மிளிர் கல் – இரா. முருகவேல்

பழங்காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஜாதி கற்களுக்காக பல போர்கள் நடத்தப்பட்டது. நடந்து கொண்டுமிருக்கிறது. மேற்குலகில் வைரங்கள் எடுப்பதற்காக தோண்டப்படும் சுரங்கப் பகுதியில் இருக்கும் பழங்குடி இன மக்களை கொன்று குவித்த கதைகள் ஏராளம். அவை ரத்த வைரங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

நமது இலக்கியங்கள் பண்டை தமிழ்நாட்டில் “மான் துள்ளினாலே மாணிக்கமும், மரகதமும் தெறித்து வெளிவருமென்று சொல்லியிருக்கிறது.” இந்த கற்களுக்காகத் தான் அந்தக் கால தமிழகம் ரத்தக் களரியானது. இன்றும் நமது மண்ணில் கிடைக்கும் மிளிர் கல்லான ரூபி எனப்படும் மாணிக்கத்தை அடைய மேற்குலகம் பல மோசடிகளை அரங்கேற்றி வருகிறது. கண்ணகியின் காற்சிலம்பிலிருந்த மாணிக்கமும் அத்தகைய மிளிர் கல் தான் என்கிறார் ஆசிரியர்.

முல்லை டெல்லியில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழார்வம் கொண்ட தந்தைக்கு பிறந்ததனால் கண்ணகியின் மீது தீராத காதல் கொள்கிறாள். கண்ணகி-கோவலனைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் புகார் நோக்கி பயணிக்கிறாள்.

அவளுக்கு உதவியாக நண்பன் நவீன் செல்கிறான். இடதுசாரி கோட்பாடுகள் மேல் தீராத பற்று கொண்டவன். மிகவும் துடிப்பான இளைஞன். சிலப்பதிகாரத்தில் கண்ட புகாரை  தேடிச் செல்லும் முல்லையை நிதர்சனம் ஏமாற்றமடைய செய்கிறது. அதை அந்த இடத்தில் மிக அழகாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

“கோவலனும், கண்ணகியும் வழிநடந்த காவேரி, அவன் மாதவியோடு களித்திருந்த காவேரி…சோழநாட்டின் உயிரான பொன்னி நதி…கடலுக்கு இருநூறு அடிதூரத்தில் நின்று போயிருந்தது.ஒரு சிறிய நீர் திட்டு போலிருந்தது” என்கிறார்.

இரெண்டாயிரம் வருடம் பின்னோக்கி போகும் பயணத்தில் முதல் ஏமாற்றத்தை சந்திக்க இயலாமல் திரும்பி சென்று விடலாம் என்று எண்ணுகிறாள்.

ஸ்ரீகுமாருடனான சந்திப்பு அவளது முடிவை மாற்ற செய்து விடுகிறது. அவர் ஒரு பேராசிரியர். ஆராய்ச்சிக்காக வந்திருப்பவர். அவருடைய ஆராய்ச்சிக்கு ஜே. கே . டைமண்ட்ஸ் ஸ்பான்சர் செய்கிறது.அவர் மூலம் சிலப்பதிகாரத்தை பற்றியும், கண்ணகியும், கோவலனும் மதுரை சென்ற வழியைப் பற்றியும் பல விவரங்கள் கிடைக்கிறது.

முல்லையின் மனதில் கண்ணகியை பல கேள்விகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. புகாரில் மிகப் பெரிய வணிகனின் மகள், மருமகளாக இருந்த போதும் அவர்கள் இருவரும் ஊரை விட்டு மதுரைக்கு செல்லும் போது ஏன் யாருமே அவர்களை தேடவில்லை? சுமார் மூன்று மாதங்கள் புகாரில் இருந்து நடந்தே மதுரைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் தேடவில்லை. ஏன்?

என்ன மாதிரியான பெண்ணவள். ஏழடுக்கு மாளிகையில் பிறந்து வளர்ந்தவள் மூன்று மாதங்கள் காட்டிலும்,மேட்டிலும் நடந்து சென்று இருக்கிறாள். எப்படிப்பட்ட மன நிலையில் இருந்திருப்பாள் என்று எண்ணுகிறாள்.

இப்படி மனதில் பல கேள்விகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஸ்ரீகுமார் கடத்தப்படுகிறார்.அவரை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று செயலில் யோசிக்கும் முன் அவர் விடுவிக்கப்படுகிறார்.

அதன் பின்னர் இன்னும் முழு மூச்சுடன் மதுரையை நோக்கி பயணத்தை தொடங்குகின்றனர். பொதுவாக எல்லா காலகட்டத்திலும் அரசியலும், மதமும், வர்த்தகமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தே செயல்பட்டிருக்கிறது. அதை முல்லைக்கு அழகா எடுத்து சொல்லுகிறார் ஸ்ரீகுமார்.

அரசன் எந்த மதத்தை ஆதரித்தானோ அந்த மதமே அங்கு கோலோச்சியது. சமண மதத்தை பற்றியும் அது வளர்ந்த விதமும், அழிந்த விதத்தை பற்றியும் முல்லைக்கு எடுத்து சொல்லுகிறார்.

எல்லாவற்றையும் விட முல்லைக்கு மிகப் பெரிய கேள்வி ஒன்று எழுகிறது. சேரன் செங்குட்டுவனுக்கு கண்ணகி மேல் அப்படி என்ன அக்கறை? என்று. வஞ்சிக் காண்டம் முழுவதும் சேரன் செங்குட்டுவனின் தமிழ்ப்பற்று பேசபடுகிறது என்கிறாள்.

அதற்கு ஸ்ரீகுமாரின் பதில் என்னை அதிர வைத்தது. “ஒரு அரசுக்கு போர்கள் தொடுப்பதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம்.பேரழிவு ஆயுதங்களை ஈராக்கில் தேடுகிறோம் என்று பொய் சொல்லி அமெரிக்கா படையெடுத்ததை போல.”

மேலும் பல புதிய விஷயங்களை சர்வ சாதரணமாக சொல்லி செல்லுகிறார்  ஆசிரியர். அந்த கால பழங்குடி இனத்தில் கணவனின் மரணத்திற்கு பின்பு உடன்கட்டை ஏறும் பழக்கம் எல்லாம் இருந்தததில்லை. அவர்கள் ஆணையும், பெண்ணையும் சமமாக தான் பார்த்தார்கள்.இந்த உடன்கட்டை ஏறும் பழக்கம் எல்லாம் உயர்ந்த சாதியினரிடம் மட்டுமே இருந்தது என்கிறார்.

அதோடு நில்லாமல் கண்ணகி அந்த காலத்திலேயே அரசவைக்கு சென்று நீதி கேட்டிருக்கிறாள். மன்னனையே பழிக்குப்பழி வாங்குகிறாள்.உடன்கட்டை ஏறவில்லை. பெணகளுக்கு எதிரான அடக்கு முறையைத் தாண்டி இப்படி ஒரு பெண். துயரத்தின் சின்னமாக, கற்பின் அடையாளமாக, இஅலக்கியமாஇ, வாய்மொழியாக வாழ்ந்து கொண்டே இருக்கிறாள் என்கிறார் ஆசிரியர்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகி மேல் அக்கறை காட்டியதற்கு அவர்க் கூறும் காரணங்கள் ஒரு அரசு பேரரசாக விரியும் பொழுது தனது ஆட்சிக்கு கீழ் வரும் ஊர்களின் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதை தான் சேரன் செங்குட்டுவன் செய்ததாக கூறுகிறார்.

பூம்புகார் கண்ணகியை கட்டிய சேலையோடு விரட்டியது.மதுரை அவளை அழித்து தானும் சாம்பலானது.கண்ணகியை உன்னதமான இடத்திற்கு உயர்த்தி சென்றவன் சேரன். தமிழ் பெண்மையின் காவலன்.தமிழ் வணிகர் குலத்திற்கு நம்பகமானவன்.தமிழர் பெருமைக்காக போர் புரியத் தயங்காதவன் என்கிற பிம்பத்தை கட்டியமைக்கிறது என்கிறார் ஆசிரியர்.

எல்லாமே அரசியல் பின்னணியில் தான் நடக்கிறது. கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கபரல்கள் போன்றவை தான் கொங்கு நாட்டின் காங்கேயம் போன்ற பகுதிகளில் கிடைக்கக் கூடிய அரிய ரத்தினங்கள். மேற்குலகில் எங்கோ எவனோ தனது மனைவிக்கு இதய வடிவில் ரத்தினத்தை பதித்து கொடுப்பதற்காக நமது விளைச்சல் நிலங்கள் கொள்ளை போகின்றன என்கிறார்.

இதற்காக மாபெரும் கூட்டணி வேலை செய்து கொண்டே இருக்கிறது. நவீன் போன்றவர்களும், கண்ணன் போன்றவர்களும் அவற்றை எல்லாம் எதிர்த்து போராட்டம் செய்தாலும், வலுவான பின்னணியில் வேலை செய்யும் அவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை.

அன்று கண்ணகி காலிலிருந்த மாணிக்கம் பல யுத்தங்களுக்கும், கொலைகளுக்கும் காரணமாயிருந்தது. இன்றும் பல விவசாயிகள் நிலத்தை இழக்கவும், பட்டை தீட்டும் பணியில் உயிரை இழக்கவும் காரணமாய் இருக்கிறது.

கொடுங்கலூரில் முடிவடையும் முல்லையின் பயணம் அவளுக்கு கண்ணகியைப் பற்றிய புரிதலை தருகிறது. “ஒவ்வொரு சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் நாகரீக சமூகத்தின் பெண்ணடிமைத்தனத்தையும் விதவைத் தன்மையையும் அறியாதவர்கள்.இவர்களை மரபு ரீதியிலான மதத்தையும், ஆணாதிக்கத்தையும் ஏற்றுக் கொள்ள வைக்க கண்ணகி கதையை பரப்பி இருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் கண்ணகியிடமிருந்து கற்றுக் கொண்டது வேறு…அவர்களுக்கு கண்ணகி அன்நீதிக்களுக்கு பழி வாங்கும் உக்கிர தேவதையின் வடிவம்.

கண்ணகி கற்று தந்த போராட்டத்தை தொடர் முல்லை முடிவு செய்கிறாள். எந்த மாணிக்கபரல்களுக்காக பாண்டியனை பழி வாங்கினாளோ, அதே போன்றொதொரு போராட்டத்தை நடத்தில் நமது தொழிலாளர்களையும், நமது மண்ணையும் காக்க வேண்டும் என்று முடிவெடுப்பதாக முடித்திருக்கிறார்.

பாட புத்தகத்தில் மட்டுமே அறிந்திருந்த சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டி இருக்கிறார். படிக்கும் போதே முல்லை மனதில் தோன்றிய கேள்விகள் எல்லாம் நம் மனதில் எழும் போது அதற்கான பதிலை தந்து நிறைவடைய செய்திருக்கிறார்…கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்….

Advertisements