அத்தியாயம் – 2

பனிரெண்டு மணியளவில் மெல்ல சத்தமிடாமல் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தான் ராகவ்.

வீடே இருளில் மூழ்கி இருக்க,தங்களின் அறையில் மட்டும் சிறியதொரு விளக்கெரிந்து கொண்டிருப்பது தெரிந்தது.மெல்ல அடியெடுத்து உள்ளே சென்றவன் அங்கு,கையிலிருந்து புத்தகம் நழுவி கீழே விழ அரைகுறையாக படுத்த நிலையில் தன்யா உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

அவளருகில் சென்றவன், புத்தகத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு அவளை சரியாகப் படுக்க வைத்தான்.

தனது கப்போர்டை திறந்து துணியை எடுத்துக் கொண்டு குளியலறை பக்கம் நகர்ந்தவனை தன்யாவின் குரல் நிறுத்தியது.

“வந்துட்டீங்களா?”என்றவள் உறக்க கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

“நீ தூங்கு தனும்மா” என்றான் அவள் கண்களைப் பார்க்காமலே.

“ரொம்ப டயர்டாகி தெரியிறீங்க.குடிக்க ஏதாவது எடுத்திட்டு வரவா?” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் நீ படு”என்றான் பதட்டத்துடன்.

அவனை ஒரு மாதிரியாக பார்த்து, பேசாமல் படுத்துக் கொண்டாள்.

குளியலறைக்குள் சென்றவனுக்கு மனம் பாராமாகிப் போனது.சுஷ்மித்தாவுடன் இருந்தவரை தோன்றாத குற்ற உணர்வு மனைவியை பார்த்ததும், அவளது அக்கறையையும்,காதலையும் பார்த்ததும் தோன்றியது. அவனது மனமே அவனை சாடியது.ஷவரின் அடியில் நின்றவனுக்கு தான் ஏன் இவ்வாறு மாறி போனோம் என்று எண்ணினான்.சிறிது நேரம் தன்னுடைய நடத்தையை எண்ணியே படி நின்றிருந்தவனின் மனம் சமாதானமடைய மறுக்க,முரண்டிய மனதை அடக்கிக் கொண்டு சப்தம் செய்யாமல்  மகனின் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

மறுநாளும் காலை தன்யாவின் முகம் பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டு ஒருவித பதைபதைப்புடனே இருந்தான்.அவனது முகத்தில் தெரிந்த அவஸ்தையை கண்டவள் “ஏங்க வேலையில எதுவும் பிரச்சனையா?ரொம்ப டென்ஷனா இருக்கீங்களே?”

அவளது கேள்வியில் அதிர்ந்தவன், தனது மனதில் இருப்பதை வெளியில் காட்டும் அளவிற்கா நடந்து கொண்டோம் என்று நினைத்து “ஒரு சின்ன பிரச்சனை இருக்கு.அதை பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன்”என்றான்.

“ஒ..நீங்க சரி பண்ணிடுவீங்க.பொறுமையா யோசிங்க”என்று அவனுக்கு ஆறுதல் அளித்தாள்.

அவளது பதிலில் மேலும் அவனது மனம் சுணங்கியது.தன் மேல் அளவில்லாத நம்பிக்கையும், அன்பும் வைத்திருக்கும் அவளுக்கு துரோகம் செய்கிறோமோ என்று எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

ரிஷியை தூக்கிக் கொண்டு வந்தவள் “என்னங்க..நீங்க கிளம்பும் போது நாங்களும் கீழே வரோம்.தம்பியை காரில் வச்சு ஒரு ரவுண்டு அடிங்க.நீங்க பேன்ட், சட்டை போட்டதுமே அவனுக்கு தெரிஞ்சு போய்டுது வெளில போறீங்கன்னு.”

அவள் சொன்னதை கேட்டு ஒன்றும் பேசாமல் தலையாட்டி பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவனைப் பார்த்து ரிஷி உதட்டை பிதுக்க ஆரம்பித்தான்.

“பார்த்தீங்களா?” என்று சிரித்தவளிடம் மகனை வாங்கிக் கொண்டு கீழே சென்றான்.

அவன் பின்னே சென்றவள் ரிஷியை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு காரின் மறுபுறம் ஏறி அமர்ந்தாள்.

உள்ளே அமர்ந்ததுமே சந்தோஷமாக சிரித்துக் கொண்ட ரிஷி, அப்பாவிடம் தாவினான்.

“வேண்டாம்-டா..அப்பா ஓட்டனுமில்ல” என்று தனது பிடியில் வைத்துக் கொண்டாள்.

தங்கள் வீட்டு பால்கனியில் இருந்து இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு பாட்டி கண்களில் கனிவுடன் ‘நல்ல அழகான குடும்பம்.புருஷன்,பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு பாசமா இருக்காங்க.நல்லா இருக்கணும்’என்று நினைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

அதற்குள் அவரது மருமகள் “ஆரம்பிச்சிட்டீங்களா?சும்மா பால்கனியிலேயே நின்னு அடுத்தவங்களை வேடிக்கைப் பார்த்திட்டு இருங்க.அடுப்பில குழம்பு கொதிக்குது போய் பாருங்க”என்று விரட்டினாள்.

ராகவை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்தவள், ரிஷியை கீழே படுக்க வைத்துவிட்டு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆபிஸ் சென்ற ராகவின் மனமோ தடுமாறிக் கொண்டிருந்தது.அந்தநேரம் சுஷ்மி அவனைத் தேடி வர,இனம் புரியாத உணர்வில் உழன்று கொண்டிருந்தவன் “காலையிலேயே வந்து ஏன் உயிரெடுக்கிற”என்று எரிந்து விழுந்தான்.

“இல்ல ப்ராஜெக்ட் விஷயமா தான் கேட்க வந்தேன்” என்று தயங்கி தயங்கி கூறினாள்.

“இங்க பாரு! நம்ம ரெண்டு பேரும் பழகுறது ஆபிஸ்ல தெரியாம இருக்கணும்-னு நினைக்கிறேன். சும்மா-சும்மா இப்படி வந்து என்னை பார்க்காதே.தேவையில்லாத பேச்சுக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிடும்”என்று கடுப்படித்தான்.

அவனது சிடுசிடுப்பில் கண்கள் கலங்க தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அடுத்த இருவாரங்கள் சற்று குற்ற உணர்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.தவறுகள் செய்ய ஆரம்பிக்கும் போது தலை தூக்கும் உணர்வுகள் அவனையும் துரத்தியது.முதன்முறை செய்யும் போது தானே தவறு தவறாய் தெரியும்.ஒரு முறை பழகிய பிறகு தவறுகள் தன்னை அறியாமலே அவர்களை தன்னுள் இழுத்துக் கொள்ளும்.ராகவ்வும் அப்படித்தான். இருவாரங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னை அறியாமலேயே சுஷ்மித்தாவிடம் நெருங்க ஆரம்பித்தான்.அவனது மனதில் எழத் தொடங்கிய சலனங்களை அடக்கி மீண்டும் அதே தவறை செய்யத் தொடங்கினான்.

தன்யாவோ எதையும் அறியாமலே எப்பொழுதும் போல் கணவனின் மீது அதீத நம்பிக்கையுடனும், அன்புடனும் தனது நாட்களை ஒட்டிக் கொண்டிருந்தாள்.

அன்று சுஷ்மியின் பிறந்தநாள் என்பதால் இருவரும் வெளியே சென்று வர முடிவு செய்திருந்தனர்.முதல்நாளே அவளுக்கு ப்ரேஸ்லெட் ஒன்றை வாங்கி வைத்திருந்தான்.அவர்கள் செல்ல வேண்டிய ஹோட்டலுக்கு வழக்கம் போல் அவள் முன்னே சென்று விட, இவன் மெதுவாக கிளம்பி சென்றான்.

ஒருமணி நேரம் அவளுடன் பிறந்தநாளை கொண்டாடி, உணவருந்திவிட்டு இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர்.

அன்று நண்பர்களுடன் உணவருந்த வெளியே வந்திருந்த விஜய், ராகவ் சென்ற ஹோட்டலுக்கு எதிர் சாலையிலிருந்த இருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தான். நண்பர்களுடன் பேசியபடி வெளியே வந்தவனின் பார்வையில் ராகவ்வும்,அவன் தோளில் சாய்ந்திருந்த சுஷ்மிதாவும் பட்டனர்.ராகவ் தானா என்ற சந்தேகத்துடன் பார்த்தவனது விழிகளில், அவர்களது நெருக்கம் நெருடலை ஏற்படுத்தியது.

இன்றைய சூழலில் கையைப் பிடித்துக் கொள்வதும், லேசாக அணைத்துக் கொள்வதும் இயல்பான ஒன்றாகி போனது என்றாலும்,ஏனோ அவன் மனம் சற்று தடுமாறச் செய்தது.சரி அண்ணனை அழைத்து கேட்டு விடுவோம் என்றெண்ணியவன் அலைப்பேசியில் ராகவை அழைத்தான்.

“ஹலோ அண்ணா?”

“என்னடா இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்கே?என்றான் எடுத்தவுடனே.

“உங்க ஆபிஸ் பக்கம் ஒரு வேலையிருக்கு.அதுதான் பார்க்கலாமான்னு கேட்க தான் போன் பண்ணினேன்”.

“இந்த நேரத்துக்கு நான் எங்க-டா போவேன்.ஆபிஸ்ல தான் இருக்கேன்.நீ வா” என்றான்.

அவனது பொய்யைக் கண்டு அதிர்ந்து சரி எவ்வளவு தூரம் தான் போகுது என்று பார்ப்போம் என்றெண்ணி “அப்போ ஒரு பத்து நிமிஷத்தில் வரேன்னா” என்றான்.

அதைக் கேட்டு சற்று பதட்டமான ராகவ் “நான் ஒரு இம்போர்டன்ட் காலில் இருக்கேன்-டா. நீ ஒரு ஒரு மணி நேரம் கழித்து வந்தா ப்ரீயா இருக்கும்” என்றான்.

“சரின்னா” என்று சொல்லி வைத்தவனின் மனதில் மேலும்  நெருடல் அதிகமானது.

ராகவும் விஜயிடம் பேசி முடித்துவிட்டு, ஆட்டோவை பிடித்து சுஷ்மிதாவை முதலில் அனுப்பி விட்டு தனது காரிலேறி சென்றான்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயின் மனதில் அண்ணனின் நடத்தையில் தவறிருப்பது உறுதியடைந்தது.அவனால் நம்பவே முடியவில்லை.தன்யாவை எந்த அளவிற்கு காதலித்து மணம் முடித்தவனால் எப்படி இன்னொருத்தியிடம் ஒன்ற முடியும் என்று எண்ணி மனம் புழுங்கினான்.

மனதிலேறிய பாரத்தின் காரணமாக தலையும் கனக்க ஆரம்பித்தது.தன் அண்ணனா இப்படி என்று அவனால் நம்ப முடியவில்லை.தான் கண்டது உண்மையாக இருக்க கூடாது, ராகவ் ஒருநாளும் அண்ணிக்கு துரோகமிழைக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டான்.

நண்பர்களிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பியவன்.ராகவ்வின் அலுவலகம் இருக்கும் சாலையில் சென்று காரை நிறுத்திவிட்டு ஒருமணி நேரம் ஆகும் வரை அதிலேயே காத்திருந்தான். அதற்குள் பலவிதமான சிந்தனைகள் அவன் தலையை உலுக்க, தலைவலி போடு போடென்று போட்டது.

சரியாக ஒருமணி நேரம் கழித்து அவன் அலுவலகத்தில் நுழைந்தான்.விஜயை கண்டதும் எப்பொழுதும் போல் மிக இயல்பாக வரவேற்ற ராகவை கண்டவனுக்கு  மேலும் குழப்பம் வந்தது.தான் கண்ட காட்சிகள் உண்மை தானாவென்று.

“சொல்லு-டா உன் வேலை எப்படி போயிட்டு இருக்கு?”

தலைவலி தாங்க முடியாமல் முகத்தை லேசாக சுளித்துக் கொண்டு “நல்லா போகுது.ராகவ் எனக்கு ஒரு காப்பி சொல்லேன்.வெயிலில் சுத்தினதுல செம தலைவலி” என்றான்.

காப்பி வந்தததும் குடித்தவனுக்கு சற்று தெளிவு பிறந்தது “அப்புறம் சொல்லு ராகவ்.வேளையில் ரொம்ப பிஸியா.ஞாயிற்றுகிழமை கூட நீ அங்க வரதில்லை.அம்மா புலம்பி தள்றாங்க” என்றான் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே.

“ஆமாம்-டா! முக்கியமான ப்ராஜெக்ட்..கொஞ்சம் அசந்தாலும் நம்மளை போட்டு தாளிச்சிடுவானுங்க.உனக்கும் தான் தெரியுமே.நீயும் இந்த பீல்ட் தானே” என்றான் சலிப்பாக.

ராகவ் பேசியதில் எந்தவித பொய்யோ, நடிப்போ தெரியாததால்,இன்று ஹோட்டலில் பார்த்ததை எப்படி கேட்பது என்று யோசித்தான்.

“இன்னைக்கு கூட பாரு! எங்க டீம் மெம்பருக்கு பர்த்டே, எல்லோரும் போய் கொண்டாடிட்டு அரைமணியில் வந்துட்டோம்.இன்பாக்ட் நீ போன் பண்ணும் போது அங்கே தான் இருந்தேன்” என்றான் லேசான புன்னகையுடன்.

ராகவ் அப்படி சொன்னதும் அதுவரை மனதிலிருந்த குழப்பம் நீங்கி “ஒ..அப்படியான்னா.ஆனா ஆபிஸ்ல தான் இருக்கேன்னு சொன்னீங்களே?”என்று கேட்டான்.

“ஹாஹா..அதுவா..நானில்லாத நேரம் நீ வந்து, அண்ணன் எங்கேயோ சுத்தப் போயிட்டார்-னு அண்ணி கிட்ட போட்டு குடுத்துட்டேனா?”

அவனது கேலியில் மேலும் மனமிளக “ஏன்னா இப்படி?”

“அதுக்கில்லடா..நான் ஹோட்டல்ல இருந்து வர நேரமாகும்-னு தெரியும்.அதுதான் அதை சொல்லாம வேலையிருக்குன்னு சொன்னேன்.நான் வெளியில இருக்கேன்னு சொல்லியிருந்தா நீ வந்திருக்க மாட்ட அதுக்கு தான் அப்படி சொன்னேன்” என்றான்.

தனது மனதிருந்த கேள்விகளுகெல்லாம் ராகவின் பதில் திருப்தியளிக்க, பாரம் குறைந்து நிம்மதியடைந்தான்.

சரி..டைம் கிடைக்கிறப்போ அண்ணியை அழைச்சுகிட்டு வாண்ணா”என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

வெளியில் சென்ற விஜய் ‘ஊப்ஸ்..நல்லவேளை எதுவும் கேட்காம போனனே.ஒரு நிமிஷம் தப்பா நினைச்சிட்டேன் ‘ச்சே’..என்று தன்னையே கோவித்துக் கொண்டவன் ‘அண்ணனாவது அண்ணிக்கு துரோகம் செய்றதாவது.இனிமே இப்படி எல்லாம் யோசிக்க கூடாது’ என்று சமாதானப்படுத்திக் கொண்டு சென்றான்.

தனதறையில் கண்மூடி நாற்காலியில் அமர்ந்திருந்த ராகவின் மனமும் பெரிய இக்கட்டிலிருந்து தப்பித்து வந்தது போலிருந்தது. ‘நான் மட்டும் எதிர்த்த ஹோட்டலில் விஜயை பார்க்காம போயிருந்தா என்னவாகியிருக்கும்.இந்நேரம் என் முகத்துக்கு நேரா கேட்டே இருப்பான்.எப்படியோ இன்னைக்கு தப்பிச்சாச்சு.இனி, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்’ என்று எண்ணிக் கொண்டான்.

Advertisements