அத்தியாயம் – 5

அவனது முகத்தை ஆராய்ந்தபடியே வந்த சுஷ்மிதா அதில் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டு உள்ளம் குளிர்ந்து போனாள்.

அவள் கையைப் பிடித்துத் தன்னருகே இழுத்த விஜய் “வா சுமி! அண்ணனை உனக்கு அறிமுகப்படுத்தனும்னு அவசியமில்லை. உங்க ரெண்டு பேருக்கும் தான் ஏற்கனவே பழக்கமிருக்கே” என்றான் இயல்பாக.

அதுவரை அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த ராகவ் தம்பியின் வார்த்தையில் சூடு பட்டது போல் நிமிர்ந்தவன் “டேய்! சொல்றதை ஒழுங்கா சொல்லு” என்றான் படபடப்புடன்.

“ஒரே ஆபிஸ்ல வேலை பார்த்ததைத் தான் சொன்னேன்” என்றான் நக்கல் கூடிய குரலில்.

அதைக் கவனிக்கும் மனநிலை இல்லை ராகவிற்கு. எப்படிச் சுஷ்மிதாவை தம்பியின் வாழ்க்கையில் இருந்து விலக்குவது என்ற எண்ணமே மூளையைக் குடைந்தது. ஒருவேளை இவர்கள் பொய் சொல்லுகிறார்களோ? என்றும் யோசித்தான். சுஷ்மிதா நடிக்கக் கூடும் ஆனால் விஜய் இப்படி இயல்பாக இருக்க மாட்டானே? அவனுக்கு உண்மை தெரிந்திருந்தால் என்னை அடிக்கவும் தயங்க மாட்டான். அதனால் இது உண்மை கல்யாணமாகத் தான் இருக்கக் கூடும் என்று எண்ணினான். தன்னுடய சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள “கல்யாணத்தை எந்தக் கோவிலில் பண்ணிகிட்டீங்க?” என்றான் எதார்த்தமாக.

“கோவில் இல்லண்ணா. ரெஜிஸ்டர் ஆபிஸ்ல தான் நடந்தது. என்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் வந்து சாட்சி கையெழுத்து போட்டாங்க. அவளுக்கு அவ பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் கையெழுத்துப் போட்டாங்க”.

திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணிவிட்டான் என்றதும், மேலும் மனம் சுணங்கியது. அதுவரை சுஷ்மிதாவின் பக்கம் திரும்பாதவன் “ உன் பிரெண்ட்ஸ் யார்? நம்ம ஆபிஸ்ல உள்ளவங்களா?” என்று கேட்டான்.

“ இல்ல ராகவ்! இவங்க வேற” என்றாள்.

அவள் ராகவ் என்றழைத்ததும் “சுமி! இனி, ராகவ்ன்னு கூப்பிடாதே. அம்மா கேட்டால் கோவப்படுவாங்க. மாமான்னு கூப்பிடு” என்றான் விஜய்.

அப்போது அங்கே வந்த தன்யா “ ஆமாம் சுமி! மாமான்னு சொல்லு” என்றாள்.

அவர்களின் பேச்சில் எரிச்சலடைந்தவன் “தனு! தலைவலிக்குது காபி எடுத்திட்டு வரியா?” என்றான்.

அதற்குள் விஜய்க்கு ஆபிசிலிருந்து போன் வர அவன் பேசிக் கொண்டே அங்கிருந்து வெளியே சென்றான். காபி போட சென்ற தனுவை ரிஷியின் அழுகை தடுக்க, “சுமி! நீ கொஞ்சம் போட்டுக் கொடுத்திடேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

தான் செய்த ஒரு தவறு தன் வாழ்க்கையையும், தம்பியின் வாழ்க்கையையும் பந்தாடுகிறது என்று நினைத்து ஆயாசமாகக் கண்மூடி சோபாவில் அமர்ந்திருந்தான்.

காபியுடன் அவனருகில் வந்த சுஷ்மிதா மிகக் குழைவான குரலில் “மாமா! மாமா! காப்பி” என்றாள்.

அவளது அழைப்பில் உடலெங்கும் நெருப்பை வாரி கொட்டியது போல உணர்ந்தவன், உக்கிரமாக முறைத்து “பல்லை பேத்துடுவேன்! என்ன திமிரா?” என்றான் ஆங்காரமாக.

அவளோ கொஞ்சமும் அசராமல் “ நீங்க என் கணவரோட அண்ணன். உங்களை மாமான்னு கூப்பிடாம வேற எப்படிக் கூப்பிட?” என்று கிண்டலாகக் கேட்டவள் சற்று யோசித்து “ ஒருவேளை நீங்க நான் ஆசையா கூப்பிடுறேன்னு நினைச்சிட்டீங்களோ?” என்றாள்.

அவளுடைய பேச்சில மேலும் கோபமடைந்தவன் “ ஒழுங்கு மரியாதையா என் தம்பி வாழ்க்கையை விட்டு ஓடி போயிடு” என்றான் மிரட்டலாக.

“ஏன் மாமா! உங்களுக்கு ப்ரீ-பெய்ட்டாக இருக்கிறதை விட உங்க தம்பிக்குப் போஸ்ட்- பெய்ட்டாக இருக்கிறது பெட்டெர் இல்லையா?”

அதைக் கேட்டவனது உள்ளம் கொதிக்க “ஏய்” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்.

அதைக் கண்டவள் “கூல் மாமா! கூல்! இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கே. நீங்க வேற ஹெல்த் கான்சியஸ். இதுக்கே டென்ஷன் ஆனா உங்க ஹெல்த் வீணா போய்டும் மாமா” என்றாள் நக்கலாக.

அவளது பேச்சில் காயமடைந்தவன் மேலும் எதுவும் பேசும் முன் அங்கே வந்த தனுவைப் பார்த்ததும் வாயை மூடிக் கொண்டான்.

ரிஷியை தூக்கிக் கொண்டு வந்த தன்யா அவனைச் சுமியிடம் கொடுத்துவிட்டு ராகவின் அருகில் சென்றவள் “என்னங்க தலைவலி போச்சா? மாத்திரை எதுவும் வேணுமா?” என்றாள் கரிசனமாக.

அதுவரை இருந்த எரிச்சல் எல்லாம் மறைய அவளது அன்பான வார்த்தை மனதை சாந்தப்படுத்த “வேண்டாம் தனு. எனக்கு முக்கியமான வேலையிருக்கு நான் கிளம்புறேன்” என்று கிளம்பினான்.

அந்தநேரம் உள்ளே வந்த விஜய் “ என்னன்னா கிளம்பிட்டீங்களா? உங்க கிட்ட எங்க ரிசெப்ஷன் பத்தி பேசலாம்ன்னு நினைச்சேன்” என்று சொல்லி அடுத்தக் குண்டை தூக்கிப் போட்டான்.

அதைக் கேட்டு உள்ளுக்குள் அடங்கி இருந்த எரிச்சல், கோபம் எல்லாம் சேர்ந்து வெடிக்க “ஏண்டா எல்லாத்திலேயும் அவசரம் தானா?” என்று எரிந்து விழுந்தான்.

அவனை வித்தியாசமாகப் பார்த்த விஜய் “என்ன இவ்வளவு டென்ஷன் ஆகுற இன்னைக்கு?” என்றான் கூலாக.

எதையும் கவனிக்கும் மனம் இல்லாதவன் போல் விஜயிடம் திரும்பியவன் “இங்க பார்! நான் சாயங்காலம் வந்ததும் உன்னோட பேசணும். அதுவரை இந்த ஐடியா எல்லாம் தூக்கி வச்சிட்டு வேற ஏதாவது வேலையிருந்தா பாரு” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அவனிடம் பேசிவிட்டு வந்தவன் மனமோ குதிரையின் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தது. இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் தன்னை மாட்டி விட்டு விட்டாளே என்றெண்ணி சுஷ்மிதாவின் மேல் கொலைவெறியே எழுந்தது. நான் தான் அவளைப் பற்றிச் சாதரணமா நினைச்சிட்டேனோ? ஆதரவுக்கு யாருமில்லை, கொஞ்சம் மிரட்டினா பயந்து அடங்கிடுவா, அவளால பிரச்சனை எற்படாதுன்னு நினைச்சது தப்போ? என்று பல்வேறு யோசனையுடன் சென்றான்.

அவளுக்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருக்கும். என் தம்பியை கல்யாணம் பண்ணிக்க. என்னால சொல்ல முடியாதுன்னு நினைச்சு தானே ஆடிகிட்டு இருக்கா? வரட்டும் ! இன்னைக்கே அவன்கிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று நினைத்தான்.

மாலைவரை நேரத்தை தள்ளி வேலையைப் பார்த்தவன், என்றுமில்லா அதிசயமாக அன்று சீக்கிரமே வீடு திரும்பினான். வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனது பிபியை எகிற வைக்கும்படி விஜயும்,சுஷ்மிதாவும் அருகருகே அமர்ந்து கொண்டு ரிஷியை கொஞ்சிக் கொண்டிருந்தனர்.அதை பார்த்ததும் உள்ளமெல்லாம் எரிய, அப்படியே நின்றான். அவர்களோ அவனைக் கவனிக்காமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். விஜய் அவளைக் காதலுடன் பார்ப்பதும், அதைக் கண்டு அவள் வெட்கப்படுவதையும் கண்டவன் பல்லை கடித்துக் கொண்டு நின்றான்.

அவர்கள் தன்னைக் கவனித்து விலகுவார்கள் என்று காத்திருந்து, விலகாமல் போனதும் பொறுக்க முடியாமல் தொண்டையைக் கனைத்தான். அவனைக் கண்டு அவசரமாக எழப் போன சுமியை கையைப் பிடித்துத் தன்னருகேயே அமர வைத்துக் கொண்டான் விஜய். அதைக் கண்டு முகச் சுருங்கிய ராகவ் “என்னடா நீ இன்னைக்கு ஆபிஸ் போகலையா? இங்கேயே சுத்திகிட்டு இருக்க” என்றான்.

அவனை ஒருமாதிரியாகப் பார்த்த விஜய் “ அண்ணா எங்களுக்கு இன்னைக்குத் தான் கல்யாணம் ஆகியிருக்கு. ஆபிஸ் போகலையான்னு கேட்கிற” என்றான் நக்கலாக.

அதைக் கேட்டவன் “சரி! ஏதோ தெரியாம கேட்டுட்டேன் விடு.நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன்.உன்னோட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி நகர்ந்தான்.

தங்களது அறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கே இருந்த நிலைமையைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. தன்யா அவர்களது அறையை முதலிரவிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தாள்.அதைப் பார்த்ததும் சொல்ல முடியாத கோபம் உச்சியில் ஏற “ஏய்! என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இதென்ன கூத்து” என்றான்.

அவனது சத்தத்தில் தூக்கி வாரி போட திரும்பியவள் “ ஏங்க மெதுவா பேச மாட்டீங்களா? அத்தையும், மாமாவும் இந்தக் கல்யாணத்தை ஒத்துகிட்டு இருந்தா ஏற்பாடு பண்ணி இருப்பாங்க தானே.அதுதான் பெரியவங்களா இருந்து நாம செய்யணும்ன்னு பண்ணிட்டு இருக்கேன்.இதுக்கேன் இவ்வளவு அதிர்ச்சி” என்றாள்.

எரிச்சல் கூடிய குரலில் “மடச்சி! மடச்சி! அப்பா அம்மாவே இந்தக் கல்யாணத்தை ஒத்துக்கல.இது இப்போ ரொம்ப அவசியமா” என்றான்.

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையில் கவனத்தை வைத்தாள். அதற்கு மேலும் பொறுக்க முடியாது போக இருகைகளிலும் முகத்தைத் தாங்கிக் கொண்டு படுக்கையில் அமர்ந்தான். எந்தப் பக்கம் போனாலும் இடிக்கிறதே, இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது என்று குழம்பி போனான்.நான் பேசுவதை விஜய் சரியாகப் புரிந்து கொள்வானா? என்கிற பயமும் எழுந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு யோசித்தவனின் அருகில் வந்த தன்யா “உங்களுக்கு இன்னக்கு என்னவோ ஆச்சு? நீங்க சரியே இல்லை? என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று கேட்டாள்.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தவனைப் பார்த்து “ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா?” என்றாள் மீண்டும்.

அவளது கேள்வியில் கடுப்பாகிப் போனவன் “கொஞ்ச நேரம் என்னைத் தனியா விட்டுட்டு போறியா? சும்மா நை..நை-ன்னு படுத்திகிட்டு”என்று கத்தினான்.

. எப்பொழுதும் இப்படி அவன் கோபப்படும் போது கண் கலங்கி நிற்பவள் இன்று கொஞ்சமும் அசராது “எழுந்திரிக்கிரீங்களா? ஹாலில் போய் உட்காருங்க. என் வேலையைக் கெடுத்துகிட்டு” என்றாள் சற்று எரிச்சல் கலந்த குரலில்.

அதைக் கேட்டவன் அதிர்ந்து போய் அவள் முகத்தைப் பார்த்தான். அவளோ தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள். அதைக் கண்டு நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

Advertisements