அத்தியாயம் – 1

வாழ்க்கையின் வரம் காதல்

                                     காதலின் வரம் எதிர்பார்ப்பில்லா நேசம்

                                       நேசம் கொண்ட நெஞ்சங்கள்

                                      வலி தாங்கும் இடி தாங்கியாக மாறும்

                                        துரோகங்கள் இழைக்கப்படும் போது                                                                      

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை மகனின் குரல் எழுப்பியது. ஆறு மாத குழந்தையான ரிஷி விழித்தெழுந்து கை,கால்களை ஆட்டி சிறிய வெளிச்சத்தைக் கண்டு ஆ..ஆ.. என்று பேசிக் கொண்டிருந்தான்.

கணவனையே உரித்து வைத்தது போலிருந்த ரிஷியை தூக்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள் தன்யா. பாயை விரித்து குட்டி மெத்தையை போட்டு அதில் மகனை படுக்க வைத்தவள் குனிந்து “என்னடா தங்கம்..அதுக்குள்ளே முழிச்சிட்டீங்க…ம்ம்”.

அவள் பேசியதும் மேலும் உற்சாகத்துடன் சிரித்து சத்தமாக “ஆ..ஞா…ஆ..” என்றான் அவளது ஆசை மகன்.

லேசாக அவன் கன்னத்தில் தட்டி “டெய்லி இந்த நேரத்துக்கு முழிச்சா நான் எப்படிடா காலையில எழுந்திருச்சு வேலை செய்வேன்?”

அதற்கும் துள்ளி குதித்து ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

அவர்களது குரலும்,ஹாலில் தெரிந்த வெளிச்சத்திலும் எட்டிப் பார்த்த ராகவ் “என்ன பண்றீங்க அம்மாவும் பையனும்? தூங்கலையா?” என்று கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தமர்ந்தான்.

அவனைப் பார்த்த தன்யா “நீங்க ஏங்க எழுந்திரிச்சு வந்தீங்க? உங்களுக்கு தொந்திரவா இருக்கும்னு தான் நாங்க இங்கே வந்தோம்.”

அவள் தோள்களில் கையைப் போட்டு தன்னருகில் இழுத்தவன் “நீயும் பையனும் எனக்கு தொந்திரவா?”

“இல்ல ராகவ் நீங்க வேலைக்குப் போகனுமில்ல. அவன் தூங்குறப்ப நான் தூங்கி எழுந்திடுவேன்.உங்களுக்கு தூக்கம் டிஸ்டர்ப் ஆகும்.”

அவனோ அவளது பேச்சில் கவனம் வைக்காமல் மகனிடம் விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து சற்று கிண்டலாக “பெரியக்கருப்பனும், சின்னக்கருப்பனும் ஒன்னு சேர்ந்துட்டா என்னை மறந்திடுவீங்களே.”

அவளது கேலியை கண்டவன், அவள் காதை திருகி “வர-வர கொழுப்பு ஜாஸ்தியா போச்சு உனக்கு.என்னை கருப்பன்னு சொல்றதுமில்லாமல் என் பையனையும் சொல்ற.அதுக்கு உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணுமே” என்றவன் இதழ்களை முற்றுகையிட்டான்.

தாய், தந்தையை பார்த்துக் கொண்டே  ரிஷி மீண்டும் சத்தமாக பேசவும், உலகத்தை மறந்திருந்தவர்கள் அவனது குரலில் மீண்டனர்.

“நீங்க போய் தூங்குங்க ராகவ்”.

“நீயும் வா தனு”என்றான் ஏக்கமாக.

அவன் தலையை செல்லமாகக் கலைத்தவள் “போய் தூங்குங்கப்பா. குட்டி தூங்க நேரமாகும்” என்றாள்.

“ம்ம்..”என்று எழுந்தவன் மகனையும், மனைவியையும் பார்த்துக் கொண்டே தனதறைக்கு சென்றான்.

அவனை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், மகனிடம் திரும்பி “பாருடா குட்டி! அப்பா ரொம்ப பாவமா போறாங்க.நீ நாளையிலேருந்து சீக்கரம் தூங்கிடுடா” என்றாள்.

தன்னிடம் அம்மா பேசுகிறாள் என்று சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டது அந்த இளம் குருத்து.

விடியலின் நேரம் தாயும், மகனும் ராகவின் அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.அலாரத்தின் ஓசையில் எழுந்தவன் இருவரையும் பார்த்து புன்னகைத்து மகன் கன்னத்திலும், தன்யா நெற்றியிலும் இதழ் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

தண்ணீர் ஓடும் சப்தத்தில் மெல்ல எழுந்தவள் முடியை கொண்டை போட்டுக் கொண்டு அவன் வருவதற்குள் காப்பி போட்டு, தோசை ஊற்றி, சட்னியும் அரைத்து வைத்தவிட்டு டைனிங்கில் வந்தமர்ந்தாள்.

ஆபிஸ் செல்வதற்கு தயாராகி வந்தவன் தன்யாவை பார்த்து “நீ ஏண்டா எழுந்த? நைட் தூங்கவே ரொம்ப நேரம் ஆகியிருக்குமே?” என்றான் கரிசனமாக.

மெல்லிய புன்னகையுடன் “நானே லஞ்ச்சுக்கு ஒன்னும் பண்ணி கொடுக்க முடியலையேன்னு நினைச்சிட்டிருக்கேன்.”

அவளருகில் சென்றவன் லேசாக கன்னத்தைத் தட்டி “நான் வெளில பார்த்துக்கிறேன் தனும்மா.நீ குழந்தையை பாரு”என்றான்.

ராகவ், தன்யா இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.ஒரே நிறுவனத்தில் ராகவின் கீழ் வேலை செய்யும் போது இருவருக்கிடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு இணையே இல்லை.அதிலும் தன்யாவிற்கு ராகவை சுற்றி மட்டுமே உலகம் சுழலும்.

காதலித்த போதும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி அவள் வாழ்வில் அனைத்துமாகி போனவன் அவனே. காதல் திருமணம் என்பதால் ஆரம்ப நாட்களில் ராகவின் அன்னை அவளை ஏற்கவில்லை என்றாலும் தனது உள்ளம் கவர்ந்தவனின் அன்னை என்று அவரிடம் அன்பாக நடந்து கொண்டாள். நாட்கள் செல்ல செல்ல அவர் மனமும் மாறி,தன் மகனிடம் அவள் கொண்டிருந்த அன்பைக் கண்டு மலைத்து போயிருக்கிறார்.

பேரன் பிறந்ததும் எதிர்ப்பெல்லாம் மறைந்து குடும்பத்தின் ஆதரவு முழுமையாக கிடைத்தது.ரிஷியின் வரவு மீண்டுமொரு வசந்தத்தை கொண்டு வந்தது.மகனது வரவில் ராகவ் பின்னுக்குத் தள்ளப்பட்டான்.குழந்தைக்காக பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு-விட்டு வீட்டோடு இருந்து கொண்டாள்.

தன்னுடைய உலகத்தை கணவனுக்காகவும்,மகனுக்காகவும் சுருக்கிக் கொண்டாள்.

ஒன்பது மணிக்கு எழுந்த மகனை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் போட்டுவிட்டு கிட்சேன் வேலையை தொடர்ந்தாள்.மகனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தோசையை ஊற்றி சாப்பிட்டாள்.

மதியம் வரை மகனை கையில் வைத்தபடியே எல்லா வேலைகளையும் செய்த்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தநேரம் வாயில் மணி அடிக்க எழுந்து சென்று திறந்தவள், அங்கு நின்ற மாமானார், மாமியாரைக் கண்டதும் புன்னகையுடன் “வாங்க அத்தை, மாமா” என்றாள்.

மலர்ச்சியுடன் நின்ற மருமகளைப் பார்த்த கௌசல்யா “என்னம்மா நல்லாருக்கியா?ராகவ் வேலைக்கு போயாச்சா?என்று கேட்டுக் கொண்டே பேரனின் அருகில் சென்றமர்ந்தார்.

எதிர்வீட்டில் அரைகுறையாக திறந்திருந்த கதவின் வழியாக எட்டிப் பார்த்த அந்தவீட்டு பாட்டி “மாமியார் வந்திருக்காங்களா?” என்றார்.

“ஆமாம்” என்று சொல்லி முடிக்கும் முன்பே “கதவை திறந்தா யார் கிட்டே பேசுவோம்-னு நிக்கிறது”என்று சொல்லி வேகமாக அறைந்து சாத்தப்பட்டது எதிர்வீட்டு கதவு..

முகத்தில் அடித்தார் போன்று நடந்த செயலில் முகம் சுருங்கினாலும், இது வழக்கமாக நடக்கும் ஒன்று என்பதால் பெருமூச்சுடன் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

தாத்தா, பாட்டி இருவரின் கைகளிலும் மாற்றி-மாற்றி போய் வந்து கொண்டிருந்த ரிஷி குஷியாக சிரித்துக் கொண்டிருந்தான்.

நேரம் போனதே தெரியாமல் மதிய சமையல், சாப்பாடு,பேச்சு என்று ஓடியது.

“சனி, ஞாயிறு அங்கே வரலாமில்ல தன்யா. எங்களுக்கும் பேரனோட இருந்த மாதிரி இருக்கும்” என்றார் கௌசல்யா.

காப்பியை கலந்து கொடுத்துவிட்டு, அவரருகில் அமர்ந்தவள் “இப்போ புது ப்ராஜெக்ட்ல கொஞ்சம் பிஸியா இருக்காங்க அத்தை”.

“ஆமாம்! உன் புருஷனுக்கு வேலை தான் முதல் பொண்டாட்டி.எப்போ பாரு பிஸி பிஸின்னு புலம்புறது” என்று நொடித்துக் கொண்டார்.

“நீங்க இங்க இருங்க அத்தை.”

போன் பேசிக் கொண்டிருந்த சந்தானம் “விஜய் அரை மணி நேரத்தில வரேன் சொல்லிட்டான்” என்றார்.

“பாத்தியா! சின்னவனுக்கு ஒருநிமிஷம் நான் அங்க இல்லேன்னா வேலையே ஓடாது.என் பின்னாடியே சுத்தணும் அவனுக்கு” என்றார் சிரித்துக் கொண்டே.

அரைமணியில் விஜயும் வந்துவிட,காப்பி, பலகாரங்களோடு வழியனுப்பும் படலம் நடந்தேறியது.கதவை சும்மா சாத்தி வைத்துவிட்டு, அவர்களோடு கீழே சென்று காரில ஏறும் வரை பொறுத்திருந்து, ரிஷியை விட்டு கையாட்டி விடை கொடுத்து மேலே வந்தாள்.

காரில் சென்று கொண்டிருந்தவர்களின் மனமோ தன்யாவை பற்றியே சுழன்று கொண்டிருந்தது.

“நாமலே தேடினாலும் இந்த அளவுக்கு நல்ல பெண்ணா கிடைச்சிருக்குமா-னு தெரியாது.அவனை பார்த்துகிறது இல்லாம நம்ம மேலையும் பாசமா இருக்கு” என்றார் சந்தானம்.

“ஆமாங்க! அவனுக்கு பார்த்து பார்த்து செய்றா. என் புள்ளையும் ஒன்னும் குறைஞ்சவனில்ல.அவ மேல பாசமா தான் இருக்கான்.”

அதை கேட்டு வண்டி ஒட்டிக் கொண்டிருந்த விஜய் சத்தமாக சிரித்து “அதானே! உங்க புள்ளையை விட்டுக் கொடுத்திடுவீங்களா? அப்போ அண்ணன் காட்டிய வழியில் நானும் போகலாமா?” என்றான் நக்கலாக.

அவன் முதுகில் அடித்து “ரோட்டைப் பார்த்து ஓட்டுடா.சும்மா வம்பு வளர்த்துகிட்டு.ராகவ் நேரம் நல்ல பெண்ணா கிடைச்சிடுச்சு.எல்லோருக்கும் அப்படி கிடைச்சிடுமா என்ன?”

“இப்போ என்ன சொல்ல வரீங்க? எனக்கு நல்ல பெண்ணா கிடைக்காதுன்னா?” என்று மேலும் சீண்டினான்.

அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தானம் பொறுமையிழந்து “உனக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணம் பண்றதா இல்ல.அப்புறம் எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு” என்றார்.

அதன் பின் அவரவர் சிந்தனையில் அமிழ்ந்து போயினர்.

மகன் உறங்கிவிட, அவன் எழுந்திரிப்பதற்குள் இரவு உணவை தயாரித்து விடலாம் என்றெண்ணி சமையலறைக்குள் நுழைந்தாள்.

ரவாவை தயிருடன் கலந்து, கேரட்டை துருவி, கொத்தமில்லி, இஞ்சி, பச்சைமிளகாய் கொஞ்சம் அரிந்து இட்லியை ஊற்றி அதன் மேல் அரிந்தவற்றை தூவி அடுப்பில் வைத்தாள். தேங்காயை துருவி சட்னி அரைத்து வைத்துவிட்டு வெளியில் வரும் நேரம் அலைப்பேசி அடித்தது.

ராகவ் தான் அழைத்தான்.

“சொல்லுங்க ராகவ்..கிளம்பிட்டீங்களா?”

“இல்ல-டா! இன்னைக்கு நேரமாகும் போலருக்கு.நீ வெயிட் பண்ண வேண்டாம்”.

அவன் சொன்னதும் சற்று சோர்வுற்று “அப்படியா? அப்போ ஒன்னு பண்ணுங்க..யாரையாவது அனுப்புங்க.டின்னெர் பாக் பண்ணி அனுப்பிடுறேன்” என்றாள்.

“வேண்டாம்-டா! எதுக்கு சிரமம். நான் வெளியிலேயே பார்த்துக்குறேன்” என்றான்.

“இல்லப்பா! நான் ரெடி பண்ணிட்டேன்.நீங்க அனுப்புங்க”.

“ம்ம்..ஓகே!”

போனை வைத்ததும் மடமடவென்று பாக் செய்து வைத்துவிட்டு அமர்ந்திருந்தாள்.

ஆள் வந்து எடுத்து சென்றதும்,கதவை தாள் போட்டுவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.

நன்றாக உறங்கி எழுந்த ரிஷி உற்சாகத்துடன் தன்யாவிடம் விளையாட ஆரம்பித்தான்.மகனிடம் விளையாடிக் கொண்டே, தங்களின் ஹனிமூன் போட்டோவை பார்த்த தன்யாவிற்கு, தாங்கள் காதலித்த நாட்கள் மனதிலோட,அதை மகனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

“உங்க அப்பா இருக்காங்களே..இப்போ மட்டுமில்ல என்னை லவ் பண்ணுன நாட்களிலேயும் இப்படித் தான்.வேலை தான் முக்கியம்-னு இருப்பாங்க.நான் என்ன பேர் தெரியுமா வச்சிருந்தேன் தெரியுமா? கரும்பு மெஷின்.தன் கிட்ட மாட்டுனவங்களை நல்லா சக்கையா பிழிஞ்சிட்டு தான் விடும். அது போல உங்க அப்பா கிட்ட வேலைக்கு போனவங்க  செத்தாங்க.”

அதை கேட்ட ரிஷி “ஆ..ஆ..”என்று சிரித்தான்.

“ஆனா உங்கப்பாவை சாதரணமா நினைச்சிடாதே குட்டி பையா.என்னைப் பார்த்த நாளில் இருந்து சைட் அடிச்சிட்டு இருந்திருக்கார்.அதை வெளிக்காட்டிக்காம நல்லா மாங்கா மாதிரி இருப்பார்.நான் என் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி சிரிப்பேன் சரியான விஸ்வாமித்திரர்-னு. அப்புறம் தானே தெரிஞ்சுது தலைவர் காதல் மன்னன்-னு.”

அதற்கும் வாயை குவித்து சிரித்துக் கொண்டான் அவள் செல்ல மகன்.

தங்களின் காதலைப் பற்றி மகனிடம் சொல்லுகின்ற சாக்கில், அந்த நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.அவளது மனம் அன்றைய நினைவுகளில் இனித்தது. ராகவை பற்றிய எண்ணங்களே தன்னை இந்த அளவுக்கு மகிழ்விக்க செய்கின்றது என்றால்,தான் அவன் மேல் எந்த அளவிற்கு பைத்தியமாக இருக்கிறோம் என்றெண்ணி வெட்கப்பட்டாள்.

அவளது நாயகனோ, வீட்டிலிருந்து வந்த உணவுப் பையை எடுத்துக் கொண்டு தனது காரை நோக்கி சென்று கொண்டிருந்தான்.அலுவலகத்தை விட்டு வீதியில் நுழைந்ததும், தனது அலைப்பேசியை எடுத்து அழைத்தான்.

“ஹாய் பேபி! எங்கே வெயிட் பண்ற? நான் கிளம்பிட்டேன்.”

மறுபுறத்திலிருந்து வந்த பதிலைக் கேட்டதும் “ம்ம்..சரி! நான் இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில் அங்கே இருப்பேன்.கிட்ட வந்ததும் கால் பண்றேன்.நீ வெளில வந்துடு” என்று சொல்லி வைத்தான்.

சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்பாகவே அங்கு சென்றுவிட, அவனுக்காக காத்திருந்த சுஷ்மிதா முன்பக்க கதவை திறந்துக் கொண்டு அவனருகில் அமர்ந்தாள்.

அவள் ஏறியதும் ஈசீஆரை நோக்கி சீறிப் பாய்ந்தது.

“ஏன் ராகவ் இவ்வளவோ லேட்டா கிளம்பினீங்க?” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவள்புறம் திரும்பி நெற்றியில் இதழ் பதித்து “வீட்டுலேருந்து டின்னெர் வந்துது.அதான் லேட்டாச்சு”என்றான்.

“உங்க அம்மாவுக்கு உங்க மேல ரொம்ப பாசமோ?இந்த நேரத்திலும் சாப்பாடை பாக் பண்ணி அனுப்புறாங்களே”.

அவளை திரும்பி பார்த்து அசட்டு சிரிப்பாக சிரித்து “ஆமாம்” என்றான்.