மல்லுக்கட்டு
“லுக் ராஜி! என்னால வர முடியாது! நீயும் போறதை நான் விரும்பல!”
“என்ன விஜய் சொல்ற? நம்ம கலாச்சாரத்தைப் பாதுகாக்க மொத்த தமிழகமே திரண்டு வந்து போராட்டம் பண்ணிட்டு இருக்கு. நீ என்னடான்னா பொறுப்பில்லாம பேசிட்டு இருக்க!”
“பொறுப்பு இருக்கிறதுனால தான் பேசுறேன். ஊரே கூடி நின்னு ஒரு மாட்டை அவிழ்த்துவிட்டு பயந்து ஓட விடுவாங்களாம், இதில் அது மேல ஆட்கள் ஏறி அதைத் துன்புத்துறதை விளையாட்டுன்னு சொல்றீங்க. அதைத் தடை பண்ணினதுக்குப் போராட்டம் வேற. சில்லியா இருக்கு.”
அவன் பேசியதைக் கேட்டு கோபத்துடன் முறைத்த ராஜி “மாட்டை யார் கொடுமை படுத்தினா? சும்மா யூ டியூப்ல பார்த்திட்டு பேசாதீங்க.இது வீர விளையாட்டு.அந்த காலத்தில் மாட்டை யார் அடக்குராங்களோ அவனுக்குத் தான் பெண்ணே கொடுப்பாங்களாம் தெரியுமா?”
“ஹாஹா குட் ஜோக். ஒரு அப்பாவி மாட்டை அடக்குவானுங்கலாம். அதை வீரம்-னு சொல்லி பொண்ணு குடுப்பாங்களாம்.”
“ஹெலோ அந்த மாட்டுக்கு முன்னாடி நின்னு பாருங்க தெரியும் அப்பாவியா? அடப்பாவியா-னு?”
“ஓகே! உன்னோட வழிக்கே வரேன். நீ சொல்ற மாதிரி வீரனா இருக்கணும்ன்னா பஸ்ல புட்போர்ட்ல தொங்குரவனுங்க எல்லாம் வீராதி வீரனுங்க.

அவனுங்களைத் தான் நீங்க எல்லாம் கட்டிக்கணும்.”
அவனது பேச்சில் மிகவும் கடுப்பானவள் “ அடிங்க! இந்த வாய்க்குக் கூடிய சீக்கிரம் வாங்குவீங்க.”
“நானும் வீரன் தான் ராஜி. வேணும்ன்னா ஒரு நாள் புட் போர்ட்ல வந்து காண்பிக்கவா?” என்றான் மேலும் நக்கலாக.
“அப்படிங்களா சார்? உங்க வீரத்தை நிரூபிக்க ஆசையா இருக்கா? அப்போ ஒன்னு பண்ணுங்க. நாளைக்கே எங்க ஊருக்குப் போறோம். நீங்க சொன்ன அந்த அப்பாவி மாட்டை லேசா தொட்டு காண்பீங்க போதும்.உங்களை வீரன்னு ஒத்துகிறேன்.”
அப்போது அங்கே வந்த அவர்களின் டீம் லீடர் ராகேஷ் “என்ன இங்கே டிஸ்கஷன்?” என்றான்.
அவர்களிடையே நடந்த வாக்குவாதத்தை விஜய் சொன்னதும் “தெரியாம வாயை விட்டுட்டு மாட்டிக்காதே விஜய். நாம எல்லாம் பேப்பர் டைகர் தான். வாய் இருக்கேன்னு பேசி மாட்டிக்காதே” என்றான்.
அவனை நக்கலாகப் பார்த்து “யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட ராகேஷ். நான் சிட்டில வளர்ந்திருந்தாலும் சின்ன வயசுல எங்க தாத்தா வீட்டுக்கும் போகும் போது அங்க விளையாடிட்டு இருக்கும் ஆடு, மாடு எல்லாம் எனக்குப் பழக்கம் தான்.” என்றான் பெருமையாக.
அவன் என்னவோ சொல்ல வருகிறான் என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் கொல்லென்று சிரித்தனர்.
ராகேஷோ விடாமல் “அப்போ கண்டிப்பா நீ பெரிய வீரன் தான். ஆனா அதை நிரூபிக்க நீ ராஜி ஊருக்கு போகணும்.என்ன ராஜி நான் சொல்றது சரி தானே?” என்று கேட்டுக் கண் சிமிட்டினான்.
அவனது நோக்கம் புரிந்தவள் “நிச்சயமா ராகேஷ். நாங்க நாளைக்கே ஊருக்கு போறதுக்கு ஏற்பாடு பண்றேன். நீ லீவ் மட்டும் குடுத்திடு.நன்றே செய் இன்றே செய். எதையும் தள்ளி போட கூடாது.”
அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டதும் அதுவரை உதார் விட்டுக் கொண்டிருந்த விஜயின் மனதில் சிறு சலனம் ‘ஆப்பை தேடி உட்கார்ந்துட்டோமோ’என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அடுத்த நாள் மாலை நேரே விஜயிடம் வந்த ராஜி “நைட் ஒன்பது மணிக்குப் பஸ். ஒரு ரெண்டு நாளைக்கு உள்ளது பாக் பண்ணிக்கிட்டு எட்டரைக்குப் பஸ் ஸ்டாண்ட் வந்திடுங்க” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தவன் “ஹே! என்ன சொல்ற? ஏதோ பொழுது போகாம பேசினோம். அதைப் போய்ச் சீரியஸா எடுத்துகிட்டு”.
அவனை இடைமறித்தவள் “ சும்மா வாங்க ! ஜாலியா எங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம் வாங்க. பின்னாடி நம்ம விஷயத்தை ஓபன் பண்ண இந்த ட்ரிப் யூஸ்புல்லா இருக்கும்” என்றாள்.
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் “அப்படிச் சொல்றீயா? அதுவும் நல்லது தான்” என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

 

அடுத்த நாள் காலை ராஜியின் கிராமத்தில் போய் இறங்கினர் இருவரும்.விடியல் நேரம் என்பதால் ஆங்காங்கே வாசலைப் பெருக்கி கோலமிட்டுக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்ததும் லேசாகச் சிரித்து “ எனக்கு ஏதோ ஒரு கிராமத்துப் படம் பார்க்கிற எபக்ட் வருது ராஜி” என்றான்.
அவனை முறைத்தவள் “அதானே உங்களுக்குப் படத்தைத் தவிர வேற என்ன தெரியும்”
அவளின் கோபத்தைக் கண்டு மீண்டும் சிரித்து “ஓகே..ஓகே..கிராமத்து குயிலு” என்றான் நக்கலாக.
அப்போது அவர்களை நோக்கி ஒருவன் வந்தான். வேட்டி அணிந்து,உழைத்து உரமேறிய உடல்வாகுடன் இருந்தான்.
அவனைப் பார்த்ததும் ராஜி மெல்லிய புன்னகையைச் சிந்தினாள்.
அதைக் கண்டு எரிச்சலான விஜய் குனிந்து ராஜியின் காதில் “யார் இந்த ராமராஜன்?” என்றான்.
திரும்பி ஒரு தீப்பார்வை பார்த்தவள் “உன் வாய் கொழுப்பு அடங்கவே அடங்காதா? அது என் மாமா தங்கவேலு” என்றாள்.
அதற்குள் தங்கவேலு அவர்கள் அருகில் வந்துவிட, ராஜி இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்து பேசிக் கொண்டே வீடு நோக்கி சென்றனர்.
வீட்டிலுள்ளவர்களின் அறிமுகப்படலம் முடிந்து தனக்குக் குடுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று படுத்தும், ‘ஹப்பா! வந்து ஒரு மணி நேரத்துக்குள்ளேயே மூச்சு முட்டுதே? இவங்க எல்லாம் எப்படித் தான் இங்கே இருக்காங்களோ?’ என்று எண்ணினான்.
அப்போது அவனது அறைக்கு வந்த ராஜி பெருமையுடன் “எப்படி எங்க வீடு?” என்று கேட்டாள்.
சோர்வாக எழுந்து உட்கார்ந்து “ஏதோ ட்ரைபல் வில்லேஜ்ஜுக்கு வந்த மாதிரி இருக்கு. இதென்ன மியுசியமா வைக்க வேண்டிய வீட்டில் இருக்கீங்க?நான் இதெல்லாம் என்னோட ஹிஸ்டரி புக்ல பார்த்தது தான்.இது ரெண்டாயிரத்து பதினேழான்னு சந்தேகமா இருக்கு.உங்க வீட்டைப் பார்த்ததும்” என்றான் சலிப்பாக.
அவனது பேச்சைக் கேட்டு கடுப்பானவள் மனதிற்குள் ‘இவன் அடங்க மாட்டான். ஆனா இங்கே இருந்து போறதுக்குள்ள இவன் வாயை அடக்கியே ஆகணும்’ என்று சபதமிட்டுக் கொண்டாள்.
“சரி நல்லா ஒரு தூக்கம் தூங்கி எழுந்திரிங்க.அதுக்குள்ள அண்ணன் வந்துடும்.”
“எதுக்குள்ள இருந்து வருவாரு உன் அண்ணன் ?” என்றவன் அறையைச் சுற்றி பார்வையை ஓட்டினான்.
அவன் கேள்வி புரியாமல் “என்ன கேட்கிற?” என்றாள்.
“அதுக்குள்ள வந்திடுவாரு உங்க அண்ணன்னு சொன்னியே அதுதான் எதுக்குள்ளேன்னு கேட்டேன்.
அவனது கேள்வியில் எரிச்சலானவள் “நீயும் உன் வாயும்.படுத்து தூங்குடா”என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் சென்றதும் அறையைச் சுற்றி கண்களை ஒட்டியவனுக்கு அது ஏதோ பாழடைந்த வீடு போலத் தோன்றியது.ஏசியின், ஓசையிலும்,செயற்கை குளிரிலுமே வளர்ந்தவனுக்கு அந்த வீடு அப்படித் தோன்றியதில் அதிசயமில்லை. பேன் ஓடினாலும் காற்று மேலே படாமல் வியர்த்து வழிந்தது. சட்டையைக் கழட்டி கட்டிலில் போட்டுவிட்டு படுத்துப் பார்த்தான், அப்போதும் உறக்கம் வரவில்லை.இதென்னடா இப்படி ஒரு சோதனை என்றெண்ணியவன் மெல்ல எழுந்து மூடி இருந்த ஜன்னலருகே சென்றான்.கதவைத் திறந்ததும் சில்லென்று காற்று முகத்தில் மோதியது. எதிரே தெரிந்த தோட்டம் மனதில் அதுவரை இருந்து வந்த அலைபுருதலை அடக்கியது.சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு,புழுக்கமெல்லாம் அகன்றதும் உறக்கம் கண்களைச் சுழற்ற கட்டிலில் வந்து படுத்து விட்டான்.
ஒரு மணி நேரம் அடித்துப் போட்டது போல் உறங்கி எழுந்தவன், மெல்ல அறையை விட்டு வெளியே வந்தான். வீட்டினில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே சென்றவன் தோட்டத்தில் போய் நின்றான்.
அங்கே நிறைய மாடுகள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு மாட்டையும் தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். அதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டே நின்றான்.
“நீங்க இங்கேயா இருக்கீங்க? ரூம்ல போய்த் தேடிட்டு வரேன்” என்று அவன் பின்னே வந்து நின்றாள் ராஜி.
அவளைத் திரும்பி பார்க்காமலே “யார் இந்த மாட்டுக்கார வேலன்?” என்றான்.
சிறிது நேரம் அவன் கேள்விக்குப் பதில் வராமல் போக யோசனையோடு அவள் பக்கம் திரும்பினான். அவளோ இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.
“என்ன ராஜி? அந்த மாட்டுக்கார வேலன் யாருன்னு தானே கேட்டேன். அதுக்கேன் முறைக்கிற?” என்றான் புரியாத தொனியுடன்.
மேலும் முறைத்துக் கொண்டு “ம்ம்..அந்த மாட்டுகார வேலன் உங்க மச்சான்” என்றாள்.
அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்தவன் “வாட்? அக்ரீ படிச்சிட்டு விவசாயம் பண்ணிட்டு இருக்கார்ன்னு சொன்னியே. அவர் ஏன் மாட்டை எல்லாம் கழுவனும்?”
“ஏன்? பண்ணினா என்ன? இந்த மாடெல்லாம் எங்க அப்பாவோட பிள்ளைகள் மாதிரி.உங்க நக்கல் பேச்செல்லாம் ஊரோட வச்சிக்கோங்க.இங்கே இருக்கிறவங்க காதில் விழுந்துது வகுந்திடுவாங்க.”
அதற்குள் ராஜியின் அண்ணன் அசோக் அவர்கள் அருகில் வந்திருந்தான்.
“ஹலோ சார்! நான் அசோக்.ராஜியோட அண்ணன்.பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா?”
அவன் நீட்டிய கையைத் தொட்டு குலுக்க அருவெருப்படைந்து லேசாக முகத்தைச் சுருக்கினான்.
அவனது மனதை புரிந்து கொண்ட அசோ கையை இழுத்துக் கொண்டான். அதன்பின் சகஜமாக விஜயிடம் உரையாடினாலும், அவன் பேச்சில் ஒரு வித கிண்டல் இருந்ததைக் கண்டு கொண்டான்.
“உங்களுக்கு எப்படி இங்கே பொழுது போகுது அசோக். நம்ம ஏஜ்ல உள்ள எல்லோரும் சிட்டி லைப் தான் விரும்புவாங்க. நீங்க ஏன் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தீங்க?”
அவனை ஆழ்ந்து பார்த்தவன் “நீங்க சொல்றது உண்மை தான் விஜய். நான் ஒன்னு கேட்கட்டுமா?”
தோளை குலுக்கி “தாராளமா கேளுங்க?” என்றான்.
“இளைஞர்கள் எல்லோரும் சிட்டில தான வேலை பார்ப்பேன், விவசாயம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா அரிசி,பருப்பெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதை யாரு விளைவிப்பா? இல்ல அதையும் கம்பியுட்டர் மானிட்டர்லையே பார்த்து பசியைப் போக்கிக்கலாமா?”
“இருந்தாலும்…” என்று இழுத்தவனைத் தடுத்து நிறுத்திய அசோக் “நமக்குக் கிடைச்சிருக்கப் படிப்பை வச்சு விவசாயத்தில் புது வழிகளைக் கொண்டு எப்படி வெற்றிகரமா செய்ய முடியும்ன்னு செஞ்சு காட்டனும்.”
அசோக் அவ்வளவு சொன்ன பிறகும் விஜயின் முகம் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை.
“நீங்க சொல்றீங்க..ஆனா  எனக்கெல்லாம் இது ஒத்து வராது” என்றான்.
அப்போது அவர்களைத் தாண்டி ஒரு கோழியும், அதன் குஞ்சுகளும் போய்க் கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் விஜய்க்கு அந்தக் கோழிக்குஞ்சுகளைத் தூக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது. 
ராஜியும், அசோக்கும் வேண்டாம் என்று சொல்லும் முன்பே ஒரு கோழிக்குஞ்சை கையில் தூக்கியிருந்தான்.
“எவ்வளவு சாப்ட்டா இருக்கு” என்று சொல்லி அதைக் கொஞ்சிக் கொண்டு நின்றான்.
அசோக்கோ “விஜய்! அதைக் கீழே விட்டுடுங்க” என்றான்.
ராஜி எதுவும் சொல்லாது இதழில் ஒருவித கேலியான சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
தனது குஞ்சுகளுடன் சிறிது தூரம் போன கோழி ஒரு கோழிக்குஞ்சை மட்டும் காணும் என்று தேடிக் கொண்டு திரும்பி வந்தது க்கக்..க்கக் என்ற சத்தத்துடன்.
தாயைக் கண்டதும் விஜயின் கையிலிருந்த கோழிக்குஞ்சு கீ..கீ..என்று சத்தமெழுப்பியது.
அவன் கையிலிருந்த கோழிகுஞ்சைப் பார்த்ததும் கோபமுற்ற கோழி, எவனோ ஒரு புதியவன் கையில் தனது குழந்தை சிக்கி விட்டது என்றெண்ணி உடலை சிலிர்த்துக் கொண்டு கோபத்துடன் பாய்ந்து அவன் கையில் கொத்தியது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத விஜய் அதிர்ந்து போய்க் கோழிக்குஞ்சை கீழே விட்டான்.
அப்போதும் கோபம் குறையாத கோழி மீண்டும் பாய்ந்து அவனது தொடையில் கொத்தியது. பயந்து போன விஜய் சூ..சூ..என்று விரட்டிக் கொண்டே பின்னே நகர்ந்தான்.
கோழியும் விடாமல் அவனைத் தொடர்ந்தது. ராஜியோ இந்தக் காட்சியைப் பார்த்து கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்த அசோக் அவளைத் திட்டிவிட்டு கோழியை விரட்டச் சென்றான்.
ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்டு கோழியை விரட்ட முயன்று கொண்டிருந்தான் விஜய். அசோக் விஜயிடம் சென்றதும், ராஜி அவசரம் அவசரமாக மாட்டு கொட்டகைக்குச் சென்று கன்றுக்குட்டியை அவிழ்த்து விஜய் இருந்த மரத்துகருகில் விட்டாள்.
கோழியையே பார்த்துக் கொண்டிருந்த விஜய் கன்றுக்குட்டியை கவனிக்கவில்லை.கோழியை விரட்டுவதில் துள்ளி குதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த கன்றுக்குட்டி அவன் தன்னோடு விளையாடுகிறான் என்றெண்ணி அவன் பின்னே சென்று ஒரு முட்டு முட்டியது.
எதுவோ இடித்தது போலிருந்தது என்று திரும்பி பார்த்தவன் கன்னுக்குட்டியை பார்த்ததும் பயந்து போய் ஹெல்ப்..ஹெல்ப்..என்று கத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.
அதுவும் அவன் தன்னோடு சுவாரசியமாக விளையாடுகிறான் என்றெண்ணி அவன் பின்னோடு ஓடத் தொடங்கியது.இவர்களின் இந்த ஓட்டத்தைப் பார்த்து அண்ணன், தங்கை மட்டுமல்ல தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
கன்றுகுட்டியிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடியவன் மோட்டார் ரூமின் மீது ஏறி நின்று கொண்டான்.மாடோ அவனைப் பார்த்துக் கொண்டே நகராமல் அங்கேயே நின்று கொண்டது.
இதைப் பார்த்த ராஜி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.
ராஜி சிரிப்பதை பார்த்து திட்டிவிட்டு விஜய்க்கு உதவச் சென்ற அசோக்கிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
கன்றுகுட்டியைப் பிடித்துக் கொட்டைகையில் கட்டிய பின் மெதுவாக மோட்டர் ரூமின் மேலிருந்து கீழே இறங்கினான். முகமெல்லாம் சிவந்து போய் ராஜியைப் பார்த்து முறைத்துக் கொண்டே நின்றான்.
அவளோ அவன் அருகில் சென்று மெல்லிய குரலில் “என்ன வீராதி வீரரே? ஒரு கன்றுகுட்டிக்கே இந்த ஓட்டம் ஓடினா எப்படி?” என்றாள் கேலியுடன்.

 

“ஓவரா பேசாதடி! அது பின்னாடி வந்து முட்டினதில் கொஞ்சம் பயந்துட்டேன்.” என்றான்.
“அப்படிங்களா சார்.அப்போ வாங்க, இங்கே வந்து எங்க வீரனுக்கு ஒரு ஹலோ சொல்லுங்க” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
அதைப் பார்த்த அசோக் “ராஜி! வீரா கிட்ட கொண்டு போகாத மாப்பிள்ளைய. அவன் நேத்திலேருந்து ஒரு நிதானத்தில் இருக்கான்.பார்த்து..பார்த்து” என்று கத்தினான்.
எதையும் காதில் வாங்காது தோட்டத்தின் உள் பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கே ஒரு அம்பது, அறுவது வருட வேப்ப மரத்தில் தாம்பு கயிறு போல இரு கயிறு கொண்டு கட்டப்பட்டு நின்று கொண்டிருந்தான் வீரன் என்னும் காளை.
ஆக்ரோஷமாக மண்ணைக் கிளருவதும், ஒரு இலை விழுந்தால் கூடச் சீறுவதும், கயிற்றை எந்த நேரம் அறுத்துக் கொண்டு ஓடுவதற்கு முயற்சித்துக் கொண்டே நின்றிருந்தான் வீரன்.
சிறு அசைவு கூட வீரனுக்கு வெறி ஏற்றியது. விஜய்க்கு அதைப் பார்த்ததும் ‘நா’ வறண்டு போனது. மாடுகளைப் பார்த்திருக்கான் தான் ஆனால் இப்படியொரு காளையைப் பார்ப்பது இதுவே முதல் முறை.
“என்ன பார்க்குறீங்க? நீங்க யுடியுப்ல பார்த்த ஜல்லிக்கட்டு காளை இது தான்.

இவன் எங்க குடும்பத்தோட செல்லப் பிள்ளை. உங்க பீட்டா சொல்றது போல இவனை நாங்க கொடுமையெல்லாம் படுத்தல. வாடி வாசல் வழியா ஓடி வர இவன் மேல கையை வைக்க இந்த ஜில்லாவிலேயே ஆள் இல்ல தெரியுமா?”
அதுவரை பீதியிலேயே நின்றிருந்தவனுக்கு அவள் சொன்னதக் கேட்டதும் “நீ சொல்றது சரி தான்.இந்த விளையாட்டால மாட்டுக்கு ஆபத்தில்லை ஆனா மக்களுக்குத் தான் ஆபத்து” என்றான் பயம் கலந்த குரலில்.
அவனது பயத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ‘என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னா இவனை அடக்கினா தான் உண்டு”என்றாள் .
இரு கைகளையும் தூக்கி ஒரு கும்பிடு போட்டு “இதை அடக்கி உன்னைக் கல்யாணம் பண்றதுக்கு, நான் சாமியாரவே போகலாம்” என்றவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
அங்கே வந்த அசோக் சிரித்துக் கொண்டே அவன் தோள்களில் தட்டி “என்ன மச்சான் இது. அவ சும்மா உங்களை ஓட்டிகிட்டு இருக்கா”.
ராஜியோ “உன் மச்சானுக்குக் கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்தி அண்ணே.அதுக்குத் தான் வீரனை வச்சு மடக்கினேன்.இனி, வாயை திறப்பீங்க?” என்றாள் நக்கலாக.
“நான் மல்லுகட்டுனா, நீ என்னை ஜல்லிக்கட்டில் இழுத்து விட்டுட மாட்டே.தெரிஞ்சும் வாயத் திறப்பானா.ஆளை விடு” என்றான்.

Advertisements