அத்தியாயம் – 2

 

“அக்கா! என்னோட வொயிட் டாப் எங்கே?” என்று அறையின் வாயிலிலிருந்து  கத்திக் கொண்டிருந்தாள்.

 

சமையலறையில் வியர்க்க விறுவிறுக்க காலை உணவை தயார் செய்து கொண்டிருந்த ரேணுகா “ கப்போர்ட்ல மூணாவது தட்டுல ரைட் சைட்ல இருக்கு” என்றாள் சத்தமாக.

 

அவள் சொன்னதைக் கேட்டு கப்போர்டை தலைகீழாக பிரட்டி போட்டுவிட்டு “எனக்கு கிடைக்கவே இல்லக்கா.நீயே வந்து எடுத்துக் கொடு. சீக்கிரம் வா எனக்கு நேரமாகுது” என்று கத்த ஆரம்பித்தாள்.

 

நித்யாவின் கத்தலைப் பார்த்து அடுப்பிலிருந்த சாம்பாரை இறக்கிவிட்டு  போக எண்ணியவளை தடுத்து நிறுத்திய நிரஞ்சன் “நீ போய் பாரு ரேணு. நான் இறக்கி வச்சிடுறேன்” என்றான்.

 

ஆபிஸ் கிளம்ப தயாராகி நின்றவனைக் கண்டு “ நான் சீக்கிரம் எடுத்து கொடுத்திட்டு வந்துடுறேன். அடுப்பை ஆப் மட்டும் பண்ணி வைங்க” என்று கூறி விட்டு நகர்ந்தவளை பிடித்து நிற்க வைத்து அவள் நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை கர்சீப்பால் ஒற்றி எடுத்தான்.

 

அப்போது அங்கே வந்த நித்யா “நினைச்சேன்! ஒருத்தி இங்கே சீக்கிரம் போகணும்னு கத்திகிட்டு இருக்கேன் ஆனா நீங்க வேணும்ன்னே அவளை விடாம நிறுத்தி வச்சிருக்கீங்க. என்னைக்கு நீங்க எங்க அக்கா கழுத்தில் தாலி கட்டுனீங்களோ அன்னையில் இருந்து அவளை என் கூட ஓட்ட விடாம செஞ்சுட்டீங்க” என்று கால்களை தரையில் உதைத்துக் கொண்டே அறைக்கு சென்று கதவை படாரென்று சாத்தினாள்.

 

அவளது செயலையும், பேச்சையும் கண்டு அதிர்ந்து நின்ற ரேணுவின் கண்கள் தன்னை அறியாமல் கண்ணீரை பொழிய ஆரம்பித்தது. அதைக் கண்ட நிரஞ்சன் துடித்துப் போய் “ ரேணு! என்ன இது! அவ பேசுறது நமக்கு என்ன புதுசா?” என்று கூறி தோளோடு அணைத்து சமாதானப்படுத்தினான்.

 

அவன் தோளில் சாய்ந்து “கொஞ்சம் கூட உங்களை புரிஞ்சுக்க மாட்டேன்றாளே..நீங்க ஒவ்வொன்னும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்றீங்க…ஆனா, அவ உங்க கிட்ட மோசமா நடந்துகிறா” அழ ஆரம்பித்தாள்.

 

“என்னம்மா இது! நீயே அவளை புரிஞ்சுக்கலேன்னா எப்படி? நீ வளர்ந்த பிறகு தான் அம்மா, அப்பாவை இழந்த..ஆனா, அவளுக்கு ஆதரவு கிடைக்க வேண்டிய வயசில அவங்களை இழந்திட்டு நின்னைவளுக்கு நீ தான் வாழ்க்கையின் ஒரே பிடிப்பு. அதை பங்கு போட்டுக்க வந்த என்னை அவ எதிரி மாதிரி பார்க்கிறா. அவ நிலையிலிருந்து அவ மனசை புரிஞ்சுக்க பாருடா. தனக்குன்னு ஒரு துணை, வாழ்க்கை அமைஞ்சிட்டா எல்லாம் சரியாகிடும்”.

 

தங்கையின் மனதை சரியாக புரிந்து வைத்திருப்பவனைக் கண்டு மனம் நெகிழ பார்த்தவள் “அவளுக்காக யோசிக்கிற உங்களைப் போய் இப்படி பேசுறாளே” என்றாள் சோர்வாக.

 

“விடும்மா! நாம ரெண்டு பேரும் இப்படியே பேசிட்டு இருந்தா சாம்பாரை உருட்டி தான் வைக்கணும்” என்றான் கிண்டலாக.

 

“அச்சச்சோ..” என்று அவனிடமிருந்து அவசரமாக விலகியவள் அடுப்பை அனைத்தாள்.

 

அந்த நேரம் அறைக் கதவை வேகமாக திறந்து கொண்டு வந்த நித்யா நிரஞ்சனை எரிச்சலாக பார்த்தபடி “ நான் கிளம்புறேன் அக்கா” என்று கூறியவள் சிறிது தூரம் போய் விட்டு திரும்பி நிரஞ்சனிடம் வந்து  “இன்னைக்கு வேணா என் கிட்டே இருந்து எங்க அக்காவை நீங்க பிரிச்சு இருக்கலாம். கண்டிப்பா உங்க கிட்டே இருந்து எங்க அக்காவை பிரிச்சு கூட்டிட்டு போயிடுவேன்” என்று  ஆத்திரமாக மொழிந்து விட்டு செல்லும் மச்சினியை சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவள் செல்வதை பார்த்துவிட்டு பின்னே ஓடிய ரேணு “ நித்தி! சாப்பிட்டிட்டு போ! டிபன் ரெடியா இருக்கு” என்று கெஞ்சினாள்.

 

ரேணுவை ஒரு பார்வை பார்த்தவள் “ அதோ நிக்கிறாரே உலகளந்த பெருமாள் அவருக்கே நீ செஞ்சு வச்சதை கொட்டு” என்று நக்கலாக சொல்லிவிட்டு நடந்தாள்.

 

அவனோ சிறிதும் கண்டு கொள்ளாமல் “ரேணு! அவளை மேல ஷால் போட்டுட்டு போக சொல்லு” என்றான்.

 

அப்போது தான் தங்கை அணிந்திருந்த உடையை கண்டு முகம் சுளித்து “நித்தி! என்ன இது! இப்படியா ஆபிசுக்கு போற?” என்றாள்.

 

புருவத்தை உயர்த்தி அக்காவை கேள்வியாக பார்த்து “ஏன்? இந்த டிரஸ்ஸுக்கு என்ன? வர வர நீயும் உன்னோட கிராமத்தான் ஸ்டைலில் ஆரம்பிச்சிட்டே” என்று கூறியவள் கேப் வந்ததும் அதில் ஏறிக் கொண்டாள்.

 

அவள் சொன்னதை கேட்டு மனம் சுணங்கி நின்று கொண்டிருந்தவளின் கையில் ஒரு ஷாலைக் கொண்டு வந்து கொடுத்து அவளிடம் கொடுக்குமாறு கூறினான் நிரஞ்சன்.

 

நிரஞ்சன் ஷால் கொண்டு வந்ததையும், அதை ரேணுவிடம் கொடுத்ததையும் பார்த்தவள் கடுப்பாகி, கேப்பிலிருந்து இறங்கியவள் நிரஞ்சன் அருகில் சென்று “எல்லோரும் உங்களை மாதிரி கேவலமா இருக்க மாட்டாங்க. நீங்க என்ன முயற்சி பண்ணினாலும் நான் அக்காவை உங்க கிட்டே இருந்து காப்பாத்தாம விடமாட்டேன்” என்று சபதமிட்டு விட்டு நகர்ந்தாள்.

 

அவள் இறங்கி நிரஞ்சனிடம் சென்று பேசியதைக் கேட்டு அதிர்ந்து நின்ற ரேணுகா “என்னங்க இவ இப்படி பேசிட்டு போறா? உங்க கிட்டே இருந்து என்னை காப்பாத்த போறாளா? வெளில இருந்து கேட்கிறவங்க உங்களை பத்தி என்ன நினைப்பாங்க?”

 

அவள் தோள்களைப் பிடித்து உள்ளே நகர்த்திக் கொண்டு சென்றவன்  “அவ என்னை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு இருக்கா. அவளுக்கு நான் வில்லன் இல்ல அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்யணும்ன்னு நினைக்கிறேன்னு புரியல. சரிம்மா! எனக்கு நேரமாச்சு நீ டிபன் எடுத்து வை. நான் கிளம்பனும்” என்றான்.

 

நிரஞ்சனிடம் பேசிவிட்டு காரில் பயணித்துக் கொண்டிருந்தவளின் மனமும் அக்காவைப் பற்றியும், நிரஞ்சனையுமே சுற்றி வந்தது. அவனை திருமணம் செய்வதற்கு முன்பு அக்கா என் மீது எத்தனை அன்போடு இருந்தாள். இன்று அத்தானுக்கு பிடிக்கும் அது பிடிக்கும் என்று அவளது அன்பு இடம் மாறி போனதைக் கண்டு நெஞ்சம் வலித்தது. நிரஞ்சன் தன்னிடம் அன்பாக பழகி இருந்தாலாவது அக்காவின் விலகல் அதிகம் வலிக்காமல் போய் இருக்கும். ஆனால், அவன் ஆரம்பத்தில் இருந்தே என்னை இந்த வீட்டில் சம்மந்தபடாத ஒருவர் போல் அல்லவா நடத்துகிறான். என்னிடம் முகம் கொடுத்து கூட பேசத் தயங்கியதைக் கண்டு எத்தனை நாள் அழுதிருக்கிறேன். முகம் பார்த்து பேச கூட மாட்டானாம் ஆனா அக்காவின் முன்னிலையில் என் மேல அக்கறை உள்ள மாதிரி நடிப்பனாம். உன் வில்லன் வேலை எல்லாம் வேற யார் கிட்டேயாவது வச்சுக்கட்டும்.என் கிட்ட இந்த ஆட்டம் எல்லாம் செல்லாது என்று எண்ணிக் கொண்டாள்.

 

நிரஞ்சனும் அதே நினைவுகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் ரேணுகாவை திருமணம் செய்து கொண்ட போது நித்தியாவிற்கு பதினெட்டு வயது. துறுதுறுவென்று குழந்தை போல் சுற்றித் திரிந்தவளை கண்டதுமே அவனறியாமல் அவள் மேல் எல்லையில்லா பாசத்தை வளர்த்துக் கொண்டான். தாய், தந்தைக்கு ஒரே மகனாக இருந்ததனால் தன்னுடைய நண்பர்களின் சகோதர, சகோதரிகளை காணும் போது அவனுள் மிகுந்த ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். நண்பர்கள் தங்களின் சகோதரனுடனோ, சகோதரியுடனோ சீண்டி சண்டை போடுவதை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருப்பான். அவனது சிறு வயது ஏக்கத்திற்கு எல்லாம் தீர்வாக நித்யாவைப் பார்த்ததும் தனது குட்டி தங்கையாக மனதில் வரித்துக் கொண்டான். ஆனால், நாம் எண்ணுவது போல் இந்த சமூகத்தின் பார்வை இருக்காதே. அதற்கு அவளது வயதும் ஒரு காரணமாகி போனது. அவள் ஒரு பத்து வயது குழந்தையாக இருந்திருந்தால் வேறு விதமான பேச்சுகள் எழுவதை தடை செய்திருக்கலாம்.

 

திருமணம் முடிந்ததும் தங்களுடனே அவளை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து தங்க வைத்துக் கொண்டனர். அவனிடம் நன்றாகப் பேசினாலும் அவள் மனதில் நிரஞ்சன் தன்னையும், அக்காவையும் பிரிக்க வந்தவன் என்றே நினைத்தாள். முதல் நாளில் இருந்தே பிரச்சனை எழ ஆரம்பித்தது. எனக்கு தனியாகப் படுக்க பயம் அக்கா என்னுடனே இருக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ய ஆரம்பித்தாள்.

 

தம்பதிகள் இருவருக்கும் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் தவிக்க ஆரம்பித்தனர். ஒரு மாதம் வரை அவள் இஷ்டத்திற்கு விட்டுப் பிடித்து அதன் பிறகு அவளை மாற்றிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர். ஒரு மாதம் கடந்து பல மாதங்கள் ஆன போதும் அவள் எந்த மாறுதலையும் விரும்பவில்லை. அவ்வப்போது சாதாரணமாக ரேணுவின் அருகில் அவன் சென்றாலே அழ ஆரம்பித்தாள்.

 

ரேணுவின் நிலை தான் பரிதாபமாக ஆனது. கணவனுக்கும், தங்கைக்கும் இடையில் சிக்கித் தவித்தாள். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்றெண்ணி நிரஞ்சன் அவளை ஹாஸ்டலில் சேர்க்கலாம் என்றான். அதைக் கேட்டதும் என்னையும், அக்காவையும் மொத்தமா பிரிக்கப் பார்க்கிறீர்களா? என்று ஆட்டமாக ஆடி ஹாஸ்டலுக்கு போக முடியாது என்றாள்.

 

இவர்களின் நிலையை பற்றி அறிந்து கொண்ட நிரஞ்சனின் பெற்றோர் அவளை தங்களோடு அழைத்துச் செல்வதாக கூறினர். அதற்கும் என்னுடைய அக்காவை விட்டு என்னால் எங்கேயும் வர முடியாது என்று அழுது அடம் பிடித்தாள்.

 

பெரியவர்களுக்கும் சரி, நிரஞ்சனுக்கும் எப்படி அவளுக்கு புரிய வைப்பது என்று நினைத்து திகைத்து போனார்கள். அவள் தங்கள் வாழ்க்கையில் செய்த குளறுபடிகளுக்காக அவன் அவளை வெறுக்கவில்லை. சின்ன குழந்தையின் செய்கையாக மட்டுமே நினைத்தான். எப்பவும் போல் அவளுக்கு வேண்டியதை செய்து கொண்டிருந்தான். ரேணுவை அவளுக்காக விட்டுக் கொடுத்தான்.

 

தன் கண்களுக்கு சின்ன குழந்தையாக, தங்கையாக தெரிபவள் மற்றவர்களின் பார்வைக்கு வேறு மாதிரி தெரியக் கூடும் என்பதை உணர்ந்த நாள் தன்னை அவள் முற்றிலும் வெறுக்கும் படி செய்து கொண்டான். அவனது அலுவலகத்தில் கூட வேலை செய்பவர்களின் பேச்சை ஒரு நாள் எதேச்சையாக கேட்க்கும்படி நேர்ந்ததது. ‘அவனுக்கு என்ன ஒரு பக்கம் பொண்டாட்டி..இன்னொரு பக்கம் மச்சினி..ரெட்டை குதிரை சவாரி பண்ணிட்டு இருக்கான்.கொடுத்து வச்சவன் கேட்பதற்கு ஆளே இல்லை’ என்று பேசியதைக் கேட்டதும் அதிர்ந்து போனான். அவர்களை தூக்கி போட்டு மிதிக்கும் எண்ணம் வந்தாலும்..இன்னும் எத்தனை பேர் இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ என்கிற கவலை எழுந்தது.

 

இந்த பேச்சு அவளது வாழ்க்கையை பாதிக்கும் என்று பயந்தான். தான் ரேணுவை விட்டுப் பிரிந்தால்அவளால் தாங்க முடியாது என்பதையும் உணர்ந்திருந்தான். இதற்கு தீர்வு தான் என்ன?

 

 அவள் என்னென்ன காரணத்திற்க்காக தன்னை வெறுப்பாலோ அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தான். படிப்படியாக அவளது வெறுப்பு எல்லோர் முன்னிலையிலும் வெளிப்பட ஆரம்பித்தது. அவன் நினைத்ததை சாதித்தான்.

 

நித்யாவிற்கு அவனைப் பிடிக்காது என்கிற ரீதியில் பேச்சுகள் எழுந்தது. அவளின் நலத்திற்க்காக தன் நலத்தை துறந்தான். திருமணம் முடிந்து இந்த நான்கு வருடங்களாக மனைவியின் மீது அளவில்லாத காதல் இருந்தும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

 

நித்யாவிற்கு திருமணம் செய்ய கூடிய வயது வந்து விட்டதால் அவளுக்கு நல்ல பையனைப் பார்த்து முடித்து விட வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது. தான் பார்க்கும் மாப்பிள்ளையை அவள் திருமணம் செய்து கொள்வாளா? என்கிற சந்தேகமும் இருந்தது. இதில் அவனது பெற்றோர்கள் வேறு நான்கு வருடங்கள் ஆகி விட்டது வாரிசு இல்லையே என்று வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்திருந்தனர்.

 

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் நீண்ட பெரு மூச்சுடன் ‘அவளுக்கு நல்ல துணையாக அமைந்தால் தான் தங்களது வாழ்வும் நிலைக்கும். வருகிறவன் இந்த அடம் பிடிக்கும் குழந்தையை சரியாகப் புரிந்து கொள்பவனாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.

 

( கடவுள் நினைத்துக் கொண்டார் உன்னோட தலையிலிருந்து வரப் போகிறவன் தலையில் இந்த சுமையை இறக்கி வைக்கப் போகிற…அவன் என்ன ஆகப் போறானோ? பாவப்பட்ட ஜென்மம்)

 

அலுவலகத்தில் சென்று இறங்கிய நித்யாவிடம் வந்தான்  மற்றொரு டீம்மைச் சேர்ந்தவனான பிரதீப்.

 

“ஹே! பேப்! சும்மா கலக்குற!” என்றவனது கண்கள் அவளது மேனியெங்கும் ஊர்ந்தது.

 

அவளோ அவனது கண்கள் செல்லும் பாதையை கவனிக்காது “ஹாய் பிரதீப்! என்ன இங்கே நிக்கிற? ராஜ் இன்னும் வரலையா?” என்று கேட்டபடி உள்ளே நடந்தாள்.

 

அவள் அருகில் இழைந்தபடி நடந்தவன் “அவன் வந்திருந்தா நான் ஏன் இங்கே நிக்கப் போறேன். என் அதிர்ஷ்டம் அவன் இன்னைக்கு சீக்கிரம் வரல. இந்த தேவதையோட தரிசனம் கிடைத்தது” என்றான் வழிந்து கொண்டே.

தனது கியுபிகள் அருகில் சென்றதும் அங்கே முறைத்துக் கொண்டு நின்றிருந்த ரம்யாவை வித்தியாசமாகப் பார்த்தாள்.

 

“ஏன் ரம்யா இப்படி முறைக்கிறே?”

 

“அறிவு இருக்கா உனக்கு! இப்படி ஸ்லீவ்லெஸ் டாப் போடும் போது மேல ஸ்டோல் போட மாட்டியா? இந்த கோலத்தில் வந்திருக்க?” என்றாள் எரிச்சலுடன்.

 

“இந்த டிரஸ் நல்லா இல்லையா ரம்ஸ்? ஒரு ஸ்டோல் போடாததுக்கா இவ்வளவு முறைக்கிற?” என்றாள் பரிதாபமாக.

 

அவளது பேச்சை கேட்டவளுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. “அறிவு கெட்டவளே அந்த பிரதீப் உன்னை எப்படி பார்த்திட்டு போறான்? அது கூடவா புரியாது உனக்கு?” என்றாள் எரிச்சலுடன்.

 

சற்று தீவிரமாக யோசித்தவள் “ஒ..அதான் அப்படி பார்த்தானா? அக்கா ஸ்டோல் கொடுத்தாங்க ரம்ஸ். நான் தான் வாங்காம வந்துட்டேன்” என்றவளை கொலைவெறியுடன் பார்த்து “ உங்க மாமா போட்டுட்டு போக சொல்லி இருப்பார். அதான் மகாராணி வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்து இங்கே அந்த பிரதீப்புக்கு சீன் காட்டிட்டு இருந்தீங்களா” என்றாள் நக்கலாக.

 

அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பானவள் கையிலிருந்த ஹன்ட் பேக்காலையே நன்றாக மொத்திவிட்டு “ இரு ரம்ஸ் வரேன்!” என்றவள் தன் டேபிளில் ஏதோ செய்து விட்டு பிரதீப்பை நோக்கிச் சென்றாள்.

 

“பிரதீப்! எனக்கு சின்ன ஹெல்ப்..என் டேபிளில் இருந்த திங்க்ஸ் டேபிளுக்கு சைட்ல விழுந்திடுச்சு. என் கை எட்ட மாட்டேங்குது. நீங்க எடுத்து தர முடியுமா?” என்று கொஞ்சலாக கேட்டாள்.

 

அவன் அவளை நன்கு ஆராய்ந்து கொண்டே “ யா! சியூர் பேபி! உனக்கு பண்ணாமலா?” என்று கூட நடந்தான்.

 

அவள் காட்டிய இடத்தில் குனிந்து தன் கையை நீட்டி கீழே கிடந்தவற்றை எடுக்க முயற்சி செய்தான்.

 

அவள் சொன்ன பொருளை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தவன் திடீரென்று “ஸ்..ஸ்..ஐயோ அம்மா!” என்று கத்திக் கொண்டு கையை எடுக்கவும் முடியாமல் படாதபாடுபட்டு தவித்தான்.

 

ஒருவழியாக போராடி எடுத்தவனது கைகளை நித்யாவின் காக்டஸ் பதம் பார்த்திருந்தது. ஆங்காங்கே அந்த முட்கள் கிழித்து ரத்தம் சொட்ட ஆரம்பித்திருந்தது.

 

“ஏய்! லூசு! என்ன கிடக்கு அங்கே? என் கையை கிழிச்சிட்டு” என்று கத்தினான்.

 

அவளோ கொஞ்சமும் சட்டை செய்யாமல் “ என்ன பிரதீப் வலிக்குதா? நானும் அந்த காக்டஸ் மாதிரி தான். சரியா நடந்து கிட்டா பேசாம இருப்பேன். என்னை சுத்தி முட்கள் தான் இருக்கு. அசந்தா குத்தி கிழிச்சிடுவேன். ஜாக்கிரதை!” என்று மிரட்டிவிட்டு நகர்ந்தாள்.

 

Advertisements