அத்தியாயம்-7

 தாமரை ஆதரவற்றோர் இல்லம்…

ராகவ் இந்த இல்லத்திற்கு வந்து ஒரு வருடம் ஓடிப் போயிருந்தது.

இந்த ஒரு வருடத்தில் வாழ்க்கையின் நிதர்சனத்தை நன்கு புரிந்து கொண்டான். சிற்றின்பதிற்க்காக அழகான குடும்பத்தைத் தொலைத்து முற்றிலும் பூஜ்யமாக நின்று கொண்டிருக்கிறான்.

இல்லத்தின் தோட்டத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் மனது விபத்து நடந்த அன்றும், அதற்கு அடுத்த நாட்கள் நடந்த நிகழ்வுகளையும் அசை போட்டது.

எப்படிப்பட்ட வாழ்க்கையை இழந்திருக்கிறேன்? ஆசை ஆசையாய் காதலித்த மனைவி, அழகான குழந்தை, அன்பான பெற்றோர், உயிராய் இருந்த தம்பி என்று அனைவரின் நெஞ்சிலும் தணலை அள்ளிக் கொட்டினேனே பெண்ணாசையால்.

அவர்கள் என்னைப் புறக்கணித்ததில் எந்தத் தவறும் இல்லை.

தன்யா என்று அவள் பெயரை உச்சரிக்கும் போதே என் மனம் இனிக்கிறதே. அவளை ஏமாற்ற எனக்கு எப்படி மனம் வந்தது? எத்தனை கனவுகளோடு என்னை மணந்திருப்பாள்? தாய், தந்தையைக் கூட எதிர்த்துக் கொண்டு என் கரம் பிடித்தவளுக்குத் துரோகம் செய்ய எப்படித் துணிந்தேன்.

அம்மா! என் மீது எத்தனை அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பார்கள். எவ்வளவு கசந்து போயிருந்தால் என்னை வெறுத்து ஒதுக்கி சென்றிக்க முடியும். எந்த ஒரு அன்னையும் அவ்வளவு சீக்கிரம் பிள்ளையை ஒதுக்கி விடுவதில்லை.மன்னிக்க முடியாத குற்றம் செய்த போதும் எடுத்து சொல்லி அவனைத் திருத்தவே முயற்சி செய்வாள். அம்மாவும் அதைத் தானே செய்தார்கள் கேட்டேனா? உடலில் வலுவிருந்த திமிரில் எப்படி எல்லாம் பேசினேன்?

சுமி! என்னால் வாழ்க்கை இழந்து எங்கோ ஒரு மூலையில் என் போன்ற காமுகன் ஒருவனிடமிருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருப்பாள்.அவளுக்கு ஆதரவில்லை என்று அறிந்து என் ஆசைக்கு அவளை இணங்க செய்ததது எத்தகைய துரோக செயல்.இன்று புரிகின்ற ஒன்று அன்று புரியாமல் போனது ஏன்?

விஜய்! எனக்குத் தம்பியாகப் பிறந்தாலும் குணத்தில் ராமனாக வாழும் அவன் எங்கே நானெங்கே? ஒரே வயிற்றில் பிறந்த இருவரில் அவனுக்கு உள்ள நல்ல குணம் எனக்கு வராமல் போனது ஏன்? சிறியவனாக இருந்தாலும் என்னைத் திருத்திவிட அவன் செய்த முயற்சியை எல்லாம் கேலி செய்து சிரித்தேனே? எத்தனை பொய்கள் என் திருட்டுத்தனத்தை மறைக்க.

அப்பா! நேர்மையாக வாழவேண்டும். யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்த்தவரை சிலுவையில் அறைந்து விட்டேன். என் பிள்ளையா இப்படி என்று எப்படித் துடித்திருப்பார்.நான் செய்த தப்பால் குடும்பத்தினர் அனைவரையும் தலை குனிய செய்துவிட்டேன் என்று எண்ணி மனம் குமைந்தபடி அமர்ந்திருந்தான்.

மகனை மாமியாரிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்த தன்யாவின் மனமும் பழைய நிகழ்வுகைளை எண்ணியே ஓடியது.

முதன்முதலாக ராகவ் பற்றி அறிந்து கொண்ட அந்தத் தருணம் நினைவுக்கு வந்தது.

அன்று குழந்தையுடன் அபார்ட்மெண்டில் கீழே உள்ள பார்க்கிற்குச் சென்றமர்ந்து பிள்ளைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தவளின் அருகே வந்தமர்ந்தார் எதிர் வீட்டு பாட்டி.

“எப்படி இருக்கே தன்யா? உன்னைப் பார்க்கும் போதெல்லாம் சரியா பேச முடியாம போகுது” என்றபடி மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தார்.

அவர் பக்கம் திரும்பி அமர்ந்தவள் “நல்லா இருக்கேன் பாட்டி.குழந்தை இருக்கிறதால என்னாலையும் அதிகமா மத்தவங்க கிட்ட பழக முடியறதில்லை” என்றாள்.

“ம்ம்..உன்னையும் உன் வீட்டுக்காரரையும் பார்க்கும் போது நினைச்சுக்குவேன், எவ்வளவு அழகான தம்பதின்னு.ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப அன்னியோனியமா வெளில தெருவுல போறதை பார்த்திருக்கேன்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு லேசான வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“உங்க வீட்டில பார்த்த மாப்பிளையாம்மா இவர்?”

மறுப்பாகத் தலையசைத்து “எங்களோடது லவ் மேரேஜ் பாட்டி. ரெண்டு பெரும் ஒரே ஆபிஸ்ல வேலை பார்த்தோம்.அங்கே தான் பழக்கம் ஆச்சு. எங்க வீட்டில ஒத்துக்கல.இவன் பிறந்த பிறகு தான் சமாதனாம் ஆகி இருக்காங்க” என்றாள்.

“ஒ..” என்றவர் சற்று யோசனையுடன் அமர்ந்து விட்டார்.

அந்தச் சமயம் அவளுடைய மகன் அங்கு விளையாடுபவர்களைக் கண்டு குதிக்க அவளது கவனமும் அங்கேயே இருந்தது.

சற்று நேரத்திற்குப் பின்னர் “இப்போ எல்லாம் ஆண், பெண் வித்யாசம் இல்லாம ஆபிஸ்ல பழகுவீங்கன்னு கேள்விபட்டேன்.அது உண்மையாம்மா?” என்றார்.

அவரது கேள்வி அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது.அந்த தலைமுறையினருக்கு இந்த மாதிரி நிறையச் சந்தேகங்கள் உண்டு இன்றைய தலைமுறையினரை பற்றி என்று எண்ணிக் கொண்டாள்.

“ஆமாம் பாட்டி நட்போட பழகுவோம்.ஆனா எல்லாத்துக்குமே எங்களுக்குள்ள ஒரு எல்லைக்கோடு உண்டு. அதைத் தாண்டி நாங்களும் போக மாட்டோம் அவங்களும் வர மாட்டாங்க.”

“அப்படியா சொல்ற? ஆனா நான் கேள்விபடுவது எல்லாம் அப்படி இல்லையே? ஐ.டி.கம்பனியில எல்லாம் பார்ட்டின்னு சொல்லி குடிச்சிட்டு எல்லாவிதமான தப்புகளும் நடக்கிற மாதிரி எல்லாம் சொல்றாங்க? என்று கேட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டு சற்று வருத்ததுடன் “இல்ல பாட்டி! ஒன்றிரண்டு பேர் செய்கிற தப்பால எல்லோரையுமே கெட்டவங்களா நினைக்கிறோம்.ஐ.டி மட்டுமில்ல எந்த இடத்தில் தப்புகள் நடக்கல? அப்போ அங்கே இருக்கிறவங்க எல்லாமே தப்பானவங்கன்னு நினைக்கிறோமா?இல்லையே! இங்கே சின்ன வயதிலேயே அதிகச் சம்பளம் வாங்கிப் பழகிடுறதுனால சிலர் தடம் மாறி போறாங்க. அதற்காக எல்லோரையும் அதே பார்வையோட பார்க்கிறது ரொம்பத் தப்பு.எத்தனையோ பேர் இங்கே வந்த பிறகு தான் தங்களோட வாழ்க்கையின் தரத்தை உயர்திக்கவே செஞ்சிருக்காங்க.எவ்வளவோ பேர் சமூகச் சேவைகள் கூடச் செஞ்சிட்டு இருக்காங்க ஆனா இது எதுவுமே வெளி உலகத்துக்குத் தெரிவிக்கபடல.தப்பான விஷயங்கள் மட்டும் அதிக அளவில் பரவுது”.

அவளின் ஆதங்கமான பேச்சை கேட்டவர் “உண்மை தான் மா! நீ சொல்கிற மாதிரி தான் எல்லோருடைய கண்களும் கட்டப்பட்டிருக்கு.உண்மையை யாரையுமே சரியாகச் சென்றடயரதில்லை”.

அவர் தான் சொன்னதைப் புரிந்து கொண்டார் என்கிற சந்தோஷத்தில் “உங்களுக்கு இங்கே எப்படிப் பொழுது போகுது பாட்டி?” என்றாள்.

தான் சொல்ல வந்த விஷயத்தை அவளிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்கிற யோசனையுடன் இருந்தவர் அவளது கேள்வி அதற்கு வழிவகுத்து விட்டதை எண்ணிக் கொண்டே “வேலையே சரியா இருக்கும்மா. மருமகளும், பேரப்பிள்ளைகளும் கிளம்பினவுடனே அப்பாடான்னு உட்கார்ந்தா தேவலாம்-னு இருக்கும்.எப்போவாவது அவங்க கூட வெளில போயிட்டு வருவேன்”என்றார்.

“இங்கே எங்கெங்கே எல்லாம் போயிருக்கீங்க பாட்டி” என்றாள் ஆர்வமாக.

“அது என்னமோ மாலு..மாலுன்னு அடிச்சுக்குவான் பேரன்.அது மாதிரி ரெண்டு மூணு மாலுக்குக் கூட்டிட்டு போனாங்க. போன வாரம் போனப்ப உன் வீட்டுகாரரும்

ஒரு பொண்ணையும் பார்த்தேன்” என்றவர் அவளது முகத்தைக் குறுகுறுப்பாக ஆராய்ந்தார்.

அவள் அவர் சொன்னதை மிக இயல்பாகக் கேட்டுக் கொண்டு “டீம் லஞ்ச்சுக்கு வந்திருப்பாங்க பாட்டி” என்றாள்.

“தப்பா எடுத்துக்காதம்மா.அடுத்த வீட்டு கதைகளை ஆர்வமா பேசுகிற ஆளில்லை நான்.என்னவோ உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது என் மனசுக்கு ஒரு நிம்மதி வரும்.இவ்வளவு அன்பான தம்பதிகளான்னு.அந்த நினைப்பிற்குப் பங்கம் வந்த மாதிரி ரெண்டு தடவை அந்தப் பெண்ணை உன் வீட்டுகாரர் கூடப் பார்த்தேன். ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னேயும் அதே பொண்ணோட உங்க வீட்டுக்காரரை வேற ஒரு இடத்தில் பார்த்தேன்.எனக்கு அதைச் சாதாரண நட்பா பார்க்க முடியல.ஒருவேளை என்னோட நினைப்பு தப்பா இருக்கலாம்.ஆனா எதையும் எளிதா நினைச்சு விடக் கூடாது.அதே சமயம் அவசரப்பட்டு எதையும் உடைச்சிடக் கூடாது”என்றார் தவிப்பாக.

அவரைப் பார்த்து புன்னகைத்து “பாட்டி! என் ராகவ் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவர் என்னை எந்த அளவுக்கு விரும்புறார்-னு என் மனசுக்குத் தெரியும். அவரால கனவுல கூட எனக்குத் துரோகம் இழைக்க முடியாது.அதனால கவலையை விடுங்க” என்று சொல்லி எழுந்து கொண்டாள்.

சற்றே குழம்பிய முகத்துடன் “வாழ்க்கை துணை மேல நம்பிக்கை வைக்கிறது நல்ல விஷயம் தான்மா. ஆனா ஏமாளியா மட்டும் இருந்திடக் கூடாது.நான் சொல்கிற மாதிரி இல்லாமலும் போகலாம். ஒருவேளை அப்படி நடந்திட்டா?முன்னமே கவனிச்ச்சிருக்கலாமேன்னு யோசனை வரக் கூடாது என்பதற்காகத் தான் சொல்றேன்மா”என்று தானும் எழுந்து கொண்டார்.

அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர விட விரும்பாத தன்யா “வெளியாளா உங்க பார்வை வேற மாதிரி இருக்கும்மா.அவரை ஒவ்வொரு நிமிடமும் நேசிச்சுகிட்டிருக்கிற எனக்குத் தெரியும் அவரோட எண்ணங்கள்,செயல்கள் எல்லாமே”என்று கூறி “நான் கிளம்புறேன் பாட்டி” என்று மகனைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.

அவள் செல்வதையே விழியசைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவரிடமிருந்து நீண்ட பெருமூச்சு எழுந்தது. ‘நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்லாம போனா நல்லதும்மா.ஆனா எனக்கென்னவோ உன் புருஷன் உன்னை ஏமாத்துற மாதிரி தான் தோணுது’ என்றெண்ணிக் கொண்டே நடந்தார்.

ராகவைப் பற்றி அவர் சொன்னதை எல்லாம் அந்த நிமிடமே மறந்து விட்டு மகன் கூடவே நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தாள். அன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்த ராகவ், முடிக்க வேண்டிய வேலை இருக்கிறதென்று சொல்லி லேப்புடன் அமர்ந்து கொண்டான்.

எப்போதும் விரைவாக வீடு திரும்பும் நாட்களில் எல்லாம் மனைவியின் பின்னே சுற்றித் திரிபவன் சில மாதங்களாக அனைத்தையும் மறந்தவன் போல் பாதி நேரம் லேப்புடனே இருக்கிறான் என்று எண்ணினாள்.

மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவளது கண்கள் கணவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது. வேலையில் மூழ்கி இருந்தவனின் நெற்றி சுருங்கி இருந்தது. எழுந்து சென்று நெற்றியை நீவி விட வேண்டும் என்கிற ஆவலை அடக்கிக் கொண்டு ஓரப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவன் போல் நிமிர்ந்து நோக்கியவன் மீண்டும் மானிட்டரில் கண்களைப் பதித்துக் கொண்டான்.சாதரணமாக இப்படி அவள் பார்க்கிறாள் என்று அறிந்ததும் எழுந்து அவளருகே வந்துவிடுவான். சில பல சீண்டல்களும், கொஞ்சல்களும் அரங்கேறிய பிறகே அங்கிருந்து நகர்ந்து செல்வான்.

ஆனால் இன்றோ அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தும் சிறிதும் கண்டு கொள்ளாது தனது வேலையில் மூழ்கி விட்டான். மனமோ கடகடவென்று கணக்குப் போட ஆரம்பித்தது. குழந்தை பிறந்து மூன்று நான்கு மாதங்களாகவே இப்படித் தான் நடந்து கொள்கிறானோ என்று.

அவளது எண்ணப் போக்கை எண்ணி மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவள் ‘என்ன இது! பாட்டிகிட்ட அவ்வளவு நம்பிக்கையோட சொன்னவள் இப்படித் தப்பு தப்பா யோசிக்க ஆரம்பிச்சிட்டேனே’ என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

மகனை தூங்க வைத்துவிட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்குச் சென்றவள், அங்கே ராகவ் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டு அவனருகில் சென்றாள்.

“என்னங்க! என்ன பண்ணுது?”

அவளை நிமிர்ந்து பார்த்தவன் “தலை போடு போடுன்னு போடுது.இந்த வேலையை வேற முடிக்கணும்” என்றான் சோர்வாக.

அவன் தலைவலி என்று சொன்னதுமே, உடனே சென்று மாத்திரையை எடுத்து வந்தவள் அவன் கையில் கொடுத்து “இதைப் போட்டுட்டு தூங்குங்க. நான் அந்த வேலையை முடிச்சு வைக்கிறேன்” என்றாள்.

“நீ தூங்க வேண்டாமா தனு.தம்பி இப்போ தான் தூங்குறான். நானே செய்றேன். மாத்திரை தான் போட்டுட்டேனே” என்றான்.

அவன் தோள்களை அழுத்தி “நீங்க தூங்குங்க ராகவ். ரொம்பக் களைச்சுப் போயிருக்கீங்க. நான் பார்த்துக்கிறேன்”.

அவன் படுத்ததும் அவனுடைய லப்பை எடுத்துக் கொண்டு ஹாலில் வந்தமர்ந்து வேலையைத் தொடர்ந்தாள். ஒரு மணி நேரத்திற்குள் வேலை முடிய, அவனது லேப்பில் இருந்த தங்களது புகைபடங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அரைமணி நேரம் அனைத்து படங்களையும் பார்த்து முடித்தவள், பர்சனல் என்றிருந்த ஒரு போல்டரைக் கண்டு புருவத்தை உயர்த்தி ‘அது என்ன எனக்குத் தெரியாம பர்சனல்?’ என்று கிளிக் செய்தாள்.

அதில் ஒரே ஒரு படம் மட்டுமிருந்தது. அதைப் பார்த்த தன்யாவிற்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை. ராகவ், சுமியுடன் மிக நெருக்கமாக நின்றிருந்தான்.

அவளால் அதைச் சிறிதளவும் நம்ப முடியவில்லை. இதற்குப் பின்னே கண்டிப்பாக ஏதோ ஒரு காரணமிருக்கும் என்று எண்ணினாள். எத்தனை நேரம் அந்தப் படத்தை வெறித்தபடியே அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை. அறையில் மகனின் குரல் கேட்டதும் அவசரமாகத் தன் அருகே இருந்த மொபைலை எடுத்து அந்தப் படத்தைப் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக க்ளோஸ் செய்து வைத்துவிட்டு மகனை காண சென்றாள்.

அங்கே மகன் அருகில் அயர்ந்து உறங்கும் கணவனைக் கண்டவளின் மனது அந்தப் படத்தை எண்ணியது. இவன் எனக்குத் துரோகம் செய்வானா? அவனது முகத்தில் கள்ளம் எதுவும் தெரியவில்லையே? என்று பலவாறு சிந்தித்துக் குழம்பி மகனுக்குப் பசியாற்றி விட்டு அவனருகே படுத்துக் கொண்டாள். விழிகள் மூடினாலும் மனம் விழித்துக் கொண்டே இருந்தது.

காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வேலை செய்தாலும் ஏதோ ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருந்தது. மனமோ ‘என் ராகவ் நல்லவர்! கண்டிப்பாக என்னை ஏமாற்ற மாட்டார்’ என்றே ஜபம் செய்து கொண்டிருந்தது.

அவனோ அவளது மனநிலையை அறியாமல் ஆபிசிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு செயலையும் தன்னை அறியாமலேயே கவனிக்க ஆரம்பித்திருந்தாள் தன்யா. முன்னர் இப்படி நடந்து கொள்ள மாட்டான்’ என்று அலசி ஆராய ஆரம்பித்தது.

ஓட்டுனர் திடீரென்று ப்ரேக் போட்டதும் அதுவரை பழைய நிகழ்வுகளில் மூழ்கி இருந்தவள் நினைவுக்குத் திரும்பினாள். ராகவிற்கு விபத்து நடந்த பிறகு, அவனை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு தாய் வீடு செல்லத் தயங்கியவளை மாமியார் வீடு அரவணைத்துக் கொண்டது.

வேலைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்த போது தங்களின் பழைய ஆபிசில் முயற்சித்துப் பார்க்க மனம் தடை போட்டது. அதனால் வேறு அலுவலகத்தில் வேலை தேடிக் கொண்டாள்.

அனைவரும் கூட இருந்தாலும் ஒவ்வொரு நாளும் வேதனையுடனேயே சென்றது. பெற்றவர்கள் பரிதவித்தாலும் நாங்கள் பார்த்த மாப்பிள்ளையாக இருந்திருந்தால் உன் நிலை இப்படி ஆகி இருக்குமா? என்ற அவர்களின் கேள்வி வேறு மனதை காயப்படுத்திச் சென்றது. பெற்றவர்களின் சாபத்தைப் பெற்று அதன் மீது ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த எனக்குச் சரியான தண்டனை தான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தில் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தாள்.

வேலையில் மூழ்கினாலும் அவ்வப்போது முடிந்து போன விஷயங்களின் பின்னேயே சென்றது. முதன்முதலாக ராகவுடன் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்த பிறகு எத்தனை நிகழ்வுகள். எத்தனை ஓட்டம், எத்தனை அதிர்ச்சிகள், எவ்வளவு பெரிய துரோகம் என்று வாழ்க்கை மிகப் பெரிய இடியைத் தலையில் இறக்கி இருந்தது.

அந்த அதிர்விலிருந்து வெளி வரும் முன்பே விஜய், சுமியை திருமணம் செய்து கொண்டேன் என்று வந்து நின்ற போது கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் கலைந்து போய் மனம் சுக்கு நூறாக உடைந்து போனது.

அதுவரை தன்னுடைய உணர்வுகளை ராகவிடம் தனிமையில் கொட்ட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவள் சுமியிடம் ராகவ் காட்டிய மற்றொரு முகத்தைக் கண்டு எல்லோரின் முன்னிலையும் பொங்கி விட்டாள்.

இவன் ஒருவனின் மோசமான நடத்தையால் மொத்த குடும்பமும் சீரழிந்து போய் விட்டதே என்று கதறி தீர்த்து விட்டாள். விஜய் சுமியை மணந்து கொண்டு வந்ததை மனம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.

அதன் பிறகு அண்ணனிடமிருந்து உண்மையை வரவழைக்கவே தான் சுமியை மணந்து கொண்டதாக நடித்தேன் என்று சொன்னப் பிறகே சற்று ஆறுதலானது.

அடுத்து என்ன என்று யோசிக்கும் முன்பே ராகவிற்கு விபத்து. எப்படி யோசித்தாலும் அவனைத் தன்னால் மன்னிக்க முடியும் என்று தவித்துப் போனாள்.

அவனுக்கு விபத்து என்றதும் மனம் பதபதைத்துப் போனாலும், ஒருபுறம் அவனுக்கு என்ன நடந்தால் என்ன என்று இடித்துரைத்தது.

விருப்பமே இல்லாமல் அவனைப் பார்க்க சென்ற போது அவனது அங்கு மாமியாரின் பேச்சக் கேட்டு மனம் நெகிழுந்து போனது.

அன்னையைக் கண்டதும் கன்னங்களில் கண்ணீர் வழிய “அம்மா…அம்மா..” என்று கையை நீட்டி அவரின் ஆதரவைத் தேடினான்.

“வேண்டாம் என்ன அம்மா-னு கூப்பிடாதே. உன்னைப் பெத்த வயிறு பத்தி எரியுது” என்றார் எரிச்சலுடன்.

“நான் பண்ணினது தப்பு தான்மா. என்னை மன்னிக்க மாட்டீங்களா?” என்றான் கெஞ்சலான குரலில்.

“என்ன சொன்ன மன்னிக்கனுமா? எவ்வளவு ஈஸியா தப்பை செஞ்சிட்டு மன்னிப்பைக் கேட்கிற?” என்றார் ஆத்திரத்துடன்.

கண்ணீருடன் கரகரத்த குரலில் “நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்பு தான். அதுக்குத் தான் இப்போ கடவுளே தண்டனை கொடுத்துட்டாரே. நீங்களும் என்னைத் தண்டிச்சா நான் என்ன பண்ணுவேன் மா.”

அதற்கு மேல் பொறுக்க முடியாதவர் “நிறுத்துடா! என்ன மனுஷன் டா நீ! இன்னைக்கு இந்த நிலைமைக்குப் போனதும் உன் தப்பு புரிஞ்சுதுன்னு சொல்ற ஆனா அன்னைக்கு நான் வந்து பேசினப்ப எப்படிப் பேசின? அப்போ தெரியலையா நீ செய்த தப்பு?” என்றார் ஆங்காரமாக.

எட்டி அவர் கையைப் பிடித்துக் கொண்டவன் “என்னை மன்னிச்சிடுங்கம்மா. இனி, தனுவுக்கு எந்தக் காலத்திலேயும் துரோகம் நினைக்க மாட்டேன்” என்று கதறியவனிடமிருந்து கைகளை உதறிக் கொண்டவர் “ வேண்டாம்டா என்னைச் சபிக்க வச்சிடாதே! உன்னை மாதிரி உள்ள புள்ளைகளைப் பண்ணுகிற தப்பில் இருந்து அம்மாக்கள் காப்பாத்தி காப்பாத்தி தான் இன்னைக்கு இந்தச் சமூகமே பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பில்லாம போச்சு. இப்போ உன்னோட நிலைமையில் நீ நினைச்சாலும் தப்பு பண்ண முடியாது. இதே நீ முன்னாடி இருந்த மாதிரி இருந்திருந்தேன்னா எல்லோரும் என்னை மன்னிசிட்டாங்கன்னு கொஞ்ச நாள் அடங்கி இருந்திட்டு மறுபடியும் கிளம்பிடுவ. என்னால உன்னை எந்தக் காலத்திலேயும் மன்னிக்க முடியாது.”

அவரின் கோபத்தில் முகம் சுருங்க “அம்மா என்னை இந்த நிலையில் கை விட்டுடாதீங்கம்மா. எல்லோரும் என்னை விட்டுட்டா நான் என்ன பண்ணுவேன்” என்று கதற ஆரம்பித்தான்.

“என் மருமகளே உன்னை மன்னிச்சு ஏத்துகிட்டாலும் என்னால உன்னை மன்னிக்க முடியாது. ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கின உன்னை என் கூட வச்சிருந்தா கண்டிப்பா ஒரு நாள் நானே விஷம் வச்சு கொன்னுடுவேன். இனி, எந்தக் காலத்திலேயும் உன் முகத்தில் முழிக்க நான் விரும்பல” என்றவர் மருமகளிடம் “நீ பேசிட்டு வா” என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.

அவர் சென்றதும் இறுகிப் போன கல்லாய் நின்ற மனைவியைப் பார்த்ததும் பேச வார்த்தை வராமல் கெஞ்சலாகப் பார்த்தான்.

அவனை உணர்வற்ற பார்வை பார்த்தவள் “இப்படி ஒரு சூழல் நமக்குள்ள வரும்-னு நான் கனவில் கூட நினைக்கல”என்றவளின் குரலில் ஆத்திரமோ, ஆங்காரமோ சிறிதளவும் இல்லை.

மிகப் பொறுமையாகவும் அழுத்தமாகவும் அவள் பேசிய தொனியிலேயே உள்ளுக்குள் உதறல் எடுக்க “ தனு! நான் உன்னைக் காதலிச்சது உண்மை. உன்னைத் தவிர என் மனசில் வேற யாருக்கும் இடமில்லை. ஒரு சின்னச் சலனம் தான் என்னையும் இந்த நிலையில் கொண்டு வந்து தள்ளி இருக்கு. நான் கெட்டவனோ, தப்பானவனோ இல்லம்மா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!” என்று மன்றாடினான்.

அவனை அழுத்தமாகப் பார்த்தவள் “ சலனத்தில் தான் தப்பு பண்ணினேன்னு சொல்லி மன்னிப்பு கேட்குறீங்க. என் மேல உண்மையான அன்பு இருந்திருந்தா, காதல் இருந்திருந்தா இந்தச் சலனம் வந்திருக்குமா?” என்று கேள்வியாகப் பார்த்தாள்.

மறுப்பாகத் தலையாட்டியவன் “ என்னை நீ நம்ப மாட்டேங்குற. இந்த நிமிஷம் வரை உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன். நீ தான் எனக்கு எல்லாம்” என்றான்.

இதழ்களில் ஏளனம் குடியேற “ அப்போ சுமியோட உங்களுக்கு இருந்த உறவுக்குப் பெயர் என்ன?”

அவளைப் பார்த்து சலிப்பாக “ நான் பண்ணினது தப்பு தாண்டி ஒத்துக்கிறேன். இனி, இந்த மாதிரி தப்பு நடக்காது. என்னை மன்னிச்சிடு” என்றான்.

“சரி! உங்களை மன்னிக்கிறேன் ஆனா ஒரு கண்டிஷன்” என்றவளை யோசனையாகப் பார்த்தான்.

அவனை நக்கலாகப் பார்த்தவள் “ நானும் உங்களை மாதிரியே எங்காவது என் சலனத்தைத் தீர்த்துகிட்டு வரேன். அப்போ நீங்களும் என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்க” என்றாள்.

அவளின் பதிலில் அதிர்ந்தவன் முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு கோபத்துடன் தான் இருக்கும் நிலை அறியாமல் “ஏய்!” என்று பாய்ந்தவனை உடலில் எழுந்த வலி மீண்டும் படுக்க வைத்தது.

“ அருவருப்பா இருக்கா? வலிக்குதா? அப்போ பெண்களுக்கு மட்டும் தான் கற்பு. உங்களுக்கு எல்லாம் இல்ல. நீங்க எங்க வேணா சுத்திட்டு வந்து பொண்டாட்டிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டா எல்லாம் சரியாகிடும். ஏன்னா உங்களை எல்லாம் திருத்தி வாழ்க்கை கொடுக்கத் தான் நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல.”

காலம் காலமா உங்க ஆட்டத்துக்கு எல்லாம் இடம் கொடுத்து தான் நாங்க இன்னைக்கு இப்படி நிக்கிறோம். இந்த நிமிஷம் வெட்கப்படுறேன் உன்னைக் காதலிச்சதை நினைச்சு. உன்னோட தப்பை மறைக்கச் சலனம் தான் காரணம் சொன்னப் பாரு அது எவ்வளவு பெரிய பொய். அவ யாருமில்லாதவக் கேட்க கூட ஆளில்லாதவன்னு தெரிஞ்சு தான் அவளைத் தேர்ந்தெடுத்திருக்க. இதிலேயே தெரியலையா நீ எவ்வளவு பெரிய கிரிமினல்ன்னு. சலனத்தில் தப்பு பண்றவன் எதையும் ப்ளான் பண்ணாம அந்தச் சம்பவத்தில் மாட்டிக்குவான். நீ தப்பை பண்ணிட்டு அவளை மிரட்டி மேலும் உன் வழிக்கு வர வைக்க முயற்சி செய்திருக்க. இவ்வளவு பெரிய தப்பை பண்ணுகிற நீ எப்படித் திருந்துவ?”

“ என்னை இந்த நிமிஷம் வரை காதலிக்கிறேன்னு சொல்றியே? தப்பு பண்ணும் போது ஒரு நிமிஷம் கூட என்னைப் பற்றி நியாபகமே வரலையே. உன்னை உருகி உருகி காதலிச்சு உனக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு எப்பேர்பட்ட நம்பிக்கை துரோகம் செய்திருக்க? எப்படி என்னால எல்லாத்தையும் மறந்து உன்னை ஏத்துக்க முடியும்? இன்னைக்கு விபத்தில் சிக்கி உனக்கு இடுப்புக்கு கீழே செயலற்று போனதால் என்னால் உனக்கு உண்மையா இருக்க முடியும்ன்னு சொல்ற. இதே விபத்து நடக்காம போயிருந்தா என்ன செய்வ? கொஞ்ச நாள் அடங்கி இருந்திட்டு மறுபடியும் உன்னோட புத்தியை காட்ட ஆரம்பிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?

உன்னை நம்பி நான் உன்னோடு வாழ்ந்தாலும் என் மனசுல உன்னைப் பற்றிய பயம் இருந்துகிட்டே தான் இருந்திருக்கும். எப்போ காதலிச்சுக் கல்யாணம் செய்த பொண்டாட்டியையே ஏமாற்ற மனசு வந்துருக்கோ அப்போ நீ எந்த அளவிற்கும் போவாய். உன்னை மாதிரி ஆட்கள் தான் ரெண்டு மாச குழந்தையையும் விடுறதில்லை, அறுபது வயசு கிழவியையும் வன்புணர்வு செய்றாங்க. உங்களை மாதிரி ஆட்களுக்கெல்லாம் அரசாங்கம் தண்டனை கொடுக்கும்ன்னு காத்திருக்காம ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மனைவியும், ஒவ்வொரு சகோதரியும் தண்டனை கொடுக்கணும்.

கைகள் இரெண்டையும் உயரே தூக்கி ஒரு கும்பிடு போட்டவள் “ வாழ்ந்த வரை இந்த வாழ்க்கை எனக்குப் போதும். இனி, என் மகனையாவது உன்னைப் போல இல்லாம நல்ல பிள்ளையா வளர்க்கணும். உன்னை இந்த இடத்தில் இப்படியே நிர்கதியா விட்டுட்டுப் போறது தான் நல்ல தண்டனை. அத்தையே தன் மனசை கல்லாக்கி கிட்டு அதைச் செய்யும் போது நானும் அதைத் தான் செய்யப் போறேன். இருந்தாலும் உன்னைக் காதலிச்சப் பாவத்திற்கு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போகும் போது நீ தங்க ஒரு இடம் ஏற்பாடு செஞ்சிட்டு போறேன்” என்று தன் மனதிலுள்ளவற்றை எல்லாம் கொட்டியவள் திரும்பியும் பார்க்காது விறுவிறுவென்று வெளியே சென்றாள்.

அதுவரை அவள் பேசியதைக் கண்டு அதிர்ச்சியில் இருந்தவன் அவள் போவதைப் பார்த்து “தனு! தனு!” என்று அழைத்து அவள் திரும்பாது சென்றவுடன் சூடான கண்ணீர் கன்னங்களைத் தொட கண்களை மூடிக் கொண்டான்.

அன்றைய நாளின் தாக்கத்தில் இருந்தவள் அவசரமாக எழுந்து வாஷ் ரூமிற்குச் சென்று முகம் கழுவி வந்தாள். எப்படிப்பட்ட முடிவு? அதை எல்லோரும் விமர்சனம் செய்தாலும் தன் முடிவிலிருந்து இன்று வரை மாறாமல் இருக்கிறாளே. அவளுடைய அன்னையே மாப்பிள்ளையை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியும் மறுத்து விட்டாள்.

அதன் பின் எத்தனையோ அறிவுரைகள் ஆணின் துணை இன்றிக் காலம் முழுவதும் வாழ முடியாது என்றும், குழந்தைக்குத் தகப்பனின் அருகாமை தேவை என்றும் அவள் முடிவை மாற்ற எல்லா விதமான அறிவுரைகளும் வந்து சேர்ந்தது.

எது துணை? கூடவே வாழ்ந்து கொண்டு நம்பிக்கை துரோகம் செய்வதா? இப்படி ஒருவன் தகப்பனாக இருப்பதை விட அந்தக் குழந்தைக்குத் தகப்பனின் அருகாமை கிடைக்காமல் இருப்பதே மேல் என்று நினைத்தாள்.

வாழ்வில் ஒரு முறை ஏமாளியாக இருந்து விழித்துக் கொண்டாயிற்று. இனி, எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கும் தைரியம் மனதில் வந்துவிட்டது. எல்லாவற்றையும் விட அவள் அன்னையே அவளைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் ராகவின் குடும்பம் அவளுக்கு முழு ஆதரவுடன் இருந்தது.

பெற்ற பிள்ளையின் தவறை ஒப்புக் கொண்டு அவனை ஒதுக்கி வைத்து மருமகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தாங்கும் அந்தப் பெண்மணி கிடைப்பது வாழ்வின் மிகப் பெரிய வரம்.

இப்படிப்பட்ட அம்மாக்கள் இருந்தால் நாட்டில் பெண்களின் மீதான குற்றங்கள் குறையக் கூடும் என்று நம்புவோம்….

Advertisements