வந்தவனுக்குச் சுஷ்மிதா வரவில்லை என்றதும் உற்சாகம் வடிந்து போனது.ஒருவேளை தன்னை அவாய்ட் செய்கிறாளோ? என்கிற எண்ணம் தோன்ற உடனே அவளுக்கு அழைத்தான். சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருக்கிறது என்றது. யோசனையுடன் வேலையைத் தொடர்ந்தான். எங்கே போகப் போறா? நம்மை மீறி போக முடியாது பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

ஒருமணியளவில் தன்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

அவசரமாக இருந்தாலே தவிர வேலை நேரத்தில் அழைக்க மாட்டாள் என்பதால் உடனே எடுத்தான்.

“ஹலோ..தனு என்னம்மா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கே?”

“என்னங்க நீங்க கிளம்பி உடனே வாங்க” என்றாள் பதட்டத்துடன்.

அவளின் பதட்டம் இவனைத் தொற்ற “ரிஷி நல்லா இருக்கான் தானே? என்ன பிரச்சனை தனு?”

“ம்ஹ்ம்..நீங்க கிளம்பி வாங்க..ப்ளீஸ்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.

என்னவாக இருக்கும் என்கிற எண்ணத்துடனே பறந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

ஹாலிலேயே நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்த தன்யாவைப் பார்த்ததும், வேகமாக அவளருகில் சென்றவன் “என்ன தனு? என்ன விஷயம் எதுக்கு வர சொன்ன?” என்றான் பதட்டத்துடன்.

“இந்த விஜய் இப்படி ஒரு வேலை பண்ணுவார்-னு நினைக்கவே இல்லைங்க” என்றாள்.

“என்ன பண்ணினான்” என்றான் எரிச்சலுடன்.

“கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கார்” என்றாள் சோர்வான குரலில்.

அவளது பேச்சில் அதிர்ந்தவன் “என்ன! கல்யாணமா? எப்போ?”

அதற்குள் அறைக்குள் இருந்து வெளியே வந்த விஜய் “ ஆமாம்ன்னா!” என்றபடியே வந்தான்.

வேகமாக அவனருகில் சென்றவன் “ என்னடா வேலை பண்ணியிருக்க. லவ் பண்ணினேன்னு கூடச் சொல்லல.திடீர்ன்னு வந்து கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்ற?” என்றான் அதட்டலாக.

“ஆறுமாசமா ஒருத்தரை பழகுறோம்.இப்போ அவளுக்கு ஒரு அவசரம் அதனால உடனடியா கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை” என்றான்.

யோசனையாக முகத்தைச் சுருக்கியவன் “அப்பா, அம்மாவை போய்ப் பார்த்தியாடா?” என்று கேட்டான்.

“வீட்டுப் பக்கமே வராதீங்கன்னு சத்தம் போட்டு விரட்டி விட்டுடாங்க அண்ணா. நீயும் தான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணின ஆனா உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா?” என்றான் விஜய்.

“டேய்! நான் அப்பா, அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கிக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, நீ இப்படிக் காதலிச்சதையும் சொல்லாம, திடீர்ன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற. இதுக்குக் கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க” என்றான் கடுப்புடன்.

“சரி விடுங்க! அத்தையும், மாமாவும் சமாதானம் ஆகும் வரை இங்கேயே இருக்கட்டும்” என்றாள் தன்யா.

“ம்ம்” என்றவன் சற்று யோசனையுடன் “ பொண்ணு எங்கேடா…அதை கேட்க மறந்திட்டேன் பாரு”

“உள்ளே இருக்காண்ணா” என்றவன் “சுமி..சுமி” என்றழைத்தான் விஜய்.

தம்பியின் மனைவியை வரவேற்கும் வகையில் ஆவலுடன் எதிர்பார்த்தது கொண்டு நின்றான். அறையிலிருந்து வெளிப்பட்டவளை பார்த்ததும் ஒருநிமிடம் இதயம் செயலிழந்து போனது.