அத்தியாயம் – 3

பரபரவென்று வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த சுஷ்மிதாவின் இதழில் ஒரு புன்சிரிப்பு பரவி இருக்க,மனமோ சொல்லவொணாத ஒரு மகிழ்ச்சியில் இருந்தது. ஐ.டி கார்டை எடுத்து மாட்டிக் கொண்டு அவசரம் அவசரமாக காத்திருந்த கேபில் அமர்ந்தாள்.

தாய், தந்தையரின் இறப்பிற்குப் பிறகு, மாமா வீட்டில் அடைக்கலம் புகுந்தவளுக்கு அன்பு மறுக்கப்பட்டது.மாமாவும், மாமியும் கடமைக்காக வளர்த்தார்களே அன்றி உண்மையான பாசத்தில் அல்ல.தங்கள் குழந்தைகளிடம் காட்டிய அன்பில் ஒரு சதவிகிதம் கூட அவளுக்கு  கிடைக்காமல் போனது.

பத்து வயது முதல் தாய், தந்தையரின் பாசத்திற்காக ஏங்கியவளுக்கு, பள்ளியிலும் அவளது நிலையை எண்ணி கேலி பேசுபவர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டாள். அதனால் தன் நட்பு வட்டத்தையும் குறைத்துக் கொண்டாள். யாரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசவே தயக்கம்.அந்த பழக்கமே வேலைக்கு சென்றப் பிறகும் தொடருகின்றது.

ஆனால், ராகவ்வின் கீழ் பணி புரிய தொடங்கிய இந்த ஒன்பது மாதங்களில்,வேலைக்காக பேசுவதை தவிர மற்றவர்களிடம் எண்ணி நூறு வார்த்தைகள் பேசி இருந்தால் அதிகம்.ராகவ்வை பற்றி எண்ணியதுமே முகத்தில் ஒரு கனிவு வந்தது.இதுவரை எனக்கு கிடைக்காத அன்பைத் தந்தாலும், சில நேரங்களில் அவர் புரியாத புதிர் தான் என்று எண்ணிக் கொண்டாள்.

அலுவலகத்தில் சென்று இறங்கியதும்,முதல்நாள் பாதியில் விட்ட பணிகளை மடமடவென்று செய்ய ஆரம்பித்தாள்.சிறிது நேரத்திற்குள் லேசாக தலைவலிக்க ஒரு காப்பி சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது.

எதிரில் தென்பட்டவர்களை பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்து,ஹாய், ஹலோ சொல்லிவிட்டு கேண்டீனிற்கு சென்று காப்பியை வாங்கிக் கொண்டு ஓரமாக இருந்த மேஜையில் அமர்ந்தாள்.

இரண்டு வாய் காப்பி உள்ளிறங்கியதும் தலைவலி குறைய ஆரம்பித்தது.அவளுடைய டேபிளுக்கு நேர் எதிர் டேபிளில் நிர்மல் டீமில் இருக்கும் மூன்று பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ஹே சங்கீ!தன்யாவை போய் பார்த்தியா?ஒரு நியூசும் இல்லையேப்பா அவ கிட்டேயிருந்து?”

“போன் தான் பண்ணினேன் அர்ச்சனா.அவ குழந்தையோட பிஸி.இந்த வீக் போய் பார்க்கலாம்-னு இருக்கேன்.”

அவர்களிருவரும் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் “யாருப்பா தன்யா? இங்கே வேலைப் பார்த்தவங்களா?” என்று கேட்டாள்.

“டிஎல் ராகவ் இருக்காரே அவரோட வைப் தான் தன்யா.இங்கே தான் வேலைப் பார்த்தா.ராகவ்வும், தன்யாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க” என்றாள் சங்கீதா.

அதுவரை சாதரணமாக கேட்டுக் கொண்டிருந்த சுஷ்மிதா கடைசியில் காதில் விழுந்த செய்தியில் அதிர்ந்து போய் அவர்களின் பக்கம் திரும்பி பார்த்தாள். தன்னையும் அறியாமல் வேகமாக எழுந்து அவர்களிடம் சென்று “எங்க டிஎல் ராகவ்வையா சொல்றீங்க?” என்றாள் பதட்டத்துடன்.

திடீரென்று அவள் வந்து கேட்டதும் முழித்த சங்கீதா “ம்ம்..ஆமாம். இங்கே நம்ம ஆபிசில் அவங்க லவ் ஸ்டோரி ரொம்ப பேமஸ்.உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.

அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேயறைந்த முகத்துடன் அங்கிருந்து வேகமாக நடந்தாள். காலையிலிருந்து குதூகலத்தில் இருந்த மனம், பேரிடியைத் தாங்கி படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.எப்படி தனது இடத்திற்கு வந்தாள் என்று கூடத் தெரியாமல் சென்று அமர்ந்தாள்.அவன் தன்னை ஏமாற்றி இருப்பான் என்கிற எண்ணமே அவள் மனதை கூறு போட செய்தது.

பத்து நிமிடங்கள் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தவளுக்கு, எங்கே எல்லோர் முன்னிலையும் கத்தி அழுது விடுவோமோ என்று பயந்து அவசரமாக வாஷ்ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

வெளியில் சத்தம் வராது மௌனமாக தனது துயரத்தை அழுது தீர்த்தாள். ஒரு நிலைக்கு மேல் அவன் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.முகத்தை கழுவி தன்னை சீர் படுத்திக் கொண்டு வெளியில் வந்தவள், ராகவின் அறையை நோக்கி சென்றாள். அவன் முக்கியமான கிளையன்ட் மீட்டிங்கில் இருந்ததால் பார்க்க இயலவில்லை.

வேலையில் மனம் செல்லாமல் எதிரே தெரிந்த மானிட்டரை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.மனதை அழுத்திய பாரத்தை தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்க முடியவில்லை.உடல்நலமில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தவள், எதற்கும் அவனுக்கு ஒரு மெசேஜ் கொடுத்து பார்ப்போம் என்று குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

மதியம் வரை அவனிடமிருந்து பதிலில்லை.பொறுத்தது போதும் நேராகவே சென்று பேசிவிட வேண்டியது தான் என்று எழும் போது அவனிடமிருந்து மெசேஜ் வந்தது.எப்பவும் நாம் சந்திக்கும் இடத்திற்கு சென்று விடு.அங்கே வந்து உன்னை பிக் அப் செய்து கொள்கிறேன் என்று கொடுத்திருந்தான்.

அதைப் பார்த்ததும் மேலும் மனம் கொதித்துப் போனது.என்ன ஒரு திமிர்! இவன் சொல்லுகிற மாதிரி நான் ஓடணுமா? இங்கேயே எல்லோர் முன்னாடியும் அவனோட முகத்திரையை கிழித்தால் என்ன? என்கிற ஆங்காரம் எழுந்தது.அதே சமயம் அவள் மனம் இடித்தது.கிழியப் போவது அவனுடைய முகத்திரை மட்டுமல்ல, உன்னுடைய பெயரும் தான்.அவன் தான் இனிக்க இனிக்கப் பேசி உன்னை மயக்கினான் என்றால் உன் புத்தி என்ன புல் மேயவா போனது?இப்படி எத்தனை கதைகளை கேட்டிருப்பாய்?அதன் பிறகும் நம்பி ஏமாந்து போவது உன்னைப் போன்ற பெண்களுக்கு பொழப்பாய் போயிற்று என்று மனம்  கம்பு சுத்தியது.

ஒன்பது மாதங்கள் இதே கம்பனியில் வேலை செய்த போது காதில் விழாத விஷயம், இன்று அனைத்தையும் இழந்து நிற்கும் போது விழுகிறதே. இதை என்ன சொல்வது என்று நொந்து கொண்டாள்.

அவனை விடக் கூடாது என்கிற எண்ணம் தலைத்தூக்க…எனக்கு இப்போவே உங்க கிட்ட பேசியாகணும் என்று பதில் அனுப்பினாள். அவனும் சளைக்காது வேலை இருக்கிறது என்று மறுத்தான். ஓரளவிற்கு மேல் பொறுமையை இழந்தவள் “நீங்க இப்போ வரலேன்னா, நான் உங்களை பார்க்க  அங்கேயே வந்துடுவேன்” என்று அனுப்பினாள்.

அதன்பின் ஐந்து நிமிடங்கள் அவனிடமிருந்து எதுவும் வரவில்லை.சிறிது நேரம் கழித்து “சரி! நீ போய் அடுத்த தெருவில் இருக்கும் காபி டேவில் வெயிட் பண்ணு வருகிறேன்” என்று கொடுத்தான்.

அதை பார்த்ததும் ஹன்ட்பாக்கை எடுத்து மாட்டிக் கொண்டு விறுவிறுவென்று நடந்தாள். மனமோ கொதிக்கும் எரிமலையென கொந்தளித்துக் கொண்டிருந்தது.எவ்வளவு எளிதாக பெண்ணை ஏமாற்ற நினைக்கிறார்கள் இந்த ஆண்கள் என்று நினைத்து ஆத்திரத்துடன் சென்றாள்.

அவள் சென்று சற்று நேரத்திற்குள்ளேயே அவனும் வந்துவிட்டான். எதிரே அமர்ந்தவனின் முகத்தில் எரிச்சல் பொங்கி வழிந்தது.

“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பீகேவ் பண்ற? வேலை நேரத்தில் இதென்ன பிடிவாதம்?” என்றான்.

அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

அவளது நடவடிக்கை மேலும் அவனை பொறுமை இழக்க செய்ய, வேகமாக நாற்காலியை பின்னுக்த் தள்ளி எழுந்தவன் “என்ன நினைச்சுகிட்டு இருக்க?வேலை நேரத்தில் கூப்பிட்டதே தப்பு.இங்கே வந்து வாயை மூடிகிட்டு உட்கார்ந்திருக்க.நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தான்.

அதுவரை மௌனமாக இருந்தவள் “தன்யா எப்படி இருக்காங்க ராகவ்” என்றாள்.

வேகமாக முன்னேறிய கால்கள் உறைந்து போக, மெல்ல திரும்பியவன் அவளை கூர்மையாகப் பார்த்துக் கொண்டு சேரில் அமர்ந்தான்.

“சோ..இதுக்காக தான் என்னை வர சொல்லி இருக்கே?” என்றான் கேள்வியாக.

அவனிடம் அதிர்வையோ,வேறுவிதமான உணர்வுகளை எதிர்பார்த்தவளுக்கு,அவனது நடவடிக்கை ஏமாற்றத்தைக் கொடுத்தது.

“ஏன் என்னை ஏமாத்தினீங்க?உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு-னு சொல்லாம ஏன் என் கிட்ட பழகினீங்க?” என்றாள் ஆங்காரமாக.

தனது நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவன் “கல்யாணம் ஆகலேன்னு நான் உனக்கு சொன்னதா நியாபகம் இல்லையே பேபி” என்றான் கிண்டலாக.

மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போலிருந்தது அவனது பேச்சு.

சற்று சத்தமாக “உங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா?இப்படி என் வாழக்கையை அழிச்சிட்டு சாதரணமா பேச?”

அவளது குரல் உயர்ந்ததில் அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் திரும்பி பார்த்தனர்.அதை கண்டவன் எழுந்து அவள் கையைப் பற்றி பரபரவென்று தனது காருக்கு இழுத்துச் சென்றான்.

காரில் அமர வைத்து கதவை லாக் செய்தவன் வேகமாக வண்டியை எடுத்தான்.அவனது செய்கையில் அதிர்ந்திருந்தவள் “எங்கே கூட்டிட்டு போறீங்க?” என்றாள் கோபமாக.

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு சாலையில் கவனத்தை வைத்தான்.

அவனிடமிருந்து பதில் வராது போகவே ‘எங்கே தான் போறான்னு பார்ப்போம்’என்று எண்ணி அமைதியாக இருந்தாள்.

ஆளரவமற்ற சாலையில் காரை நிறுத்தியவன் அவள்புறம் திரும்பி “இப்போ கேளு?” என்றான்.

பொறுமையெல்லாம் பறக்க பாய்ந்து அவன் சட்டையை கொத்தாக பற்றியவள் “ஏண்டா இப்படி என்னை ஏமாத்தின?உனக்கு கொஞ்சம் கூட  மனசாட்சியே இல்லையா? வீட்டுல பெண்டாட்டி இருக்கப்ப ஏன் என்னை..என்னை” என்று கைகளில் முகம் புதைத்து அழுது கரைந்தாள்.

அவளது தலையை வருடிக் கொடுத்தவன் “என்ன இது பேபி! எய்ட்டீஸ் ஹீரோயின் மாதிரி இருக்க.இது  ரெண்டாயிரத்து பதினாறு.இப்போ இதெல்லாம் சகஜம்” என்றான்.

அவனது பேச்சில் அருவருப்படைந்தவள் அவனிடமிருந்து விலகி “சீ”..நீ இவ்வளவு மோசமானவனா?”

“நோ பேபி! நீ ரொம்ப கற்பனை பண்ணிக்கிற. இன்னைக்கு நிறைய பேர் லிவிங் டு கெதர்ல இல்லையா. பிடிச்சா சேர்ந்து வாழ்வது பிடிக்கலேன்னா விலகிப் போறது.அதுமாதிரி தான் இதுவும்.”

“நான் அந்த மாதிரி இல்லை” என்றாள் ஆத்திரமாக.

அவளை இகழ்ச்சியுடன் பார்த்தவன் “கண்டிப்பா பேபி! நீ அந்த மாதிரி இல்ல.என்னை உனக்கு எத்தனை மாசம் தெரியும்.ஆனா, நான் கூப்பிட்டதும் என்னோட வந்தியே.நீ வித்தியாசமானவ தான்.”

அவன் சொன்னதை கேட்டு மேலும் அழுகை கூடிப் போக, அவன் முகத்திலேயே காறி உமிழ்தவள் “அது உன் மேல வச்ச நம்பிக்கை-டா.ஆனா, நீ இவ்வளவு கீழ்த்தரமா இருப்பேன்னு கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை” என்று முகத்தை மூடிக் கொண்டு கதறினாள்.

அவனோ கொஞ்சமும் அசராது “இங்க பாரு பேபி! நீ இப்படி அழுறதுக்கு இதில் ஒண்ணுமே இல்ல. இட்ஸ் ஆல் அன் அட்ஜஸ்ட்மென்ட். எனக்கு தேவையானதை நீ கொடுத்த..உனக்கு என்கிட்ட இருந்து எதுவோ தேவைபட்டிருக்கு.அதை ஷேர் பண்ணிக்கிட்டோம் அவ்வளவு தான்” என்றான் கூலாக.

முகத்தை மூடி அழுது கொண்டிருந்தவள், அவனது வார்த்தையில் வெகுண்டு “அப்போ உன்னோட மனைவி இதே அட்ஜஸ்ட்மென்ட் தேடி போனா உனக்கு ஒண்ணுமில்லை”.

பட்டென்று அவள் கழுத்தைப் பிடித்தவன் “என் பொண்டாட்டியை பத்தி பேச உனக்கு உரிமையில்ல.உன்னை பத்தி பேசு, இல்ல என்னை பத்தி பேசு கேட்டுகிறேன்.அவளைப் பத்தி பேசின கொன்னுடுவேன்” என்றான் கோபமாக.

அவனது பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டவள் அழுகையுடன் “அப்போ உனக்கு நான் யாரு?” என்றாள்.

இருகைகளையும் கட்டிக் கொண்டு அவளை நக்கலாகப் பார்த்தவன் “ப்ரீ-பெய்ட் சிம்.எப்போ வேணா கழட்டிப் போடலாம்.”

அதைக் கேட்டதும் ஆத்திரத்துடன் ஓங்கி அறைந்தாள்.

அவள் கைகளைப் பிடித்து முறுக்கியவன் “இங்கே பாரு! எனக்கு ஒன்னும் உன் கூட காலம் முழுக்க சுத்தம்னும்-னு ஆசையில்லை.இன்னும் கொஞ்ச நாள் என்னோட இரு.அதற்கு பிறகு நீ உன் வழியைப் பார்த்துகிட்டு போ” என்றான்.

“உன் மேல எவ்வளவு காதலோட இருந்தேன்.இப்படி என்னை ஏமாற்றி உன்னோட தேவைகளை தீர்த்துகிட்டியே.இதுதான் உன் தேவைன்னா எங்கேயாவது போக வேண்டியது தானே-டா.ஏன் என்னை சீரழிச்ச?”

“நான் ரொம்ப ஹெல்த் கான்ஷியுஸ் பேபி.அதுதான் இப்படி” என்று சொல்லி கண் சிமிட்டினான்.

அவனது பேச்சில் மேலும் கூனி குறுகி போய்விட..”உன் வைப்பை பார்த்து உன் வண்டவாளத்தை எல்லாம் சொல்லப் போறேன்” என்றாள் அழுது கொண்டே.

அவள் முகத்தைப் பிடித்து தன் பக்கம் திருப்பி “உனக்கு இந்த வேலை எந்த அளவுக்கு முக்கியம் தெரியும் பேபி.உங்க மாமாவும், மாமியும் படிக்க வச்சதோட கை கழுவி விட்டாச்சு. அவங்க யாரும் உனக்கு துணையில்ல.சோ இந்த வேலை தான் உனக்கு எல்லாம்.நான் நினைச்சா இந்த வேலையை விட்டு உன்னை தூக்க வைக்க முடியும்.”

அவன் சொல்ல சொல்ல கண்களில் கலக்கத்துடன் அவனை பார்த்திருந்தாள்.

அவளின் உணர்வுகளைப் படித்தவன் திருப்தியுடன் “அதனால இன்னும் கொஞ்ச நாள் என் இஷ்டத்துக்கு இரு.அப்புறம் நான் உன்னை தொந்திரவு பண்ண மாட்டேன்” என்றான்.

மெல்லிய குரலில் “அப்போ என் வாழ்க்கை?அதுக்கு பதிலென்ன?”

அவளின் கேள்வியை கண்டு ஆயாசமாக கண்களை மூடி திறந்தவன் “உனக்கு விருப்பம்னா காலம் முழுக்க என்னோடவே இருக்கலாம்.எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்ல.ஆனா, கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க கூடாது”.

இனி, பேசி ஒன்றுமில்லை.காலம் கடந்த பின்னர் இவனை கேள்வி கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லை என்று புரிந்து போனது.சிறிது நேரம் அமைதியாக எதிரே தெரிந்தவற்றை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் ஏதாவது பேசுவாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ வீட்டில் போய் ரெஸ்ட் எடு பேபி.இங்கே உட்கார்ந்திருந்தா எதுவும் யோசிக்க முடியாது” என்றவன் காரை எடுத்தான்.

வழி நெடுகிலும் அவனும் எதையோ யோசித்துக் கொண்டிருக்க, அவளோ கன்னங்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள்.

எப்படி காரிலிருந்து இறங்கினாள், எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று அறியாது தனது அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் விழுந்து வாய் விட்டு கதற ஆரம்பித்தாள்.

“ஏம்மா என்னை விட்டு போனீங்க? நீங்க இருந்திருந்தா என்னை இப்படி ஏமாந்து போக விட்டு இருப்பீங்களா?சின்ன வயசிலே இருந்து யாருமே என்கிட்ட அன்பா பேசி பழகினது இல்ல.இவர் ஆசையா, பாசமா பேசவும் நெருங்கி பழகிட்டேன்.ஆனா, உலகம் இவ்வளவு மோசமானது என்னால புரிஞ்சுக்க முடியாம போயிடுச்சே.நீங்க  இருந்திருந்தா  என்னை  இந்த  அளவுக்கு  போக விட்ருப்பீங்களா? தப்பு பண்ணிட்டேன் மா..தப்பு பண்ணிட்டேன்’என்று தலையிலடித்து கொண்டு அழுது கரைந்தாள்.