வலம் – விநாயக முருகன்

 

ஒரு நகரம் நிர்மாணிக்கப்படும் போது அதன் பின்னே புதைந்து போன பூர்வகுடிகளின் ஓலங்கள் வரலாற்றின் பக்கங்களில் மௌனித்திருக்கும். வரலாற்று ஆசிரியர்கள் மூலம் ஒரு சில உண்மைகள் வெளி வந்திருந்தாலும், ஒரு எழுத்தாளரின் பார்வையில் அவை வெளிப்படும் போது நம் மனதை அழுத்தமாக தகர்த்து செல்கிறது.

 

மதராசப்பட்டினத்தை பொறுத்தவரை நரிகள் தான் பூர்வகுடிகள். பதினாறாம் நூற்றாண்டில் நரி மேடு எனும் பகுதியில் அற்புதமான ஒரு புனைவுடன் கதை தொடங்குகிறது. நரி சித்தரை பற்றியும், அங்கு வாழும் நரிகளுக்கு அவர் எப்படி காவலாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது . நரி சித்தர் மறைந்து போகும் நாளோடு நரிகளை சுற்றியிருந்த பாதுகாப்பு வட்டம் மறைந்து போகிறது.

 

பின் பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. கிழக்கிந்திய கம்பனி மூலம் நமது நாட்டிற்குள் நுழையும் வெள்ளையர்கள் மதரசாப்பட்டினத்தில் தங்களுக்கான கோட்டையை அமைக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்யும் இடம் நரிமேடு.

 

நரிமேட்டை சுற்றியிருக்கும் மீனவர்கள் அங்கிருக்கும் நரிகளை தங்கள் குலதெய்வமாக வழிப்பட்டார்கள். தங்களின் அதிகார பலத்தால் அங்கிருக்கும் மீனவர்களை அடித்து விரட்டிவிட்டு, நரிகளையும் துன்புறுத்தி அங்கிருந்து அகற்றுகிறார்கள். பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோஹன் இருவரும் மதரசாபட்டினத்தை நிர்மாணிப்பதில் முதல் அடியை எடுத்து வைக்கிறார்கள்.

 

மனிதனின் ஆதிக்க வெறி என்று தொடங்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பூமி ஒவ்வொரு நிமிடமும், சூழ்ச்சிகளையும், பல தந்திரங்களையும், பல போர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நகரங்கள் பல ரத்த ஆற்றில் தான் நிர்மாணிக்கப்படுகிறது.மதராசப்படினத்தின் வரலாற்றில் நரிகளின் குருதியிலும், ஒதுக்கப்பட்ட மனிதர்களின் உரிமை போராட்டத்தில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

கோட்டையை கட்டி தங்களது அதிகாரத்தை நிறுவிய நிலையில் பிரான்சிஸ் டேவிற்கு குழந்தை பிறந்து இறந்து விடுகிறது. அந்த குழந்தை நரியின் முகமும், மனித உடலும் கொண்டதாக இருந்தது என்று கூறும் இடத்தில் ஆசிரியரின் கவித்துவமான கற்பனை ரசிக்க வைக்கிறது.

 

கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரம் இங்கிலாந்து ராணியின் வசம் சென்று இருநூற்றாண்டுகளுக்குப் பிறகு, புளியந்தோப்பில் நடக்கும் இரு குழந்தைகளின் கொலைகளில் ஆரம்பிக்கிறது.

 

மதராசப்பட்டினத்தில் இருந்த நரிகள் இடம் பெயர்ந்திருந்தாலும், தங்களின் பிறப்பிடத்தை மறக்க முடியாமல் அவ்வப்போது நகரத்துக்குள் வந்து பொது மக்களிடம் அடிபட்டு சென்று கொண்டிருந்தன. இந்த இடத்தில் ஆசிரியர் பெண்களைப் போல விலங்குகளும் தங்களின் பிறப்பிடத்தை மறக்க முடியாமல் தவிக்கின்றன என்கிறார்.

 

ஆங்கிலேயர்கள் நரிகளை வேட்டையாடுவதை பொழுது போக்காக எண்ணுகின்றனர். . தங்களின் வேட்டைக்கு உதவுவதற்காக இங்கிலாந்தில் இருந்து பாக்ஸ் ஹவுண்ட் நாய்களை இறக்குமதி செய்து அவற்றை உபயோகிக்கின்றனர். எஜமானுக்கு மிகவும் விசுவாசமானவை இந்த நாய்கள்.

 

ஒவ்வொரு முறை வேட்டையின் போதும் பல நூறு நரிகள் கொல்லப்படுகின்றன. அதற்காக விடுதிகள் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க மதரசாப்பட்டினத்தின் கவர்னரின் திருவிளையாடல்கள் எங்கும் பேசப்படுகிறது.

 

இதனூடே நமது கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் ஜாதி பிரச்சனைகளை தொட்டு செல்கிறார். எந்த ஒரு நிலையிலும் குறிப்பிட்ட ஜாதியினருக்கு எந்த உரிமையும் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் உயர்ந்த ஜாதி இந்துக்கள் .ஆங்கிலேயர்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளை கூட கிடைக்க விடாமல் செய்கின்றனர் கங்காணிகளாக இருக்கும் உயர்ந்த ஜாதி இந்துக்கள்.

 

அடுத்து கயல்/கரோலின் இவளின் கதாப்பாத்திரம் மிக அழுத்தமான, தனக்குள்ளேயே தன்னை புதைத்துக் கொள்கிற தன்மை கொண்டது. மதராசப்பட்டினத்தின் காவல் அதிகாரி ஆண்ட்ரூ கோஹனின் உயர்வான காதலை பெற்றிருந்தாலும், அதை அடைய முடியாமல் அவளின் சூழ்நிலையும், மனதுமிருக்கிறது.

 

என்னை கவர்ந்த கதாபாத்திரங்கள் ஆண்ட்ரூ கோஹன் தனது ஆட்கள் இங்குள்ள மக்களுக்கு எதிராக செயல்பட்டாலும் தன்னளவில் இந்த மக்களுக்கான நியாயத்தை வழங்கி விட வேண்டும் என்று நினைத்தவன். கரோலின் மேல் அளவில்லாத அன்பை கொண்டவனுக்கு அவளை மணக்க முடியாமல் போனது பெரும் இழப்பு.

 

ரத்தினம் தனது ஜாதியினருக்காக தாசருடன் சேர்ந்து உழைப்பது. கல்வி ஒன்றினால் மட்டுமே தங்களது நிலையை மாற்ற முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவது.எதற்காகவும் தன்னுடைய நேர்மையையும், கம்பீரத்தையும் தொலைக்காமல் இருப்பது.

 

ஒரு பெண்ணின் மன நிலையை சூசன் மூலம் மிக அழகாக சொல்லியிருக்கிறார். பெண்களுக்கு நேரும் துன்பங்கள் எல்லாம் ஆண்களாலேயே என்பதையும், பெண்கள் மிக பொறுமைசாலிகள் என்பதையும் சூசன் மூலம் நிருபித்திருக்கிறார்.

 

வேறு தேசத்தில் பிறந்தாலும் மனிதனை சக உயிராக மதித்து அவனுடைய துன்பங்களுக்கு தோள் கொடுத்து தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் மனிதர்.

 

நரி வேட்டையை சொல்லும் இடங்களில் மனிதனுக்குள் இருக்கும் வக்கிரம் எத்தகையது என்பதை புரிய வைத்திருக்கிறார். அதிலும் பேட்டர்சன் குதிரை பந்தய மைதானத்தில் நிகழ்த்தும் நிகழ்வு அதி பயங்கரமானது.

பாக்ஸ் ஹவுண்ட் வேட்டை நாய்கள் கடைசி நிமிடம் வரை தங்களது விசுவாசத்தை தங்களின் எஜமானனுக்கு தந்து, அதற்கு பரிசாக மரணத்தை பெறுகின்றன.

 

தனது முன்னுரையில் நாவல் எழுதும் போது தனக்கான ரகசிய கதவு திறந்து கதைகளில் வரும் மனிதர்களோடு வலம் வருவதாக கூறுகிறார் ஆசிரியர். கதாசிரியரும், வாசகரும் ஒரு புள்ளியில் இணைந்து கதாபாத்திரங்களுடன் வலம் வருவது ஆசிரியரின் வெற்றி. இங்கே கதை முடிந்த பின்னும் என்னை சுற்றி எண்ணற்ற நரிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் ஊளை என் காதுகளை தொட்டு செல்கின்றது…

Advertisements