அத்தியாயம் – 6

மனைவியின் கடுப்பான பதிலிலும் மனதில் ஓடிக் கொண்டிருந்த குழப்பத்தாலும் தலை பாரமாகிப் போனது. ஹாலில் சென்று அமர்ந்தவனுக்கு அங்கு விஜயும், சுஷ்மிதாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவளை எப்படியாவது தம்பியிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெற்றது.

மெல்ல எழுந்து அடுத்த அறைக்குச் சென்றவன் முகம் கழுவி, தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான். சிறிதுநேர யோசனைக்குப் பின்னர் மனம் தெளிவடைந்தது.

வேகமாக ஹாலிற்கு வந்தவன் “விஜய் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

சுமியுடன் பேசிக் கொண்டிருந்தவன் அண்ணனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்து “ஒ..பேசலாமே.சொல்லுங்க அண்ணா என்ன பேசணும்” என்று கேட்டான்.

அவன் முகத்தைப் பாராது “இங்க வேண்டாம் விஜய். கீழ போகலாம் வா” என்றான்.

சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவன் “அண்ணா இங்கே இருக்கிறது என்னோட மனைவியும், அண்ணியும். இவங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில் முக்கியமானவங்க. இவங்களுக்குத் தெரியாம நாம என்ன அப்படிப் பேசப் போறோம். இங்கேயே பேசலாம்” என்றான்.

அதைக் கேட்டு சற்றுக் கடுப்பானவன் “இதோ பார் விஜய்! எல்லா விஷயத்தையும் மனைவி கிட்ட சொல்லனும்னு அவசியம் கிடையாது. நமக்குன்னு பர்சனல் ஸ்பேஸ் வேணும். நீ கீழே வா” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான்.

அவன் கோபத்துடன் செல்வதைக் கண்ட விஜயும் பின்னோடு சென்றான். கீழே சென்று நின்ற பின்னரும் மனம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. தான் சொல்வதைக் கேட்டு சுஷ்மிதாவை தனது வாழ்க்கையில் இருந்து விலக்கி வைத்து விடுவானா? இல்லை தன்னிடம் கோபித்துக் கொள்வானா என்று புரியாமல் நின்றான்.

எதிரே தெரிந்த இருட்டை வெறித்துக் கொண்டிருந்தவனின் தோளில் லேசாகத் தட்டி “ என்னன்னா? இன்னைக்கு ரொம்ப டென்ஷனா இருக்கிற மாதிரி தெரியுது? என்ன விஷயம் சொல்லுங்க” என்றான்.

மெல்ல அவன் புறம் திரும்பி அவனைக் கூர்ந்து நோக்கியவன் “ நீ எத்தனை நாள் என்னோட ஆபிஸிற்கு வந்துருக்க விஜய்? ஒரு மூணு இல்ல நாலு தடவை இருக்குமா?” என்றான் கேள்வியாக.

அவன் எதைப் பற்றிப் பேசப் போகிறான் என்றுணர்ந்த விஜய் “வாங்க அந்தப் பக்கம் போய் உட்கார்ந்து பேசுவோம்” என்றழைத்து விட்டு நடந்தான். அவனோடு ஒன்றும் பேசாமல் கூடவே சென்றான் ராகவ்.

அங்கு இளைப்பாறுவதற்காகப் போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தவன் “என்ன கேட்டீங்க? மூணு, நாலு தடவையான்னு தானே? நாலு தடவை வந்திருக்கேன் உங்களைப் பார்க்க. ஆனா, முதல்முறை வரும் போதே சுமி என் மனசில் வந்துட்டா” என்று சொல்லியவன் விழிகள் அவனுக்குச் சுமி மேல் இருந்த காதலை வெளிப்படுத்தியது.

அதைக் கண்டு முகம் சுளித்து “ எப்போ நீ அவ கிட்ட உன்னோட காதலை சொன்ன?”

“அன்னைக்கே தான் ராகவ். உன்னைப் பார்த்திட்டு போன பிறகு. அவளை மிஸ் பண்ணிடுவோமொன்னு ஒரு பயம் வந்துது. அதனால் அன்னைக்குச் சாயங்காலமே அவளைப் பார்த்து ப்ரொபோஸ் பண்ணிட்டேன்”.

அவன்புறம் திரும்பியவன் “அவ அதுக்கு என்ன சொன்னா?”

“அவ மறுத்திட்டா. நீங்க யாரு என்னன்னு தெரியாது. திடீர்ன்னு வந்து காதலை சொன்னா நான் ஒத்துக்கனுமான்னு கேட்டா.”

“ஒ..”யோசனையாக “அப்புறம் எப்போ தான் உன்னோட காதலை ஏத்துகிட்டா?”

“அவ மறுத்ததும் அப்படியே விடாம, நான் அவளைக் காண்டக்ட்லேயே இருந்தேன். போன வாரம் தான் என்னை அவளே கூப்பிட்டு பேசினா. உங்க காதலை ஒத்துகிறேன் ஆனா ஒரு கண்டிஷன். கல்யாணம் உடனே நடந்தாகனும்னு சொன்னா” என்றான்.

அதைக் கேட்டதும் முஷ்டி இறுக “அவ சொன்னதைக் கேட்டு உடனே நீ என்ன ஏது என்று கேட்காம ஒத்துகிட்ட” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

அவனது கடுப்பான குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தவன் “பாவம் ராகவ். பெத்தவங்களும் இல்லை, சொந்தங்களும் யாருமில்லை அவளுக்கு” என்றான் வருத்தமான குரலில்.

சலிப்பான முகபாவத்தைக் காட்டி “இங்கே பார் விஜய்! அவளோட ஒரே ஆபிசில் வேலை பார்த்ததனால அவளைப் பத்தி எனக்கு உன்னை விட அதிகம் தெரியும்ன்னு நான் சொல்றதை நீ நம்புவேன்னு நினைக்கிறேன்” என்றான்.

பதிலேதும் சொல்லாமல் ராகவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கியபடியே “ அவளுக்கு ஆபிசில் நல்ல பேர் இல்லை விஜய்” என்றான்.

லேசாகப் புருவத்தை உயர்த்தி “ அப்படியா?” என்றான் இயல்பாக.

எந்தவித எதிர்ப்போ கோபமோ படாமல் மிகச் சாதரணமாக அவன் கேட்கவும் கடுப்பாகி போன ராகவ் “ யார் கூடவோ நெருங்கி பழகுறதா கேள்விப்பட்டேன்”.

நன்றாக ராகவின் பக்கம் திரும்பி அமர்ந்தவன் “அது யார்னு முதலில் சொல்லுங்க? அப்புறம் என் மனைவியை நான் சந்தேகப்படுறதா வேண்டாமான்னு யோசிக்கிறேன்” என்றான் நக்கலான குரலில்.

சற்று அதிர்ந்து போனவன் “ இங்கே பார் விஜய்! என்னால இவ்வளவு தான் சொல்ல முடியும். அவ நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ இல்லை. உன் வாழ்க்கையை நீ தேவையில்லாம கெடுத்துக்கிற” என்றான் ஆவேசமாக.

மெல்ல எழுந்து நின்று சோம்பல் முறித்து “ முடிச்சிட்டீங்களா? இப்போ சொல்றேன் கேட்டுகோங்க. அவ எப்படிப்பட்டவளா இருந்தாலும் என் மனைவி. அவளை இந்த மாதிரி பேச யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்றான் அழுத்தமாக.

“இல்ல..” என்றவனைத் தடுத்த விஜய் “ நேரமாச்சு வாங்க போகலாம். இதைப் பத்தி மேற்கொண்டு பேச நான் தயாரில்லை” என்று விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

தான் சொன்னால் காது கொடுத்து கேட்பான் என்கிற நம்பிக்கையில் பேசியவனுக்கு அவனது நடத்தை எரிச்சலை உண்டாக்கியது. இப்போ என்ன செய்வது? எப்படி அவளை விஜயின் வாழ்வில் இருந்து விரட்டுவது? எதைச் செய்தாலும் தனுவிற்குத் தெரியாமல் செய்ய வேண்டும். இப்போது நாம் பேசியதை விஜய் அவளிடத்தில் சொல்ல மாட்டான் என்றாலும் சுஷ்மியிடம் கண்டிப்பாகச் சொல்லுவான். “ச்சே”..போயும் போயும் அவளிடத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறோமே என்று எண்ணியவனுக்கு மனது கசந்து போனது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். அதுவும் அவன் மனது போல வெறுமையாக இருந்ததது. பார்வையைத் தழைத்தவனுக்குத் தங்களது எதிர் வீட்டு பாட்டி பால்கனியில் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எப்பொழுதும் அவரது பார்வையில் இருக்கும் கனிவு மறைந்து போய் இகழ்ச்சியாகப் பார்ப்பது போல் தோன்றியது.

தலையை வேகமாக உலுக்கி எதைப் பார்த்தாலும் நமக்கு அப்படித் தோன்றுகிறது. இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது? சுஷ்மியிடம் சற்று நிதானத்துடன் நடந்திருக்க வேண்டுமோ? அவசரப்பட்டு விட்டோமோ? என்று பல்வேறு கோணங்களில் யோசித்துக் கொண்டே நின்றான். சிறிது நேரம் நின்றிருந்தவனுக்குக் கால் வலிக்கச் சரி எதுவாக இருந்தாலும் அவளிடம் மீண்டுமொரு முறை பேசிப் பார்ப்போம் என்று எண்ணியபடியே வீட்டையடைந்தான்.

அங்கே விஜய் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கத் தன்யாவும், சுஷ்மிதாவும் சமையலறையில் வேலையாய் இருந்தனர். என்னவோ ஓட்டிப் பிறந்த ரெட்டையர்கள் போல அவள் இவளை சுமி என்றழைப்பதும், இவள் அவளை அக்கா என்றழைப்பதும் ஒரே குலாவலாக இருந்தது. அதைக் கேட்ட பொழுது அடங்கிக் கிடந்த கோபம் மீண்டும் மேலெழுந்தது.

“தனு! சாப்பாடு ரெடியா?” என்றான் கடுப்பாக.

புடவையில் கையைத் துடைத்தபடியே வந்தவள் “ வந்துட்டீங்களா? ஒரு பத்துநிமிஷம் இருங்க. சுமி ஏதோ புது டிஷ் பண்றேனா. ரெடியானதும் சப்பிட்டிடலாம்”.

தம்பியின் மறுப்பு, சுஷ்மிதாவின் நக்கலான பேச்சு எல்லாம் சேர்ந்து கொள்ள “கண்டவ சமைக்கிறது எல்லாம் என்னால சாப்பிட முடியாது. உன்னால முடிஞ்சா பண்ணி கொடு” என்றான் ஆங்காரமாக.

அதைக் கேட்டதும் கொஞ்சமும் அசராமல் விஜயிடம் திரும்பி “ அந்தக் கதவை கொஞ்சம் சாத்துரீங்களா விஜய்” என்றாள்.

கதவு சாத்தப்படும் வரை பேசாமல் இருந்தவள் “ உங்களுக்கு என்ன பிரச்சனை? இன்னைக்கு என்னவோ புதுசா அடிக்கடி தலைவலி வருது. தம்பி பொண்டாட்டின்னு தெரிஞ்சும் கன்னாபின்னான்னு பேசுறீங்க? என்ன ஆச்சு?”.

மனைவியின் பேச்சை கேட்டதும் தன்னை மறந்து உளறி இருப்பதை உணர்ந்து விழித்தான். இப்போ என்ன சொல்லி இதைச் சமாளிப்பது என்று புரியவில்லை. விஜயோ கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான். சுஷ்மிதா சமையலறையில் இருந்து நக்கலாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். இதென்ன இப்படி எக்குதப்பாக மாட்டிக் கொண்டேனே என்று மனதிற்குள் புலம்பத் தொடங்கினான்.

“அது ஒண்ணுமில்ல. ஆபிசில் கொஞ்சம் பிரச்சனை” என்று மெலிதாக முனங்கி கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

அவனை ஒரு மார்கமாகப் பார்த்துக் கொண்டு நகர்ந்த தன்யா “ சுமி! செஞ்ச வரை போதும். மீதியை நான் பார்த்துக்கிறேன். நீ போய்க் குளிச்சிட்டுப் புதுப் புடவையைக் கட்டு. சாப்பிட்டு முடிச்சதும் நானே வந்து அலங்காரம் பண்ணி விடுறேன்” என்று சொல்லி மேலும் அவன் மனதில் எரிந்து கொண்டிருந்த கனலில் பெட்ரோலை ஊற்றினாள்.

அதற்கு மேலும் போருக்க முடியாமல் போக “ எனக்குச் சாப்பாடு வேண்டாம்” என்று ஆத்திரமாகச் சொல்லிவிட்டு அடுத்த அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

இப்படி அவன் கோபப்படும் நேரங்களில் எப்பொழுதும் தன்யா அவனைக் கொஞ்சி, கெஞ்சி உணவை தராமல் இருக்க மாட்டாள். ஆனால், இன்றோ அவனிருந்த அறை பக்கம் எட்டியும் பார்க்காமல் இருந்தாள். கட்டிலில் படுத்திருந்தவனின் மனம் வெளியில் கேட்டுக் கொண்டிருந்த பேச்சு சத்ததிலேயே சுழன்றது. மெல்ல அவனுக்கு ஒன்று உரைத்தது. தான் மட்டும் இன்று வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை. தன்யாவும் ஏனோ தன்னைத் தவிர்க்கிறாள் என்று புரிந்தது.அவர்கள் அனைவரும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிடுவது கேட்டது. அவனால் நம்ப முடியவில்லை. தன்யா ஒருநாளும் அவனை இப்படிப் பசியுடன் இருக்க விட மாட்டாள். என்ன ஆயிற்று அவளுக்கு. விஜயின் காதலுக்காகத் தன்னிடம் முறைக்கிராளா? அவனால் நம்ப முடியவில்லை.

சிறிதுநேரம் வெளியே அமைதியாக இருந்தது. பக்கத்து அறையில் கிசுகிசுப்பாகப் பேசிக் கொள்வதும், மெல்லிய குரலில் சிரிப்பதுமாகச் சத்தம் கேட்டது. அரைமணி நேரம் கடந்த நிலையில் தன்யா உள்ளே வந்தாள். கண்களை மூடி உறங்குபவன் போல் படுத்துக் கொண்டான். ஆனால், அவளோ அவன் பக்கம் திரும்பாது ரிஷியை மட்டும் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் சென்றதும் மெல்ல எழுந்தவன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். ஹாலில் விளக்குகள் அணைக்கப்படிருக்க, அடுத்த அறையில் மட்டும் விளக்குகள் எரிந்தது. பசியில் வயிறு ஓவென்று கத்த, டைனிங்கில் இருந்த தண்ணீரை ரெண்டு மூன்று டம்பளர் பருகினான். அவனது கண்களோ பக்கத்து அறையையே நோட்டம் விட்டது. அப்போது கதவு திறக்க வேகமாக் வெளியில் வந்த சுஷ்மிதா ராகவை பார்த்ததும் ஒருநிமிடம் தயங்கி நின்றவள், பின் வேகமாகச் சமையலறைக்குள் சென்றாள்.

விஜய் வருகிறானா என்று என்று பார்த்தவிட்டு அவசரமாகச் சமையலறைக்குள் நுழைந்தவன் சுஷ்மிதாவின் கையைப் பிடித்து முறுக்கியவன் “ ஏய்! ஒழுங்கு மரியாதையா ஏதாவது டிராமா பண்ணி என் தம்பியை விட்டு ஓடி போயிடு. இல்லேன்னா நடக்கிறதே வேற” என்று மிரட்டினான்.

அவனது மிரட்டலை கண்டு அசராது “ போகலேன்னா என்ன பண்ணுவீங்க?” என்றாள் நக்கலாக.

முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு “உனக்கு வெட்கமா இல்லை. என் கூட” என்றவன் “சை” என்று கையை உதறினான்.

கிண்டலாகச் சிரித்து “உன் கூட..உன் கூட..ம்ம்..கம்ப்ளிட் தி சென்டன்ஸ் ராகவ். உங்க தம்பின்னா ஒன்னு அடுத்தவன்னா ஒன்னு இல்ல. உடம்பெல்லாம் பத்தி எரியிற மாதிரி இருக்கில்ல” என்றாள்.

அவளது பேச்சில் கோபம் பொங்கி எழ பாய்ந்து அவளது கழுத்தைப் பிடித்தான். அந்தநேரம் ரிஷியைத் தூக்கிக் கொண்டு அங்கே வந்த தன்யா இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் சுஷ்மிதாவை பார்த்து “சுமி! ரிஷியை வச்சுக்கோ. பால் கலக்கணும்” என்றாள் எதுவுமே நடக்காத தொனியில்.

தன்யாவை பார்த்ததும் பதறிப் போன ராகவ் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போய் நின்றான். அவன் ஒருவன் அங்கிருப்பதைக் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டவன் “அது வந்து தனு..நா..நா..ன்”என்று ஆரம்பித்தவனைத் திரும்பி அனல் பார்வை பார்த்தாள். அதைக் கண்டு வாயை மூடிக் கொண்டான்.

“போய் ஹாலில் உட்காருங்க பேசணும்” என்றாள் அழுத்தமாக.

அவளது குரலில் தெரிந்த கடுமையில் ஒன்றும் பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்தான். பாலை கலந்து ரிஷியை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றவள் பத்துநிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தாள்.

சுஷ்மிதாவை பார்த்து “விஜயை கூட்டிட்டு வா” என்றாள்.

தன்யாவின் நடவடிக்கையில் குழம்பி போய் இருந்த சுஷ்மி, விஜயை அழைத்து வந்தாள்.

வரும்போதே அண்ணியின் கடுமையான முகமும், அண்ணனின் பயம் கலந்த பார்வையையும் கண்டவன் சுமியிடம் என்னவென்று பார்வையாலேயே கேட்டான். அவளோ அவனைக் கவனியாதவள் போலச் சென்று ஓரமாக நின்று கொண்டாள்.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் “என்ன பேசணும் அண்ணி? எதுக்கு வர சொன்னீங்க?” என்று கேட்டான்.

மௌனமாக அவனை ஒரு பார்வை பார்த்தவள் “ உங்களுக்கும் சுமிக்கும் என்ன உறவு?” என்றாள்.

அவளது கேள்வியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவன் “என்ன..அண்ணி திடீர்ன்னு இப்படி ஒரு கேள்வி?”

“கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க” என்றாள் கடுமையாக.

சுமியை திரும்பி பார்த்துவிட்டு “ என் மனைவி” என்றான்.

இவர்களின் பேச்சு போகும் திசையை உணர்ந்து இடைப் புகுந்த ராகவ் “ தனு! எதுவா இருந்தாலும் நாம பேசிக்கலாம் வா” என்று எழுந்தான்.

அவனை எரித்து விடுபவள் போல் பார்த்து “ எதுவா இருந்தாலும் இங்கே தான் பேசணும்” என்றாள் ஆத்திரமாக.

அவளது கோபத்தின் தன்மையை உணராது அவளருகில் சென்றவன் “ நீ தப்பா புரிஞ்சுகிட்ட தனு..” என்று ஆரம்பித்தவனைக் கையைத் தூக்கி தடுத்து நிறுத்தியவள் “ இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி நடிச்சு ஏமாத்த போற” என்றாள் ஆங்காரமாக.

அதுவரை ஏதோ சாதாரணப் பேச்சு என்று அமர்ந்திருந்த விஜய்-க்கு தன்யாவின் கேள்வி அதிர்ச்சியைக் கொடுக்க “அண்ணி!” என்று கத்தினான். சுமியோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள்.

ராகவிற்குக் கை காலெல்லாம் நடுங்க தன்யாவை பார்த்துக் கொண்டே நின்றான்.

கண்களில் கனல் தெறிக்க அசுரனை அழித்த தேவியைப் போன்று கோபாவேசத்துடன் நின்றிருந்தாள் தன்யா.

விஜயை பார்த்து “ அண்ணனை காப்பாத்த நடிக்கிறீங்களா விஜய்?” என்றாள் நக்கலாக.

அவளது கோபம் கண்டு பேச இயலாமல் “இல்ல..அண்ணி..அது..” என்று தழுதழுத்தான்.

அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்ட ராகவ் “ தனு! தனு! நீ எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுற. விஜய் இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவசரபட்டுடான்” என்றான் சாதரணமாக.

எரிக்கும் பார்வையுடனே “அவசரப்பட்டது விஜய் இல்ல. நான் தான்! உன்னை மாதிரி ஒருத்தன உருகி உருகி காதலிச்சனே அதுதான் தவறு” என்றாள் கரகரக்கும் குரலுடன்.

அவள் கையைப் பிடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் அருகில் சென்றவன் “ இல்ல தனும்மா! நீ ஏன் இப்படிப் பேசுற” என்றவனைப் பார்த்து “பேசாதே! போதும் நீ பேசி ஏமாத்தியது எல்லாம் போதும்!” என்று கத்தினாள்.

அவளின் ஆத்திரம் கண்டு அந்த இடத்திலேயே அப்படியே உறைந்து நின்றான்.

அதுவரை பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்தவள் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து “ ஏண்டா உனக்கெல்லாம் பெண்களோட வாழ்க்கை அவ்வளவு ஈஸியா போச்சில்ல. உனக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு சுரணை எல்லாம் கிடையவே கிடையாதா? போயும் போயும் உன்னைப் போய்க் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்டேனே” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

விஜயும், சுமியும் அதிர்ந்து போய் நின்றனர்.

“ எனக்குத் துரோகம் செய்ய எப்படி உனக்கு மனசு வந்துது? அப்போ என்னைக் காதலிச்சது எல்லாமே பொய்யா?” என்று சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டவன் “ இல்ல தனு! நீ என்னோட உயிர். நான் உன்னைக் காதலிச்சது உண்மை. ஒரு சபலத்தில் தப்புப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று கெஞ்சினான்.

அவன் முகத்தைப் பார்த்தவள் “தூ” என்று காறி உமிழ்து “சலனம், தடுமாற்றம், சபலம் எல்லாம் எப்பவோ ஒரு தடவை தப்புப் பண்றவங்களுக்கு. ஆனா, நீ ஒரு கிரிமினல். ஆதரவு இல்லாத பெண்ணை வளைச்சு அவளைக் கார்னர் பண்ணி உனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டு இருக்க” என்றாள் வெறுப்பு.

அவளது பேச்சை மறுத்தவன் “இல்ல தனு! அது அப்படியில்லை. நீ குழந்தை பிறந்ததும் என்னை விட்டு விலகிப் போயிட்டே. அப்போ அந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு உன்னோட துணை தேவையாயிருந்தது. அதனால தான் தடுமாறிட்டேன்” என்றான் கெஞ்சலுடன்.

“ இப்படிச் சொல்ல வெட்கமாயில்ல உனக்கு! நீயெல்லாம் மனுஷனே இல்லை. எத்தனை பொய். நானென்ன முட்டாளா? உனக்குக் கல்யாணம் ஆனது தெரிஞ்சு அவள் விலக ஆரம்பிச்சதும் ஒருவாரம் டைம் குடுத்து மிரட்டி இருக்கே. நீ தடுமாறிட்டியா?”

அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த விஜயும், சுமியும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள். சுமியின் வாழ்வில் நடந்த ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைத்துக் கொண்டிருந்தாள் தன்யா.

“அண்ணி!” என்றவனைப் பார்த்த தன்யா “ என்ன பார்க்கிறீங்க விஜய்? இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா?”

“….”

“காதலிக்கும் போதும் சரி..கல்யாணம் ஆன பிறகும் சரி. இவர் மேல கண் மூடித்தனமான அன்பு வச்சிருந்தேன். எது சொன்னாலும் நம்பினேன் தான். ஆனா, என் கண்ணைத் திறந்தவங்க எதிர் வீட்டு பாட்டி தான். அவங்க தான் ஒருநாள் என்கிட்ட வந்து பேசினாங்க. அவங்க கண்ணில் ரெண்டு மூணு தடவை இவங்க ரெண்டு பேரும் பட்டிருக்காங்க. என்கிட்ட வந்து சொன்னப்ப நான் நம்பல. குற்றமுள்ளவனுக்கு என்னைக்கும் ஒருவித பதட்டம் இருக்கும் அது இவரை எனக்குக் காண்பிச்சு கொடுத்துது. அப்படித் தான் நான் போய் இவருக்குத் தெரியாமல் ஆபிசில் விசாரிக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் சுஷ்மிதாவுடன் இவர் போனதை என் கண்ணாலையே பார்த்தேன். முதலில் என்ன சொல்றது அதிர்ச்சி. என்னைத் தன்னோட உயிர் என்று சொன்ன ஒருவரால் எப்படி ஒரு துரோகம் பண்ண முடியுதுன்னு யோசிக்கவே முடியல. ரொம்பவே உடைஞ்சு போயிட்டேன். அப்பவும் எனக்குத் தைரியத்தையும், ஆதரவையும் கொடுத்தது அந்தப் பாட்டி தான். அதன் பிறகு தான் சுஷ்மிதாவை பற்றி விசாரித்து அவள் இருக்கும் இடத்தைத் தெரிஞ்சுகிட்டேன்” என்றவளை இடைமறித்தான் ராகவ்.

“நிறுத்து தனு! உன்னை எல்லோருமா சேர்ந்து தப்பான வழியில் யோசிக்க வச்சிருக்காங்க. நான் உன்னைக் காதலிச்சது உண்மை.இந்த நிமிஷம் வரை அந்தக் காதல் அப்படியே தான் இருக்கு” என்றான் ஆத்திரமாக.

“காதல்! தயவு செஞ்சு உன் வாயால அந்த வார்த்தையைச் சொல்லி அதனோட புனிதத்தைக் கெடுத்துடாத. உனக்கெல்லாம் அதுக்குத் தகுதியே இல்லை. உன்னை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பெண்ணோட மனசு தேவையில்ல. நீ எல்லாம் மிருகமா பிறந்திருக்க வேண்டியது. தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத கேவலமான பிறவி” என்றாள் வெறுப்புடன்.

“ஏய்” என்று கையை உயர்த்தியவனைக் கண்டு கேவலமான பார்வையைப் பரிசாகத் தந்தாள்.

“வலிக்குது இல்ல….நெஞ்செல்லாம் பத்தி எரியுது இல்ல. நீ தொட்ட பெண்ணைத் தம்பி கட்டிக்கிட்டு வந்துட்டான்னு சொன்னதும் எவ்வளவு தவிப்பு? இதே யாரோ பெத்த பெண்ணை உபயோகப்படுத்திகிட்டு எச்சில் இலையா தூக்கி எரியும் போது சுகமா இருந்ததே”.

“இங்கே பார் தனு! நான் சொல்றதைக் கேளு! நான் பண்ணினது தப்பு தான்! இனி, இந்த மாதிரி ஒரு தப்பை பண்ண மாட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு. உன் மனசு என்னை எத்துக்கலேன்னாலும் ரிஷிக்காக என்னை ஏத்துக்கக் கூடாதா? அவனுக்கு அப்பான்ற உறவு கண்டிப்பா வேணும். அதுக்காகவாவது நீ என் கூட வாழ்ந்தாகணும்” என்று கெஞ்சலாக ஆரம்பித்து மிரட்டலாக முடித்தான்.

அதுவரை அடங்கி இருந்த கோபம் சீறிக் கொண்டு எழ “ என்ன சொன்ன? ரிஷிக்கு அப்பான்ற உறவு வேணுமா? அப்பான்ற உறவு எப்படிப்பட்டது தெரியுமா? பிள்ளைக்கு ரோல் மாடலா இருக்கணும். உன்னை மாதிரி பொறுக்கியா இருக்கக் கூடாது. அப்புறம் என்ன மன்னிக்கனுமா? இத்தனை காலமா மன்னிச்சு தான் இன்னைக்குப் பெண்களோட நிலைமை இப்படி இருக்கு. நாங்க உடலால பலவீனமானவங்க தான். அதைப் பயன்படுத்தி எத்தனை விதத்துல எங்களைச் சித்ரவதை பண்ணுவீங்க? உங்களுக்கு எங்க மேல காதல் வந்தா நாங்க காதலை ஒத்துக்கணும் இல்லேன்னா வாயிலேயே வெட்டுவீங்க? உங்களுக்கு வெறி வந்தா பத்து மாச குழந்தையாய் இருந்தாலும் சரி அம்பத்தஞ்சு வயசு பாட்டியை இருந்தாலும் சரி கற்பழிச்சு கொல்லுவீங்க. ஏண்டா உன்னை மாதிரி ஆளுங்களுக்கும் அவனுங்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு? அன்பான அம்மா, அப்பா, தம்பி, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிகிட்ட மனைவி என்று இருக்கும் போதே இப்படி நடந்துக்கிற? உன்னை விட நாலு வயசு சின்னவன் உன் தம்பி. நீ பிறந்த அதே வயிற்றில் தானே பிறந்துருக்கான். அவனுக்குள்ள பண்பு உன்கிட்ட இல்லாம எப்படிப் போச்சு?

தலையை வேகமாக ஆட்டியவள் “இனி, என் வாழ்க்கையில் உனக்கு இடமில்லை.” என்றவள் சுமியிடம் திரும்பி “உனக்கு விஜய் வேற வேலை வாங்கித் தந்திருக்காங்கன்னு கேள்வி பட்டேன். இனியாவது போற இடத்தில் இது மாதிரி பிணம் தின்னி கழுகுகளிடம் சிக்காமல் ஜாக்கிரதையா இரு. நம்மைச் சுற்றி நம்ம ரத்தத்தையும், சதையையும் தின்ன ஓநாய்களும், வெறி நாய்களும் சுத்திகிட்டு இருக்கு. நம்மை நாம தான் பாதுகாத்துக்கணும். இந்தச் சம்பவத்தை ஒரு விபத்தை நினைச்சு கடந்து போயிடு” என்றாள் ஆதரவாக.

அதுவரை அரக்கனை வதம் செய்யும் காளியாக மாறி பேசிக் கொண்டிருத்த தன்யாவை பார்த்த விஜய் மெல்ல “ அண்ணி! உங்க முடிவு?” என்று கேட்டான்.

அவனைக் கூர்ந்து நோக்கியவள் “நான் தான் சொல்லிட்டேனே விஜய்!” என்றவள் தன் கழுத்தில் அணிந்திருந்த தாலியைக் கழட்டி பக்கத்திலிருந்த டீபாயில் வைத்துவிட்டு அறைக்குச் செல்லப் போனாள்.

அதைப் பார்த்து பதறிய ராகவ் “ தனு! என்ன செய்யிற? தாலியை ஏன் கழட்டின? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? என் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுட்டேனே. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு தனு” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

அவன் தன் கையைத் தொட்டதுமே உதறியவள் “ தாலி புனிதமான உறவுக்கு அடையாளம். உன்னை மாதிரி பெண் பித்தன் கட்டுகிற தாலிக்கு எல்லாம் மரியாதையே கிடையாது. போ! போய் இனி, உன் இஷ்டம் போலச் சுத்து! உனக்கும் எனக்குமான உறவு முடிஞ்சுது. எந்தக் காலத்திலேயும் உன்னை என்னால மன்னிக்க முடியாது” என்றவள் அறைக்குள் சென்று படாரென்று கதவை அடித்துச் சாத்தினாள்.

விஜயும், சுஷ்மிதாவும் ராகவை பார்த்துக் கொண்டே நின்றனர். தன்யா கதவை சாத்தியதும் சுஷ்மிதாவை பார்த்து கையை ஓங்கிக் கொண்டு சென்றான். “ எல்லாம் உன்னால தாண்டி. உனக்குப் பிடிக்கலேன்னா ஒதுங்கிப் போயிருக்க வேண்டியது தானே. இப்படி என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிட்டியே”.

அவனது கையை வளைத்துப் பிடித்த விஜய் “ இப்பவும் நீ திருந்தலையா ராகவ். எவ்வளவு அற்புதமான வாழ்க்கை உனக்குக் கிடைச்சது. உன்னோட அசிங்கமான நடத்தையால எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறியே. உனக்குள்ள இவ்வளவு மோசமான குணம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று புலம்பினான்.

அவனை உதறி தள்ளியவன் தனது கார் கீயை எடுத்துக் கொண்டு கதவருகே சென்று “ நீ எல்லாம் என்னைப் பேசுகிற நிலைமை வந்துடுச்சே. பேசுடா பேசு! ஆனா, என் தனு இன்னைக்கு வேணா என் மேல கோபமா இருக்கலாம். கண்டிப்பா அவ என்னை மன்னிசிடுவா” என்று சொல்லி வெளியே சென்றான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த விஜய் பெருமூச்சுடன் சோபாவில் கண் மூடி அமர்ந்தான். சுமியும் அப்படியே சுவற்றோரம் சாய்ந்தமர்ந்தாள்.

வீட்டிலிருந்த ஒவ்வொருவரின் எண்ணங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. விஜய்-க்கு எப்படி அண்ணனின் வாழ்க்கையில் நடந்திருக்கும் சம்பவங்களை அம்மாவிடம் சொல்லப் போகிறோம் என்று குழம்பியபடியே அமர்ந்திருந்தான். தனுவோ தாய், தந்தையரின் விருப்பத்திற்கெதிராகக் காதலித்து மணந்து கொண்ட ஒருவர் இன்று பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்று விட்டான் என்கிற விஷயத்தைச் சொல்லுபோது என்னவிதமாக உணர்வார்கள் என்று பயந்தாள்.

காரை எடுத்துக் கொண்டு சென்றவன் மனமோ எப்படித் தனுவை சமாதானப்படுத்துவது என்று யோசித்தது. தனு இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பது மட்டும் அவன் மனதில் உறுதியாகத் தெரிந்தது. இந்தச் சிக்கலை எப்படித் தவிர்ப்பது என்று புரியாமல், எங்குச் செல்கிறோம் என்று அறியாமல் சென்று கொண்டிருந்தான். டைடெல் பார்க் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த கார் பாலத்தினடியில் சென்றது. அப்போது பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்தது.

என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே காரின் முன் பகுதியில் முழு வேகத்துடன் விழுந்த பாலத்தின் பகுதியானது, காரின் மேல் பகுதியை உடைத்துக் கொண்டு ராகவின் இடுப்புப் பகுதியில் அழுத்திக் கொண்டு விழுந்தது.

உயிர் போகும் வலி. நினைவு தப்பிப் போகவில்லை. ஆனால், உடலில் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் கத்தி கதற ஆரம்பித்தான். அங்கு இரவு பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர்கள் ஓடி வந்து உதவ முயற்ச்சித்தனர். அதற்குள் அவன் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டான். நடந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்திப் பாலத்தை அகற்றி அவனை வெளியே கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அவனது மொபைலில் இருந்து விஜய்-க்கு அழைத்து விஷயத்தைக் கூறனர்.

வந்த செய்தியைக் கேட்ட விஜய் அலறியடித்துக் கொண்டு தனுவின் அறைக் கதவை தட்டி கூறினான். அவளோ சலனமே இல்லாத முகத்துடன் கேட்டுக் கொண்டவள் எதுவுமே சொல்லாமல் அவனுடன் கிளம்பினாள். மூவரும் கிளம்பி ஆஸ்பத்திரி வந்தனர். அதற்குள் அவனுக்குத் தீவீர சிக்கிச்சை பிரிவில் சிக்கிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

கல் போன்ற இறுகிய தோற்றத்துடனே அமர்ந்திருந்தாள். விஜயும், சுமியும் அவள் அருகில் செல்ல பயந்து கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

விடிந்ததும் அம்மாவுக்கும், அப்பாவிற்கும் விஷயத்தை எடுத்து சொல்லி வரவழைத்தான். ராகவின் தாய் கூட லேசாகக் கண்கள் கலங்க தன்யாவின் தோளை அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

மதியம் வரை அவன் கண் விழிக்காததால் எல்லோரும் அங்கேயே காத்திருந்தனர். மாலை தான் டாக்டர் வந்து பார்த்துவிட்டு அவன் கண் விழித்து விட்டதாகவும் போய்ப் பார்க்கலாம் என்று கூறி விட்டு சென்றார்.

ராகவின் தாய் தன்யாவிடம் “ நீ போய்ப் பாரும்மா” என்றார்.

அவரை உணர்வற்ற பார்வையைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். இடுப்பு பகுதி முழுவதும் சிதைந்திருக்க, வலியுடன் கூடிய முகத்துடன் கண்களைத் திறந்து தன்யாவை பார்த்தான்.

அவளோ வெற்றுப் பார்வையுடன் அவனைப் பார்த்தவள் “உனக்காக என் கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழாது. பெண்ணோட கண்ணீர் விலை மதிப்பில்லாதது. அதைத் தகுதியானவங்களுக்காகத் தான் சிந்தனுமே தவிர உன்னை மாதிரி ஈனப் பிறவிக்காக இல்லை” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று வெளியே சென்றாள்.

அவள் வெளியே வந்ததும் விஜயும், பெற்றவர்களும் உள்ளே சென்றனர். ஏற்கனவே தன்யா பேசிவிட்டு சென்ற அதிர்ச்சியில் இருந்தவன் தாயைப் பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைக்க அடிப்பட்டிருந்த கையை உயர்த்தி “அம்மா! என்னால முடியலம்மா” என்று கண்ணீர் சிந்தினான்.

ஆனா, அவரோ அவனது அருகில் செல்லாமலே “ நியாயப்படி நானே உன்னை விஷம் வச்சு கொன்னுருக்கணும். ஆனா, அதுக்கு வேலையில்லாம அந்தக் கடவுளே உன்னைத் தண்டிச்சிட்டான்” என்றார் கடுமையாக.

அவரது பேச்சைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் “அம்மா! உங்களுக்கு..எப்படி?”

அவனைத் துயரமான கண்களுடன் நோக்கியவர் “ தெரியும் விஜய்! நீ அப்பாவிடம் சொல்லிட்டு இருந்ததைக் கேட்டேன். இந்தக் கேடுகெட்டவனைப் பத்தி நீ சொல்லிக்கிட்டு இருந்ததை எல்லாத்தையும் கேட்டேன்” என்றார் கலங்கிய குரலுடன்.

அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராகவோ “அப்பா! நீங்களாவது சொல்லுங்கப்பா. என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கப்பா” என்று கதறினான்.

அவரோ அவன்புறம் திரும்பாது விஜயை பார்த்து “ சிகிச்சை நடக்கிற வரை பணத்தைக் கட்டி கடமையை முடிச்சிடு விஜய். டிஸ்சார்ஜ் ஆனதும் கொண்டு வீட்டில் விட்டுட்டு வந்துடு. அதோட இவனுக்கும் நமக்குமான உறவு முடிஞ்சுது. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரே மகன் தான்” என்று சொல்லி ராகவின் தலையில் இடியை இறக்கி சென்றார்.

தன்னுடைய தவறான நடத்தையால் அழகான குடும்பத்தை இழந்து, சுற்றி உள்ள உறவுகளை எல்லாம் இழந்து தனி மரமாக நாலு சுவற்றுக்குள் ஒவ்வொரு வேலைக்கும் அடுத்தவரை நம்பி வாழப் போகும் வாழக்கையை எண்ணி பயந்தான்….

                                                    ஒழுக்கம் உடமை குடிமை இழக்கம்

                                                       இழிந்த பிறப்பாய் விடும்

Advertisements