யாரைக கேட்டது இதயம்…. ( ஹமீதா)

இன்றைய காலகட்டத்தில் எங்கு எதிலும் ஊழல்,கல்வி,மருத்துவம்,ஊடகம் என்று எங்கு நோக்கினும் குற்றங்கள் சூழ் உலகில் நடமாடிக் கொண்டிருக்கிறோம்…தினமும் செய்தி தாளை பிரித்தால் மக்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள் நம் மனதை தாக்கிச் செல்கிறது.ஒரு எழுத்தாளாராக சமூக அவலங்களுக்கு எதிராக பன்முகத் தாக்குதல்….. கவிதையான காதல்…கத்தி மேல் நடப்பது போன்றதொரு கதைக் களம்.அதை ஆசிரியர் கையாண்டிருக்கும் விதம் அருமை.

சுமந்த் அரசியல்வாதி தந்தைக்கு மகனாகப் பிறந்தாலும், அவருடைய ஆர்ப்பாட்டங்களையும், தவறுகளையும் அறவே வெறுப்பவன்.சமூக அவலங்களை வெளியில் கொண்டு வர வேண்டுமென்பதற்க்காக ஊடகத் துறையை கையிலெடுத்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவன்.

சத்தியநாராயணா சுமந்தின் தந்தை. கல்வித் தந்தை என்ற பெயரெடுத்தவர்.இலவசமாக கல்வியை தந்த முன்னோர்கள் இருந்த காலங்கள் மாறி, இன்று மாட்டுச் சந்தையாகி போயிருக்கும் கல்வி வர்த்தகத்தை தோலுரித்து காட்டி இருக்கிறார்.சத்தியநாராயணாவின் குழுமங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும் விதத்தையும்,இடைத் தரகர்களை கொண்டு விலைப் பேசப்படும் விதத்தை ஆசிரியர் சொல்லும் இடங்கள் மனதை அதிரச் செய்கிறது.

சுமந்தின் நண்பன் ஹரியின் அண்ணனான விவேக் நேர்மையான கலெக்டர்.தனது துறையில் நடக்கும் தவறுகளை சீர் செய்ய போராடும் நேர்மையான இளைஞன்.விவேக்கை பற்றி சொல்லுமிடங்களில் அவனது அன்பான குடும்பத்தை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்.காதல் கணவனாகவும்,அன்பான தந்தையாகவும், தந்தைக்கு நல்ல மகனாகவும் இருக்கும் விவேக்கை எங்கள் மனதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் விவேக்கின் மரணம் நம்மை கண்ணீர் விட வைக்கிறது. நேர்மையான ஆபிசர்களுக்கு என்றும் துரோகமே பரிசாகக் கிடைக்கிறது என்றாலும், கதைகளிலாவது அவர்களை வெற்றியடைய செய்யலாம் என்கிற எண்ணம் எழாமலில்லை.அதிலும் விவேக்கின் மரணத்தை சொன்ன இடங்களில் அடுத்த அத்தியாயங்களை படிக்கவே மனமில்லாமல் மனம் பாரமாகி போனதேன்னோ உண்மை.அது எழுத்தாளரின் வெற்றி.

சுமந்திற்கு இணையத்தில் மூலம் தொடர்பில் வரும் பாரதி என்கிற பெண்ணின் கதை ஜுவாலையாக அவனை சுடுகிறது( அவனை மட்டுமல்ல நம்மையும் தகிக்கிறது).அவளது பின்னணியை அவளறியாமல் ஆராயும் சுமந்திற்கு அவள் மேலொரு ஈடுபாடு வருகிறது.

ஒரு குடும்பத் தலைவன் செய்யும் தவறு அந்த குடும்பத்தை  எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை தனது எழுத்தின் ஆளுமையால் சொல்லி  நம்மை அழ வைக்கிறார்.தேவராஜன் போலிஸ் அதிகாரி.பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பவர்.அதோடு தன்னுடன் வேலை செய்யும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, அது வாட்ஸ் அப் மூலம் வெளியாகி அதன் மூலம் அந்த குடும்பத்தின் நிம்மதியை பறி போக வைக்கிறது.

ஸ்ரேயா தந்தையின் துரோகத்தாலும்,தாயின் உடல்நிலை சீர்கேடாலும் உடைந்து போயிருப்பவளுக்கு சுமந்தின் நட்பு, பாலைவனத்தின் நீரூற்றாக அமைகிறது.ஒருபுறம் கான்சரில் தவிக்கும் அன்னை, மறுபுறம் தந்தையின் நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலைக்கு தவிக்கும் தம்பி என்று போய் கொண்டிருக்கும் வாழ்க்கையில் சுமந்தின் வரவு இதம் அளிக்கிறது.

சுமந்த் வழக்கமான ஹமீதாவின் நாயகன்.அதிரடியான பேச்சும்,காதலை தெரிவிக்கும் விதமும் நம்மை ரசிக்க வைக்கிறார்.ஸ்ரேயா குடும்ப சூழலின் காரணமாக ஆண்களை நம்ப மறுத்தாலும், சுமந்தின் மேல் ஈடுபாடு வந்தாலும், தந்தையின் துரோகத்தால் ஆண்களை நம்ப மறுக்கும் மனதை வென்று அவனுடன் சேர்ந்தாளா?

ஆரம்பத்தில் இருந்தே உன்னை கடத்திடுவேன் என்று மிரட்டும் சுமந்த் ஸ்ரேயாவை கடத்தினானா???

ஆண்களின் மேலிருக்கும் நம்பகத் தன்மையை வென்று சுமந்துடன் சேர்ந்தாளா?

சுமந்தின் அன்னைக்கு நேர்ந்ததென்ன?

லிவிங் டுகேதருக்கு ஹமீதா கொடுக்கும் விளக்கமென்ன?

தனது தந்தைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியும்,விவேக்கின் இறப்பிற்க்கான உண்மையான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி குற்றவாளிகளின் உண்மை முகத்தை காண்பித்தார்களா?

கதையின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நம்மை சீட்டின் நுனியிலேயே அமர வைத்து, ஒரு படம் பார்த்த உணர்வை தந்திருக்கிறார்.

ஹமீதாவின் உழைப்பு கதையின் ஒவ்வொரு வரியிலும் தென்படுகிறது.ஊடகத் துறையைப் பற்றி சொல்லும் விதமாகட்டும்,கல்வித் துறையில் நடக்கும் ஊழலாகட்டும்,கான்சரைப் பற்றி கொடுக்கப்பட்டுள விளக்கமாகட்டும்,கீ லாகர் பற்றியை விவரங்கலாகட்டும் ஒவ்வொன்றிலும் அவரின் உழைப்பு அவருடைய எழுத்தை மிளிர வைக்கிறது.

சுமந்த, ஸ்ரேயா காதலை மனதை வருடிச் செல்லும் இளம் தென்றலாகசெல்கிறது .காதலை கவிதையாக சொல்ல ஹமீதாவால் மட்டுமே முடியும்.

சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு.நன்றி ஹமீதா…மேலும் இது போன்று பல படைப்புகள் கொடுக்க எங்கள் வாழ்த்துகள்…

யாரைக் கேட்டது இதயம்? எங்களின் இதயம் ஹமீதாவிடமே கேட்கிறது அடுத்த படைப்பு எப்பொழுது?

Advertisements