cute-baby-photoscute-baby-picscute-babies-photos-3

                      என் வாழ்வின் கானல் நீராய்

                     தெரியும் உன் வரவு – உனக்காக

                     ஏங்கித் துடித்திட இரு நெஞ்சங்கள்

                     உண்டு – கண்ணே என் கனவில்

                     தூரிகை கொண்டு வரைந்த ஓவியமாக

                     காண வேண்டும் உன்னை….                   

கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து இருளில் வெளியே தெரியும் காட்சிகளை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் தேவி. பேருந்தின் வேகத்திற்கு வெளியில் மரங்களும் வீடுகளும் ஓடுவது போல் தெரிந்து கொண்டிருந்தது . ஆனால் அவள் மனமோ இறைவனிடம் தஞ்சம் அடைந்திருந்தது.

இன்னும் எத்தனை காலம் இப்படி எங்களை சோதிக்க போகிறாய் நாங்கள் கேட்பது எங்களுக்கென்று ஒரு சின்ன சிறிய உலகத்தை மட்டும் தானே…..ஏன் இப்படி எங்களை அலைகிழிக்கிறாய்என்று எண்ண எண்ண மணம் பாராமாகி போனது.

அதன் காரணமாக பக்கத்தில் இருந்த செல்வாவின் தோளில் சாய்ந்தாள். அவள் தோள் சாய்ந்ததும் தூங்கிக் கொண்டிருந்தவன் லேசாக திரும்பி அவளை பார்த்து விட்டுதூங்குமா நாளைக்கு போய் ஆபிஸ்க்கு வேற போகணும் என்று சொல்லி விட்டு உறங்கி விட்டான்.

இருவருக்கும் திருமணம் நடந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டன. ஆரம்பத்தில் எல்லோரையும் போல மிக அழகாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கை குழந்தை என்னும் புள்ளியில் அப்படியே ஸ்தம்பித்து போனது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வேதனைகளை தாங்கிக் கொண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இருவரும். குழந்தை வரம் வேண்டி  போகாத கோவில்கள் இல்லை பார்க்காத சிகிச்சைகள் இல்லை ஆனால் இறைவன் மட்டும் அவர்கள் விஷயத்தில் கண்ணைத் திறக்கவே இல்லை.

இப்பொழுது கூட கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் கருவலச்சேரியில் உள்ள கற்பரட்சாம்பிகை கோவிலுக்கு சென்று விட்டு தான் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் இருந்து ஆரம்பித்தது கேள்விகள் இன்னும் முழுகிட்டு தான் இருக்கியா என்றும் ஒரு வருடம் ரெண்டு வருடங்கள் ஆன பிறகு டாக்டரை பார்க்கலாமே என்றும் ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்தவற்றை சொல்ல ஆரம்பித்தார்கள்.

பொதுவாகவே தேவிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை விருப்பம். திருமணத்திற்கு முன்பு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகள் எல்லாம் அவளுடன் தான் இருக்கும். அதற்காகவே அடிக்கடி அம்மாவிடம் திட்டு வாங்குவாள். சிலர் தாங்கள் வேலை செய்வதற்காக குழந்தைகளை அவளிடம் விட்டு செல்லும் போது அம்மா கடுப்பாகி விடுவார்.

 

திருமணம் என்றவுடன் அவள் மனதில் வந்தது மாப்பிள்ளையை பற்றிய கனவு இல்லை எனக்கே எனக்காக ஒரு குழந்தை பிறக்கும் என்ற எண்ணமே. சின்னஞ்சிறிய குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்துக் கொண்டு அவர்களின் மழலை சிரிப்பை பார்த்து மகிழ்வாள்.

 

இப்படி பல்வேறு எண்ணங்களுடன் போராடிக் கொண்டே தூக்கம் இல்லாமல் கணவன் முகத்தை திரும்பி பார்த்தாள். எப்படி எந்த கவலையும் இல்லாமல் தூங்க முடிக்கிறது என்று எண்ணம் தோன்றாமல் இல்லை. நாளை காலையில் போய் இறங்கியதுமே அத்தை அபிராமியின் வசவுகளை கேட்க வேண்டும்.

 

ஆரம்ப நாட்களில் நன்றாக இருந்தவர் தான் ஆனால் குழந்தை பிறப்பு தள்ளி போக போக தன் குணத்தை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். ஆனால் எல்லோருக்கும் தெரியும் வகையில் அவருடைய பேச்சுக்கள் இருக்காது. பதமாகவும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவும் இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்க்கு வித்யாசமாக எதுவும் தெரியாது. ஆனால் யாரை சொல்கிறாரோ அவருக்கு நெஞ்சின் அடி ஆழம் வரை சென்று தாக்கும்.

 

மாமியாரின் பேச்சிற்கு முழு ஆதரவு பெரிய நாத்தனார் சாரதாவிடம் இருந்து கிடைத்தது. மாமனார் வேதாச்சலதுக்கோ தன் மனைவி செய்வது பிடிக்காமல் பல சமயங்களில் எதிர்ப்பது உண்டு ஆனால் அப்பொழுது எல்லாம் உடல்நலம் சரியில்லாமல் போவது போல் நாடகமாடி அவர் வாயை அடைத்து விடுவார் அபிராமி. அதனால் மருமகளின் நிலையை கண்டு வேதனை பட மட்டும் தான் முடியும் அவரால். மகனிடம் சொல்லவும் தயக்கம்.

 

இப்படி பல எண்ணங்களுடன் போராடியவள் விடியும் நேரம் தன்னை அறியாமலேயே உறங்கி விட்டாள். தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் செல்வா எழுப்ப இருவரும் பையை எடுத்துக் கொண்டு இறங்கினர். சைதாபேட்டையில் இறங்கி ஆட்டோ பிடித்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தனர். ஐந்து மணி தான் ஆகி இருந்ததால் மாமனார் வந்து கதவை திறந்து விட்டார்.

 

“என்னப்பா தரிசனம் நல்லா கிடைச்சுதா?” 

 

‘ம்ம்ம்……..ஆச்சுப்பா…”

 

“சரி ரெண்டு பெரும் போய் தூங்குங்க ஏழு மணிக்கு எழுந்தா போதும். ஏம்மா தேவி நீ இன்னைக்கு ஆபீஸ் போகனுமா?”

 

“ஆமாம் மாமா ஏற்கனவே நிறைய லீவ் போட்டாச்சு…வேற வழியில்ல போயாகனும் மாமா.”

 

‘சரிம்மா போய் படு இன்னைக்கு நீ எழுந்து ஒன்னும் பண்ண வேண்டாம் உங்க அத்தை எல்லாம் செஞ்சு வச்சிடுவா.நீ மெதுவா எழுந்து கிளம்பு.”

 

“சரி மாமா…” என்று சொல்லி விட்டு அறைக்குள் வந்தவள் செல்வாவை தேட அவன் படுத்து உறங்கி அடுத்த ஜாமதிற்கு சென்றிருந்தான். அவன் உறங்குவதை பார்த்ததும் உதட்டில் மெல்லிய சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது. ‘பஸ்லேயும் அவ்வளவு தூங்கிட்டு இங்கேயும் வந்து தூங்குரதை பாரு என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.’

 

குளியலறைக்கு சென்று சுத்தபடுத்திகொண்டு வந்தவள் செல்வாவின் அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை அறியாமலேயே கைகள் உயர்ந்து அவன் சிகையில் விளையாட தொடங்கியது. எந்த கலக்கமுமில்லாது குழந்தை மாதிரி தூங்குபவனை எண்ணி நெஞ்சம் மருகியது. கடவுளே இப்படி ஒரு அற்புதமான கணவனை கொடுத்து என் வாழ்க்கையை பூரிப்படைய செய்த உனக்கு எனக்கென்று ஒரு குழந்தையை கொடுக்க மனமில்லையோ என்று மனமோ ஏங்கியது. அதன் பலனாக கண்கள் கலங்கி கண்ணீர் விழுந்து விடுவேனோ என்று பயமூருத்தியது.

 

அவளின் தொடு உணர்வில் முழித்துக் கொண்டவன் அவளின் உணர்வுகளை முகமதில் கண்டு”என்னடா தூக்கம் வரலையா என்று கேட்டு அவளிடையில் கையை வைத்து தன்னருகே இழுத்துக் கொண்டான்.”

 

அவன் முழித்துக் கொண்டான் என்றறிந்ததும் தன் உணர்வுகள் அவனை சென்றைடைய கூடாது என்றெண்ணி தன் உள்ளத்து வேதனையை அவசரமாக மறைத்து ”ம்ம்..இந்த கும்பர்கணனை பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்.பஸ்லேயும் தூங்கி இங்கே மாமா கிட்டே பேசிட்டு வரதுக்குள்ள அடுத்து ஒரு தூக்கமும் போட்டாச்சு.”

“ஆமாம் நீ வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.நீ இப்போ தான் உங்க மாமா கிட்ட நின்னு எல்லா கதையும் பேசிகிட்டு இருந்த அதுதான் தூங்கிட்டேன்.”

 

“சரி சரி நம்பிட்டேன்.எனக்கு தூக்கம் வருது.”

 

“அதெல்லாம் முடியாதுங்க மேடம் தூங்கிகிட்டு இருந்தவனை தலையை கலைச்சு விட்டு எழுப்பிட்டீங்க இனி அவஸ்தை உனக்குத்தான்.”

 

“ப்ளீஸ் செல்வா ஆபீஸ்க்கு வேற போகணும் டையர்டா இருக்கு பா.”

 

‘தூங்கிகிட்டு இருந்தவனை சைட் அடிச்சு கிளப்பி விட்டுட்டு இப்போ கெஞ்சினா நாங்க விடுவோமா.அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் செல்லம் என்று கொஞ்சி கெஞ்சி அவன் காரியத்தை சாதித்துக் கொண்டே படுத்தான்.”

 

ஏழு மணிக்கு அலாரம் அடிக்க வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள். இடையில் கையை போட்டுக் கொண்டு உறங்கி கொண்டிருந்த செல்வாவின் உறக்கம் தடைபட “ம்ச்..ம்ச்…இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு தேவி என் கூட தானே ஆபீஸ்க்கு போற இப்போ என்ன அவசரம்.”

 

முடியை கொண்டை போட்டுக் கொண்டே ”இல்லப்பா அத்தை தனியா எல்லாம் செஞ்சு கிட்டு இருப்பாங்க நான் போய் ஹெல்ப் பண்ணனும் என்று சொல்லி குளியறைக்குள் போய் விட்டாள்.”

 

குளித்து முடித்து ஆபீசிற்கு கட்டி செல்லும் புடவையை அணிந்து கொண்டு தலையை பின்னி ஒரு ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள். சமையலறையில் அபிராமி மும்மரமாக சமையல் செய்து கொண்டிருந்தார்.

 

அவளை பார்த்ததும் ‘வாம்மா திருப்பள்ளிஎழுச்சி ஆச்சா? இந்த காலத்து பொண்ணுங்களே எப்படி தான் இப்படி இருக்கீங்களோ? நாங்க எல்லாம் எங்க வெளில போயிட்டு வந்தாலும் மாமியாருக்கு பயந்து ஓய்வு எடுக்காம வேலை செய்வோம்.ம்ம்ம்.”

 

அவரின் வார்த்தைகள் நெஞ்சை தைத்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது அங்கு மேடை மேல் தேங்காய் துருவுவதற்காக வைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதை செய்ய ஆரம்பித்ததாள்.

 

“இந்தா காபியை குடிச்சிட்டு வாஷிங் மெஷின்ல துணியை போட்டு விட்டுடு. சமையல் எல்லாம் முடிச்சிட்டேன். இந்த பொரியலுக்கு தேங்காய் போட வேண்டியது மட்டும்தான் பாக்கி. அப்படியே இந்த பாத்திரத்தையும் தேச்சு வச்சிடு இன்னைக்கு வேலைக்காரி வர மாட்டேன்னு சொல்லிட்டா.”

 

அபிராமி கொடுத்த காபியை அப்படியே வாயில் கவிழுத்துக் கொண்டு அவர் சொன்ன வேலைகளை முடிப்பதற்குள் எட்டரை மணி ஆகி இருந்தது. நடுவில் செல்வாவை எழுப்பி காப்பியை கொடுத்து குளிக்க அனுப்பிவிட்டு விட்ட வேலையை தொடரும் போது எதிர்வீட்டு ரேகா வந்து தன் குழந்தையின் பிறந்த நாளுக்காக அழைப்பு விடுத்தாள்.

 

“எங்க வீட்டுல என்ன குழந்தையா இருக்கு, நீ ஏன் மா எங்களை எல்லாம் கூப்பிட்டு கிட்டு. குழந்தைங்க உள்ள வீட்டில் கூப்பிடலாமே.”

“இல்லை ஆன்டி தேவிக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம் அதுதான் அவ வந்தா என்ஜாய் பண்ணுவான்னு தான் கூப்பிட வந்தேன்.”

 

“ஆமாம் நீ சொன்னது சரிதான் இப்படி அடுத்த வீட்டு குழந்தையை கொஞ்சி ஆசையை தீர்த்துக்க வேண்டியதுதான்.”

 

மாமியாரின் பேச்சில் முகம் சுணங்கிய தேவியை பார்த்தது கண்களாலேயே சாரி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் ரேகா.

 

“தேவி டிபன் ரெடியா? நேரமாச்சு நீ இன்னும் கிளம்பலையா?” என்று கேட்டுக் கொண்டே வந்து டைன்னிங் டேபிளில் அமர்ந்தான்.

 

“எங்கேப்பா நானும் முதலில் இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ போய் கிளம்பு தேவி இந்த வேலை எல்லாம் வேலைகாரி வந்து பார்த்துக்குவான்னு எங்கே கேட்கிறாள் உன் பொண்டாட்டி. எனக்கு பார்த்து பார்த்து செய்யணுமாம் பாரு கலைச்சு போய் நிக்கிறா. ஊர்லே இருந்து வந்தவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல கேட்க மாட்டேங்கிறா.”

 

வேதாச்சலம் திரும்பி மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு மருமகளை பார்த்தார். முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது தனக்கும் செல்வாவிற்கும் மதிய உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். தன் மனைவி மேல் கோவம் வந்தது குழந்தை பிறக்காதது இமாலய குற்றம் போல் மருமகளை அவள் படுத்தும் பாட்டை நினைத்து மனம் வருந்தத்தான் செய்தது.

 

“நீயும் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு போ தேவி. நேரமாயிடும் இல்ல.அப்புறம் இந்த புடவையை மாத்திக்கோ ஒரே ஈரமா போச்சு.”

சரி அத்தை என்று சொல்லியவள் ரெண்டு இட்லியை மென்னு முழுங்கி விட்டு ஓடி போய் சேலையை மாற்றிக் கொண்டு இருவருக்குமான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கீழே போனாள். வழியில் ரேகா அவளை பார்த்து சாரி தேவி என்னால தான உன் மாமியார் உன்னை பேசிட்டாங்க சாரிப்பா என்றாள்.

 

“விடு ரேகா….சாயங்காலம் எத்தனை மணிக்கு வரணும் நீத்து குட்டியோட பர்த்டேக்கு?”

 

“ஆறரை மணியில் இருந்து எட்டு மணி வரை தேவி சீக்கிரம் வந்துடு.”

 

“அப்போ நான் ஒரு எட்டேகாலுக்கு வரேன் ரேகா.”

 

“நோ தேவி சீக்கிரம் வர வழியை பாரு நீத்துவுக்கு  யார் வந்தாலும் தேவி ஆன்டி வரலேன்னா திருப்தி அடையமாட்டா.”

 

“சரி ரேகா நேரமாச்சு செல்வா ஹோர்ன் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க நான் கிளம்புறேன் பை .”

 

அவசரமாக படியில் இறங்கியவள் ஓடி போய் செல்வா பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

 

“என்ன தேவி இது இவ்வளவு நேரம் இன்னைக்கு திங்கள்கிழமை வேற டிராபிக் நிறைய இருக்கும்.”

 

“இல்லப்பா நீத்துவுக்கு பர்த்டே பார்ட்டியாம் அதுதான் ரேகா சொல்லிட்டு இருந்தா.”

 

“ஒ…சரி சரி அப்போ எவனிங் சீக்கிரம் வரணுமா?”

 

“வேண்டாம் மெதுவாவே போய் கிபிட் மட்டும் கொடுத்திட்டு வந்திடலாம்.”

 

அவளிடம் இருந்து அப்படி பதில் வந்தவுடன் முன்னே இருந்த கண்ணாடி வழியே அவள் முகத்தை பார்த்தான். அதில் அவளின் உணர்வுகளை துடைத்த முகம்தான் தெரிந்தது. அதன் பின்னே உள்ள வலியை அவன் மட்டுமே அறிவான்.

 

“தேங்க்ஸ் தேவி என்றான் அவளின் நினைவை அதிலிருந்து மாற்ற.”

 

‘என்ன திடீர்ன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க .”

 

‘அம்மா சொன்னாங்க இல்ல நீ அவங்களை ரொம்ப நல்லா பார்த்துக்குறேன்னு அதுக்குத்தான். எனக்கும் கல்யாணம்ன்ன உடனே உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் இருந்தது வரவ எப்படி இருப்பாளோ அம்மா அப்பா கிட்ட எப்படி நடந்துப்பாளோ என் அக்கா தங்கை கிட்ட நல்ல விதமா பழகுவாளோன்னு. ஆனா நீ வந்த கொஞ்ச நாளிலேயே அந்த பயம் எல்லாம் தேவை இல்லேன்னு நிருபிச்சிட்டே.”

 

அவனின் பதிலுக்கு அவளிடம் இருந்து ஒரு புன்சிரிப்பு மட்டுமே வெளிப்பட்டது. அதை பார்த்தவனுக்கு அவளிடம் எதுவோ குறைந்த மாதிரி இருந்தது.

சிக்னலில் வண்டியை நிறுத்தி நின்றிருந்த போது பக்கத்து வண்டியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு தம்பதியர் நின்றிருந்தனர். அந்த குழந்தையை பார்த்ததும் தேவியின் பார்வை நகரவே இல்லை. இதை எல்லாம் கண்ணாடி வழியே பார்த்தவனுக்கு மனதில் கணம் கூடிப்போனது.

 

அவளை ஆபீஸ்ஸில் இறக்கி விட்டு விட்டு சென்றவன் மனமோ தேவியை சுற்றியே சுழன்றது. அவளின் நினைவுகள் முழுவதும் குழந்தையை சுற்றியே தான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் அதற்கான வழிதான் புலப்படவில்லையே என்று எண்ணிக் கொண்டு சென்றான்.

 

தேவி இரு நாட்கள் விடுமுறைக்கு பின் ஆபீஸ்சிற்குள் வந்ததும் ஜென்னி வந்து அணைத்துக் கொண்டாள்.

 

“வா தேவி நீ இல்லாம ரெண்டு நாளா ஒரே போர். நல்லா சாமி கும்பிட்டுட்டு வந்தியா?”

 

“ம்ம்ம்…நல்லா கும்பிட்டாச்சு ஜென்னி. அப்புறம் ரெண்டு நாளில் ஏதாவது விசேஷம் உண்டா?”

 

“ஒன்னும் இல்லை எப்பவும் போலதான் போச்சு. நம்ம கீதா குழந்தைக்கு பேர் வைக்கிறாங்களாம் அதுதான் எல்லோரையும் வந்து இன்வைட் பண்ணிட்டு போனா நீ வந்தா உன்னையும் வர சொன்னா.”

 

“ஒ..அதுக்குள்ளே அவளுக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆச்சா? எப்படி குழந்தையை விட்டுட்டு வந்தா?”

 

“ஒரு மணி நேரம் அவங்க அம்மா கிட்ட விட்டுட்டு வந்தா பா.”

 

“ம்ம்ம்..சரி வேலையை பாப்போம் ஜென்னி.”

 

“சரி ஆனா நாளைக்கு நீ வருவே இல்ல.”

 

“வேண்டாம் ஜென்னி நான் கிப்ட் வாங்கி கொடுக்கிறேன் நீயே போய் கொடுத்துடு.”

 

“என்ன தேவி இது எத்தனை நாளைக்கு எல்லோரையும் பார்த்து ஓடி ஒளிஞ்சுக்க போற இது போல பேசுறதுக்கு நாலு ஜென்மங்கள் இருக்கத்தான் செய்யும் அதை பத்தி கவலைப்பட ஆரம்பிச்சா நாம வாழவே முடியாது.”

 

‘உனக்கு தெரியாது ஜென்னி அந்த வலியும் வேதனையும். எதுக்கு அவங்களுக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் விடு.”

 

மாலை வரை வேலையில் மூழ்கியவளுக்கு செல்வாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“என்ன மேடம் கிளம்புற ஐடியா இல்லையா? என்னை வர சொல்லிட்டு வராமா இருந்த என்ன அர்த்தம்.”

 

இதோ வந்துட்டேன் செல்வா என்று சொல்லி விட்டு அவசரமாக சிஸ்டமை ஆப் செய்து விட்டு கிளம்பி கீழே வந்தாள். இருவரும் கிளம்பி ஸ்பென்சர் சென்று நீத்துவிற்கு பரிசு வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தனர்.

அங்கு எல்லாவித சைஸ்களிலும் டெட்டி பேர் இருந்தது. அதை பார்த்தவுடன் நீத்துவை விட பெரிய டெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு அதுதான் வாங்க வேண்டும் என்று சிறு குழந்தை போல் அடம்பிடிக்க தொடங்கினாள்.

 

“ஹே என்ன இது அவளை விட பெரிய டெட்டியை வச்சு அவ எப்படி விளையாடுவா?”

 

“உங்களுக்கு தெரியாது செல்வா நீத்துவுக்கு இதுதான் பிடிக்கும். அவளும் என்னை மாதிரி தான் டெட்டியை பிடிச்சிட்டுத்தான் தூங்குவா.”

 

“ஆமாம் இந்த டெடிதான் எனக்கு வில்லனா இருந்துது .”

 

“ச்சே..வெளில வந்து என்ன பேச்சு பேசுறீங்க. சரி இதை பில் போடுங்க நேரம் ஆச்சு நான் வீட்டுக்கு போய் டிபன் செஞ்சு வச்சிட்டு நீத்துவை போய் பார்க்கணும்.”

 

வீடு வந்து சேர்ந்து ரெப்ரெஷ் பண்ணிக் கொண்டு இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள். செல்வா இருக்கும் நேரம் அபிராமி தன்னை வெளிபடுத்திக் கொள்ள மாட்டார்.

 

“செல்வா நானும் அப்பாவும் காவ்யா வீட்டுக்கு போய் பார்த்திட்டு வரலாம்ன்னு இருக்கோம். வளைகாப்பு வேற பண்ணனுமே அதுக்கு அவ கிட்டேயும் மாப்பிள்ளை கிட்டேயும் பேசிட்டு வரோம் அதுக்கு பிறகு ஏற்பாடு பண்ணிடலாம். “

 

“சரிமா நீங்க பேசிட்டு சொல்லுங்க நாம உட்கார்ந்து எவ்வளவு ஆகும் என்ன செலவுன்னு பார்த்து முடிவு பண்ணலாம்.”

 

“தேவி நைட் உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பண்ணிக்கோ நாங்க அங்கே போய் மாப்பிளைக்கும் காவ்யாவுக்கும் செஞ்சு கொடுத்திட்டு அங்கே சாப்பிட்டுகிறோம். முடிஞ்சா நைட் வரோம் இல்லேனா நாளை காலையில வரோம்.”

 

செல்வா போய் ஆட்டோ பிடித்து இருவரையும் ஏத்தி விட்டு விட்டு வந்தான். அதற்குள் தேவி சாமி கும்பிட்டு விட்டு  சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்து விட்டு வெங்காயம் தக்காளியை அறிந்து சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள கூட்டு மாதிரி செய்து கொண்டிருந்தாள்.

 

“ஏன் தேவி செய்யுற ஏதாவது வாங்கிட்டு வந்து சாப்பிட்டு இருக்கலாமே. உனக்கும் ஒருநாள் ரெஸ்ட் கிடைச்ச மாதிரி இருக்கும்.”

 

‘இருக்கட்டுங்க இதுல ஒன்னும் கஷ்டம் இல்லை எனக்கு. நீங்க போய் டிவி பாருங்க நான் செஞ்சு வச்சிட்டு போய் நீத்துவை பார்த்திட்டு வரேன்.”

 

ஓகே என்று சொல்லி விட்டு டிவியை போட்டுக் கொண்டு உட்கார்ந்தவன் அதில் மூழ்க தேவி வேலை எல்லாம் முடித்து விட்டு போய் மைசூர் சில்க் புடவை ஒன்றை அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.

 

‘செல்வா கதவை சாத்திகுங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்லி டெட்டியை எடுத்துக் கொண்டு கதவருகே சென்றாள்.”

 

‘பொறுமையாவே வா தேவி ஒன்னும் அவசரம் இல்லை.”

 

அவனிடம் சரியென்று சொல்லி விட்டு ரேகா வீட்டிற்கு சென்றவள் அங்கு பார்ட்டிக்கு வந்தவர்களில் இன்னும் சிலர் இருப்பதை பார்த்து சற்று தயங்கினாள். அதற்குள் ரேகா வந்து கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றுவிட வேறு வழியில்லாமல் அமர்ந்து கொண்டாள்.

 

தேவியை பார்த்ததும் நீத்து ஓடி வந்து அவளை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து மடியில் அமர்ந்து கொண்டதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். தேவியும் அவளை மடியில் இருத்திக் கொண்டு பேச அதிலும் அவள் வாங்கி வந்த டெடியை பெருமையாக வைத்துக் கொண்டு இருக்கும் நீத்துவை பார்த்தும் எல்லோரும் அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பிளாட்டில் இருக்கும் வயதான அம்மா  ஒருவர் ரேகாவை பார்த்து எல்லோரும் போனதும் புள்ளைக்கு சுத்தி போட்டுடுமா எல்லோர் கண்ணும் ஒருமாதிரி இருக்காது அதுவும் புள்ளை இல்லாதவங்க கண்ணு குழந்தைங்களை உடனே பாதிக்கும் என்றார்.

 

அதை கேட்டு அதிர்ந்தது தேவி மட்டுமல்ல ரேகாவும் தான் ‘என்ன வார்த்தை சொல்லிட்டாங்க சும்மாவே எங்கேயும் வர யோசனை பண்ணும் தேவி என் வீட்டுக்கு தான் ப்ரீயா வந்துகிட்டு இருந்தா இவங்க இப்படி ஒரு வார்த்தையை சொல்லி அவ மனசை காயப்படுதிட்டாங்ளே என்று மனம் நொந்து போனாள்.”

 

அந்த அம்மாள் சென்றதும் சிறிது நேரம் முள் மேல் அமர்ந்திருப்பது போல இருந்தவள் ரேகாவிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். வந்தவள் செல்வாவிற்கு சாப்பாடை எடுத்துக் கொடுத்துவிட்டு ரேகா வீட்டில் கேக் சாப்பிட்டதால் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லித்தான் படுக்கப் போவதாகவும் அங்கிருந்து சென்று விட்டாள்.

சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு தேவி தூங்கி விட்டாளா பார்க்க  அறைக்குள் சென்றவன் அங்கு தேவியை காணாமல் பால்கனி பக்கம் எட்டிப் பார்த்தான். அங்கிருந்த கூடை நாற்காலியில் சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த தேவியின் முகத்தில் துக்கத்தின் சாயல் தெரிந்தது. அதை பார்த்ததும்தான் அவனுக்கு புரிந்தது போன இடத்தில் வழக்கம் போல ஏதோ நடந்து இருக்கிறது என்று.

 

“என்ன தேவிமா தூங்க போறேன்னு வந்த இங்கே வந்து உட்கார்ந்து இருக்கே?”

 

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த்தவள் தூக்கம் வரலப்பா என்றாள்.

 

“ஏண்டா போன இடத்தில யாரும் எதுவும் சொன்னாங்களா என்று கேட்டபடியே அவளருகில் அமர்ந்தான்.”

 

“ஏன் செல்வா நான் நிறைய பாவம் பண்ணி இருப்பேனோ போன பிறவியில அதுதான் எனக்கு குழந்தை வரம் கிடைக்காமலேயே போகுதோ?”

 

“என்னடா இது ஏன் இப்படி பேசுறே?”

 

“நான்..நான்..பார்க்கிற பார்வையில எதுவும் ஆகிடுமா செல்வா நீத்துவுக்கு? எனக்கு அவளை பிடிக்கும் தானே பின்னே ஏன் அப்படி சொல்றாங்க கண்ணு பட்டு போய்டும்ன்னு.”

 

அவள் முகத்தை தன் கைகளில் தாங்கி ”இங்கே பாரு தேவி நீ குழந்தைங்க மேல ஆசை உள்ளவ உன் பார்வையாள குழந்தைக்கு எந்த கெடுதலும் நடக்காது சரியா.”

 

“நமக்கு குழந்தையே பிறக்காதா அந்த சாமி நம்மை மட்டும் ஏன் செல்வா இவ்வளவு கஷ்டப்படுத்தனும் என்று கேட்டபடியே அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விடத்தொடங்கினாள்.”

 

“பைத்தியம் மாதிரி பேசக் கூடாது தேவி. கடவுள் எப்பவுமே ஒவ்வொருத்தரையும் சோதிச்சு பார்க்கும் அதிலேயும் நல்லவங்களை கொஞ்சம் அளவுக்கு அதிகமா சோதிக்கும். நாமளும் ரொம்ப நல்லவங்க போல அதுதான் இப்போ சோதனை பண்ணிக்கிட்டு இருக்கு எப்படியும் நமக்கு நல்லதுதான் நடக்கும். இப்போ பாரு உனக்கு உலக அழகன் மாதிரி ஒரு கணவனை கொடுத்து இருக்கு அதிலேயே தெரியலையா கடவுள் நல்லதுதான் செய்யும்னு.”

 

“ஹான்..என்று அதிர்ந்து உலக அழகனா அது யாரு எனக்கு தெரியவே தெரியாதே என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள்.”

 

“குட் இதுதான் என் தேவிக்கு அழகு . ம்ம்ம்…இன்னைக்கு அம்மா அப்பா வேற இல்லை மேடம் வேற இந்த மாம்பழ கலர் மைசூர் சில்க்ல அசத்துறீங்க என்னென்னவோ நினைச்சேன். இப்படி அழு மூஞ்சியா என்னை டீலில் விடலாமா?”

 

“போங்க உங்களுக்கு வேற வேலையே இல்லை!” என்று சொல்லி அவன் நெஞ்சில் குத்தினாள்.

 

“அதெல்லாம் இன்னைக்கு எங்கேயும் போறதா இல்லை உன்னை விட்டு ஒரு இன்ச் நகருறதா இல்லை” என்று சொல்லி அவள் இடையை பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான்.

 

“ஐயோ இது பால்கனி என்ன வேலை பண்றீங்க எல்லோரும் ப்ரீ ஷோ பார்க்கவா…தள்ளுங்க” என்று உள்ளே ஓடினாள்.

 

அப்போது ஹாலில் டிவியை நிறுத்தாமலே வந்திருந்ததால் அதிலிருந்து பாட்டு வந்து கொண்டிருந்தது.

     

அதை கேட்டு அப்படியே நின்று விட்டாள்.

 

           கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

           வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

           வளம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்……

 

          பச்சைவண்ண கிளி வந்து பழம் கொடுக்க

          பட்டுவண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க

          கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க

          கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க…..

 

அவள் பின்னே வந்தவன் அங்கு ஓடிக்கொண்டிருந்த பாடலை கண்டு மனையாள் கண்ணீர் வழிய நிற்பதை கண்டதும் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டான்.

‘வேண்டாம்டா கண்டிப்பா உன் ஆசையை அந்த கடவுள் நிறைவேத்தும் அழக் கூடாது வா வந்து படு” என்று சொல்லி அவளை அழைத்து சென்று படுக்க வைத்து விட்டு வந்து டிவியை ஆப் செய்து விட்டு சென்று அவளருகில் அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.

 

கண்களில் கண்ணீர் கோட்டுடன் உறங்கும் மனைவியை பார்த்தவனுக்கு உறக்கம் தொலைந்து போனது. கண்ணமா நீ உன்னோட உணர்வுகளை இப்படி அழுது அதற்கு வடிகால் தேடி விடுகிறாய். ஆனா என்னால உன்கிட்ட உண்மையையும் சொல்ல முடியாது மனசுக்குள்ளேயே வச்சு புழுங்கிகிட்டு இருக்கேன். உனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் சொன்னதை கண்டிப்பா நீ தாங்க மாட்ட என்று மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். அன்றைய இரவு உறங்கா இரவாக அமைந்து போனது செல்வாவிற்கு.

 

காலையில் எழுந்து அவள் வேலையை பார்க்க என்றுமில்லாமல் அமைதியாக சென்றது. அவர்கள் இருவரும் வேலைக்கு கிளம்பும் நேரம் அபிராமியும் வேதாச்சலமும் வந்து சேர்ந்தனர்.

 

‘காவ்யா எப்படிம்மா இருக்கா? மாப்பிள்ளை எப்படி இருக்கார்?”

 

“எல்லாம் நல்லா இருக்காங்க செல்வா நீங்க ஆபிஸ்க்கு போயிட்டு வாங்க மத்ததை அப்புறம் பேசிக்கலாம்.”

 

“மருமகளின் முகத்தை பார்த்த வேதாசலம் மெல்ல மகனிடம் வந்து என்னடா தேவி என்னவோ போல இருக்கா எதுவும் சண்டை போட்டியா?”

 

அம்மாவின் காதில் விழாமல்..“இல்லப்பா வழக்கம் போல தான் நேத்து ரேகா வீட்டு பார்ட்டில கீழ் வீட்டு அம்மா ஏதோ சொல்லிட்டாங்க அதுல தான் மூட் அவுட்.”

 

“ஒ..பார்த்து சமாதானப்படுத்துப்பா பாவம் சின்ன பொண்ணு.”

 

“ம்ம்ம்..பார்த்துக்கிறேன் பா. சரி நேரம் ஆச்சு நாங்க கிளம்புறோம்” என்று சொல்லி விட்டு அவன் கீழே போக தேவியும் கிளம்பினாள்.

 

செல்வா முன்னே சென்று விட கீழே இறங்கிக் கொண்டிருந்தவள் எதிர் வீட்டை பார்க்க ரேகா வீடு என்றுமில்லாத அதிசயமாக பூட்டி இருந்தது. இந்த நேரத்துக்கு எங்கே போனா என்று யோசித்தபடியே இறங்கினாள்.

 

கீழ் வீட்டு அம்மாளும் அடுத்த பில்டிங் ரோஹினியும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இருவரையும் பார்த்து பொதுவாக ஒரு புன்னைகையை சிந்தி விட்டு அவர்களை கடந்து போனாள். அப்போது கீழ் வீட்டு அம்மாள்..”இந்த காலத்து பொண்ணுங்களுக்கு சொன்னா புரியறது இல்லை பட்டா தான் புரியுது. பாரு நேத்து ரேகா கிட்ட சொன்னேன் குழந்தைக்கு சுத்தி போடு புள்ளை இல்லாதவ கண்ணு மோசமான கண்ணுன்னு. அவ கேட்கல பாரு இப்போ நீத்து ராத்திரி பூரா வாந்தி எடுத்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடி இருக்கா” என்றார்.

 

அவர் சொன்ன சேதியில் அதிர்ந்து நின்று விட்டாலும் மனமோ வேகமாக கணக்கு போட்டது தன்னால் தானோ. என்னால் அந்த குழந்தைக்கு கெடுதல் வந்து விட்டதோ என்று எண்ணி மனதிற்குள் மருக ஆரம்பித்தாள். அந்த நினைப்புடனே வண்டியில் ஏறி அமர்ந்தவளின் சிந்தனைகள் வேகமாக ஓட ஆரம்பித்தது. செல்வா ஏதோ பேசிக்கொண்டே வர அது எதுவும் அவள் மனதில் ஏறவே இல்லை ஆனால் ஏதோ பதில் சொல்லியபடி இருந்தாலும் அவளின் சிந்தனைகள் ஆபத்தான திசையை நோக்கி பயணித்துக்  கொண்டிருந்தது. தனக்கு குழந்தை இல்லாததால் தன் பார்வை குழந்தைகளுக்கு கெடுதல் வரவழைக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது.

 

அதன்பின் வந்த நாட்களில் அந்த எண்ணம் சிறு செடியாக இருந்தது வேர் விட்டு பல விழுதுகளுடன் கூடிய ஆலமரமாக வளர்ந்து நின்றது. மெல்ல மெல்ல தன்னையறியாமலேயே மனசிதைவுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தாள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இதன் நடுவே காவ்யாவின் வளைகாப்பு ஏற்பாடுகள் தொடங்கவும் பெரிய நாத்தனார் சாரதா அடிக்கடி வந்து போக ஆரம்பித்தாள். அவள் வந்து சென்றதும் அபிராமியின் போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. முதலில் வார்த்தையால் காயப்படுத்திக் கொண்டிருந்த அபிராமி நாத்தனாரின் போதனையின் பேரில் செல்வாவுக்கு மறுமணம் செய்து வைக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

 

வளைகாப்பிற்கு வாங்க வேண்டிய பொருட்களை பற்றி நாத்தனாரும் மாமியாரும் பேசும் போது எப்போ போகணும்ன்னு சொல்லுங்க அத்தை நானும் லீவ் போட்டுட்டு வரேன் எல்லோரும் போய் வாங்கிட்டு வந்திடலாம் என்றாள். அவள் அப்படி சொல்லியதும் மாமியார் நாத்தனார் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் அப்போது அங்கே செல்வா இருந்ததால் ஒன்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் சமயலறையில் வேலை செய்யும் போது அவள் அருகே வந்து நின்ற அபிராமி.”இங்கே பாரு தேவி சில விஷயங்கள் சொல்லாமலே புரிஞ்சுக்கணும் . என் பொண்ணுக்கு இது முதல் பிரசவம் உன்னை மாதிரி ஒரு மலடியை அழைச்சிட்டு போய் அவ வளைகாப்புக்கு சாமான் எல்லாம் வாங்கினா நல்லது இல்லை. அதனால நீ பாட்டுக்கு கிளம்பி நிக்காதே. இதை அவனுக்கு முன்னாடி என்னால உன் கிட்ட சொல்ல முடியாது. அதனால நீயே ஏதாவது காரணம் சொல்லி வரலேன்னு சொல்லிடு.”

 

அவரின் வார்த்தைகள் இந்த முறை வலியை தரவில்லை. அதற்கு மாறாக அவளின் தப்பான எண்ணத்திற்கு நீர் ஊற்றியது போல் அமைந்தது. ‘அத்தை சொல்றதும் சரி தானே அன்னைக்கு நீத்துவை நான் போய் கொஞ்சினது தானே அவளுக்கு உடம்புக்கு முடியாம போச்சு. வேண்டாம் காவ்யாவுக்கு ஒன்னும் ஆக வேண்டாம் நான் போக மாட்டேன்’ என்று முடிவுக்கு வந்தாள்.

 

வளைகாப்பு விஷயமாக வெளியில் செல்வதற்கு அழைத்த போது எல்லாம் தலைவலி , வேலை இருகென்று அவள் ஒதுங்கிக் கொண்டாள். ஆனால் செல்வாவிற்கு அதை கவனிக்க நேரமில்லாது போனது அவனின் துரதிர்ஷ்டம்.

 

வேதாச்சலம் மட்டும் மருமகளின் நடவடிக்கையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உணர ஆரம்பித்தார். முன்னர் எல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளை கண்டால் தானே சென்று தூக்கியும் அவர்களுடன் விளையாடியும் வருவாள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களின் அருகில் கூட செல்லாமல் சற்று ஒதுக்கமாகவே இருப்பது போல் தோன்றியது அவருக்கு.

 

அன்று செல்வாவும் வேதாச்சலமும் வெளியில் சென்றிருக்க சாரதா அங்கு வந்திருந்தாள் தன் குழந்தையுடன்.  அப்பாவும் தம்பியும் வெளியில் சென்றவுடன் சாரதா அபிராமியிடம் சென்று ”என்னமா நான் சொன்ன விஷயத்தை தேவியிடம் பேசுனியா” என்று கேட்டாள்.

 

“எப்படிடி சொல்றது என்ன தான் இருந்தாலும் அவளுக்கும் கஷ்டமா இருக்காதா?”

 

“அப்போ உனக்கு குடும்பத்துக்கு வாரிசு இல்லேன்றதை பத்தி கவலை இல்ல.புள்ளை கஷ்டபட்டாலும் பரவாயில்ல உன் மருமகளை நினைச்சு வருத்தப்படுற.”

 

“என்னடி இது இப்படி பேசுற.”

 

“வேற எப்படி பேச சொல்றம்மா.எனக்கும் மட்டும் ஆசையா இப்படி எல்லாம் பண்ணனும்னு ஆனா என் தம்பி வாழ்க்கை பட்டு போறதை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது சொல்லிட்டேன். இப்போ நீ அவ கிட்ட பேசுறியா இல்ல நான் பேசவா.”

 

“நானே பேசுறேன் நீ ரொம்ப கடுமையா பேசிடுவே. நான் அவகிட்ட பேசிட்டு சொல்றேன் சரியா அதுவரை பொறுமையா இரு என்ன.”

 

“என்ன திடீர் கரிசனம் மருமக மேல?”

 

“சும்மா இரு.நான் போய் பேசுறேன் நீ ஸ்ரேயாவுக்கு சாப்பாட்டை கொடு.”

 

மருமகளை தேடிக் கொண்டு ஹாலிற்கு வந்தவர் அங்கு சோபாவில் ஆளுக்கு ஒருமூலையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த பேத்தியையும் மருமகளையும் பார்த்தார். ஸ்ரேயா வீட்டிற்கு வந்தாலே கிளம்பும் வரை தேவியின் கையில்தான் இருப்பாள். சாப்பாடு தூக்கம் என்று தேவியினிடம் தான் அனைத்தும். ஆனால் இன்று சோபாவில் பக்கத்தில் உட்காராமல் எட்டி எட்டி உட்கார்ந்திருந்த இருவரையும் அதிசயமாக பார்த்தார்.

 

“என்னடா ஸ்ரேயா குட்டி எப்பவும் மாமி கூடவே கம் போட்ட மாதிரி ஒட்டிகிட்டே இருப்பே இன்னைக்கு என்ன ஆச்சு எட்டி உட்கார்ந்து இருக்கே.”

 

‘அதுவா மாமிக்கு உம்புக்கு ஊ வந்துச்சா அதான் மாமி சொல்ச்சு பாப்பா இங்கே உட்காரனும்னு.”

 

“என்னமா பாப்பா என்ன சொல்றா உடம்புக்கு முடியலையா?”

 

“ஒன்னும் இல்ல அத்தை லேசா உடம்பு அனத்துற மாதிரி இருந்துது அதுதான் ஜுரம் இருந்தா குழந்தைக்கு வந்திடுமேன்னு தள்ளி உட்கார சொன்னேன்.”

 

“ஒ..அப்படியா நீ வேணா போய் படுத்துக்கோ தேவி. ஸ்ரேயா குட்டி அம்மா மம்..மம் கொடுக்க கூப்பிடுறா பாரு.”

 

“இல்ல அத்தை நல்லாத்தான் இருக்கேன்.”

 

“தேவி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்ன்னு வந்தேன் எப்படி சொல்றதுன்னு தெரியல.உனக்கும் செல்வாவுக்கும் கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகப் போகுது ஆனா குழந்தை பிறக்கிற வழியை காணும். அவனோட கல்யாணம் ஆனவங்க அத்தனை பேருக்கும் ரெண்டு குழந்தை ஆயாச்சு. அவனும் எத்தனை நாளைக்குத்தான் கோவில் குளம், டாக்டர்னு அலைவான். நீயே சொல்லு. அவன் மனசு கஷ்டபடுறது உனக்கு சந்தோஷமா சொல்லு.”

 

அபிராமியின் பேச்சு போகும் பாதையை உணர்ந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.”ஆமாம் அத்தை நானாவது அழுது என் மனசு கஷ்டத்தை தீர்த்துக்கிறேன் ஆனா அவர் மனசுலேயே வச்சுகிட்டு அவதிபடுறார்.”

 

“அதேதான் பாரு யாருக்குமே நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை எதுக்கு சொல்லு. உனக்கு அவன் நிம்மதியா இருந்தாலே சந்தோமாகிடும் இல்லையா. அதுக்குத்தான் நான் ஒருவழி யோசிச்சேன்.”

 

அவர் சொல்ல வருவது என்ன என்று புரிந்தவுடன்.நெஞ்சம் பட படவென்று அடித்துக் கொண்டது என்னதான் தன் வாழ்க்கையில் குழந்தை முக்கியம் என்றாலும் செல்வா இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியவில்லை அவளால். அதுவும் இன்னொருத்திக்கு விட்டு கொடுப்பது என்பது நெஞ்சில் அடி ஆழம் வரம் கத்தியை இறக்கிய உணர்வை தந்தது.

 

“நம்ம சாரதா மாப்பிள்ளை வழியில ஒரு பொண்ணு இருக்காம். அது நம்ம செல்வாவுக்கு ஒத்து வரும் அவங்க கொஞ்சம் வசதி இல்லாதவங்க அதனால ரெண்டாம் தாரமா கொடுப்பாங்கன்னு சாரதா சொல்றா என்றார்.”

 

அவசரமாக சோபாவில் இருந்து எழுந்து அவர் காலடியில் அமர்ந்து கொண்டு “ஏன் அத்தை நான் எப்படி அவரை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்க முடியும் என்னால முடியாது. என் செல்வா எனக்கு மட்டும்தான் ப்ளீஸ் அத்தை இந்த பேச்சை இதோட விட்டுடுங்களேன்.”

 

அவள் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னதும் அபிராமிக்கு கோவம் வந்து விட்டது.”அப்போ அவன் மேல உயிரையே வச்சு இருக்கேன் அப்படின்னு சொன்னது எல்லாம் சும்மா தான் இல்லையா? அப்படி நினைச்சு இருந்தா அவன் வாழக்கை நல்லா இருக்கும்ன்னு இந்த முடிவுக்கு ஒத்துகிட்டு இருந்து இருப்ப.”

 

“இல்ல அத்தை எனக்கு எல்லாமே அவர்தான் அவரை போய் இன்னொருத்தருக்கு விட்டுக் கொடுக்க சொல்றீங்களே என்னால முடியல அத்தை ப்ளீஸ்.எங்களுக்கு குழந்தை பிறக்கும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காரு அதனால இன்னொரு கல்யாணம் எல்லாம் வேண்டாமே.”

 

“இங்கே பாரு தேவி சும்மா அழுது ஆகாத்தியம் பண்ணாம சொல்றதை புரிஞ்சுக்கோ.நாங்க அவன் கிட்ட போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா சண்டைக்குதான் வருவான். அதனால நீதான் அவனை சமாதானபடுத்தி இதுக்கு ஒத்துக்க வைக்கணும். நீ என்ன அழுதாலும் அவனுக்கு கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணாம இருக்க மாட்டோம் சொல்லிட்டேன். உனக்கென்ன நீதான் படிச்சு இருக்கே வேலை பார்க்குற அப்புறம் என்ன.”

 

அபிராமி அழுத்தமாக சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். அதன் பின்னர் அங்கேயே அழுது கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது அங்கே வந்த சாரதா.”எழுந்திரு தேவி சும்மா டிராமா பண்ணாமா போய் முகத்தை கழுவிட்டு எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வை. அப்பாவும் தம்பியும் வந்துடுவாங்க. உன் முகம் அழுத மாதிரி இருக்கிறதை பார்த்ததா என் தம்பி சாமியடுவான்.”

 

ஸ்ரேயா குட்டி தன் அம்மாவும் பாட்டியும் மாமியிடம் பேசியவற்றை கேட்டாலும் அவளுக்கு முழுமையாக புரியவில்லை. ஆனாலும் பாட்டி மாமியை ஏதோ திட்டி இருக்கிறார் அதற்கு அம்மாவும் சேர்ந்து கொண்டு மாமியை திட்டுகிறாள் என்று நினைத்தாள். மாமி பாவம் என்று அந்த குழந்தை மனது தவித்தது. அது அவள் மனதில் அழுத்தமாக பதிந்து போயிற்று.

 

சிறிது நேரத்தில் வெளியில் போன இருவரும் திரும்பினர். எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறத் தொடங்கினாள் தேவி. அவளை பார்த்த செல்வா அவளின் முகம் வீங்கி போய் இருப்பதை பார்த்து யோசனையில் ஆழ்ந்தான். அதை கண்டு கொண்ட சாரதா தேவியிடம் ”நீ போய்  படு தேவி ஏற்கனவே தலைவலின்னு சொல்லிட்டு இருந்தே பாரு முகமே வீங்குன மாதிரி இருக்கு என்றாள்.”

 

அதை கேட்டு வேதாச்சலம் ”ஏம்மா நீயே ஒரு நாள் தான் வீட்டில் இருக்கே உடம்பு சரியில்லாம இதை எல்லாம் நீ செய்யணுமா போய் படுமா” என்றார்.

 

“இல்ல மாமா அக்கா இன்னைக்கு தான் வந்து இருக்காங்க அவங்களை போய் வேலை செய்ய வைக்க வேணாமேன்னு தான்.”

 

“அக்கா ஒன்னும் கோவிச்சுக்க மாட்டாங்க தேவி நீ போய் படு உன் முகத்துலேயே தெரியுது உன் வலி.”

 

அவர்களிடம் சொல்லி விட்டு தன்னறையில் படுத்தவளின் எண்ணங்கள் மாமியார் சொன்னவற்றையே நினைத்துக் கொண்டிருந்தது. அப்போது பிஞ்சு விரல் ஒன்று அவளின் கன்னங்களை வருடியது. அதை கண்டு எழுந்தவள் ஸ்ரேயாவை பார்த்ததும் ”வேணாம் செல்லம் என்கிட்ட வராதீங்க ஆன்டி ரொம்ப மோசம் என்கூட இருந்தா உங்களுக்கு ஏதாவது ஆகிடும்டா. என்கிட்டே இருந்து எட்டியே இருங்க என்றாள்.”

 

“மாமி அபக் கூதாது.மாமி அபுதா பாப்பாவும் அபும்.”

 

“இல்லை இனி மாமி அழ மாட்டா பாப்பா சிரிச்சுகிட்டே அம்மாகிட்டே போவீங்களாம். என் கூட நிறைய நேரம் இருந்தா உனக்கும் ஏதாவது ஆகிடும் போடா.”

 

“சதி…..மாமி சிதிகனும் பாப்பாக்கு முத்தா கொதுக்கணும்.”

 

ஸ்ரேயாவின் ஆசைபடி சிரித்து அவளுக்கு பட்டும் படாமலும் ஒரு முத்தத்தை கொடுத்து அனுப்பிவிட்டாள். அபிராமி சொன்னவற்றை எண்ணிய போது தலைவலிக்க ஆரம்பித்தது. ஒரு நேரம் அவர் சொன்னவற்றை ஏற்க மறுத்த மனம் மற்றொரு நேரம் செல்வா பாவம் இன்னொரு திருமணத்தின் மூலம் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கும் போது அதை ஏன் நாம் தடுக்க வேண்டும் என்று எண்ணினாள். இப்படி இரு வேறு எண்ணங்களுக்கு இடையே போராடிய படியே உறங்கி விட்டாள்.

 

அதன் பிறகு ஒரு வாரம் கடந்த நிலையில் தேவியின் மனம் ஒரு முடிவுக்கு வந்தது. வளைகாப்பிற்கு பிறகு செல்வாவிடம் பேசி இன்னொரு திருமணதிற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று. அந்த முடிவு எடுத்த பின்னர் அவளின் உணர்வுகள் முற்றிலும் மரத்து போன நிலையில் நடமாட ஆரம்பித்தாள்.

 

நாளை வளைகாப்பு என்ற நிலையில் அன்று இருவரும் அலுவலகத்தில் சென்று விடுமுறைக்கு சொல்லி விடலாம் என்று முடிவு செய்து கொண்டனர். தேவி சென்று விடுமுறைக்கு எழுதிக் கொடுத்து விட்டு ஜென்னியை மட்டும் விசேஷத்திற்கு அழைத்து விட்டு செல்வாவின் வரவிற்காக காத்து இருந்தாள்.

 

செல்வாவும் தன் அலுவலகத்தில் விடுப்பிற்கு கடுதாசு கொடுத்து விட்டு தன் நண்பன் அசோக்கை தங்கையின் வளைகாப்பிற்கு வருமாறு அழைத்து விட்டு கிளம்பினான். அப்போது அசோக் “இரு செல்வா கான்டீன்ல போய் ஒரு காப்பி குடிச்சிட்டு போகலாம்” என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு காண்டீனிற்கு சென்றான். அங்கு போகும் வழியில் அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் இரு பெண் தோழிகள் மற்றும் ஒரு ஆண் மூவரும் ஒரு டேபிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். செல்வா அங்கு வந்ததை கவனிக்காமல் மூவரும் பேசிக் கொண்டனர்.

 

“நம்ம ஆபீஸ்லேயே செம ஹன்ட்சம் செல்வா தான் வருண் சார். அவரை பார்த்ததா கல்யாணம் ஆனவர் மாதிரியே இல்லை” என்றாள் விஜி.

 

“எஸ் எஸ் அவரை பார்த்தா சினிமா ஹீரோ எல்லாம் தோர்தாங்க” என்றாள் மது.

 

அதை கேட்டு ஏற்கனவே செல்வாவை கண்டு புகைந்து கொண்டிருந்த வருண் கடுப்பாகி ”ஆளு மட்டும் அம்சமா இருந்து என்ன செய்ய விஜி ஆம்பளையாவும் இருக்கணும் இல்ல.”

 

அதை கேட்டுக் கொண்டே சென்ற செல்வாவிற்கு கோவம் வர வருணை அடிப்பதற்கு சென்றவனை அசோக் சமாதானப்படுத்தி அழைத்து சென்றான்.

 

“என்ன இது அசோக் இந்த வருண் இவ்வளவு கேவலமா பேசுறான் அவனை அப்படியே விட்டுட்டு போக சொல்றியா.”

 

“விடு செல்வா எங்கே பார்த்தாலும் இது மாதிரி நிறைய கழுதைகள் சுத்திகிட்டு இருக்கும் அதை எல்லாம் தட்டிக் கேட்க முடியுமா? அப்புறம் சிஸ்டர் எப்படி இருக்காங்க?”

 

“எனக்கு அவனை நாலு சாத்து சாத்தினா தான் வெறி அடங்கும் போல இருக்கு . என்ன பேச்சு பேசுறான்.”

 

“என்ன இது செல்வா! இதுக்கே இப்படி கோவப்பட்டா சிஸ்டர் இது மாதிரி பேச்சுகளை எவ்வளவோ தாண்டி வந்து இருப்பாங்க அவங்க உன்னை மாதிரி கோவபட்டுகிட்டா இருந்தாங்க.”

 

“அவளுக்கென்ன எல்லாவற்றையும் பொறுத்து போகிற குணம். என்னால எல்லாம் அது மாதிரி இருக்க முடியாது. எந்த ஒரு உணர்வையும் வெளில கொட்டிடனும் இல்லேனா உள்ளுக்குள்ளேயே இருந்து மன அழுத்தத்தைதான் கொடுக்கும்.”

 

“ம்ம்..சரி சரி நாளைக்கு எத்தனை மணிக்கு வரணும் சொல்லு நானும் என் மனைவியும் வந்திடுறோம்.”

 

“பத்து மணிக்கு தான் பங்க்ஷன் ஆனா நீ எட்டு மணிக்கே வந்துடு அசோக். “

 

அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிய பிறகு வருண் பேசியவையே மனதை உறுத்த தொடங்கியது. என்ன மாதிரியான மனிதர்கள் அடுத்தவரின் வருத்தத்தில் குளிர்காயும் இனம் மனித இனமே இல்லை மிருக குணம்.

 

தேவியை அழைத்துக் கொண்டு சென்றவனுக்கு அடுத்த நாளின் வேலைகள் நிற்க நேரமில்லாமல் ஓட செய்தது அதனால் ஆபிஸ்ஸில் நடந்தவை எல்லாம் புறந்தள்ளப்பட்டது.

 

வீட்டில் சொந்தங்கள் வந்ததாலும்அடுத்த நாளுக்கான வேலைகள் இருந்ததாலும் தேவியும் செல்வாவும் சந்திக்கும் சந்தர்பங்கள் அரிதாகவே கிடைத்தது. அப்போதும் இருவரும் வேலையை பற்றி மட்டுமே பகிர்ந்து கொண்டனர்.

 

மறுநாள் காலை அழகான விடியலாக அமைந்தது. ஒரு பக்கம் நல்ல சங்கதிகள் நடந்தேறும் நிகழ்வுக்களுக்கான அச்சாரமாக விளங்கினாலும் மறுபக்கம் மனதிற்கு விரும்பாத சம்பவங்கள் எதுவோ நடக்க இருப்பது போல் எண்ணம் எழுந்தது செல்வாவின் மனதில்.

 

சொந்தங்கள் சூழ நண்பர்களின் வாழ்த்திலும் காவ்யாவின் வளைக்காப்பு விமர்சையாக நடந்தேறியது. சாஸ்திர சம்பிரதாயங்களின் அனைத்தும் நன்றாக நடந்தது. தேவி காவ்யாவிற்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை யாரும் அறியாவண்ணம் தவிர்த்தாள். அபிராமிக்கும் சாரதாவிற்கும் தெரிந்தாலும் அவர்கள் அவள் ஒதுங்கி இருப்பதே நல்லது என்று எண்ணினர்.

 

அசோக்கின் மனைவி மாலினி தேவியின் ஒதுக்கத்தைக் கண்டு கொண்டாள். அதே போல ஸ்ரேயாவை கிட்டே நெருங்க விடாமலும் குழந்தைகள் இருந்த திசை பக்கமே போகாது இருந்தவளை கண்டு அவள் மனதிற்குள் ஓடும் எண்ணங்களை அறிந்து கொள்ள முயன்றாள்.

 

“என்ன தேவி எப்பவும் இந்த மாதிரி விஷேஷத்துல நீ எப்பவும் குழந்தைங்க பக்கம்தான் இருப்பே ஆனா இப்போ அவங்க பக்கமே போகலையே என்ன ஆச்சு?”

 

“ஆ….அதுவா வெளியிடத்து பங்க்ஷனுக்கு போறப்ப அவங்க கூட இருப்பேன் இது வீட்டு பங்க்ஷன் இல்லையா அது தான் வேலை ஜாஸ்த்தி என்றாள்.”

 

‘”எனக்கென்னவோ நீ எப்பவும் போல இருக்கிற மாதிரி இல்லைன்னு தோணுது தேவி.”

 

“என்ன நீ சி.ஐ.டி மாதிரி என்னை தோண்டி துருவி விசாரிச்சுகிட்டு இருக்கே…ம்ம்….அப்புறம் உங்க வீட்டு குட்டி இளவரசர் எப்படி இருக்கார்.”

 

“நல்லா இருக்கான் மா என்று சொன்னாலும் கண்கள் தேவியை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே இருந்தது. தேவியிடம் தேவை இல்லாத மாற்றம் எதுவோ உண்டாகி இருப்பது போல் உணர்ந்தாள். அவள் நடவடிக்கை இயல்பாக இல்லாதது போலவும் இருந்தது. சரி அசோக்கிடம் சொல்வோம் செல்வாவை கவனிக்க சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

வளைகாப்பிற்கு வந்தவர்கள் கிளம்பிய பின்னர் வீட்டு மனிதர்கள் மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பங்க்ஷன் நல்ல முறையில் நடந்ததில் அனைவருக்கும் திருப்தியாய் இருந்தது. ரெண்டு நாட்களின் அலைச்சலில் கலைத்து போன வேதாச்சலம் தன்னறைக்கு ஓய்வு எடுக்க சென்றார்.

தேவியும் சமையலறையை ஒழிப்பதற்கு சென்று விட சாரதா, காவ்யா அபிராமி செல்வா நால்வர் மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்ரேயா மெல்ல எழுந்து தாத்தா இருந்த அறைக்கு சென்று பார்த்தாள். அவளை பார்த்ததும் ”வாடா ராஜாத்தி உன்னை யாரும் கண்டுக்கலையா?”

 

“ம்ம்ம்….பாப்பாவ ஆரும் பாக்கவே இல்ல….தாத்தா கித்த நான் வந்துட்டேன்” என்று சொல்லி அவர் அருகில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்து கொண்டது.

 

‘ஏண்டா உங்க மாமி கிட்ட போகலையா?”

 

“மாமி கித்தே வதாதே சொல்ச்சு பாப்பாவுக்கு ஏதும் ஆகிதுமா”

 

“என்னடா சொல்ற எனக்கு புரியலையே.”

 

“மாமி அபுதுச்சு பாத்தி தித்தி அம்மா தித்தி மாமி ம்ம்ம்ம்…அபுதுச்சு அப்போ.”

 

குழந்தை சொன்னதின் அர்த்தம் கொஞ்சம் விளங்க ஆரம்பித்ததும் எழுந்து உட்கார்ந்து ”என்னடா சொல்றே மாமியை பாட்டி திட்டினாங்களா? தேவி அழுதாளா எப்போடா?”

 

“து தேஸ் முன்னாதி மாமா கல்யாணம் சொல்லி  பாத்தி சொல்ச்சு மாமி மாத்தேன் சொல்லி அபுதுச்சு.”

 

குழந்தை சொன்னதின் சாராம்சம் புரிந்ததும் அதிர்ந்து விட்டார். தன் மனைவிக்கு வாரிசு வரவில்லையே என்ற கோபம் இருக்கும் என்று தெரியும் ஆனால் மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யும் அளவுக்கு போவார் என்று சிறிதும் எண்ணவில்லை. இதற்கு தன் பெரிய மகள்தான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் இதை அபிராமியிடம் கேட்டால் கண்டிப்பாக ஏதாவது சொல்லி நடித்து சமாளித்து விடுவாள் என்று தோன்றியது. மகனிடம் சொல்லவும் யோசனையாக இருந்தது. எல்லாமுமாக சேர்ந்து தலைவலியை வரவழைத்தது. வீட்டில் இருந்தால் மூச்சு திணறுவது போல் இருக்கும் என்று எண்ணி கோவிலுக்கு செல்வாதாக சொல்லி கிளம்பி தன் நண்பர் சதாசிவம் வீட்டிற்கு சென்றார்.

 

அவரை அந்த நேரம் எதிர்பார்க்காத சதாசிவம் வேதாச்சலத்தின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையை போல அது தான் வீட்டில் அனைவரும் இருக்கும் போது இங்கு வந்து இருக்கான் என்று எண்ணி ”வா வேதா இங்கே உட்காரு” என்று சொல்லி விட்டு மனைவியிடம் காப்பி போட்டு கொண்டு வந்து கொடுத்து விட்டு போகுமாறு சொல்லிவிட்டு வந்தார்.

 

“காப்பி குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவர் சொல்லு வேதா வீட்டில என்ன பிரச்சனை?”

 

“என்னன்னு சொல்வேண்டா இதுநாள் வரை என் மனைவி மருமகளை வார்த்தைகளாலே குத்தி கிழிச்சு கிட்டு இருந்தாள் ஆனா இப்போ அதை எல்லாம் மிஞ்சிட்டா சதா என்ன சொல்றதுன்னே தெரியல.”

 

‘ஏன் என்ன பண்ணினாங்க வேதா.”

 

“செல்வாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதை பத்தி பேசி அந்த பொண்ணு மனசை காயப்படுத்தி இருக்கா.எனக்கு மனசு தாங்கலடா இவ எல்லாம் என்ன ஜென்மம் இவ பொண்ணுன்னா  ஒத்துக்குவாளா?”

 

‘உன் வைப் எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்றாங்க என்னால நம்பவே முடியல.”

 

“சும்மாவே தேவி முன்னே மாதிரி இல்லை மனசுக்குலேயே வச்சுகிட்டு மருகிகிட்டு இருக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற வேதனை பத்தாதுன்னு இவ வேற பிரச்சனையை கொடுக்கிறா.”

 

‘நீ எடுத்து சொல்ல வேண்டியது தானே வேதா.”

 

“எங்கே ஒவ்வொரு முறையும் அந்த பெண்ணை படுத்தும் போது நானும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துட்டேன் அடங்க மாட்டேங்கிறா. இப்பவும் அங்கே இருந்தா மனசு தாங்காம ஏதாவது பேசிடுவேன்னுதான் இங்கே வந்தேன்.”

 

“உன் மகன் கிட்ட சொல்லு பா.நமக்கு அடங்கலேன்னாலும் எப்படியும் அம்மாக்களுக்கு மகன் மேல கொஞ்சம் பயம் இருக்கும்.”

 

“இல்லை சதா அவனுக்கும் மனசுக்குள்ள ஆயிரம் கஷ்டம் அதை வெளிப்படுத்திக்காம நடமாடிக்கிட்டு இருக்கான் . அவனுக்கு ஆறுதலா இல்லேனாலும் உபத்திரவமா இருக்க கூடாது இல்ல. இந்த பிரச்சனையை நான்தான் பார்க்கணும்.”

 

“பாவம்தான் உன் மகனும் மருமகளும்.”

 

“வெளில உள்ளவங்க தான் அவங்களுக்கு இருக்கும் பிரச்சனையை வச்சுகிட்டு விஷத்தை கக்குராங்கன்னா வீட்டுல உள்ள நாம அவங்களுக்கு ஆதரவா இருக்கணும் அதை விட்டுட்டு நம்ம பங்குக்கு அவங்களை நோகடிச்சா என்ன செய்ய.”

 

“எல்லாம் சரியாகும் வேதா கவலைப்படாதே.”

 

‘அங்கே இருந்திருந்தா இந்நேரம் கோவத்துல எதையாவது சொல்லி இருப்பேன். அதுக்கு தான் உன் கிட்ட வந்து கொட்டிட்டு போனா கொஞ்சம் பாரம் அடங்கும் நிதானமா யோசிக்கவும் செய்யலாம்.”

 

“ம்ம்…சரிதான்.இப்போ பிரீயாகிட்டியா.’

 

“சரி சதா நான் கிளம்புறேன் எல்லோரும் தேடுவாங்க.  ரொம்ப தேங்க்ஸ் என் மனசில் உள்ளதை எல்லாம் இறக்கி வைக்க உன் நேரத்தை பயன்படுத்திக் கிட்டேன்.”

 

“என்ன இது வேதா நண்பன் எதுக்கு இருக்கான் கஷ்டமான நேரத்தில கை கொடுக்கத்தானே.”

 

“சரி நான் கிளம்புறேன் சதா.”

 

அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வரும் வரை மனைவியிடம் என்ன கேட்க வேண்டும் என்று முடிவு கொண்டதால் மனம் சற்று லேசாகி போனது.

 

 

கேட்க வேண்டாம் என்று நினைத்தாலும் மனைவியை பார்த்ததும் கேட்டுத்தான் பார்ப்போமே ஆனால் சற்று பொறுமையாக பேசுவோம் என்று எண்ணி அன்று இரவு மனைவியிடம் மெதுவாக ”ஏன் அபி நம்ம செல்வாவுக்கு பேசாம இன்னொரு கல்யாணம் பண்ணினா என்ன ?”

 

“என்ன?”

 

“ஆமாம் அபி நான் ரொம்ப நாளா யோசிச்சுகிட்டு இருக்கேன் அதுதான் உன் கிட்ட யோசனை கேட்டேன் என்றார்.”

 

‘உண்மையாவா சொல்றீங்க நீங்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு நீங்க இப்படி கேட்டது.”

 

“செல்வா பாவம்தான அது தான் இப்படி ஒரு யோசனைய பண்ணினேன் அபி.”

 

“எனக்கு இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ஒரு வாரம் முன்னாடியே இதை பத்தி தேவிகிட்ட பேசிட்டேங்க.”

 

“தேவி கிட்டயா என்ன பேசினே?”

 

“ஆமாங்க நம்ம சாரதா மாப்பிள்ளை வழியில ஒரு பொண்ணு இருக்காம் அவ சொன்னா அவங்க செல்வாக்கு கொடுப்பாங்கன்னு. நாம போய் செல்வாகிட்ட பேசினா அவன் கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்.”

 

“அதுக்கு.”

 

“தேவி கிட்டயே சொல்லி நீயே பேசி எப்படியாவது சம்மதம் வாங்கிடுன்னு சொன்னேன்.”

 

‘அவ என்ன சொன்னா?” என்று கோவத்தை உள்ளடக்கிய குரலில் கேட்டார்.

 

“என்ன சொல்லுவா ஒரே ஒப்பாரி அத்தை அவர்தான் எனக்கு எல்லாம் அப்படின்னு.”

 

அபிராமி எதிர்பாராத நேரம் ஓங்கி ஒரு அறை கொடுத்தார் ”சை…என்ன மனுஷிடி நீ..நீயெல்லாம் பெண்ஜென்மம்ன்னு சொல்லிக்காதே.”

 

அவர் அறைந்ததும் அதிர்ச்சியாகி நின்றவர் அடுத்து சொன்ன வார்த்தைகளை கேட்டு அதிர்ந்தே விட்டார்.

 

“அவ புருஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவளையே சம்மதம் வாங்க சொல்லி இருக்கே..ஐயோ என்ன பாடுபட்டு இருக்கும் அந்த மனசு. புள்ளைய பெத்துட்டா மட்டும் நீ தாயாகிட மாட்டே ஒரு பெண்ணோட கஷ்டத்தை உணர்ந்துக்க தெரியாத நீயெல்லாம் மனுஷ பிறவியே இல்லை.”

 

அவரின் அடுத்த அடுத்த தாக்குதலில் நிலைகுலைந்து போனவர் அப்படியே சுவற்றோரம் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்.

 

“இப்படி ஈவு இரக்கமே இல்லாத ஒருத்தியோட குடும்பம் நடதினேன்னு நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு என்று சொல்லி விட்டு படுத்து விட்டார். உம் புள்ளை உன்னை தெய்வமா நினைச்சுகிட்டு இருக்கான். நீ ஒரு சாத்தான்னு அவனுக்கு தெரியாது.”

“நானும் கேட்க வேண்டாம்ன்னு நினச்சு தான் இருந்தேன் ஆனா மனசு தாங்கலடி . கொஞ்சமாவது யோசனை பண்ணி இருந்தா இப்படி ஒரு காரியத்தை செஞ்சு இருப்பியா?”

 

அவர் பேசப்பேச தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தவர் மனது வலிக்க ஆரம்பித்தது. நானா இப்படி செய்தேன் என்னால் எப்படி என் மருமகளின் மனதை காயப்படுத்த முடிந்தது. இந்த பாவத்தை எங்கே சென்று கரைப்பேன் என்று கதறினாள்.

 

“இதே குறை உன் புள்ளைகிட்ட இருந்தா மருமகளுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சு அழகு பார்ப்பியா நீ.”

 

“ஐயோ தெரியாம பண்ணிட்டேன் தயவு செஞ்சு என்னை வார்த்தையால கொல்லாதீங்களேன்.”

 

“வலிக்குது இல்லை அப்போ அந்த பொண்ணுக்கு எப்படி வலிச்சு இருக்கும். எத்தனை நாள் இப்படி வலிக்க வலிக்க பேசி சந்தோஷபட்டு இருப்பே. ஒரு நாளிலேயே உன்னால தாங்க முடியல இல்ல.”

 

“மன்னிச்சிடுங்கன்னு கேட்க கூட எனக்கு தகுதி இல்லை இதெல்லாம் தெரிஞ்சா என் பையன் என்னை பத்தி என்ன நினைப்பான்” என்று அழுது கரைந்தார்.

 

நேரம் ஆகஆக அவருக்கு மூச்சு திணறல் வர ஆரம்பித்தது. மனதின் பாரம் மூச்சு விட முடியாமல் அழுத்த திணற ஆரம்பித்தார். அதை பார்த்த வேதாச்சலம்..”இங்க பாரு சும்மா எப்பவும் நடிக்கிற மாதிரி நடிச்சு இந்த முறையும் நீ செஞ்ச தப்பை நியாயப்படுத்த பார்க்காதே” என்றார்.

 

அதை கேட்டதும் தான் இத்தனை பண்ணிய பாவத்தின் பலனை இன்று அனுபவிப்பதாக உணர்ந்தாள் அபிராமி. அப்பாவிடம் பேச சென்ற அம்மாவை காணாமல் அங்கு வந்த காவ்யா அம்மாவின் நிலையை கண்டு பயந்து சத்தம் போட செல்வாவும் ஓடி வந்தனர்.

 

செல்வா ஓடி சென்று ஒரு ஆட்டோவை பிடித்து வர அப்பாவும் மகனுமாக அபிராமியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். காவ்யாவும் தேவியும் வீட்டில் இருந்தபடியே அவருக்கு சரியாகிட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இருந்தனர்.

 

இரண்டு மணி நேரம் அனைவரையும் கலங்க அடித்து விட்டு சற்று தேறினார் அபிராமி. அன்று இரவு அங்கேயே இருக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட அப்பாவை அங்கே விட்டுவிட்டு வீடு திரும்பினான் செல்வா.

 

அடுத்த நாள் காலை ஆஸ்பத்திரிக்கு சென்று அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தார்கள். காவ்யா தான் அபிராமியிடம் சென்று அமர்ந்து…என்னம்மா இது இப்படி பயமூருத்திட்டியே என்று பேசிக் கொண்டிருந்தாள். வேதாச்சலமோ தன் கடமை முடிந்தது என்ற பாணியில் அவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்து விட்டார். தேவிதான் ஆபீஸ்சிற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு மாமியாரை பார்த்துக் கொண்டாள்.

 

விஷயத்தைக் கேள்விபட்டதும் சாரதா அடித்து பிடித்து ஓடி வந்தாள். அழுது அமர்க்களம் பண்ணிய அவளை அடக்கி ஒன்றும் பயமில்லை என்று சொல்லி வைத்தார்கள்.

 

இதன் நடுவே தேவி குழந்தைகளின் அருகே தான் போகத் தயங்கினாலே தவிர அவர்களின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு கதை பேசும் புது பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். அவளை அறியாமலேயே சிறிது சிறிதாக தன் மனதை நிஜ உலகில் இருந்து நிழல் உலகிற்கு மாற்றிக் கொண்டாள். வீட்டில் இருந்த சூழ்நிலையால் யாராலும் இந்த மாற்றத்தை கண்டு பிடிக்க இயலாமல் போனது.

 

அன்று செல்வா ஆபீஸ்ஸில் மறுபடியும் வருனால் பிரச்சனை எழ அந்த கோபத்துடனே வீட்டிற்கு வந்து இருந்தான். தன் அறைக்கு சென்று குளித்து விட்டு வெளியில் வந்தவன் அங்கு இருந்த தேவியிடம் சில வேலைகளை சொல்ல அவளோ தன் நிழல் உலக குழந்தையிடம் மானசீகமாக விளையாடிக் கொண்டிருந்தாள். அதனால் அவன் சொன்னவை எதுவும் அவள் காதில் விழவில்லை. அவளின் இந்த மோன நிலையை பார்த்து கடுப்பான செல்வா ”ஏண்டி இப்படி கொல்ற எப்போ பாரு குழந்தை குழந்தை தானா வேற நினைப்பே இல்லையா ஒரு மனுஷன் வெளில போயிட்டு வரவன் ஆயிரெத்தெட்டு பிரச்சனையோட வரான் அவனை கவனிக்க கூட இல்லாம அப்படி என்னதான் குழந்தை நினைப்போ. “சை..வெளில தான் நிம்மதி இல்லேனா வீட்டிலையும் இல்லாம போச்சு” என்று சத்தம் போட்டான்.

 

அதற்கு சற்று அதிராமல் ”அப்போ பேசாம நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க. என்னால தான உங்களுக்கு நிம்மதி இல்லாம இருக்கு வேற ஒருத்தி வந்தா அது கிடைக்கும் இல்ல.”

 

“ஏய் என்ன பேசுறே என்று அவள் கழுத்தை பிடித்தவனை பார்த்து.எனக்கும் நிம்மதி இல்லாம உங்களுக்கும் இல்லாம ஏன் குடும்பத்தில் யாருக்குமே நிம்மதி இல்லாத வாழ்கையை ஏன் நாம வாழனும்.”

 

“உனக்கு ஏண்டி இப்படி புத்தி போகுது ச்சே..என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியில் வந்தவன் அங்கு தான் போட்ட சத்தம் கேட்டு அறையின் வாயிலில் நின்றிருந்த தந்தையையும் தங்கையையும் பார்த்தவன். ஒன்னும் இல்லப்பா என்று சொல்லிவிட்டு அப்பா நீங்க இப்போ ப்ரீயா வெளில போயிட்டு வரலாமா” என்றான்.

 

‘சரிப்பா கிளம்பு போகலாம்” என்று சொல்லி சட்டையை மாடிக் கொண்டு வந்தார்.

 

அவரையும் அழைத்துக் கொண்டு பீச்சிற்கு சென்று மணலில் அமர்ந்தான். பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் தோளில் தட்டி ”வாழ்க்கைல தீர்க்க முடியாத பிரச்சனைன்னு ஒண்ணுமே இல்லை செல்வா. என்ன நாம தான் கண்ணுக்கு முன்னாடி உள்ள வழியை விட்டுட்டு கண்ணுக்கு புலப்பாடாத வழியை தேடி அலைஞ்சுகிட்டு இருப்போம்.”

 

“நானும் மனுஷன் தான் பா எத்தனை நாள் என் உணர்வுகளை எனக்குள்ளேயே அடக்கி வச்சுகிட்டு இருக்கிறது. மனபாரம் அதிகமாகி நெஞ்சு வெடிச்சிடுமொன்னு பயமா இருக்கு . அவளுக்கு குழந்தை பிறாக்காதுங்கிற உண்மை மட்டும் தெரிஞ்சுதுன்னா தாங்கா மாட்டா பா. ஒரு நேரம் இல்லேனாலும் ஏதாவது ஒரு வேகத்துல அவ கிட்ட சொல்லிடுவேனொன்னு தூக்கத்துல கூட முழிச்சுகிட்டே இருக்க வேண்டி இருக்கு. என்னால முடியலப்பா” என்று தன் கைகளில் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான்.

 

அவன் முதுகை வருடிக் கொடுத்தவர் ”என்ன செல்வா இது எதிலையும் நீ தெளிவான முடிவு எடுப்ப நீயே இப்படி உடைஞ்சு போனா எப்படிப்பா.”

 

“இல்லைப்பா உண்மை தெரியாதப்பவே இப்போ என்ன சொன்னா தெரியுமா நான் வேற கல்யாணம் பண்ணிக்கனுமாம்..எப்படிப்பா என்னை பார்த்து அவ அந்த வார்த்தைய சொன்னா..நான் என்ன அவ்வளவு மோசமானவனா? எனக்கு குழந்தை எல்லாம் வேண்டாம் பா அவ மட்டும் என் கூட இருந்தா போதும்ன்னு தானே வாழ்ந்து கிட்டு இருக்கேன். அப்படிப்பட்ட என்னை பார்த்து அவ எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொல்லலாம்.”

 

“எனக்கு உன் வேதனை புரியுது அதே சமயம் உங்க ரெண்டு பேரையும் நினைச்சா பெருமையா இருக்கு. நீங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சு இருக்க அன்பை பார்த்த ஒரு பக்கம் சந்தோஷமாவும் இருக்கு.”

 

“அந்த அன்பை அவ புரிஞ்சுக்கலையே பா அப்படி புரிஞ்சு இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிகங்கன்னு சொல்லி இருக்க மாட்டா.”

 

“இல்லை செல்வா நீதான் அவ மனசை புரிஞ்சுக்கல . உன்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லும்போது அவ மனசு என்ன பாடுபட்டு இருக்கும் ஆனா அதை மீறி அவ சொல்றான்னா அவளுக்கு ஏதோ ஒரு நிர்பந்தம் இருக்குன்றதை உன்னால புரிஞ்சுக்க முடியல.”

 

“என்னபா சொல்றீங்க? அப்படி என்ன நிர்பந்தம் இருக்க முடியும்.”

 

அவனை பார்த்து தலையாட்டியவர் கடலை வெறித்தபடி ………”உன் அம்மாவும் உன் அக்கா சாரதாவும் தான் அந்த நிர்பந்தம்.”

 

அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான்.. “அப்பா”

“அதை கேட்கப் போய்தான் உன் அம்மாவுக்கு மூச்சுத் திணறல்.”

 

“என்னப்பா சொல்றீங்க அம்மா எப்படிப்பா..ஏன்?”

 

“அவ மேலையும் தப்பில்லைப்பா அவளுக்கு தன் குடும்பத்துக்கு வாரிசு வேணும்ன்னு நினைச்சு இருக்கா அதில ஒரு சின்ன பொண்ணோட மனசை காயபடுத்துறோமேன்னு நினைக்கத் தவறிட்டா .”

 

“இருந்தாலும் பா அம்மா இப்படி.”

 

“இங்கே யாரையுமே குற்றம் சொல்ல முடியாது செல்வா எல்லாமே சூழ்நிலைகள்தான் காரணம்.”

 

“இது தெரியமா அவளை நான் கோவப்பட்டுடேனே பாவம்பா அவ மனசு கஷ்டப்பட்டு இருக்கும். இதுக்கு என்னதான்பா வழி ? குழந்தை இல்லாதவங்க எல்லாம் வாழவே தகுதி இல்லாதவங்களா என்ன?”

 

‘கடவுளோட படைப்பில் ஒன்று கூட காரண காரியங்கள் இல்லாம படைக்கப்படல. இத்தனை பேருக்கு குழந்தை செல்வத்தை கொடுத்த கடவுள் சிலரை மட்டும் ஏன் அந்த குழந்தைக்காக ஏங்க வைக்கிறார். எத்தனையோ குழந்தைகள் தாய் தந்தை இல்லாம ரோட்டிலேயும் அநாதை ஆசிரமங்களிலேயும் அன்பிற்காக ஏங்கிகிட்டு இருக்காங்க. அவர்களில் ஒரு சிலரை எடுத்து வளர்த்து அவர்களுக்கு கிடைக்காத அன்பை கொடுக்கலாம் இல்லையா. தாய் பாசமோ தந்தை பாசமோ நம்ம உயிரணுவில் ஜனித்த குழந்தைக்காக மட்டும் சொந்தமானது இல்லைப்பா. உங்களுக்கு குழந்தையை பற்றி ஒரு பரிதவிப்பு அவர்களுக்கு தாய் தந்தையின் அரவணைப்பு என்று இரு பக்கமும் இருக்கும் ஏக்கங்களை ஒருவருக்கொருவர் தீர்த்துக் கொள்ளலாம் இல்லையா.”

 

“ஆனா அப்பா இதை அம்மாவோ அக்காவோ எப்படி ஏத்துக்குவாங்க?”

 

“ஏன் ஏத்துக்கணும் ? அம்மா எத்தனை நாள் உன் கூட இருக்க போறா..இல்ல அக்காதான் உன் கஷ்ட நஷ்டங்களில் உன்கூட வர போறாளா? அவ குடும்பம்ன்னு வரப்ப அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாளே தவிர உனக்கு இல்லை.”

 

“இல்லப்பா.”

 

“எங்கே பிறந்தாலும் எங்கே வளர்ந்தாலும் உன்னுடைய பராமரிப்பில் வந்த பின் அவளோ/அவனோ உன்னுடைய குழந்தை மட்டும்தான். அவங்க நல்லா வளருதும் வளராததும் உன்னுடைய வளர்ப்பில்தான் இருக்கு. உனக்குன்னு உன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு பிடிமானம் தேவைபடும் அதை கொடுக்கிறது குழந்தையால மட்டும்தான் முடியும். அது உங்க ரத்தமாகதான் இருக்கனும்ன்னு ஆசை படுறது தப்பில்லை. ஆனா அதற்கு வழி இல்லாதப்ப கண்ணுக்கு முன்னாடி இப்படி ஒரு வழி இருக்கிறப்ப அதை பயன்படுத்திக்கலாமே.”

 

“அப்பா”

 

“பாசம் காட்ட முடியாதுன்னு நினைக்கிறியா.பெத்த பாசத்தை விட வளர்த்த பாசம் அதிகம் இருக்கும். “

 

“புரியுது பா….இதை நான் அவ கிட்ட பேசிட்டு முடிவு பண்றேன்.”

 

“எதையும் ஆரம்பத்துல யோசிக்கும் போது பயமா தான் இருக்கும் கொஞ்சம் நிதானமா பல முறை யோசனை பண்ணினா எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும்.”

 

“தேங்க்ஸ் பா..நான் இங்கே வரும் போது மனசு வெறுத்து போய்தான் வந்தேன் ஆனா உங்க வார்த்தைகள் எனக்கு தைரியத்தை கொடுத்து நல்ல ஒரு ஆரம்பத்திற்கான வழியையும் காட்டிடீங்க.”

 

“சரி கிளம்பு செல்வா நாம வந்து நேரமாச்சு.”

 

அவர்கள் இருவரும் பேசி விட்டு வீடு திரும்பிய பிறகு வீட்டில் பயங்கர அமைதியாக இருந்தது. அம்மா தன்னறையில் படுத்து இருந்தார். காவ்யா அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள். சாரதா மட்டும் சீற்றம் கொண்ட புலி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கடுமை பரவி இருந்தது. சமையலறை வாசலில் கையை பிசைந்த படி நின்று கொண்டிருந்தாள். ஸ்ரேயாவோ செல்வாவின் அறையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

வீட்டின் சூழ்நிலையை பார்த்த செல்வாவிற்கு ஏதோ பிரச்சனைக்கான அஸ்திவாரம் இருப்பது போல் தோன்றியது. வேதாச்சலாத்திற்கு  தன்பெரிய மகளை பார்த்ததுமே அவள் தானே இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் என்று நினைத்தார். அடுத்து என்ன பிரச்சனை செய்வதற்கு நிற்கிறாள் என்று புரியாத பார்வை ஒன்றை வீசினார்.

 

“வா செல்வா.உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நான் இந்த வீட்டில யாரு? எனக்கு இங்கே வர உரிமை இருக்கா இல்லையா?”

 

செல்வா பதில் சொல்வதற்குள் குறுக்கே பாய்ந்த வேதாச்சலம் ”இப்போ எதுக்கு இந்த கேள்வி எல்லாம் சாரதா?”

 

“அப்பா தயவு செஞ்சு நீங்க இதிலே குறுக்கே வராதீங்க.இது எனக்கும் என் தம்பிக்கும் இடையே உள்ள பிரச்சனை. அவன் பதில் சொல்லட்டும்.”

 

“என்னக்கா இது என்னென்னவோ பேசுற…இப்போ இந்த கேள்விக்கென்ன அவசியம்?”

 

“என் பொண்ணுக்கு சாப்பாடு கூட ஊட்டி விட மாட்டாளாம் உன் பொண்டாட்டி. என்னவோ என் குழந்தையை தூக்கி வச்சுக்க கூட யோசனை பண்றா. நான் வெளில வேலை இருந்ததால ஸ்ரேயாவை இங்கே விட்டுட்டு போனேன். காவ்யா உடம்பு முடியாம படுக்க போய்ட்டா. அம்மாவுக்கும் முடியல அதனால ஸ்ரேயாவுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னா இல்ல நான் கொடுக்க மாட்டேன்னு ஒரே தகராறு. அதுக்குள்ள பசில குழந்தை அழுது கரைஞ்ச பிறகு வேற வழியில்லாம கொடுத்து இருக்கா.”

 

“சும்மா சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு பண்ணாதேகா. அவ ஏதாவது வேலையா இருந்திருப்பா அதை எல்லாம் எடுத்து வச்சு பேசிகிட்டு.”

 

“எதுடா சின்ன விஷயம் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கிறதா….அதானே ஒரு குழந்தையை பெத்து இருந்தாதானே தெரியும் அதோட அருமை. “

 

“அக்கா.”

 

“சாரதா.”

 

“என்ன எல்லோரும் கத்துறீங்க உண்மையை தானே சொன்னேன். குழந்தை பசில அழுவுரப்ப சாப்பாடு கொடுக்க மாட்டேன்னு சொல்றா அது பெரிய விஷயம் இல்லையா. அது தான் இவ வயித்தில புழு பூச்சி கூட தாங்காம போகுது.”

 

‘என்னக்கா பேசுற புரிஞ்சு தான் பேசுறியா?”

 

அந்தநேரம் செல்வாவின் அறையில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயா மேல் ஷெல்ப்பில் இருந்த பேனாவை எடுப்பதற்காக நாற்காலியில் ஏறி எம்பி அதை எடுக்க முயல நாற்காலி நகர்ந்து கால் தடுமாறி கீழே விழும் போது அங்கிருந்த டேபிளின் முனை நெற்றியில் குத்தி லேசாக ரத்தம் வர அம்மா என்ற அலறலுடன் விழ்ந்தாள்.

 

ஹாலில் இருந்தவர்கள் சத்தைதை கேட்டு அறைக்குள் பாய செல்வாதான் முதலில் சென்று ஸ்ரேயாவை பார்த்தது. உடனே ஓடிப் போய் தூக்கி வைத்து அவளை சமாதானப் படுத்திக் கொண்டே அவள் காயத்தை ஆராய்ந்தான். சாரதா வந்து மகளை தூக்கி கொள்ள அவள் அழுகை சிறிது சிறிதாக குறைந்தது ஆனால் அதுவரை வாசலில் நின்று ஸ்ரேயாவை பார்த்துக் கொண்டிருந்த தேவி அவள் நெற்றியில் ரத்தத்தை பார்த்தது.”இதுக்கு தான் இதுக்கு தான் நான் சாப்பாடு கொடுக்க மாட்டேன்னு சொன்னேன் கேட்டீங்களா.என்னை கட்டாயப்படுத்தி கொடுக்க வச்சீங்களே இப்போ பாருங்க அவளுக்கு ரத்தம் வர அளவுக்கு காயம் பட்டுடுச்சு. என் கண் பட்டாலே குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிடும்ன்னு தானே ஒதுங்கி இருந்தேன் என்னை படுத்தி எடுத்து இப்போ அவளுக்கு ரத்தம் வர வழைச்சுட்டீங்களே…நான் தொட்டாலே எதுவும் விளங்காதுன்னு தெரிஞ்சு தானே ஒதுங்குனேன் அப்புறம் ஏன் என்னை இப்படி எல்லோருமா கஷ்டப்படுத்துரீங்க” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு ஆவேசம் வந்தவள் போல் பேசினாள்.

 

அங்கிருந்த அனைவரும் அப்படியே அதிர்ந்து நின்று விட்டனர்.தேவியின் பேச்சில் அவள் எந்த அளவிற்கு மனச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறாள் என்று புரிந்த போது அவள் கத்தி கத்தி மயங்கி விழுந்தாள்.

 

ஸ்ரேயாவை சாரதாவிடம் கொடுத்து விட்டு தேவியை தூக்கி சென்று தங்கள் அறையில் கட்டிலில் விட்டவன் அவளின் நிலையை நினைத்து கலங்க ஆரம்பித்தான். இது எல்லாவற்றிற்கும் தானும் ஒரு காரணமோ என்று எண்ணினான். தான் அவளின் உணர்வுகளை சரியாக கணிக்கவில்லையோ எங்கு தவறினேன் என்று புரியவில்லையே என்று மனதிற்குள்ளேயே புலம்ப ஆரம்பித்தான். வேதாச்சலம் மகனின் அருகில் வந்து அவன் தோள்களை அழுத்திப் பிடித்தார். அப்படியே அவர் கைகளை எடுத்து வைத்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தான்.

 

“செல்வா வேண்டாம் எழுந்திரு ஹாலுக்கு வா” என்றார்.

 

அவளை விட்டு எழுந்து ஹாலுக்கு போகும் முன் திரும்பி பார்த்தவன் தன் மனைவி முகத்தில் தெரிந்த வேதனையை கண்டு மனம் வலித்தது.

 

அறையை விட்டு வந்ததும் சாரதா செல்வாவின் அருகில் வந்து ”சாரி செல்வா நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.”

 

“நான் எதிர்பார்த்து இருக்கணும் அக்கா….கல்யாணம்ன்னு சொன்னவுடனே வரவ நம்ம குடும்பத்துல உள்ளவங்களோட ஒத்து போவாளான்னு நினைச்சேனே தவிர நம்ம குடும்பத்துல உள்ளவங்க அவ கிட்ட எப்படி நடந்துக்குவாங்கன்னு நினைக்கவே இல்லையே. அது உங்க மேல வச்ச நம்பிக்கை தானேக்கா. என் நம்பிக்கையை நீயும் அம்மாவும் சுத்தமா குழி தோண்டி புதைச்சிட்டீங்களே.”

 

‘எல்லாம் உன் நன்மையை நினைச்சு தான்.”

 

“வேணாம்க்கா தயவு  செஞ்சு அந்த வார்த்தையை சொல்லாதே . என் நன்மைக்காகன்னு நினைச்சு இருந்தா அவ தானே என் உயிரே அவளை இப்படி காயப்படுத்தி இருக்க மாட்டீங்க.”

 

“செல்வா….என்னை மன்னிச்சிடுப்பா.”

 

“இனி நான் உங்களை மன்னிச்சு என்ன ஆக போகுதுமா . போய் பாருங்க அவ நிலைமையை எந்த அளவுக்கு அவ மனசு மாறி இருக்குங்கிறதை. நீங்க ஒருஅம்மா மாதிரி நடந்துகிட்டு இருந்திருந்தா இன்னைக்கு அவ இந்த நிலைமைக்கு வந்து இருப்பாளா சொல்லுங்க. “

 

“ஒருகுழந்தை மாதிரி வந்தவளை குழந்தை இல்லேன்றதை காரணம் காட்டி அவளையே அவளை வெறுக்கிற மாதிரி பண்ணி வச்சு இருக்கீங்களே. கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ள செத்து கிட்டு இருந்து இருக்கா பாவி அது தெரியாம நான்கூட வாழ்ந்து இருக்கேன்.”

 

“செல்வா விடுப்பா.போனதை விடு இனி என்ன செய்யணும்ன்னு யோசி….உடனே அவளை நல்ல மனநல மருத்துவர் கிட்ட காண்பிச்சு அவ மனசை மாத்தனும்பா.”

 

“ஆனா அதுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒன்னு கேட்கனும்.அவளை சரி பண்ணி நான் இங்கே அழைச்சிட்டு வந்தா அம்மாவும் அக்காவும் மறுபடியும் அவளை காயப்படுத்த மாட்டாங்கன்னு என்ன நிச்சயம். அதனால நான் தனியா அவளை அழைச்சிட்டு போய்டுறேன்பா.”

 

“இல்லை வேணாம் செல்வா. நான் பண்ணின பாவத்துக்கு ஏற்கனவே உணர்ந்துட்டேன். இனி ஒரு போதும் அப்படி நினைக்க மாட்டேன்பா. அவளை என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன். நீ எங்கேயும் போக வேண்டாம். என்னை மன்னிச்சிடு செல்வா.”

 

“அபிராமி அதெல்லாம் அவன் கோவிச்சுக்க மாட்டான் நீ போய் எல்லோருக்கும் காப்பியை போடு. அப்பா நான் அவளை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போறேன். அவர் டெஸ்ட் பண்ணி பார்த்திட்டு சொல்லட்டும் அப்புறம் என்ன செய்யுறதுன்னு முடிவு பண்ணிக்கலாம்.”

 

அதன்பின் இரு நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய மனநல மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி தேவியை அவரிடம் அழைத்து சென்றான்.

 

தேவியை முழுமையாக டெஸ்ட் செய்த மனநல மருத்துவர் அவளை காயப்படுத்திய சொற்களும் அவள் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களும் அவளை இந்த நிலைக்கு தள்ளி இருக்கிறது என்றும் அது உடனே நிகழ்ந்த நிகழ்வல்ல என்றும் மெல்ல மெல்ல அவள் மனம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

 

“அவளின் இந்த நிலை மாற வேண்டும் என்றால் அவளை சுற்றி உள்ள ஒவ்வொருவரும் அவளின் மாற்றத்துக்கு உதவனும். ஆனா இதெல்லாம் உடனே நடக்காது.தன்னால குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாதுன்னு அவங்க நம்பனும். அதை கொண்டு வரது உங்க கையில தான் இருக்கு. நடந்த சம்பவங்கள் எல்லாம் எதேச்சையா ஒன்னுக்கொன்னு சம்பந்தபட்டு இருக்கே தவிர உன்னால இல்லைன்னு அவங்களுக்கு புரிய வைக்கணும்.”

 

‘கண்டிப்பா செய்றேன் டாக்டர்.”

 

“அப்புறம் அவங்க மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பார்த்தேன். அவங்க தாயாகிற வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சு கிட்டேன். என்னை கேட்டா இந்த பிரச்சனையை  இப்போ நீங்க சரி பண்ணினாலும் பிற்காலத்துல மீண்டு வர வாய்ப்பிருக்கு. அதனால் நீங்க ஒரு குழந்தையை தத்தெடுத்துகிட்டீங்கன்னா அவங்களுடைய வாழ்கையில பெரிய மாற்றம் வரும். இது என்னுடைய அட்வைஸ் . அதன் பிறகு உங்க விருப்பம்.”

 

“நானும் யோசனை பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் டாக்டர். இதில் இருந்து அவளை வெளில கொண்டு வந்துட்டு நீங்க சொன்னதை போல செய்றோம்.”

 

“அப்புறம் இன்னொரு விஷயம் ஒரு பத்து பதினைஞ்சு நாள் கழிச்சு அவங்களை எங்கேயாவது அழைச்சிட்டு போய் தங்கிட்டு வாங்க. இடமாற்றம் அவங்களுக்கு ஒரு சேஞ் கொடுக்கும்.”

 

நீங்க சொன்னதை எல்லாம் கண்டிப்பா செய்றேன் டாக்டர் ரொம்ப நன்றி என்று கைகூப்பிவிட்டு எழுந்து வெளியில் வந்தான்.

 

டாக்டர் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டவன் அதை செயல்படுத்து முறைகளை எண்ணிக் கொண்டான். அதை பின் பற்றவும் செய்தான். அதற்கு காவ்யாவும் துணை இருந்தாள். அவள் சாரதா போல் இல்லாமல் தேவியின் நிலை உணர்ந்து தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டாள்.

 

வேலைக்கு போய் விட்டு மாலை வந்ததும் தேவியை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு அழைத்து சென்று அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்தபடி அமர்ந்திருப்பார்கள். சிலநேரம் அக்குழந்தைகளில் சிலரை பக்கத்தில் அழைத்து பேசவும் செய்வான் செல்வா. அப்போதெல்லாம் அவன் கைகளை இறுக பற்றிக்கொண்டு குழந்தைகளை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி அமர்ந்து கொள்வாள். நாட்கள் செல்ல செல்ல அதில் மாற்றம் வந்தது முகம் திருப்பாமல் அவர்களை பார்க்க பழகிக் கொண்டாள். பின்னர் அதுவும் மாறி அவர்களிடம் பேசவும் ஆரம்பித்தாள்.

 

இந்தநிலையில் காவ்யாவிற்கு வலி எடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்க எல்லோரும் மருத்துவமனைக்கு செல்லும் போது தேவி வர பயந்து அடம் பிடித்தாள். அதை பார்த்த அபிராமி அவளிடம் சென்று அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். காவ்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஒவ்வொருவராக சென்று குழந்தையை பார்த்துவிட்டு வரும் போது அவர்கள் முகங்களை ஆவலுடன் பார்த்த படி நிற்பாலே தவிர காவ்யா இருந்த அறைக்குள் செல்லவே பயந்தாள்.

 

அவளின் பயத்தை புரிந்த செல்வா அவளின் கையைப்பற்றி அழைத்துக் கொண்டு காவ்யாவின் அறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழையும் போது முகம் வெளுத்து கண்களில் கண்ணீர் எப்போது விழுவேனோ என்று நிற்க நெஞ்சம் படபடக்க வந்தவளை தொட்டிலின் முன் சென்று நிற்க வைத்தான். அவள் கைகளில் நடுக்கத்தை உணர்ந்தவன் அழுத்தமாக பிடித்துக் கொண்டு காவ்யாவை பார்த்து ”நான் உன் அண்ணி கிட்ட குழந்தையை தூக்கி கொடுக்க போறேன் உனக்கு பயமா இருந்தா சொல்லிடு. நான் கொடுக்கல” என்றான்.

 

“கொடு அண்ணா என் குழந்தைக்கு அண்ணி நல்லது தான் நினைப்பாங்களே தவிர அவங்களால எந்த கெடுதலும் வராது” என்றாள்.

 

குனிந்து தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்தவன் தேவியின் கைகளில் கொடுக்க அந்த பிஞ்சு ஸ்பரிசத்தை கைகளில் உணர்ந்ததும் அது வரை இருந்த பயம் மாறி மெல்ல தன்னியாரியாமலேயே குழந்தையின் கால்களையும் கைகளையும் வருடத் தொடங்கினாள். அவளின் உணர்வுகளை கண்டு கொண்டிருந்த காவ்யாவிற்கும் செல்வாவிற்கும் கண்ணீரில் கண்கள் மறைத்தது.

 

குழந்தைக்காக ஏங்கும் தாயின் உணர்வுப் போராட்டத்தை இருவரும் கண்டு கொண்டனர். தேவியின் நிலையோ சொல்லில் அடங்காது இருந்தது. குழந்தை லேசாக அசைந்து கைகால்களை அசைக்க அது அவள் நெஞ்சில் பட்டு அவளுள் உறங்கிக் கொண்டிருந்த தாய்மையை தட்டி எழுப்பியது. உடனே குழந்தையை தொட்டிலில் போட்டவள் அதுவரை தன் உணர்வுகள் எல்லாவற்றையும் அடக்கி வைத்திருந்தவள் செல்வாவின் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். அவளின் உணர்வுப் போராட்டங்களை அதுவரை கண்டு கொண்டவனது மனமும் தத்தளிக்க அவளை இறுக பற்றியபடி அசையாது நின்று விட்டான்.

 

தேவியின் அழுகை சத்தத்தை கேட்டு உள்ளே வந்தவர்கள் ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும் தம்பதிகளின் நிலையை உணர்ந்து கொண்டனர். அனைவரது மனமும் ஆண்டாவா இவர்களின் கவலையை சீக்கிரம் தீர்த்துவிடு என்று வேண்டிக் கொண்டது.

 

அன்று முழுவதும் ஒருவித பயத்துடனேயே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவி. தான் குழந்தையை கைகளில் வாங்கி விட்டோம் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டுமே என்று. அபிராமி ஆஸ்பத்திரியில் தங்கி விட வீடு வந்தபிறகு செல்வாவை சுற்றி வந்தவள் அவனிடம் ஒன்றும் நடக்காது இல்ல என்று திருப்பி திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

பயம் இருந்தாலும் அதையும் மீறி குழந்தையை கையில் வாங்கியதில் ஒருவித சந்தோஷம் இருப்பதையும் உணர்ந்தாள். வெகு நாட்களுக்கு பிறகு இருவருக்குளும் சொல்ல முடியாத ஒருவித உணர்வு வந்து ஆட் கொண்டது. அதன் காரணமாக அதுவரை தள்ளி இருந்த தம்பதிகள் அன்று ஒருவரை ஒருவர விரும்பி ஏற்றுக் கொண்டனர். இளஞ்சாரலாய் அங்கு தாம்பத்தியம் அரங்கேறியது.

 

மூன்று நாட்களுக்கு பிறகு வீடு வந்த காவ்யாவிற்கும் குழந்தைக்கும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள் தேவி. அவளின் பயம் சற்று தெளிந்திருந்தபடியால் குழந்தையின் அருகில் சென்று பார்க்கவும் அவ்வபோது கை கால்களை தொட்டு பார்ப்பது என்று கொஞ்சம் முன்னேறி இருந்தாள். அவளின் செய்கைகளை பார்த்து அண்ணன் தங்கை இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொள்வர்.

 

ஒருநாள் ஆபிஸ்ஸில் இருந்து வந்தவள் ரெப்ரெஷ் பண்ணிக் கொண்டு குழந்தையை பார்க்க செல்ல அங்கே இருந்த அபிராமி சட்டென்று குழந்தையை அவள் கையில் கொடுத்து விட முதலில் அதிர்ந்தாலும் பின்னர் குழந்தை அவளை பார்த்து சிரித்ததும் அதில் மயங்கி தன் கைகளிலேயே வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

 

குழந்தை பிறந்து ரெண்டு மாதம் ஆன போது முற்றிலுமாக மாறி இருந்தாள் தேவி. ஆபீஸ்ஸில் இருந்து வந்த பிறகு குழந்தையை கீழே விடாமல் தன்னுடனேயே வைத்திருப்பாள். அவளின் மாற்றம் எல்லோருக்கும் நிம்மதியை தந்தது.

 

அதன்பின் ஒரு நாள் பால்கனியில் அமர்ந்து கொண்டு மேகங்களை ஆராய்ந்து கொண்டிருந்த மனைவியிடம் வந்த செல்வா. “என்ன மேடம் இன்னைக்கு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கீங்க?”

 

“ஏன் செல்வா இன்னும் ஒரு மாசத்துக்கு அப்புறம் பாப்பா அவங்க வீட்டுக்கு போய்டுவான் இல்லை” என்றாள்.

 

“ஆமாம்மா .அது தானே முறை.”

 

“எனக்கு அவன் இல்லாம என்னவோ மாதிரி இருக்கும்” என்று சொல்லி அவன் தோள் சாயந்து கொண்டாள்.

 

“நீ இப்படி பீலிங்க்ஸ் ஆப் இந்தியாவா இல்லாம இருந்தா நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சு இருக்கேன்.”

 

‘ஹே என்னப்பா அது ப்ளீஸ் சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ்..”

 

‘ம்ஹம்ம்…..நான் கேட்குறதை கொடுத்தா சர்ப்ரைஸ் உடனே காண்பிக்கப் படும்.”

 

“எப்பவும் பால்கனில உட்கார்ந்து கிட்டு தான் இவர் ரொமான்ஸ் பண்ணுவார்….போயா உன் சர்ப்ரைசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்.”

 

‘ஐயோ செல்லம் இது என்ன முதலுக்கு மோசமாகிடும் போல..டோ..ட்டோ…டைங்..இதை பிரிச்சு பாரு.”

 

“என்ன இது கிரிக்கெட் மேட்ச்க்கு டிக்கெட் வாங்கிட்டு வந்தீங்களா? “

 

“அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா .”

 

“ஹலோ உன்னை பிரிச்சு தானே பார்க்க சொன்னேன்…அதை விட்டுட்டு என்னை நொட்டை சொல்லிட்டு இரு.”

 

“சரி சரி..ஹே..இது என்ன நேபால் போறதுக்கு டிக்கெட்ஸ்சா?”

 

‘ஆமாங்க மேடம்…நான் இப்போ பாஸ் பண்ணிட்டேனா உங்க கணிப்பில்.”

 

“ஆனா காவ்யா இங்கே இருக்கும் போது நாம எப்படி?”

 

‘ஏன் அவளுக்கு என்ன?”

 

“மாங்கான்னு சொன்னது இதுக்கு தான் அவளையும் குழந்தையும் யார் பார்த்துக்குவாங்க.”

 

“என்ன நீ ஓவரா பேசிட்டு போறே.அது தான் ரெண்டரை மாசம் ஆச்சே அவளே பார்த்துக்குவா பத்தாதுக்கு அம்மா வேற இருக்காங்க அப்புறம் என்ன.நோ வே…நானும் ரொம்ப நாளா உன்னை தள்ளிகிட்டு போகணும்ன்னு ட்ரை பண்றேன் இப்போ தான் சான்ஸ் கிடைச்சுது.”

 

உங்களை என்று சொல்லி பக்கத்தில் இருந்த குஷனை எடுத்து அடிக்க அவன் ஓட தேவி அவனை துரத்த ஒரு இடத்தில் அவன் அவளை மடக்கி தன் கைகளில் அள்ளிக் கொள்ள ”இப்போ இந்த நிமிஷத்தில் இருந்து நம்ம செகண்ட் ஹனி மூன் ஆரம்பிக்குது மேடம்.”

 

“செல்வா அத்தை மாமா எல்லாம் நாம போறதுக்கு தப்பா நினைச்சுக்க மாட்டாங்க இல்ல.”

 

“எல்லோருக்கும் சந்தோஷம் நம்ம வீட்டுக்கு வர வேலைக்கார அம்மாவில் இருந்து புதுசா பொறந்து இருக்கிற குட்டி இளவரசர் வரை. போதுமா செல்லம். ஒரு மனுஷனை நிம்மதியா அவன் வேலையை பார்க்க விடாம எத்தனை கேள்வி.”

 

இனி நேபாளத்தில் அவர்களுக்கு காத்திருப்பது என்ன??

 

 

அவர்கள் நேபால் செல்லும் நாளும் வந்தது அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது ஏனோ மனம் சிறிது சஞ்சலப்பட்டது. மனதிற்கு விரும்பாத ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவது போல் தோன்றியது தேவிக்கு.

 

விமானத்தில் முதல் அனுபவமாதலால் ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டும் மேலே ஏறும் போதும் கீழே இறங்கும் போதும் பயந்தும் மாறி மாறி தன் உணர்வுகளை வெளிபடுத்திக் கொண்டு வந்தாள். மனைவியின் ஒவ்வொரு செயலையும் பேசாமலேயே ரசித்துக் கொண்டு வந்தான் செல்வா.

 

திரிபுவன் விமான நிலையத்தில் இறங்கி தாங்கள் புக் பண்ணி இருந்த ஹோட்டலுக்கு சென்றனர். இவர்களை போல அங்கு ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். செல்வா தங்கள் அறையை பற்றி விசாரிக்க ரிசப்ஷனுக்கு சென்று விட அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு சுற்றி இருப்பவர்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள் தேவி. அப்போது அவளின் அருகில் இருந்த சோபாவில் ஒரு பெண் குழந்தையுடன் அமர அவள் கணவன் அவளிடம் சொல்லி விட்டு செல்ல அவர்கள் தமிழர்கள் என்பதை அறிந்து கொண்டதும் மெல்ல அவளை பார்த்து புன்னகைத்தாள்.

 

அந்த பெண்ணும் புன்னகைக்க  நீங்க தமிழா என்று பேசத் தொடங்கியவர்கள் கணவர்கள் வருவதற்குள் இருவரும் நெருங்கி இருந்தனர். அந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தை தேவியின் கைகளுக்கு மாறி வெகு நேரம் ஆகி இருந்தது.

 

அறையின் சாவியை வாங்கிக் கொண்டு வந்த செல்வா தேவியின் கையில் இருந்த குழந்தையை கண்டு விழிக்க. அருகில் இருந்த பெண்ணை அறிமுகப்படுத்தினாள். இவங்களும் தமிழ்நாட்டிலே இருந்து வராங்க…இவங்க பேரு வைஷணவி இந்த குட்டிமா இவங்க பொண்ணு பேரு ப்ரத்யா.

 

அந்த நேரம் வைஷ்ணவியின் கணவனும் வந்து விட செல்வாவும் வைஷணவியின் கணவன் கதிரும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். இருவரும் தங்களின் வேலை இருக்குமிடம் எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்டு அறைக்கு செல்லலாம் என்று கிளம்பும் போது பார்த்தால் இருவருக்கும் அருகருகே அறை கிடைத்திருந்தது . ஆண்கள் இருவரும் பேசிக் கொண்டே முன்னே செல்ல வைஷ்ணவியும் தேவியும் பல நாள் தோழிகள் போல பேசிக் கொண்டு வந்தனர்.

 

‘ஓகே செல்வா வெளியே போகும் போது சொல்லுங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம். நாங்க இங்கே வரும் போது தனியா போகணுமே டூர் ஆபரேடர்ஸ் கிட்ட புக் பண்ணாம விட்டுட்டோமேன்னு நினைச்சேன். ஆனா இப்போ உங்க ரெண்டு பேர் மாதிரி நல்ல கம்பனி கிடைச்சு இருக்கு” என்றான்.

 

“எங்களுக்கும் தான் கதிர் வெளியூர் வந்து இப்படி தமிழ் பிரெண்ட் கூட வெளில போறது சந்தோஷமான அனுபவம் தான். எங்களுக்கு எப்போ போனாலும் பிரச்சனை இல்ல நீங்க பாப்பா எப்போ ரெடி ஆகிறாலோ அப்போ சொல்லுங்க போகலாம் .”

 

இருவரும் கைகுலுக்கி விட்டு அவரவர் அறைக்குள் வந்தனர். அறைக்குள் வந்ததும் வைஷ்ணவியை பத்தி லொட லொட வென்று பேச ஆரம்பித்தாள் தேவி.

 

செல்வாவோ அங்கிருந்த பெரிய கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளை பார்த்து மலைத்த வண்ணம் நின்றிருந்தான். சிறிது நேரம் பேசி விட்டு அவனிடம் இருந்து பதில் இல்லை என்றதும் அவனருகே சென்று வெளியில் தெரிந்த காட்சியை பார்த்தவள்..”வாவ்…எவ்வளவோ அருமையா இருக்கு பா….நான் இப்படி இருக்கும்ன்னு எதிர்பார்க்கவே இல்லை.”

 

அவள் வெளியில் தெரிந்த காட்சியை ரசித்துக் கொண்டிருந்த போது அவள் அருகே வந்து நின்றவன் அவள் இடையில் கையை வைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் கழுத்தில் தன் முகத்தை அழுத்திக் கொண்டு..”நானும் இவ்வளவு அருமையா இருக்கும்ன்னு எதிர்பார்க்கவே இல்லடா.”

 

அவர்கள் வந்திருந்தது நவம்பர் மாதத்தில் என்பதால் பனிக்காலம் ஆரம்பம்  ஆகும் சமயம்  மிதமான குளிர்காற்று உடலை தீண்ட…அவனின் நெருக்கத்தில் உஷ்ணமான மூச்சுக்காற்று ஒரு பக்கம் தீண்ட கலவையான உணர்வுகளுடன் போராடியவள் முடிவில் அவன் கைகளில் தஞ்சம் அடைந்தாள்.

 

குளிர்ப்ரதேசம் தந்த நெருக்கமும் அதுவரை மனதில் இருந்த வெம்மை மாறி இருவருக்குள்ளும் ரசாயன மாற்றத்தை உண்டாக்க அவர்களின் ரெண்டாவது ஹனி மூன் கொண்டாட்டங்கள் தொடங்கியது.

 

இருஜோடிகளும் வெளியில் செல்லும் போது ஒன்றாக சென்று ஒன்றாகவே திரும்பினர். வந்து நான்கு நாட்களில் நல்ல நெருக்கம் வந்திருந்தது. ஒருவரை பற்றி ஒருவர் நன்கு அறிந்து கொண்டனர்.

 

கதிர் , வைஷ்ணவி இருவரும் காதல் மனம் புரிந்தவர்கள். இருவரும் வேறு வேறு ஜாதி ஆதலால் இரு குடும்பத்தினரும் அவர்களின் காதலை ஏற்க மறுத்தனர். அதனால் குடும்பத்தினருக்கு தெரியாமல் ஓடிச்சென்று திருமணம் முடித்துக் கொண்டனர். திருமண விஷயம் தெரிந்த இவர்களை கொலை செய்வதற்கு கூட முயன்றனர் இரு பெற்றோரும். அதனால் யாரும் வேண்டாம் என்று சொல்லி பம்பாயில் வேலை வாங்கி கொண்டு சென்று அங்கு இருந்து வருகின்றனர். குழந்தை பிறந்த பிறகாவது இரு குடும்பத்தினரும் இணக்கம் காட்டுவர் என்று எண்ணி ஒரு முறை இரு வீட்டிற்கும் சென்றனர். ஆனால் அவர்களோ குழந்தையோடு சேர்த்து மொத்தமாக கொலை செய்து விடுவோம் என்று மிரட்ட இனி தங்களுக்கு உறவுகள் என்று யாரும் இல்லை என்று சொல்லி வாழப் பழகிக் கொண்டனர்.

 

அவர்கள் கதையை கேட்டறிந்த செல்வாவும் தேவியும் இனி உறவுன்னு உங்களுக்கு நாங்க இருக்கோம் எப்போ சென்னை வந்தாலும் எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும் என்று கட்டளையிட்டனர்.

 

செல்வா தேவியின் பிரச்னையை அறிந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்கவில்லை கதிர் வைஷு தம்பதி. பழகிய சிறிது நாட்களிலேயே செல்வாவை அண்ணா என்றும் தேவியை அண்ணி என்றும் அழைக்க தொடங்கினால் வைஷு.

 

“அண்ணி எனக்கு ஒரு சந்தேகம் இங்கே யாரு காதல் கல்யாணம் பண்ணிகிட்டவங்கன்னு தெரியலப்பா…..அண்ணனும் நீங்களும் விடுற லுக் இருக்கே…..நீங்க என்ன சொல்றீங்க கதிர்..நான் சொல்றது சரி தானே.”

 

“ஆமாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு ஒரு அரேஞ்ச்டு மேரேஜ்ல இவ்வளவு லவ் இருக்க முடியும் என்கிறதை இப்போ தான் பார்க்கிறேன். நீங்க ரெண்டு பெரும் சுப்பர் ஜோடி செல்வா. “

 

“ஏன் வைஷு இவ எப்படி என்னை பார்த்தவுடனே இப்படி ஒட்டிகிட்டா….எல்லோர்கிட்டயும் போவாளா?”

 

“இல்ல அண்ணி தியா குட்டி யார்கிட்டேயும் அவ்வளவு சீக்கிரம் போகாது ஆனா எனக்கே ஆச்சர்யம் தான் உங்களை பார்த்ததும் ஒட்டிகிட்டா.”

 

“எனக்கு இவளை விட்டுட்டு ஊருக்கு போகணும்ன்னு நினைச்சாலே இப்போவே மனசு கஷ்டமா இருக்கு.”

 

“கவலைப்படாதீங்க அண்ணி நாங்க இருக்கிறது மும்பை தானே நீங்க நினைச்சாலும் வந்திடலாம் நாங்களும் வரலாம்.”

 

நேபால் சென்று ஏழாவதுநாள் இரு ஜோடிகளும் ஊரை சுற்றி விட்டு அங்கிருந்த சிறிய கடைகளில் நியாபாகர்த்தமாக சில பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பினர். வந்ததும் அவரவர் அறையில் அடைந்துவிட அடுத்த நாள் கிளம்ப வேண்டும் என்பதால் தேவி சாமான்களை எல்லாம் பாக் செய்து வைத்து விட்டு அமர்ந்தாள். அப்போது பிரத்யாவை தூக்கிக் கொண்டு வந்த வைஷு அவளை சிறிது நேரம் வைத்துக் கொள்ள சொல்லி கேட்டாள்.

 

 “அவங்க போன் பண்ண போய் இருக்காங்க அண்ணி இவளை கொஞ்ச நேரம் நீங்க வச்சுகிட்டா நான் போய் திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணிடுவேன்.”

 

“லட்டு குட்டியை வச்சுக்க எங்களுக்கென்ன கசக்குமா ..”நீ போய் பாக் பண்ணிட்டு வந்து தூக்கிட்டு போ வைஷு எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.”

 

அவள் சென்ற பின் பிரத்யாவை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள் தேவி. அதுவரை பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் அவர்கள் இருவரும் விளையாடுவதை பார்த்து அருகில் சென்றான். அவனை பார்த்ததும் ப்ரத்யா குதிக்க..”இங்கே பாருடா நான் இவ்வளவு நேரம் இவளை வச்சு விளையாடிகிட்டு இருந்தேன் உங்களை பார்த்ததும் எப்படி குதிக்கிறா.”

 

அவன் தூக்கி கொண்டதும் அவளை பார்த்து பொங்கி பெருமையாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டது சின்னகுட்டி. இருவரும் அவளை வைத்து விளையாடும் போது மனதிற்குள் இப்படி ஒருகுழந்தையுடன் தாங்கள் இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டனர்.

 

பின்னர் வைஷு குழந்தையை வாங்கி செல்லும் போது இரவு உணவுக்கு நால்வரும் சேர்ந்து செல்லலாம் என்று முடிவு செய்து அதன்படியே சாப்பிட்டு விட்டு நேப்பால் பயண அனுபத்தை மறக்க முடியாதென்றும் இனி ஒருவரை ஒருவர் மறக்க கூடாதென்றும் பேசிக் கொண்டு அவரவர் அறையில் உறங்க சென்றனர்.

 

இரவு ஒருமணி இருக்கும் தேவிக்கு திடீரென்று முழிப்பு வந்தது கட்டில் வேகமாக ஆடுவது போல் உணர்ந்து செல்வாவை எழுப்பினாள். அவனும் எழுந்து பார்த்து என்ன நடக்கிறதென்று உணர்வதற்குள் கட்டிடம் இடிந்து விழலாயிற்று . செல்வா தன்னை சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த மேஜையின் கீழே சென்று தானும் அமர்ந்து கொண்டு தேவியையும் பிடித்துக் கொண்டான்.  ஒரு அரை மணி நேரத்திற்குள் அனைத்தும் முடிந்து போய் இருந்தது. அவ்வளவு பெரிய ஹோட்டல் தரைமட்டமாக ஆகி இருந்தது.

 

கட்டிடம் இடிந்து மேலே மேலே விழுந்ததால் அந்த அதிர்ச்சியிலும் தூசியிலும் இருவரும் மயங்கி விட்டிருந்தனர். அடுத்தநாள் காலை ஊடங்கங்கள் எங்கும் நேபாலின் நில நடுக்கத்தை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது.

 

ஊரில் செல்வாவின் வீட்டிலும் தேவியின் வீட்டிலும் அனவைரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

 

மீட்பு படை வந்து மெல்ல இடிபாடுகளுக்கிடையே யாராவது இருக்கிறார்களா என்று தேடி ஒவ்வொரு சடலங்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். நிலநடுக்கம் இரவு நேரம் வந்ததால் மக்கள் தப்பிக்க வழியில்லாமல் சேதாரம் அதிகமாக இருந்தது. மீட்பு படையினர் செல்வாவையும் தேவியையும் கண்டு பிடித்து வெளியில் எடுத்து வந்தனர். இருவருக்கும் உயிர் இருப்பதை அறிந்து உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

 

ஒருநாள் போராட்டத்துக்கு பிறகு இருவருக்கும் நினைவு வந்தது. நினைவு வந்ததும் செல்வா தங்கள் வீடுகளின் தொலைபேசி எண்ணை கொடுத்து தங்கள் வீடுகளில் தெரிவித்து விடும்படி கூறினான். தேவியோ நினைவு திரும்பியதும் முதலில் கேட்ட கேள்வி வைஷுவை பற்றியும் கதிர், பிரத்யாவை பற்றியும்தான்.

 

ஆனால் கிடைத்த செய்தியோ அவளை மீண்டும் நினைவற்று போகச் செய்தது. வைஷுவும், கதிரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் குழந்தையை பற்றி இதுவரை தகவல் ஒன்றும் தெரியவில்லை என்று கூறினார்.

 

செல்வா உடல் சற்று தேறியதும் தேவியை தன் பாதுக்காப்பில் வைத்துக் கொண்டான். அவனுக்குமே கதிர் வைஷுவின் இறப்பு வருத்தத்தை தந்தது. ஆனால் பிரத்யாவை பற்றி தகவல் தெரியாததால் மீட்பு படையினரிடம் குழந்தையை பற்றி சொல்லி இன்னும் தீவிரமாக தேடும்படி வேண்டிக் கொண்டான்.

 

அந்த ஹோட்டல் பத்து மாடி கட்டிடமாதலால் அதுவும் அந்த சீசன் நிறைய சுற்றுலா பயணிகள் வேறு வந்து இருந்ததால் வெறும் சடலங்களாக எடுத்து வெளியில் போட்டனர். அவற்றை பார்க்க பார்க்க செல்வாவிற்கு மனம் தவித்தது….ஐயோ ப்ரத்யாவை வெளியில் கொண்டு வரும் போது எப்படி என்னால் பார்க்க முடியுமா என்று பயந்து கொண்டு நின்றிந்தான்.

 

தேவியோ நினைவு திரும்பியவுடன் நடந்தவைகளை நினைத்து அழுது அழுது கரைந்தாள். அவளால் வைஷு , கதிரின் இழப்பை தாங்கவே இயலாமல் போனது. முதல் நாளிரவு தங்களுடன் உணவருந்தியவர்கள் இன்று இல்லாமல் போனது அவள் மனதை பெரிதும் பாதித்தது. அதைவிட பிரத்யாவை பற்றி செய்தி ஒன்றும் கிடைக்கவே இல்லை என்று அறிந்ததும் அவளின் தவிப்பு கூடியது. செல்வாவின் நிலைமைதான் கஷ்டமாக போனது ஒருபக்கம் அவனுக்குமே பிரத்யாவின் நிலையை பற்றி பயம் இருந்தாலும் அதை மனைவியின் முன் காண்பிக்காமல் அவளையும் சமாதானப்படுத்திக் கொண்டு மீட்பு பணி நடக்கும் இடத்திற்கும் சென்று அலைந்து அலைந்து உடலும் மனமும் வலுவிழந்து போனது.

 

நிலநடுக்கம் வந்து இருபத்திரண்டு மணி நேரம் கழித்து மீட்பு படையினரில் ஒருவன் இடிபாடுகளுக்கிடையே உள்ளே தேடிக் கொண்டிருந்தவன் திடீரென்று கையை காட்டி கத்த உடனே மற்றவர்கள் அங்கே ஓடினர். ஒரு சிறிய உருவம் தெரிகிறது உயிருடன் இருப்பது போலவும் இருக்கிறது என்றான். உடனே விரைந்து எல்லோரும் அங்கிருந்தவற்றை நகர்த்தி உள்ளே இருந்தவரை வெளியில் கொண்டு வந்தனர்.

 

செல்வா ஓடி சென்று வெளியில் வந்த உருவத்தை கண்ட போது அவனை அறியாமலேயே கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இருபத்திரண்டு மணி நேரம் போராட்டத்துக்கு பின் உயிருடன் வெளியில் வந்து விட்டாள் ப்ரத்யா.

 

மீட்பு படையினர் அனைவரும் குழந்தையை கடவுளின் குழந்தை என்று கொண்டாடி விட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். 

 

சிகிச்சைக்கு பிறகு ஓரிரு நாட்களில் உடல் சற்று தேறினாலும் பிரத்யா தன் அன்னை தந்தையை தேடி அழுது கொண்டே இருந்தாள். மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அவளை கவனித்துக் கொண்டாலும் எப்பொழுதும் ஒரு சினுங்களுடனே இருந்தாள். தேவியை அறிந்ததால் அவளை கண்டதும் அழுகை மட்டுப்பட்டது. குழந்தையின் தவிப்பை பார்த்த செல்வா தம்பதிக்கும் மனதில் குழப்பம் ஏற்ப்பட்டது. இனி குழந்தையை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம் இல்லை. அவளின் பெற்றோர்களின் உறவுகள் அவளை ஏற்க மாட்டார்கள் என்று தெரிந்ததால் அவளை தாங்களே வைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

 

  பின்னர் தங்களுக்கு தெரிந்தவற்றை எல்லாம் சொல்லி பிரத்யாவை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.

 

அவர்களின் கோரிக்கையையும் குழந்தையை பற்றிய விபரங்களையும் அறிந்து கொண்ட பின்னர் குழந்தையின் தாய் வழி உறவுகளிடமும் தந்தை வழி உறவுகளிடமும் விசாரித்து விட்டு சொல்கிறோம் அதுவரை குழந்தை எங்களிடம் இருக்கட்டும். இவை எல்லாம் நடக்க சிறுது நாட்கள் ஆகலாம் அதனால் நீங்கள் ஊருக்கு சென்று விடுங்கள். எங்களிடம் இருந்து உங்களுக்கு பதில் வந்த பின்னர் வந்து குழந்தையை அழைத்து செல்லலாம் என்று கூறி விடுகின்றனர்.

 

அதை கேட்டதும் தேவி குழந்தையை விட்டுவிட்டு என்னால் ஊருக்கு வர முடியாது என்று முரண்டு பிடிக்க செல்வா அவளுக்கு நிலைமையை எடுத்துக் கூறி இவை எல்லாம் நடக்க பல நாட்கள் ஏன் பல மாதங்கள் கூட ஆகலாம் நாம் அதுவரை அங்கிருக்க முடியாது என்று சொல்கிறான்.

 

இருவரும் மனமில்லாமல் பிரத்யாவை அங்கிருக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு கிளம்புகின்றனர். குழந்தையோ தேவியை காட்டி காட்டி அழ அதை பார்த்து தேவியும் தாங்க முடியாமல் கதற அங்கிருந்த அதிகாரிகளுக்கே இந்த உணர்வு போராட்டத்தை பார்த்து கண் கலங்குகின்றனர்.

 

விமானத்தில் சென்னை வரும் வரை அழுது அழுது கரைகிறாள் தேவி. எவ்வளவோ சமாதனம் செய்தும் அவள் மனம் ஆறவே இல்லை. செல்வாவுக்குமே பிரத்யாவின் நினைவிலேயே செல்கிறது.

 

அவர்கள் ஊருக்கு வந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையும் பிரத்யாவின் நினைவிலேயே செலவழிக்கின்றனர். இந்த நேரம் அழமால் சாப்பிட்டு இருப்பாளோ தூங்கி இருப்பாளோ என்று அவளை சுற்றியே சுழலுகின்றது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மற்றவர்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டனர்.

 

நேப்பால் சென்று ஒரு மாதம் முடிவடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு நேப்பாலில் இருந்து பதில் வந்தது குழந்தையை அவர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக . அதை கேட்டதும் செல்வாவும் தேவியும் உடனடியாக அடுத்த இரு நாட்களுக்குள் நேப்பால் கிளம்பி சென்று குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர்.

 

ஒரு மாதம் ஆனாலும் பிரத்யாவும் தேவியை மறக்காமல் அவளை கண்டதும் அவளிடம் தாவி தேவியின் கன்னத்தில் தன் செப்பு வாயை வைத்து முதல் முத்தத்தை பதிக்கின்றது. தேவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி வழிகிறது….”இதற்காக தானே இத்தனை போராட்டம். இப்படி ஒரு மலரை என்னிடம் கொடுக்க தான் என்னை இவ்வளவு சோதித்தாயா ஆண்டவா என்று எண்ணினாள்.”

 

சென்னை போய் இறங்கி பிரத்யாவை அவர்களிடம் காண்பித்த போதும் அவளின் இருபத்திரெண்டு மணி நேர போராட்டத்தை பற்றியும் அவளின் பெற்றவர்களை பற்றியும் கதை கதையாக சொல்லி ஓய்ந்தனர்.

 

செல்வா தேவி இருவரின் முகங்களிலும் தெரிந்த ஒரு நிம்மதி ஒரு சந்தோஷம் அதை பார்த்ததும் சுற்றி இருந்த அனைவரும் கடவுளுக்கு நன்றி கூறினர். அபிராமியும் மனதிற்குள்ளேயே  ‘கடவுளே எப்படி இருக்க வேண்டிய குழந்தைகளை நானே என் வார்த்தையால காயப்படுத்திட்டேன் இனியாவது அவங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கணும். இனி இவளும் என் பேத்தி தான். எந்த காலத்திலும் என் மகனுக்கும் மருமகளுக்கும் நான் கெடுதல் நினைக்க மாட்டேன்’ என்று எண்ணிக் கொண்டார்.

 

கடவுளின் ஒவ்வொரு செயலுக்கும் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு.எங்கிருந்தோ சென்ற இரு ஜோடிகளை சந்திக்க வைத்து ஒருவரின் இழப்பில் மற்றவரின் வாழ்க்கையை வளமாக்கிய செய்கையை யார் அறிந்து கொள்ள முடியும்.

 

       சின்னஞ்சிறு கிளியே கண்ணமா செல்வ களஞ்சியமே –

       என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

       பிள்ளை கனியமுதே கண்ணமா பேசும் பொற்ச்சிதிரமே

      அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேரே….

Advertisements