மண்டபத்திலிருந்து வெளியே வந்து காரிலேரிய பூஜாவின் முகம் கடுகடுவென்றிருந்தது. அதற்கு நேர் மாறாக இருந்தது அரவிந்தின் மனம். தன்னவளை ஓரக் கண்ணால் ஆராய்ந்து முகம் பூரிப்பில் ஆழ்ந்தது.

கார் மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனுக்குப் பூஜாவை அழைத்துக் கொண்டு எங்காவது நெடுந்தூரம் சென்று வர வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. ஆனால், இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் விமானத்திற்குச் செல்ல இருப்பதால் அது முடியாது என்ற எண்ணம் தோன்றியது.

கடற்கரைக்காவது அழைத்துப் போகலாமா என்று யோசித்தான். அவளோ தனக்குள்ளேயே மூழ்கி இருந்தாள். அவளாக எதுவும் பேசுவாள் என்று அவளையும், தெருவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.

அவளது கண்களோ வெளியில் தெரிந்த காட்சிகளை வெறித்துக் கொண்டிருந்தாலும் மனமோ அரவிந்தை அர்ச்சித்துக் கொண்டிருந்தது. ப்ரியாவின் முன்பு அவன் மிகப் பவ்யமாக நின்றதும் பேசியதும் கண் முன்னே வந்து வந்து போனது. கம்பீரத்தின் மொத்த உருவமாக இருப்பவன் அவள் முன்னே இப்படிப் பணிந்து நின்றதைக் கண்டு எரிச்சலுற்றது.

அதிலும் ப்ரியா சொன்னவை வேறு மனதை சுற்றி சுற்றி வந்தது. என்னோட கச்சேரிகள் உலகத்தின் எந்த மூலையில் நடந்தாலும் இவர் முன் வரிசையில் இருப்பார் என்று சொன்னது எரிமலையென மனதை குமுற வைத்தது.

தன்னை அழைத்து வந்தவன் இதுவரை ஒருமுறை கூட ஆர்வமாகப் பார்வையிடவும் இல்லை,பாராட்டவும் இல்லை என்ற நினைவு வந்தது. திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை இத்தனை அலங்காரத்துடன் முதன் முதலாகப் பார்ப்பவனின் மன நிலை எப்படி இருக்கும்? எத்தனை ஆவல் கண்களில் தோன்ற வேண்டும். என்னவோ பல காலம் கூட வாழ்ந்து முடித்த தம்பதியைப் போன்று சலனமே இல்லாமல் அவன் வந்ததை நினைத்து மூளை காய்ந்தது.

தனது யோசனையில் மூழ்கி இருந்தவள் அவனது பார்வை தன்னைத் தீண்டிச் செல்வதையும், அவனது ஏக்கம் தோய்ந்த விழிகளையோ அவள் கவனிக்கவே இல்லை. அவனது இயல்பு தனது மனதை அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்த மாட்டான். அதையும் மீறி பெண் பார்க்க சென்ற அன்று தன்னை அவளிடத்தில் வெளிப்படுத்திக் கொண்டான். இது எதையுமே உணராது மனம் முழுவதும் ஆயாசமும், வெறுப்புடனும் அமர்ந்திருந்தாள்.

அதுவரை பொறுமையாக வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தவன் “ஸ்வீட்டி! நாம பீச்சுக்கு போயிட்டு வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டான்.

திடீரென்று அவனது குரல் கேட்டதும் அவனை நோக்கி திரும்பி கண்களைச் சுருக்கி வெற்றுப் பார்வை பார்த்தவளின் மனம் ‘எதுக்கு அங்கே போய் நீ கடலைப் பார்த்துகிட்டு நிற்ப, நான் உன்னைப் பார்த்து நீ ஏதாவது அன்பா பேச மாட்டியா, காதலா பார்க்க மாட்டியான்னு ஏக்கத்தில் வெந்து சாகவா?’ என்று காய்ந்து கொண்டிருந்தாள்.

அவளது பதிலுக்காகக் காத்திருந்தவன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க, மனதில் மூண்ட எரிச்சலை மறைக்காமல் “ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்குத் தலைவலிக்குது. வீட்டுக்குப் போகலாம்” என்றாள்.

அவள் மறுத்த அந்த நிமிடம் அவன் முகத்தில் எட்டிப் பார்த்த அந்த ஏமாற்றத்தை அவள் கண்டிருந்தாள் பின்னால் நடக்கப் போகும் நிகழ்வுகளைத் தடுத்திருக்கலாம்.

ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டவன் “ஒ…சரி பூஜா” ன்று கூறி அவள் வீட்டுக்குச் செல்லும் பாதையில் செல்ல ஆரம்பித்தான்.

தலைவலி என்றதும் அவன் தவித்துப் போய் ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் எதுவுமே சொல்லாமல் வண்டி ஓட்டியதைக் கண்டதும் ஆத்திரம் வந்தது. ‘என்ன மனுஷன் இவன்! தலைவலின்னு சொன்னப் பிறகு கூட எந்த உணர்வுமே இல்லாம சரின்னு சொல்றான். சரியான ஜடம்’ என்று சபித்துக் கொண்டிருந்தாள்.

அவனது மனமோ பலத்த ஏமாற்றத்தில் இருந்தது. அவளுடன் கடற்கரைக்குச் சென்று கைகளைக் கோர்த்துக் கொண்டு நீரில் நிற்க வேண்டும். தோளோடு அணைத்துக் கொண்டு அந்த நிலவை ரசிக்க வேண்டும். அவளது கைகளைத் தன் கைச் சிறைக்குள் வைத்துக் கொண்டு சிறிது தூரம் காலாற நடக்க வேண்டும், அவளை அமர செய்து மடியில் முகம் புதைக்க வேண்டும் என்கிற பல்வேறு விதமான கனவுகள் கை கூடாமல் போனதில் நீண்ட நெடிய பெருமூச்செழுந்தது.

தொழிலுலகில் சிங்கமாக வலம் வருபவன். தன்னுடைய எந்த உணர்வையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துப் பழக்கப்பட்டவன். மிக அழுத்தமானவன். மற்றவர்களிடம் வெளிப்படுத்தாத உணர்வுகளைக் காதலியிடமும், மனைவியிடமும் கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்று அறியாதவன். அதை அறிந்திருந்தால் நேரப் போகும் அனர்த்தங்களைத் தவிர்த்திருக்கலாம்.

அவன் மும்பையிலிருந்து தன்னை ஒரு விழாவுக்கு அழைத்துப் போக வருகிறான் என்று ஆவலுடன் காத்திருந்தவளுக்கு, அவனது காதலுடன் கூடிய பார்வையோ, ரசனையுடன் கூடிய பேச்சோ இல்லாமல் போனதில் தாங்க முடியாத ஏமாற்றமாகப் போனது.அதனால் வீடு சென்று இறங்கியதும் அவனை உள்ளே அழைக்காமல் விடுவிடுவென்று உள்ளே சென்றாள்.

அவர்களின் கார் வந்த ஓசையைக் கேட்டு வெளிய வந்த வரதராஜன் மாப்பிள்ளையை உள்ளே அழைக்காமல் செல்லும் மகளைப் பார்த்து “பூஜா! மாப்பிள்ளையை உள்ளே கூப்பிடாம போற? என்ன இது பழக்கம்?” என்று அதட்டினார்.

தந்தையின் கோபத்துக்குக் கட்டுப்பட்டு வாயிலுக்கு வந்தவள் “வாங்க” என்றழைத்து விட்டு ‘ஆமாம்! வந்து என்ன கிழிக்கப் போறான். நீங்க பேசுறதை பார்த்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தலையை ரெண்டு உருட்டு உருட்டிட்டுப் போகப் போறான்’ என்று சலித்துக் கொண்டாள்.

சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினான். காரில் ஏறி அமர்ந்தவனது விழிகள் அவளைக் கண்டுவிடும் ஏக்கத்தில் வாயிலைப் பார்க்க, அவளோ அவன் மீதிருந்த கோபத்தில் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

அரவிந்தின் தேடலைப் புரிந்து கொண்ட வரதராஜன் வித்யாவிடம் “அக்காவை கூட்டிட்டு வா” என்றார்.

அவன் கிளம்புவதால் தன்னை அழைக்க வருவார்கள் என்றறிந்தவள் வேகமாகக் குளியலறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். அக்காவைத் தேடி வந்த வித்யாவோ அவள் குளியலறைக்குள் இருப்பதை அறிந்து தந்தையிடம் கூறி விட்டாள்.

“பரவாயில்லை மாமா. எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு கிளம்புறேன்” என்றான் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு.

அவனது மனதை உணர்ந்து கொண்ட வரதராஜனுக்குப் பெண்ணின் மீது கோபம் எழுந்தது.

அவன் சென்றதும் பூஜாவின் அறைக்குள் நுழைந்தவர் குளியலறையில் இருந்து வெளிப்படவளிடம் “ என்னமா பூஜா இது! மாப்பிள்ளை உன்னைப் பார்த்திட்டு போகணும்ன்னு தவிச்சார். நீ என்னடான்னா அவரை வழியனுப்ப வராமலே இருந்திட்ட” என்றார் கோபமாக.

அவளோ சிறிதும் சளைக்காமல் “பா! எனக்குச் செம தலைவலி. சும்மா பேசி தொல்லை பண்ணாதீங்க” என்றாள் அலுப்புடன்.

அவளது பேச்சைக் கேட்ட கணவன், மனைவி இருவரும் சற்று யோசனையுடன் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

மேற்கொண்டு எதுவும் பேசாது “மாத்திரை எதுவும் வேணுமா பூஜா” என்றார் அவளது அன்னை.

“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். தொல்லை பண்ணாம இருந்தாலே போதும்” என்றாள்.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ சரி தூங்கி எழுந்திரி காலையில பேசிக்கலாம்” என்று அறையை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதும் போட்டிருந்த நகைகளை அவிழ்த்து டிரெஸ்ஸிங் டேபிளின் மீது வைக்கும் போது ஓரமாக வைக்கப்பட்டிருந்த சென்ட் பாட்டில் கீழ் விழுந்து உடைந்தது.

வெளியிலிருந்தவர்களின் காதில் பாட்டில் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக அறையை நோக்கி ஓடினர்.

“ ஆரம்பிச்சிட்டியா? மாப்பிள்ளை கூட என்ன சண்டை? எதுக்கு இப்போ இதைப் போட்டு உடைச்ச?” என்று கோபத்துடன் பல கேள்விகளை அடுக்கினார் பூஜாவின் அன்னை.

அவரது கேள்வியில் அதிர்ந்தவள் அதுவரை இருந்த மன அழுத்தத்தின் காரணமாக வெடித்தாள் “ ஆமாம் நான் தான் போட்டு உடைச்சேன். எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு போய் உங்க மாப்பிள்ளை கிட்ட சொல்லுங்க” என்றவள் பக்கத்திலிருந்த பூ ஜாடியை எடுத்து தூக்கி அடித்தாள்.

அவளது செயலைக் கண்டு ஆத்திரத்துடன் கையை ஓங்கி அடிக்கச் செல்வதைப் பார்த்த வரதராஜன் அவரைத் தன் பக்கம் இழுத்தவர் “ பூஜா! தலைவலிக்குதுன்னா ஒரு மாத்திரையைப் போட்டுட்டு பேசாம படு” என்று அதட்டிவிட்டு மனைவியை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

“விடுங்க என்னை! அவ எப்படி ஆடுறா? அவளை அடக்காம என்னைத் தடுக்குறீங்க?” என்று அவரிடம் பாய்ந்தார்.

“ராதா! அவ தான் கோபத்தில் குதிக்கிறான்னா நீ மேல மேல அவளை ஆட வைக்கிற” என்று அவர் முடிக்கும் முன்பே “இப்படிச் செல்லம் கொடுத்து கொடுத்து தான் இன்னைக்கு எல்லாத்துக்கும் ஆடிகிட்டு இருக்கா. கட்டிகொடுக்கிற வீட்டில் நம்ம மானத்தை வாங்காம விட மாட்டா” என்று தலையில் கை வைத்தபடி சோபாவில் அமர்ந்து விட்டார்.

பூஜாவோ முகம் ஜிவுஜிவு என்று சிவந்திருக்க ஆத்திரம் தாளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். யார் மீது கோபம் என்று கூடப் புரியாமல் இருந்தது அவளது நிலை. அரவிந்தை தான் சிறிதும் பாதிக்கவில்லையோ என்கிற சந்தேகம் கோபத்தை உண்டாக்கியது. அடுத்துக் கை தவறி கீழே விழுந்த பொருளை தான்-தான் உடைத்ததாக எண்ணி கடிந்து கொண்ட அன்னையின் மீது மாறியது.

‘என்ன நினைத்துக் கொண்டார்கள் என்னை? என் உணர்வுகளுக்கு யாரிடமும் மதிப்பே இல்லையா?’ என்று ஏதேதோ வேண்டாத சிந்தனையில் நடந்தவளின் காலில் கண்ணாடி துகள்கள் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது.

அதுவரை இருந்த கோபத்தைக் காலில் ஏற்பட்ட வலி மறைக்க, அதைச் சுத்தம் செய்து மருந்து தடவி கொண்டு கட்டிலில் வீழ்ந்தாள். மனமோ கழிவிரக்கத்தில் சோர்ந்து போனது. தலைவலி என்று சொல்லியும் அவன் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே? போன் செய்து அதைப் பற்றி விசாரிப்பான் என்று மனதோரம் சிறிது நப்பாசை இருந்தது. ஆனால் அவன் அதைக் கூடச் செய்யவில்லையே என்றெண்ணி கண்கள் கண்ணீரை பொழிய தன்னை அறியாமலே உறக்கத்தைத் தழுவினாள்.

மும்பை போய் இறங்கிய அரவிந்தோ அவளைப் பற்றிய சிந்தையிலே இருந்தான். தனதறையில் பால்கனியில் நின்றிருந்தவனின் மனம் அவளையே சுற்றி வந்தது. அந்தப் புடவையில் தேவதை மாதிரி இருந்தாள். அவள் எனக்காகப் பிறந்தவள் என்று அவளை எண்ணியே உள்ளம் மயங்க நின்றிருந்தான். தான் நினைத்தவற்றை எல்லாம் அவளிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அவனது வாழ்வில் சூறாவளியை வீசும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

சில நேரங்களில் மௌனம் கூடப் புயலை உண்டாகும் என்பதை அறிந்து கொள்ளாமல் போனது அவனது துர்பாக்கியமே.

 

ராஜா அண்ணாமலை மன்றம்…

காலை முஹுர்த்ததிற்கான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அர்ஜுன் வந்தமர்ந்து அவன் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து கொண்டிருக்க, ப்ரியா ஆழ்ந்த பிங்க் நிறத்தில் உடல் முழுவதும் கிளிகள் பின்னப்பட்ட, கெட்டியான பார்டரில் யானை உருவங்கள் நெய்யப்பட்ட புடவைக்கு ஆழ்ந்த பாட்டில் கிரீன் நிறத்தில் ரவிக்கையும், வைர நகைகள் அணிந்து தேவதை போன்று தயாராகிக் கொண்டிருந்தாள்.

ஐயர் பெண்ணை அழைக்கவும் சொந்தங்கள் தோழியர் சூழ மணமேடைக்குச் சென்றாள். தன்னவளின் அலங்காரத்தை அணுஅணுவாக ரசித்தவனைத் தோழர்களின் கேலி நினைவுக்குக் கொண்டு வந்தது.

அதுவரை அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டிருந்தவள், அவனது பக்கத்தில் அமர்ந்ததும் மெல்ல விழியுர்த்தி அவனை நோக்கினாள். பட்டு வேட்டி சட்டை அழகுக்கு அழகு சேர்க்க கம்பீரமாக அமர்திருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்தவளால் விழிகளை அகற்ற முடியாமல் போனது.

உற்றார், உறவினரின் ஆசியுடன் ப்ரியாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகளிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.

அடுத்து நடந்த சடங்குகளில் இருவரும் மிக ஆர்வமாகப் பங்கேற்றனர். அதுவரை இருவரின் மனதிலும் இருந்த அலைபுருதல் குறைந்து தங்கள் துணையை அடைந்த திருப்தியில் இருந்தனர்.

மணமக்களை அர்ஜுன் வீட்டிற்க்கு அழைத்துச் சென்று ப்ரியாவை விளக்கேற்ற சொல்லி சாமி கும்பிட்ட பின் பால், பழம் கொடுத்துச் சம்பிரதாயங்களை முடித்தனர்.

அர்ஜுன் வந்திருந்த உறவினர்களைக் கவனிக்கப் போய் விட ப்ரியாவை தனதறைக்கு ஓய்வெடுக்க அழைத்துச் சென்றாள் சந்தியா.

“அண்ணி இந்தச் சரீ உங்க கலருக்கு சூப்பரா இருக்கு” என்றவள் ப்ரியா நகைகளைக் கழட்ட உதவி செய்தாள்.

“ரொம்ப ஹெவியா இருக்கு இந்த நகைகள் எல்லாம் சந்தியா. எப்போ கழட்டி வைப்போம்ன்னு ஆச்சு” என்றாள் களைப்பாக.

“உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது அண்ணி. நீங்க டிரஸ் மாத்திட்டு தூங்குங்க” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

இரண்டு நாட்களாகச் சரியாக உறங்காததால் அடித்துப் போட்ட மாதிரி உறங்க ஆரம்பித்தாள்.

அர்ஜுனோ அன்னையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்.

“அம்மா சொல்றதை புரிஞ்சுகோங்க. இங்கே தம்பியும், தங்கையும் இருக்காங்க. இந்தச் சடங்கெல்லாம் இங்கே வேண்டாம். நானும் ப்ரியாவும் பீச் ஹௌஸ் போயிட்டு ஒரு நாலு நாள் இருந்திட்டு வரோம்” என்றான்.

“நான் சொல்றதை நீ புரிஞ்சுக்கோ அர்ஜுன். இது ஆகி வந்த வீடு. உங்க வாழ்க்கையை இங்கே ஆரம்பிக்கனும்ன்னு நான் நினைக்கிறேன். நீ ஏன் அதைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற” என்றார் ஆயாசத்துடன்.

“மா! நீங்க தான் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க. அதுவும் நம்ம வீடு தான். இங்கே இருப்பதை விட அங்கே நாங்க கொஞ்சம் ப்ரீயா இருப்போம்” என்றான்.

இவர்களின் வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டே வந்த அர்ஜுனின் தந்தை தன் மனைவியிடம் “ அவன் இஷ்டத்துக்குத் தான் விடேன் மா. நம்ம காலம் வேற. அவங்க காலம் வேற. அவனை வற்புறுத்தாதே” என்றார்.

அவர் சொன்னதும் சற்றுக் கண்களைச் சுருக்கியவர் “என்னவோ பண்ணுங்க” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

அவரின் சம்மதம் கிடைத்தவுடன் வேகமாக அவருகில் சென்று தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு “அம்மா! ஒரு நாலே நாலு தான். அப்புறம் உங்க மருமகளோட இங்க தானே இருக்கப் போறோம்” என்று சமாதானப்படுத்தினான்.

அதைக் கேட்டவர் “இருந்தாலும்..உங்க வாழ்க்கையை” என்று ஆரம்பிக்கவும் மனைவிக்குத் தெரியாமல் மகனைப் பார்த்து கைகளை அசைத்து ஓடு என்றார் அர்ஜுனின் தந்தை.

அதைக் கண்டு கணவரை முறைத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினார்.

மாலை நெருங்கும் வரை உறங்கியவள் அறைக்குள் கேட்ட லேசான சத்தத்தில் விழிதெழுந்தாள்.

“அண்ணி நான் தான். அம்மா உங்களை எழுப்பி விடச் சொன்னாங்க அது தான் வந்தேன்” என்றாள்.

“ரொம்ப நேரம் தூங்கிட்டேனா? மணி என்ன?” என்று கேட்டபடி குளியறைக்குள் நுழைந்தாள்.

“அஞ்சரை மணி ஆகுது. நீங்க பேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க காப்பிக் கொண்டு வரேன்” என்று சொல்லிச் சென்றாள்.

ரெப்ரெஷ் செய்து கொண்டு வெளியே வரவும் சந்தியா காப்பியுடன் வந்தாள்.

“அண்ணி காப்பிக் குடிச்சிட்டு இங்கே சிம்பிளா ஒரு பட்டுபுடவை கட்டிக்கிட்டுக் கிளம்பச் சொன்னாங்க அம்மா. அஷ்டலக்ஷ்மி கோயிலுக்குப் போயிட்டு வரலாம்-ன்னு சொன்னாங்க” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டாலும் வரப் போகும் இரவை நினைத்துப் பயம் எழ தயக்கத்துடன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளது அன்னையும், அர்ஜுனின் அத்தையும் வந்தார்கள்.

அர்ஜுணினி அத்தை அவள் அருகில் வந்து கன்னத்தை வழித்து “ரொம்ப அழகா இருக்க டா” என்றார்.

மகளின் புகுந்த வீட்டைப் பற்றி உள்ளுக்குள் பயத்துடன் இருந்தவருக்கு அவர் செயல் நிம்மதியை அளித்தது.

“அண்ணி அவளுக்குச் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி அழைச்சிட்டு வாங்க” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

அவர் சென்றதும் மகளின் புறம் திரும்பியவர் அவளது அலங்காரத்தைச் சரி பார்த்து அங்கு ட்ரேயில் வைக்கப்பட்டிருந்த பூவை அவள் தலையில் வைத்து “ப்ரியா கோவிலுக்குப் போயிட்டு மாப்பிள்ளை உன்னை அழைச்சுகிட்டு பீச் ஹௌஸ் போறார். இங்கே எந்தச் சடங்கும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம்” என்றார்.

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் “ஒ..” என்றாள்.

அதன் பின் அவளுக்கு வேண்டிய அறிவுரைகளைக் காதிலிருந்து ரத்தம் வரும் வரை கூறி நான்கு நாட்களுக்கு அவளுக்கு வேண்டியவற்றை எடுத்து வைக்க உதவினார்.

விஜய் வந்து அவரை வெளியே அழைப்பதாகக் கூற, அவர் சென்ற மறு நிமிடம் அவசரமாக உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.

காக்கி பேண்டும், ஆழ்ந்த நீலகலர் காஷுவல் வேர் சட்டையும் அணிந்து கம்பீரமாக உள்ளே நுழைந்தவனின் கண்கள் ஆசையுடன் அவளைத் தழுவ வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டாள்.

மெல்ல அவளருகில் வந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி “சூப்பரா இருக்கப் பேபி” என்றவன் அவள் முன் நெற்றியில் இதழ் பதித்தான்.

ஆழ பெருமூச்செடுத்துக் கொண்டு அவளை விட்டு விலகியவன் “கிளம்பு பேபி. கோவிலுக்குப் போயிட்டு நம்ம பீச் ஹௌஸ் போயிடலாம்” என்றான்.

அவளோ அவனது நெருக்கத்திலும், இனி வரப் போகும் நிகழ்வுகளை நினைத்தும் ஒரு வித படபடப்புடன் நின்றிருந்தாள்.

அவளது நிலையை உணர்ந்தவன் அவள் விரல்களைப் பற்றி “பேபி! எதைப் பற்றியும் யோசிக்காம ப்ரீயா இரு” என்று சமாதனப்படுத்தித் தன் விரல்களுடன் அவள் விரல்களைப் பிணைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

பெரியவர்களிடம் ஆசியைப் பெற்ற பின்னர் வாயிலில் நின்றிருந்த ஜாகுவார் காரில் ஏறி தங்களின் வாழ்க்கையைத் தொடங்க ஈசீஆரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

Advertisements