அத்தியாயம் – 1

“டேய் சுந்தர்! பேனரை இன்னும் மேல ஏத்தி பிடிடா”.

“அவனே ஆழாக்குக்குக் கையும் காலும் முளைச்ச மாதிரி இருக்கான். அவன் எங்கே ஏத்திப் பிடிக்கிறது” என்று நக்கலடித்துக் கொண்டே ஒரு ஸ்டூலை அவனருகில் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான் சிவா.

விஸ்வா மும்மரமாக இசைக்கருவிகளை எந்தெந்த இடத்தில் வைப்பதென்று ஆலோசித்து அவற்றைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தான்.

“சங்கீத ஸ்வரங்கள் இசைக்குழு” என்கிற பேனரை மேடையில் மாட்ட தான் சுந்தரும், வாசிமும் போராடிக் கொண்டிருந்தனர். சுந்தர் உயரம் கம்மியாக இருந்ததால் ஸ்டூலின் மீது ஏறியப் பிறகும் வாசிம் சொன்ன உயரத்திற்குப் பிடிக்க முடியாமல் கால்களை எம்பிக் கொண்டு நின்றான்.

அப்போது ஸ்டூல் நொடிக்கப் பிடித்திருந்த பேனருடன் கீழே விழ இருந்தவனைக் கண்டு வேகமாக ஓடிச் சென்று பிடித்தான் விஸ்வா.

அதைப் பார்த்தா சிவா லேசாக விசிலடித்து “ம்ம்..என்னடா நடக்குறது இங்கே. சினிமாவில் ஹீரோயின் விழும்போது இப்படித் தான் ஹீரோ சார் போய்ப் பிடிச்சுக்குவார். ஆனா இங்கே ஒரு தண்ணி ட்ரம்மை போய் நம்ம ஹீரோ சார் பிடிக்கிறார்” என்றவனைப் பார்த்து வாசிமும், விஸ்வாவும் சிரிக்க, சுந்தர் தன்னைத் தண்ணி ட்ரம் என்று கூறியதைக் கேட்டு துரத்திக் கொண்டு ஓடினான்.

அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தன் பணியைத் தொடர்ந்தான் விஸ்வா.

சிறு வயதிலிருந்தே இசையின் மீது தீராத காதல் கொண்டவன் விஸ்வா. அவனது இதயம் துடிப்பது கூடத் தாள லயத்துடனே குதித்திடும். தன்னைச் சுற்றி எழும் சிறு ஓசையைக் கூட இசையாகப் பார்ப்பவன் அவன். ரஞ்சிதம், அன்புமணியின் ஒரே தவப் புதல்வன் விஸ்வா. அன்பான குடும்பம். மகன் மீது மட்டுமல்ல, தங்கள் வாழ்க்கையை அன்பால் மட்டுமே கடந்து செல்ல வேண்டும் என்கிற உறுதியோடு இருப்பவர்கள்.

இன்ஜினியரிங் முடித்து நான்காண்டுகள் வேலை செய்த பிறகு இசையின் மீது இருந்த அதீத ஆர்வத்தால் வேலையை உதறி விட்டு சங்கீத ஸ்வரங்கள் என்கிற லைட் மியுசிக் ட்ரூபை ஆரம்பித்தான். அவன் படித்த துறையில் நல்ல வாய்ப்புகள் தேடி வந்த போதும், என் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புகிறேன் என்று உறுதியாக இருந்தான்.

சுந்தர் தெருவில் அனாதையாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தவன். சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தங்களுடன் அழைத்து வந்து படிக்க வைத்தனர் விஸ்வாவின் பெற்றோர். இன்று ஒரு அலுவலகத்தில் அக்கவுண்டன்டாக இருக்கிறான். ஓய்வு நேரத்தில் விஸ்வாவிற்கு உதவி செய்வான்.

சிவா விஸ்வாவின் குழுவில் பாடகனாக இணைவதற்காக வந்தவன், அவனுக்கு மிக நெருங்கிய தோழனாக ஆனான். குழு ஆரம்பித்த நான்கு வருடங்களாக அவனோடு துணை நிற்பவன். நல்ல பாடகன். விஸ்வாவின் குழுவிற்கு வருவதற்கு முன் பல குழுக்களில் இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அளிக்கபடாமல் ஏமாற்றப்பட்டான். சரஸ்வதி அம்மாளின் மூத்த மகன். சிவாவின் தங்கை சக்தி. கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரெண்டாம் வருடம் படித்து வருகிறாள். விஸ்வாவின் மீது அளவில்லாத காதலுடன் இருப்பவள்.

வாசிம் கீ-போர்டு ப்ளேயர். இக்குழுவில் ரெண்டு வருடங்களாக இருப்பவன். இவர்கள் நால்வருடைய நட்பும் மிக நெருக்கமானது. ஒருவரின் மனதை இன்னொரு நன்றாக அறிவர். இவர்களைத் தவிர மேலும் ஆறு பேர் இக்குழுவில் இருக்கின்றனர்.

 

போக்ரோட்டில் உள்ள சிறிய அம்மன் கோவிலில் கூழ் ஊத்தும் திருவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கச்சேரி.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ரெண்டு மணி நேரம் முன்பே தனது குழுவினரோடு வந்து தங்களுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர் .

ப்ரோக்ராம் தொடங்க சில நிமிடங்களே இருந்தது. விஸ்வா எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

“மைக் டெஸ்டிங்..செக்..செக்”

கோவிலிலும், தெருவிலும் நின்று கொண்டு அவர்களயே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தது கூட்டம். அதிலும் இளம் பெண்கள் புத்தம் புது ஆடையுடன் தங்களைக் கடந்து போகும் காளையருக்கு மையலுடன் ஒரு சிரிப்பை சிந்தி அவர்களை மயக்கமடைய வைத்துக் கொண்டிருந்தனர்.

அதோடு மேடையில் மைக்குடன் நின்றிருந்த விஸ்வாவின் மீது தங்கள் பார்வையை வைத்தபடியே இருந்தனர்.

“சங்கீத ஸ்வரங்கள் இசைக்குழு சார்பாக அனைவருக்கும் வணக்கம்” என்று பேசியபடி மேடையின் நடுவே வந்தான் சிவா.

அவன் பேச ஆரம்பித்ததும் ஓரமாக நின்றிருந்த சில குறும்புகாரிகள் முன்னே வந்து “ அண்ணே! உங்க பின்னால நிக்கிறாரே அவரு பேச மாட்டாரா?” என்று கேலியாகக் கேட்டார்கள்.

அவர்கள் அண்ணா என்றழைத்ததிலேயே கடுப்பானவன் விஸ்வாவை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு “அவருக்குப் பேச வராது” என்றான்.

“அவரு தான் ஒனருன்னு சொன்னாங்க. ஊமை எப்படி மியுசிக் ட்ரூப் வச்சிருக்கும்? ஏண்டி உனக்குத் தெரியுமா?” என்று அவனையே கலாய்த்து விட்டுச் சென்றார்கள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த குழுவினர் அனைவரும் அவனுக்குத் தெரியாமல் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

அவனோ ஏகக் கடுப்புடன் விஸ்வாவின் காதில் “இதுக்குத் தான் கோவில் கச்சேரி எல்லாம் ஒத்துக்கக் கூடாது. ஒவ்வொருத்திக்கும் கொழுப்பு கிலோ கணக்குல இருக்கும் போல இருக்கு. எல்லாக் குந்தாணியும் சேர்ந்து என்னைக் கலாய்ச்சிட்டு போகுதுங்க” என்றான் கடுப்புடன்.

அவனைச் சமாதானமாக முதுகில் தட்டி “விடுடா! நீ ப்ரோக்ராம்மை ஆரம்பி” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னவன் மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

அவர்களின் குழுவில் கண் தெரியாத முருகன் தான் எப்பொழுதும் முதல் பாடலை பாடுவார். இன்றும் நிகழ்ச்சியைச் சாமி பாட்டுடன் ஆரம்பிக்க அவரை அழைத்தான்.

அவரை மைக்கருகில் அழைத்துச் சென்று அவருடன் கூட நின்று கொண்டான் விஸ்வா.

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

என்று சீர்காழி குரலில் ஆரம்பிக்கவும் அதுவரை சலசலத்துக் கொண்டிருந்த மக்கள் அமைதியாகப் பாடலை கவனிக்க ஆரம்பித்தனர்.

மேலும் இரு பாடல் அவர் பாடியவுடன், அவரை அழைத்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றவன் அவர் கிளம்புவதற்கு ஏற்பாடுகளைச் செய்தான்.

அப்போது கூட்டத்தில் நுழைந்த குடிகாரன் ஒருவன் மேடையைப் பார்த்து “டேய்! என்ன்கழடா இது கசெரிழி…பிள்ளையாழ் பாழ்ட்ட்டா பாடுறீங்க..” என்று சத்தம் போட்டான்.

கூட்டத்திலிருந்த சிறுவர்களும் சேர்ந்து கொண்டு கத்த, அதைப் பார்த்த விஸ்வா சிவாவிற்குச் சைகை செய்தான். அவனும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு பாட ஆரம்பித்தான்.

டங்கா மாரி ஊதாரி புட்டுகின்ன நீ நாரி

ரூட்டெடுத்து கோடு போட்டேன்

கோடு மேல ரோடு போட்டேன்

பாடிக் கொண்டே ஆடவும் சிறுவர்களும், அந்தக் குடிகாரனும் விசில் அடித்துக் கொண்டே ஆட ஆரம்பித்தனர். மேலும் மேலும் குத்து பாடலை கேட்க சிவாவும், மைக்கேலும் மாற்றி மாற்றிப் பாடி ஓய்ந்து போனார்கள்.

இளசுகளும் ஆட்டம் போட்டு ஓய்ந்ததும் விஸ்வா கச்சேரியை மெல்லிசைகளின் பக்கம் திருப்பிச் சென்றான். அவனது பாடல்கள் ஓரிடத்தில் மக்களை கட்டி போட்டது.ஒன்பது மணி ஆனதும் குழுவில் இருந்த பெண் பாடகிகள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் பாடி நிறைவு செய்தனர்.

கச்சேரி முடிந்து தங்களின் பொருட்களைப் பாக் செய்து கொண்டிருக்கும் போது சிவா அலுத்துக் கொண்டான்.

“சாமிக்கு திருவிழா எடுக்கிறேன்னு சொல்லிட்டு சாமி பாட்டைக் கேட்காம டங்கா மாரி ஊதாரியை கேட்குதுங்க நாதாரிங்க”.

அவன் சொன்னதைக் கேட்டதும் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

“ செம எரிச்சலா இருக்குடா. அதுவும் வார்த்தைகளைப் பாரேன் புட்டுகின நீ நாரின்னு. அதைப் பாடிட்டுக் கோவில் பக்கம் திரும்பி பார்க்கிறேன். சாமி காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சு ஓடிகிட்டு இருக்கு”.

வந்த சிரிப்பை அடக்க முடியாமல் “டேய்! போதுண்டா! ரொம்ப டையர்டா இருக்கு. நீ வயிற்று வலியை வேற உண்டாக்கிடாதே” என்று கூறி இசைக் கருவிகளை வண்டியில் ஏற்றத் தொடங்கினார்கள்.

எல்லாவற்றையும் ஏற்றியதும் சுந்தரும், வாசிமும் அந்த வண்டியில் ஏறிக் கொண்டனர். சிவாவும், விஸ்வாவும் தங்களது பைக்கை எடுக்கச் சென்றனர்.

“விசு! உன்னோட அழுக்குமூட்டை மீனாட்சிகள் கிட்ட சொல்லிகிட்டியா? வந்ததுலே இருந்து உன்னைச் சைட் அடிச்சிட்டே இருந்தாளுங்க”.

அதைக் கேட்டதும் அவனை முறைத்து “மச்சான்! இந்த ஏரியா ஒரு மாதிரி. நீ சொன்னது மட்டும் அவனுங்க காதுல விழுந்துது வகுந்துருவானுங்க.பார்த்து நடந்துக்க” என்று மிரட்டிவிட்டு வண்டியை எடுத்தான்.

இசைக்குழுவுக்கென்று தனியாக ஊரை விட்டு வெளியே ஒரு ஹால் போன்ற ஓரிடத்தை வாடகைக்கு எடுத்திருந்தான் விஸ்வா. அதிலருந்த ஒரு ரூமிலேயே சுந்தர் தங்கி இருந்தான். கச்சேரிகளுக்கு முன்பு ரீஹர்சல் செய்யவும் அந்த இடம் உபயோக்கிக்கப்பட்டது.

சுந்தருடன் வாசிமும் சென்று கருவிகளை இறக்கி வைத்து விட்டு அங்கே விட்டிருந்த தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

பதினொன்றை மணியளவில் வீட்டின் வாயிலுக்குள் நுழைந்த பைக்கின் சத்தத்தைக் கேட்டு ரஞ்சிதம் வந்து கதவைத் திறந்தார்.

“என்னமா நீங்க! என் கிட்ட தான் சாவி இருக்கே…நீங்க ஏன் தூங்காம முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று கோபித்துக் கொண்டான்.

அவன் உள்ளே வந்ததும் சமையலறைக்குள் சென்று உணவை சூடு செய்து கொண்டே “சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணிக்கோ! நான் உனக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உன் பொண்டாட்டியே பார்த்துப்பா” என்றார்.

ஆடையை மாற்றிக் கொண்டு வந்தவன் உணவு மேஜையில் அமர்ந்து கொண்டு “ இந்த நினைப்பெல்லாம் வேற இருக்காம்மா உனக்கு. அவளுக்கும் நீ செய்ய வேண்டிய நிலைமை வந்துட போகுது” என்று கூறி சிரித்தான்.

உணவை பரிமாறிக் கொண்டே “ஏண்டா செஞ்சா என்ன? எனக்குப் பொண்ணு இருந்தா செய்ய மாட்டேனா?” என்றார்.

“ இன்னைக்கு என்ன செஞ்சீங்க?”

“ பெருசா ஒண்ணுமில்லை எப்பவும் போலத் தான்” என்று அலுத்துக் கொண்டவர் “ மாமா போன் பண்ணினாங்க விஸ்வா. நாளைக்கு மாமியை அழைச்சுக்கிட்டு வரேன்னு சொல்லி இருக்காங்க” என்று சொல்லும் போதே மகனின் முகத்தை ஆராய்ந்தார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் சற்று ஆர்வத்துடன் நிமிர்ந்து அன்னையின் முகத்தைப் பார்த்து “என்ன திடீர்ன்னு வரேன்னு சொல்லி இருக்காங்க” என்றான்.

“தெரியலப்பா” என்று வாய் சொன்னாலும் மனதிற்குள் ஒருவேளை மகனுக்குப் பெண் கொடுக்கக் கேட்டு வருகிறார்களோ என்று எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் மனதில் எழுந்ததுமே முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. மகன் மனதில் சுமிக்கு ஒரு இடம் உண்டு என்பதை அறிந்தவருக்கு இந்தத் திருமணம் கூடி வந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்தார்.

அவனுக்குமே மாமாவின் வருகையைக் கேள்விப்பட்டதுமே மனதில் மெல்லிய சாரலாய் சுமியின் நினைவுகள் எழுந்து இனிமையைக் கூட்டியது. மௌனமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்று தன்னறையில் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை பத்து மணியளவில் வந்திறங்கினார் மாமா. அவரை வரவேற்று உள்ள அழைத்துச் சென்றவனின் கண்கள் சுமியைத் தேடியது.

“சுமியை அழைச்சிட்டு வரலையா மாமா” பொறுமையிழந்து அவரிடம் கேட்டே விட்டான்.

மகனது கேள்வியைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் அன்புமணி.

“அவ பிரெண்ட்ஸுக்கு ட்ரீட் கொடுக்க வெளில போயிருக்கா விசு” என்றார்.

சிறிது நேரம் குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்குக் குடிக்க ஏதாவது குடுப்போம் என்று சமையலறைக்குச் சென்றவரை தடுத்து நிறுத்தியது அண்ணன் மனைவியின் குரல்.

“அக்கா! ஒரு தட்டு கொண்டுவாங்க” என்றார்.

அவர்களுக்குக் காப்பியை கலந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் கேட்ட தட்டை கொண்டு வந்து டீபாயில் கொண்டு வைத்து வைத்தார்.

தாங்கள் கொண்டு வந்த பையிலிருந்து பழங்களை எடுத்து அதில் வைத்தவர் அதன் மீது திருமணப் பத்திரிக்கையை வைத்தார்.

அதைப் பார்த்ததும் சற்று அதிர்ந்த தம்பதியர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சங்கடமான ஒரு புன்னைகையுடன் சுமியின் தந்தை ராஜசேகர் “மச்சான் நல்ல ஜாதகம் ஒன்னு ஒரு பதினைஞ்சு நாள் முன்னாடி வந்துது. சரி பார்த்து வைப்போம்ன்னு சும்மா தான் பார்த்தோம். மாப்பிள்ளை அமெரிக்காவில் நல்ல கம்பனில வேலை பார்க்கிறார். எப்படியும் நாள் ஆகும்ன்னு நினைச்சோம். ஆனா, தீடீரென்று மாப்பிள்ளை ஊருக்கு வரார் பொண்ணு பார்த்து பிடிச்சிருந்தா நிச்சயம் பண்ணிடலாம்-ன்னு சொன்னாங்க” என்றார்.

அன்புமணி என்ன சொல்வதென்று தெரியாமல் “ஒ..” என்றார்.

அவரைப் பார்த்துக் கொண்டு “போன வாரம் வந்தவங்க பெண்ணைப் பார்த்துச் சம்மதம் சொல்லிட்டாங்க. ரெண்டு மூணு நாளிலேயே நிச்சயம் பண்ணிடலாம்ன்னு சொன்னாங்க. எனக்குக் கையும் ஓடல காலும் ஒடல” என்று சொல்லி நிறுத்தினார்.

ரஞ்சிதமோ மனதிற்குள் தாளித்துக் கொண்டிருந்தார் ‘கையும், ஓடாம காலும் ஓடாம தான் பத்திரிக்கை வரை அடிச்சிட்டு வந்து நிக்கிறீங்களோ’ என்று நினைத்தவரின் பார்வை மகனை தொட்டு மீண்டது.

அவனோ இறுகி போய் அமர்ந்திருந்தான்.

கண்கள் கலங்க அண்ணின் புறம் திரும்பிய ரஞ்சிதம் “ பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதை தான் தங்கச்சி கிட்ட சொல்லல. நிச்சயத்துக்குக் கூப்பிட கூடவா தோணலை?” என்றார் பொங்கி வந்த ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு.

அவர் வாயை திறப்பதற்குள் “மாப்பிள்ளை வீட்டுகாரங்க தான் ரெண்டு பேரோட பெத்தவங்க மட்டும் இருந்தா போதும் நிச்சயதுக்குன்னு சொல்லிட்டாங்க அண்ணி. கல்யாணத்துக்குத் தான் எல்லோரையும் கூப்பிட போறோமேன்னு சொல்லிட்டாங்க. மாப்பிள்ளை வீட்டில் சொல்லும் போது நாங்க என்னண்ணி பண்ண முடியும்” என்றார் ஒன்னும் தெரியாதவரை போலக் கூறினார் ராஜி.

அதுவரை பொறுமையாக இருந்த ரஞ்சிதம் தாங்க முடியாமல் வெடித்தார் “சுமிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறப்ப என் மகனை பார்க்கனும்-ன்னு உங்களுக்குத் தோணவே இல்லையான்னே?” என்றார் ஆத்திரத்துடன்.

அவரின் அந்தக் கேள்வியை எதிர்பார்க்காத ராஜசேகர் சற்று அதிர்ந்து பின் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு “ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனா என்னோட கருத்தை நான் சொல்றேன். தயவு செஞ்சு பொறுமையா கேளுங்க” என்றார்.

அங்கே நடப்பற்றைக் கண்டு உடல் இரும்பாக இறுகி போயிருக்க மனமோ எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்க எந்த நேரமும் கனலை கக்க தயாராக அமர்ந்திருந்தான்.

“விஸ்வா நல்ல பையன் தான். இவனை மாதிரி பையனை கட்டிக்கப் பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும் தான். ஆனா, வாழ்க்கைக்கு அது மட்டும் போதாதே. படிச்ச படிப்பை விட்டுட்டு பாட்டு கச்சேரி நடத்துறேன்னு சொல்லி கோவிலிலும், கல்யாண வீட்டிலேயும் பாடி சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன? பெண்ணைக் கொடுக்கிறவன் தன் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்-ன்னு நினைக்கிறது தப்பில்லையே. என் மாப்பிள்ளை என்னவா இருக்கார்-ன்னு கேட்கிறவங்களுக்குக் கோவிலில் பாட்டு பாடிகிட்டு இருக்கார்-ன்னு சொல்ல முடியாதே” என்று அவர் முடிக்கும் முன் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த விஸ்வா “மாமா! போதும் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம். உங்க பொண்ணுக்கு அப்பாவா நீங்க நடந்துகிட்டீங்க. ரொம்பச் சந்தோஷம். ஆனா, என்னை என்னோட தொழிலை விமர்சிக்க உங்களுக்கு எந்த ரைட்சும் கிடையாது. நீங்க வந்த வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு வாயிலுக்குச் சென்று விட்டான்.

அவன் பேசியதைக் கேட்ட சுமியின் அன்னை ஆங்காரத்துடன் எழுந்து “பார்த்தீங்களா? எப்படிப் பேசிட்டுப் போறான். இதுக்குத் தான் காலையிலேயே குதிச்சுகிட்டு என் தங்கச்சி வீட்டுக்கு போகணும்ன்னு கிளம்புனீங்களா?” என்றார்.

“ராஜி! பேசாம உட்கார்!’ என்று மனைவியை அடக்கியவர் “ மச்சான்! அவ பேசுறதை தப்பா எடுத்துக்காதீங்க. நான் விஸ்வா பேசுவதைப் பெருசா எடுத்துக்கலை. எதையும் மனசில் வச்சுக்காம கல்யாணத்துக்கு வந்து சுமியை ஆசிர்வாதம் பண்ணனும்” என்று கூறி பத்திரிக்கையை அவர் கையில் கொடுத்தார்.

நடந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதம் வேகமாக அறைக்குள் சென்று பீரோவிலிருந்து புதுசாக வைத்திருந்த ஒரு பட்டுப்புடவையையும், மகன் முதல்நாள் கொடுத்த கச்சேரி வருமானத்தையும் எடுத்து வந்து அவர்கள் கொண்டு வந்த தட்டில் வைத்து அண்ணனிடமும்,அண்ணியிடமும் கொடுத்து “என் மருமகளுக்கு எங்களோட திருமணப் பரிசாகக் கொடுத்திருங்க அண்ணா” என்றார்.

அதைக் கேட்டதும் தங்கையை அதிர்ச்சியாகப் பார்த்து “இதை இப்போ எதுக்குக் கொடுக்கிற ரஞ்சு. உன் மருமகளுக்கு நீயே கல்யாணத்தில் கொடுக்கலாமே” என்றார்.

அவரை ஆழ்ந்து பார்த்தவர் “ நீங்க உங்க பொண்ணுக்கு நல்ல தகப்பனா நடந்துகிட்டீங்க. அதே மாதிரி என் மகனுக்கு நான் நல்ல தாயா நடந்துக்க வேண்டாமா? அவனுக்கும், அவன் தொழிலுக்கும் மரியாதை இல்லாத இடத்தில் எங்களுக்கென்ன வேலை? அதே சமயம் என் மருமகளை வாழ்த்த வேண்டியது என் கடமை. தயவு செஞ்சு எங்களைத் தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா. எங்களால கல்யாணத்துக்கு வர முடியாது” என்றார் அழுத்தம் திருத்தமாக.

Advertisements