மறக்க முடியாத பஸ் பயணம்!

ரெண்டாயிரத்து ஏழு ஆகஸ்ட் மாதம் நான் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த நேரம்….ஆடி மாதம் எங்கள் வீட்டு அருகில் உள்ள கோவிலில் திருவிழா. நாங்கள் திருவிழா முடித்து விட்டு என் பாட்டியை பார்க்க ஊருக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.

ஊர் பயணம் எதிர்பாராமல் முடிவானதால் எந்த அரசு பேருந்திலும் டிக்கெட் கிடைக்காமல் ஒரு தனியார் பேருந்தில் கிடைத்தது. நாங்கள் கிளம்புவதற்கு முதல் நாள் இரவு கோவிலில் சாமி வீதி உலா . அப்போது கோவில் ஐயர் வந்து என் அம்மாவிடம் மாமி அம்மனுக்கு இன்றும் ஒரு திருமாங்கல்யம் உபயதாரர் கொடுத்து இருக்காங்க நீங்க அதை பத்திரமா வைங்க நீங்க ஊருக்கு போய்விட்டு வந்தது வாங்கிக்கிறேன்னு என்று சொல்லி அம்மனின் திருமாங்கல்யத்தை என் அம்மா கையில் கொடுத்து விட்டு சென்றார்.

மறுநாள் நாங்கள் கிளம்பும் நேரம் வந்தது . என் பெட்டியை எடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க பெட்டியின் பூட்டு உடைந்து அது திறக்கவும் இயலாமல் சரியாக மூடவும் இல்லாமல் பெரிய போராட்டத்திற்கு பிறகு சரி ஆனது.

நானும் என் அம்மாவும் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு முன் அம்மனை தரிசிக்க வேண்டி கோவிலுக்கு சென்றோம். இரவு எட்டு மணி பொதுவாக அந்த நேரத்திற்கு கோவிலில் யாரும் இருக்க மாட்டார்கள் ஆனால் அன்று யாரோ அந்த நேரத்திற்கு பிரசாதம் கொண்டு வந்ததால் அம்மன் திரை போட்டு மூடப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் என் அம்மா மனதில் லேசான சலனம் என்ன இது எல்லாமே தடங்காலாக அமைவது போல் இருக்கிறதே என்று.

பேருந்து நிலையத்திற்கு சென்று இறங்கி எங்கள் பேருந்தை கண்டுபிடித்து இருக்கைகளில் அமர்ந்தோம். என் அப்பாவிற்கு படிகளின் அருகில் இருக்கும் ஒற்றை இருக்கையும் அதே நேர் வரிசையில் என் அம்மாவும் என் பெரிய பெண்ணும் அதற்கு பின் புறம் நானும் என் சிறய மகளும் அமர்ந்து கொண்டோம்….

பேருந்து சரியாக ஒன்பதரை மணிக்கு கோயம்பேட்டில் இருந்து கிளம்பியது . எனக்கு இரவு நேர பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். பேருந்து செல்லும் வேகத்திற்கு வீசும் சிலு சிலுவென்று வீசும் காற்றும் , ரோட்டோரங்களில் தெரியும் சிறிய விளக்கொளியும் மனதிற்கு ரம்யத்தை கொடுக்கும்….

சரியாக பன்னிரண்டு மணிக்கு திண்டிவனத்தை அடைந்தது பேருந்து. ஓட்டுனரும் மற்ற பயணிகளும் சிரம பரிகாரம் செய்து கொள்ள இறங்கினார்கள். அப்பா எழுந்து காப்பி, டீ, ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு சென்றார்கள். ஒரு பதினைந்து நிமிடத்திற்கு பிறகு வண்டியில் இருந்த மற்ற்றொரு ஓட்டுனர் வண்டியை எடுத்தார் .முதலில் ஓட்டியவர் ஒய்வு எடுக்க பின் இருக்கைக்கு சென்று விட்டார்.

வண்டி சீரான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது என் சிறிய மகள் என் மடியில் படுத்து உறங்கிவிட்டாள் . என் அப்பா எப்போதுமே உள்ளூர் பேருந்துகளாக இருந்தால் கூட சட்டென்று உறங்கிவிடுவார்கள். நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். நான் வழக்கம் போல வெளியில் தெரியும் இருட்டையும் காற்றையும் ரசித்து கொண்டிருந்தேன்….

அந்த காற்று என்னை தாலாட்டுவது போல் இருக்க என்னை அறியாமல் என் கண்கள் தூக்கத்தை தழுவியது. நல்ல உறக்கத்தில் இருந்த நான்  கடலூர் அருகே போகும் போது வண்டி எதோ ஆடுவது போலவும் யாரோ ஒரு பெண்மணி ஐயோ ஐயோ என்று கத்துவது போல் உணர்ந்து எழுந்தேன்.  வண்டி தாறுமாறாக ஓடிகொண்டிருந்தது எனக்கு எதுவும் புரியவில்லை என் மகள் மடியில் இருந்ததை மறந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள எழுந்து நின்று பார்த்தேன்.

சட்டென்று புரிந்தது விபத்து போலிருக்கிறதே என்று உணரும் முன் மேலிருந்து கீழே விழுவது போல் இருந்தது .முன் இருக்கையில் இருந்த கம்பி என் தாடையில் ஓங்கி அடித்தது நான் என் உணர்வை இழந்தேன்.

சிறிது நேரத்திலேயே எனக்கு மயக்கம் தெளிந்தது. எங்கு பார்த்தாலும் ஐயோ அம்மா என்று ஓலம். என்ன நடக்கிறது சற்று நிதானித்து தெரிந்து கொண்டேன். பேருந்து ஒரு பெரிய பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்து நின்றது . நான் அவசர அவசரமாக என் சிறிய மகளை தேடினேன் . நன் எழுந்து நின்று பார்த்த போது என் இருக்கைக்கு அடியில் சென்றிருக்கிறாள். அதனால் அவளுக்கு அடியேதும் படவில்லை . அடுத்து என் அம்மாவையும் பெரிய பெண்ணையும் பார்த்தேன். அம்மா தன் இருக்கையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டு ஓட்டுனரின் பின் இருக்கும் தடுப்பின் மீது மோதி வாய் கிழிந்து ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தார்கள். அம்மாவின் தலைக்கு மேலே பின் இருக்கை அடியோடு பெயர்ந்து வந்து அதன் மேலே உள்ளவரும் மயங்கி இருந்தார்.என் பெரிய பெண்ணோ எந்த விபத்தும் நடக்காத மாதிரி இருக்கையிலேயே அமர்ந்து இருந்தாள்.

அதன் பிறகே என் அப்பாவின் இருக்கையின் பக்கம் திரும்பினேன். ஆனால் அப்பாவை காணவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சற்று நிதானித்து இருக்கைகளுக்கு கீழே தேட துவங்கினேன். என் இருக்கைக்கு கீழே கால்கள் தெரிந்தது. குனிந்து பார்த்த போது முகமெங்கும் ரத்தம். ஒரு வினாடி என் சுவாசம் நின்று மீண்டு திரும்பியது.

அம்மாவோ கதற ஆரம்பித்தார்கள். நான் மெதுவாக என் கையை அப்பாவின் நெஞ்சின் மீது வைத்து பார்த்தேன் . சுவாசித்து கொண்டிருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. உடனே செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

அதற்குள் அந்த பகுதியில் இருந்த மக்கள் வந்து எங்களை பேருந்தில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுப்பட்டனர். அதற்குள் என் அம்மாவின் தலைக்கு மேல் இருந்த பையனின் இருக்கை அப்படியே கண்ணாடியின் மேல் விழுந்து வெளியில் போய் விழுந்தது. அந்த பையனின் முதுகு முழுவது கண்ணாடி துகள்கள் குத்தி ரத்தம்.

பிறகு அந்த உடைந்த பகுதியின் வழியே எல்லோரையும் வெளியே வர சொன்னார்கள். என் அப்பாவையும், இன்னொரு வயதானவர் இதய சிகிச்சை செய்தவர் இருவரும் உணர்விழந்த நிலையில் இருந்ததால் இருவரையும் கஷ்ட்டப்பட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதில் என் அப்பாவிற்கு தான் அதிக அடி. அதற்குள் அதிக காயம் அடையாதவர்கள் அந்த பக்கம் வந்த பேருந்துகளை நிறுத்தி தங்களின் உடமைகளுடன் சென்று விட்டனர்.

கீழே இறங்கியதும் என் அப்பாவின் முகத்தை பார்த்த எனக்கு அதிர்சியாயிற்று. என் அம்மாவையும் என் மகள்களையும் அப்பாவை பார்க்க விடாமல் வேறொரு இடத்தில் அமர வைத்துவிட்டு . என் அப்பாவிடம் சென்று அமர்ந்து கொண்டேன். அந்த பக்கம் இருந்த ஒரு கிராமத்து பெண்மணி எல்லோருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து கவலைபடாதீர்கள் என்று ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்.

வண்டி கீழே விழும்போதே அந்த ஓட்டுனர் குதித்து ஓடிவிட்டார். ஆனால் முதலில் இருந்த ஓட்டுனர் அங்கிருந்த அனைவருக்கும் உதவி செய்து கொண்டிருந்தார். சிறுது நேரத்தில் காவல்துறை , மருத்துவ வண்டிகள் என்று எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்.

அவரவருக்கு அவரவர் அவசரம் எல்லோரும் தாங்கள் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று ஆம்புலன்சில் ஏறி விட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி அப்பாவை பார்த்து விட்டு நிறைய அடி அவருக்கு பட்டு இருக்கு அவரை விட்டு விட்டு எல்லோரையும் ஏற்றுக்கிரீர்களே என்று சொல்லி என் அம்மாவையும் அப்பாவையும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

அந்த இடமே காலியாகி போயிற்று. நானும் என் பெண்கள் மட்டும் ரோட்டோரம் அப்படியே அமர்ந்து இருந்தோம். எங்கள் கூடவே அந்த கிராமத்து பெண்மணியும் அமர்ந்திருந்தார். இவ்வளவு அமர்களத்தில் ஒரு அதிசயம் என்னவென்றால் என் அப்பாவின் செல்போன் அவர்களின் சட்டையிலேயே இருந்தது. மற்றவர்களுக்கு எல்லாம் எங்கோ போய் விட்டது.

அதனால் என் உறவினர்களுக்கும் என் கணவருக்கும் தகவல் தெரிவித்து விட்டேன். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஆம்புலன்சில் இடமில்லை நான் மருத்துவமனைக்கு தான் போகிறேன் என் வண்டியிலேயே வந்திடுங்க என்றார். நானும் கடவுள் மேல் பாரத்தை போட்டு அவருடன் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கு சென்றதும் மருத்துவர் அப்பாவிற்கு முகம் முழுவது சிதைந்து போய் இருக்கிறது .இங்கு ஒன்றும் செய்ய முடியாது சென்னைக்கு தான் கொண்டு செல்லவேண்டும் என்று கூறினார். ஆனால் உடனே மூக்கை மட்டும் தைக்கவேண்டும் என்று சொல்லி மயக்கமருந்து கூட கொடுக்காமல் தைத்தார்கள்.

இவ்வளவிற்கும் அப்பா தெளிவான சிந்தனையோடு இருந்தார்கள். மருத்துவர்கள் கேட்க்கும் கேள்விக்கு பதில் அளித்து கொண்டு. i am alright டாக்டர் என்று சொல்லி கொண்டே இருந்தார்கள்.

பிறகு என் அம்மாவிடம் கேட்டு எங்களுக்கு தெரிந்த மருத்துவர் உதவியுடன் சென்னை போவதற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தோம்.  காலை விடிந்தவுடன் என் பெரியப்பாவும் அத்தை மகனும் வந்து இறங்கிய நேரம் என் அப்பா கட கடவென்று ஒரு ரெண்டு மூன்று பக்கெட் அளவிற்கு ரத்த வாந்தி எடுத்தார்கள். எங்களுக்கு சர்வமும் நடுங்கி போய் விட்டது. மருத்துவர் எவ்வளவு சீக்கிரம் அழைச்சிட்டு போறீங்களோ அவ்வளவு நல்லது என்று விட்டார்.

உடனே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சென்னைக்கு கிளம்பினோம். அது பெயருக்கு தான் ஆம்புலன்சே தவிர அதில் ஒன்றுமே இல்லை. ட்ரிப்ஸ் பாட்டில் மாட்டுவதற்கு கூட வழி இல்லை. எங்களுடன் வந்த என் அத்தை பையன் சென்னை வரும் வரை தன் கையிலேயே உயர்த்தி பிடித்தவண்ணம் வந்தார்.

வழி எல்லாம் பக்கெட் பக்கெட் ஆக ரத்த வாந்தி நாங்கள் என் பெட்டியில் இருந்த ஆடைகள் கொண்டு துடைத்து கொண்டே வந்தோம். சென்னையில் இருந்த உறவினர்களும் அந்த மருத்துவரும் முன்னரே மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்.

வந்த இறங்கியவுடன் என் அனைத்து உறவுகளும் அரண் போல் நின்று அடுத்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை பார்த்து கொண்டனர். சிகிச்சைகள் வேகமாக நடந்து இரண்டு நாட்கள் கழித்து பிளாஸ்டிக் surgery செய்தார்கள். கிட்ட தட்ட நான்கு மணி நேரம். இனி பயமில்லை என்று மருத்துவர்கள் அறிவித்த போது தான் நிம்மதியாக உணர்ந்தேன்…………

ஒன்பது  வருடங்கள் ஆனாலும் இல்லை  எத்தனை வருடங்கள் ஆனாலும் அனுபவித்த வலி என்றுமே மறக்காது…….இன்றும் பேருந்தில் போக வேண்டும் என்றால் சிறிது நடுக்கம் இருக்க தான் செய்கிறது……. அன்று யார் என்றே தெரியாத மனிதர்கள் எதையுமே எதிர் பார்க்காமல் செய்த உதவி தான் நாங்கள் இன்று இருக்கிறோம்….

Advertisements