2004-ஆம்  வருடம் டிசெம்பர் 26அன்று காலை ஒரு குட்டி பெண்ணும், அதன் அம்மாவும் மிகுந்த சோகத்தில் இருந்தார்கள். அதாகப்பட்டது அவர்கள் விடுமுறைக்கு தோஹாவிலிருந்து சென்னைக்கு சென்றிருந்த நேரம்.

அந்த பெண்ணின் அம்மாவிற்கு இவர்களுக்கு வடித்து கொட்டியே அலுத்து போய் சமையலறையில் வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார்கள். அந்த சின்ன குழந்தையின் தாத்தா காரிங்( அதாங்க வாகிங் மாதிரி காரை ரவுண்டு கூட்டிட்டு போவது) போயிருந்தார்.

தாத்தா அந்த அம்மாவுக்கும், பெண்ணுக்கும் தெரியாமல் காரிங் கிளம்பி இருந்தார். முன்னர் எல்லாம் காரிங் போகும் போது பாசமாக தனது மகளையும் பேத்தியையும் அழைத்துச் சென்றவர் தான் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் சென்றிருக்கிறார் என்றால் அத்தனை சேதாரங்களை அடைந்திருக்கிறார்.

காரிங் போகலாம் என்றதும் குழந்தையின் அம்மா மிக உற்சாகமாக கிளம்பி விடுவார். போகும் வழியில் உள்ள ஹோட்டல்களில் எல்லாம் காரை நிறுத்த சொல்லி “அப்பா! இந்த ஹோட்டலில் பொங்கல், வடை நல்லா இருக்கும் என்று ரெண்டு செட் பார்சல் கட்டிக் கொள்வார். அடுத்து வேறொரு ஹோட்டலை தாண்டும் போது “அப்பா! ஸ்டாப்! ஸ்டாப்! இங்கே வடைகறி நல்லாயிருக்கும் பா” என்று கூறி அதிலும் இரு செட் பார்சல் வாங்கிக் கொள்வார்.

இப்படி வழியெங்கும் நிறுத்தி வாங்கிக் கொண்டு வீடு வந்து சேரும் போது ஊருக்கே சாப்பாடு போடும் அளவிற்கு மூட்டைகளோடு இறங்குவார். மறுநாள் போகும் போது சாப்பாட்டை விடுத்து வேறுவித ஐட்டங்களில் கவனத்தை திருப்புவார். இப்படி பல சேதாரங்களை கண்டதனால் பெண்ணிற்கு தெரியாமல் தாத்தா காரோடு காலையில் ஓடிப் போனார்.

அதனால் திருப்பள்ளியெழுச்சி முடிந்த குழந்தையின் அம்மாவிற்கு மிகவும் போர் அடித்தது.

“ ஷிவானி! போர் அடிக்குதுடா! தாத்தா வேற நம்மளை விட்டுட்டு கிளம்பிட்டாங்க. என்ன பண்ணலாம் சொல்லு?”

அம்மாவை திரும்பி ஒரு பார்வை பார்த்த ஷிவானியோ “ பாட்டி டிபன் ரெடி பண்ணி இருப்பாங்களே. சாப்பிட்டிட்டு மறுபடியும் தூங்கு மம்மி” என்றது.

மறுப்பாக தலையசைத்து “இன்னைக்கு எனக்கு செம சுறுசுறுப்பா இருக்கு. ஏதாவது செய்யலாம். என்ன பண்ணலாம்-னு நீ சொல்லு குட்டி” என்றாள் சுஜா.

“பாட்டி சமைக்கிறாங்க போய் ஹெல்ப் பண்ணு” என்றது குட்டி பிசாசு.

அதை கேட்டு கொலைவெறியுடன் “சமைக்க எனக்கு மூட் இல்லை” என்றவள் எழுந்து சென்று ரேடியோவை ஆன் செய்தாள்.

பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்ததும் சுஜாவின் முகத்தில் பிரகாசப் புன்னகை. மகளை நோக்கி திரும்பி “ஷிவ்! நாம டான்ஸ் ஆடலாமா?” என்றாள் உற்சாகத்துடன்.

அதைக் கேட்டு முகம் மாறி போன ஷிவானி “மம்மி! நீ உட்கார்ந்துக்கோ நான் உனக்காக ஆடுகிறேன்” என்றது பதட்டத்துடன்.

அழுத்தமாக மறுத்த சுஜா “நோ! நான் இன்னைக்கு டான்ஸ் ஆடியே ஆகணும். அடுத்த பாட்டுக்கு நான் ஆடப் போறேன். சோ ஸ்க்ரீன் எல்லாம் இழுத்து விடு. எதிர் வீட்டு மாடியில் நிற்கிறவன் என்னோட டான்ஸ் பார்த்து வேலைக்கு போக மறந்திட போறான்” என்றாள் பெருமையாக.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அந்த குட்டி வாண்டு குடுகுடுவென்று சமையலறைக்கு ஓடியது. அங்கு காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்த பாட்டியிடம் “ பாட்டி! சீக்கிரம் வாங்க. அம்மா டான்ஸ் ஆட போறாளாம். எனக்கு பயமா இருக்கு” என்றது.

அதைக் கேட்டு அலுத்துக் கொண்டவர் “உங்கம்மாவுக்கு வேற வேலையே இல்லையா? எல்லோரையும் பயமுறுத்துவதே வேலையா போச்சு” என்றார்.

அதற்குள் ஹாலில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

டாடி மம்மி வீட்டில் இல்லை

தடை போட யாருமில்ல

விளையாடுவோமா உள்ள வில்லாலா

(மக்கா இந்த பாட்டு 2004-இல் வந்துச்சான்னு லாஜிகல் கேள்விகள் எல்லாம் கேட்கப்படாது)

அந்த பாட்டைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட அம்மா “கர்மம்! என்ன பாட்டு இது” என்றார் கடுப்புடன்.

அதை கவனிக்கும் மனநிலையில் இல்லாத சுஜா மும்மரமாக குதித்து குtதித்து ஆடத் தொடங்கினாள்.

டாடி மம்மி வீட்டில் இல்லை

தடை போட யாருமில்ல

விளையாடுவோமா உள்ள வில்லாலா

ஷிவானி தலையை கையில் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து விட, அம்மாவோ விட்டால் போதுமென்று சமையலறைக்கு ஓடினார்.

ஏ..அளவான உடம்புக்காரி அளவில்லாக் கொழுப்புக்காரி

அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி…..

இந்த வரிகளைக் கேட்டுக் கொண்டிருந்த சுஜாவின் அம்மா ‘கொழுப்பு கூடி போனதுனால தான் ஆடிகிட்டு இருக்கு லூசு. இந்த ஆட்டம் நல்லதுக்கில்லை’ என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அந்தநேரம் வீட்டுக் கதவு படபடவென்று தட்டப்பட்டது. ஆடிக் கொண்டிருந்த சுஜாவிற்கும், சோபாவில் அமர்ந்திருந்த ஷிவானிக்கும் என்ன நடக்கிறதென்று புரியாமல் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டனர்.

அதற்குள் சமயலறையில் இருந்து அவசரம் அவசரமாக அடுத்த அறைக்கு ஓடிச் சென்று அங்கே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த சுஜாவின் இரெண்டாவது மகளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ஹாலிற்கு ஓடி வந்தார் .

திகைத்து நின்ற இருவரையும் பார்த்து “ நிலநடுக்கம் வந்துடுச்சு சீக்கிரம் கதவை திற கீழே போவோம்” என்று அலறினார்.

சுஜாவோ “என்னமா சொல்ற நிலநடுக்கமா? யாரோ கதவை தட்டுற மாதிரி இல்ல இருக்கு” என்றாள்.

அதைக் கேட்டு ஆவேசமாக “ ஆட வேண்டாம்! ஆட வேண்டாம்-னு எத்தனை தடவை சொன்னேன். கேட்டியா? இப்போ பாரு பூமியே அதிர்ச்சி தாங்காம நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. சீக்கிரம் போய் கதவை திற” என்றார்.

யோசனையுடன் சென்று கதவைத் திறந்தாள் சுஜா. வெளியில் நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் அம்மாவைத் திரும்பி பார்த்தாள்.

சுஜாவின் அம்மாவும் வெளியில் நின்றிருந்தவர்களைப் பார்த்து திகைத்துப் போய் “என்ன எல்லோரும் வந்து இருக்கீங்க?” என்றார் பயத்துடன்.

அங்கே நின்றிருந்தவர்களில் ஒருவர் “கடலு உள்ள வந்துட்டுங்க” என்றார் பீதியுடன்.

அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த சுஜாவோ குழப்பமான முகத்துடன் “உங்க மனைவி பேரு கயலு, வேலைக்காரம்மா பேரு மயிலு. அதாரு மூணாவதா கடலு? ஒரு வருஷத்துக்குள்ள என்னென்னவோ நடந்திருக்கா?” என்று கேட்டு அவரின் குடும்பத்தில் கும்மியடித்தாள்.

செய்தி சொன்னவரின் மனைவி ஏற்கனவே அவர் மேல் சந்தேகத்துடன் இருந்தார். இப்போது சுஜாவின் கூற்றில் அவரை ஆக்ரோஷமாக உற்று நோக்கினார்.

அந்த மாமாவோ சுஜாவை கொலைவெறியுடன் பார்த்தார். அப்போது மற்றொரு பெண் சுஜாவின் அம்மாவைப் பார்த்து “ஆன்டி கடல் தண்ணி உள்ளே வந்துடுச்சாம்” என்றார்.

அந்த பெண் சொன்னதும் முகம் மாறி மகளை பார்த்தார். சுஜாவோ மிகவும் சீரியஸாக “ஏம்மா! இதென்ன மாசம்? இப்போ இங்கே வெகேஷன் டைம் இல்லையே? அப்புறம் ஏன் கடல் தண்ணி சுத்தி பார்க்க உள்ள வருது?” என்று கேட்டு அவருக்கு பீபியை எகிற வைத்தாள்.

மகளின் புறம் கோபமாக திரும்பி “அடியே! கொஞ்ச நேரம் உன் திருவாயை வைத்துகிட்டு சும்மா இருக்கியா? ஏதாவது பேசின பொண்ணுன்னு பார்க்க மாட்டேன்” என்றார் கடுமையாக.

அதற்குள் கடல் தண்ணி ஊருக்குள் வந்ததற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட்டது. காரிங் போன தாத்தாவும் வந்துவிட அடுத்து என்ன செய்வது என்று பேச ஆரம்பித்தனர்.

அப்போது ஒரு செட் ஆண்கள் கடல் நீர் உள்ளே வருவதை காண செல்லலாம் என்று ஆயத்தமானார்கள். நமது நாயகியும் உடனே அன்னையிடமிருந்து சின்ன மகளை வாங்கிக் கொண்டு கிளம்ப தயாரானாள்.

“ சுஜா! நேத்து ஆனந்தபவன்ல வாங்கின சீடை, முறுக்கு, தட்டை எல்லாம் உள்ள இருக்கு போய் எடுத்துக்கோ” என்றார் நக்கலான தொனியில்.

உடனே தலையில் லேசாக தட்டிக் கொண்டு “ஸ்..மறந்தே போயிட்டேன் பாருங்க. இருங்க வரேன்” என்று உள்ளே செல்லத் திரும்பியவளைக் கண்டு வெளியில் நின்ற கூட்டம் சிரித்துவிட, அப்போது தான் அம்மா தன்னை கேலி செய்கிறார் என்று புரிந்து கொண்டு அவரை முறைத்தாள்.

அதற்குள் அவளது தந்தையும் இன்னொருவரும் சுனாமி வருவதைக் காண பீச்சிற்கு சென்றார்கள். தாத்தா தனது இத்தனை வருட வாழ்வில் அப்படியொரு காட்சியை கண்டதில்லை. இருவரும் பைக்கை நிறுத்திவிட்டு பெரிது பெரிதாக எழும் அலைகளை வேடிக்கை பார்த்தவண்ணம் நின்றிருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அலை அவர்களை நோக்கி வர ஆரம்பித்தது. அப்போது தான் விபரீதத்தை உணர்ந்தவர்கள் பைக்கை கீழே விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தார்கள். தாத்தா மனதிற்குள் கடவுளிடம் அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தார். எனது உயிரை காப்பாற்றிவிடு என்று கேட்காமல் எனது மனைவியின் தாலியை காப்பாற்றிக் கொடு என்று வேண்டினார்.

அலை அவர்களை நெருங்காமல் பாதியிலேயே வடிந்து போனதும் தான் ஓட்டத்தை நிறுத்தினார்கள். அவர்கள் இப்படி அலையோடு ஓட்டப் பந்தயம் நடத்திக் கொண்டிருக்க நமது நாயகியோ டிக்கெட், விசா சிலபல துணிமணிகள் அனைத்தையும் மூட்டைக் கட்டிக் கொண்டு தயாராகிக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த அவளது அன்னை என்னவென்று விசாரிக்க “ அம்மா! தண்ணி நம்ம ஏரியால தான் முதலில் உள்ள வரும். சோ நாம எல்லோரும் போய் வாட்டர் டான்க் மேல உட்கார்ந்துக்குவோம்” என்றாள் புத்திசாலிதனமாக.

அவளை கேவலமாக ஒரு லுக் விட்டு “ அதெல்லாம் சரி! ஆனா இந்த டிக்கெட், விசா எல்லாம் எதுக்கு? கடல் தண்ணி நம்மளை கொண்டு போக கேட்குமா?” என்றார் கேலியாக.

“ஐயோ அம்மா! தண்ணி எல்லாம் வடிஞ்ச பிறகு நாங்க ஊருக்கு போக வேண்டாமா?” என்றவள் “ஒரு நிமிஷம் இரு!” என்று ஓடிச் சென்று ஆனந்தபவனில் வாங்கி வைத்த நொறுக்கு தீனிகளையும் பைக்குள் அடைத்தாள்.

அதைப் பார்த்த அவளது அன்னை “ இது எதுக்கு?” என்றார்.

அவளோ எதை பற்றியும் கவலைபடாமல் “ பின்னே டான்க் மேல உட்கார்ந்துகிட்டு சும்மா வேடிக்கை பார்க்க முடியுமா? கொறிச்சுகிட்டே பார்த்தா நல்லா இருக்கும் இல்ல?” என்றாள்.

அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த அபார்ட்மென்ட்வாசிகள் அவளது அன்னையிடம் “இவங்க எப்பவுமே இப்படி தானா? இல்ல இப்போ தான் இப்படியா?” என்றார்கள்.

அவர்கள் அப்படி கேட்டதும் மனதிற்குள் பொங்கிக் கொண்டிருந்தவர் மகளின் பக்கம் திரும்பி “காலையிலேயே சொன்னேன் ஆடாதடி..ஆடாதடின்னு. கேட்டியா? நீ ஆடின ஆட்டத்தில் இந்தோனேஷியால நிலநடுக்கம் வந்து கடல் தாங்க முடியாம பொங்கிடுச்சு. இன்னும் என்ன வேணும் உனக்கு. இதுல டான்க் மேல போய் உட்கார்ந்து வானம் இடிஞ்சு தலை மேல விழவா?” என்று ஆத்திரத்துடன் பேசினார்.

இதன் நடுவே டிவி சேனல்களில் சுனாமியின் பாதிப்புகளை காட்டத்தொடங்கினர். அவற்றை பார்த்துக் கொண்டிருந்த நமது நாயகிக்கு வருத்தம் எழ ஆரம்பித்தது. நமது நடன ஆசையினால் எத்தனை உயரிழப்புகள் நடந்திருக்கிறது. அப்படியொரு நடனம் உனக்கு தேவையா என்ற கேள்வியும் பிறந்தது.

அதன்பின் அபார்ட்மென்ட்வாசிகளின் முன்பு அந்த பூமி மாதாவின் மேல் ஆணையாக இனி எக்காரணத்தைக் கொண்டும் ஆட மாட்டேன் என்று மூன்று முறை ஓங்கியடித்து சத்தியம் செய்தாள். அப்போது தான் அங்கிருந்தவர்களுக்கு நிம்மதியானது.

இந்த பதிமூன்று வருடங்களாக எத்தனையோ குத்து பாடல்களைக் கேட்டு மனம் குதியாட்டம் போட்டாலும், சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள் மனதை தாக்க, நமது நாயகி தனது நடன ஆசையை தியாகம் செய்து  பேரமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

Advertisements