வேக வேகமாக நடக்கிறேன் கால்களில் வலுவில்லை ஏன் என்று தெரியவில்லை. மரங்கள் அசைந்தாலும் காற்று என் மேல் சிறிதளவும் படவில்லை. மற்ற மனிதர்கள் எல்லாம் என்னை விட வேகமாக செல்வது போல் இருக்கிறது.

இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று தெரியவில்லை . அதோ அந்த ஆலமர நிழலில் சற்று இளைப்பாறி செல்லலாம் என்று சென்று உட்கார்ந்தேன். முகமெல்லாம் வியர்த்து நெஞ்சு படபடவென்று அடித்து கொள்கிறது…ஆனால் இப்படி ஒரு மனிதன் அவதிபடுகிறானே என்று ஒருவரும் திரும்பி பார்க்கவே இல்லை என்ன உலகம்!

சிறிது ஒய்வு எடுத்ததும் உடலில் தெம்பு வந்தது .சரி மீண்டும் போவோம் வழியில் ஏதாவது சுவாரசியமான சம்பவம் நடந்தால் சென்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டு நடந்தேன்.

ஐஸ் வண்டி செல்கிறது இரு குழந்தைகள் குடுகுடுவென்று ஓடி வந்து வாங்கியது. அடடா என்ன ஒரு சந்தோஷம் அவர்களின் முகத்தில். என் குழந்தைகளும் இப்படி தானே சந்தோஷபடுவார்கள் என்று தோன்றியது. இரு பெண்கள் தங்கள் கணவன்களை பற்றி வம்பு பேசிக் கொண்டே சென்றார்கள்.

என் மனைவிக்கும் என்னை கண்டாலே ஆகாது. தான் அதிகம் சம்பாதிக்கிறோம் என்று திமிர் என்னை மதிக்கவே மாட்டாள். என் வார்த்தைகளுக்கு அவளிடம் என்றுமே மதிப்பு இருந்ததில்லை. திமிர் பிடித்தவள்.

சிறிது தூரம் சென்ற பின் ஒரு வீட்டின் வாசலில் ஒரே கூட்டம்.  ஒரு கூட்டத்தை பார்த்தாலே அங்கு என்ன என்று எட்டி பார்க்கும் மனித இயல்பு எனக்கும் வந்தது. நானும் மெதுவாக கூட்டத்தினருக்கருகில் சென்று பார்த்தேன்.

அந்த வீட்டின் ஆண் இறந்திருப்பான் போலும். ஆனால் அங்கு ஒரு அதிசயம் அது இழவு வீடு போலவே இல்லை. அங்கு இருந்த ஒருவரும் அழுது கொண்டு இருக்கவில்லை. எனக்கு மண்டை வெடித்து விடும் போல இருந்தது எதனால் யாரும் அழவில்லை என்று அறிந்து கொள்ளாமல். நிறைய கூட்டமும் இல்லை ஆனால் அங்கிருந்த அனைவருமே எதோ ஒரு விதத்தில் இறந்தவனின் மனைவிக்கு ஆதரவாக இருந்த மாதிரி தோன்றியது…இறந்தவனை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

கணவனை தவிர எல்லோரிடமும் நன்றாக பழகி இருப்பாள் போலும். அனைவருமே அவள் மேல் பரிதாபத்துக் கொண்டே இருந்தனர். என்ன கொடுமை ஒரு மனிதன் இறந்து போய் இருக்கிறான் அவனின் இறப்பு ஒருவரையுமே பாதிப்படைய செய்யவில்லை.அவன் மேல் தான் தவறு என்று கண்ணை மூடி கொண்டு அவனை தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

மெதுவாக கூட்டதினருக்கிடையே நுழைந்து உள்வாசலை அடைந்தேன். உள்ளே ரெண்டு பெருசுகள் பேசிக் கொண்டிருந்தது. அந்த பொண்ணை நினைச்சா தான் பாவமா இருக்கு இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்னு படுத்திப்புட்டானே.சாவுளையாவது நல்ல சாவு வந்து இருக்க கூடாதா இந்த பயலுக்கு என்றார் ஒரு பெரியவர்.

என்ன நீங்க, நான் அந்த பொண்ணுக்காக வருத்தபட்டுகிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா அவனுக்கு சாதகமா பேசுறீங்களே….

இல்ல ஒய் சாதரணமா செத்திருந்தா இந்த பொண்ணு போலீஸ் ஸ்டேஷனுக்கும் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கும் அலைச்சல் இல்லாம போய் இருக்கும் இல்ல அதுக்காக சொன்னேன்.

ஆமாம் புருஷன் இருந்தப்பவும் அதுவே தான் சம்பாதிச்சு அவனுக்கும் போட்டுச்சு. அப்படியும் சும்மா இருந்தானா அந்த பய அந்த பொண்ணை சந்தேகப்பட்டு அடிச்சான். பாவம் இனிமேயாவது நல்ல காலத்தை கொடுக்கணும் அந்த பொண்ணுக்கு.

எனக்கு கோவமாக வந்தது இந்த ரெண்டு பெருசுக்கு என்ன தெரியும் அவன் என்ன கஷ்ட்டபட்டானோ? ஊரான் வீட்டு சங்கத்தினா விஷயம் தெரியாமலேயே நியாயம் பேசுவானுங்க என்று நினைத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றேன். அங்கே அவன் உடல் கிடத்தபட்டிருந்தது அதை சுற்றி அங்கங்கே பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.

அவன் மனைவி அவன் பிணத்துக்கருகில் அமர்ந்திருந்தாள். சிறு பெண்ணாகவும் அழகாகவும் இருந்தாள். ஆனால் கண்களில் ஒரு சொட்டு நீர் இல்லை சுவரை வெறித்தபடியே அமர்ந்திருந்தாள். முகத்தில் ஒரு இறுக்கமே தெரிந்தது.

எனக்கு அதிசயமாக இருந்தது இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? இந்த வயதில் கணவனை இழந்தவள் கொஞ்சம் கூட அழாமல் அமர்ந்திருந்ததை பார்த்து என்ன பெண் இவள் என்று தோன்றியது. அவளருகில் ஒரு பத்து வயது பாலகனும் மூன்று வயது குழந்தையும் அம்மாவின் முகத்தை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்கள்..

அப்போது அங்கிருந்த இரு பெண்கள் மெல்லிய குரலில் பாரு கொஞ்சமாவது அழுவுறாளான்னு இவ புருஷன் சந்தேகப்பட்டது உண்மை தான்னு தோணுது என்று பேசிக் கொண்டார்கள்.

எனக்கும் அந்த எண்ணமே வந்தது.  பெரிய பையனுக்கு என்ன நடந்திருக்கிறது என்று புரிந்ததனால் அம்மாவை தொந்திரவு செய்யாமல் தங்கையை கையில் பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தான். அந்த சிறு குழந்தையோ நிலைமையின் தீவிரம் புரியாமல் எதையோ பார்த்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.

அந்த குழந்தையை அப்படியே கைகளில் அள்ளிக் கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்தது. நான் அப்படியே யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டின் கூடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டேன். திடீர் என்று சலசலப்பு எழுந்தது வெளியில் இருந்த ஆண்களில் இருவர் உள்ளே வந்து எவ்வளவு நேரம் வச்சுகிறது அது தான் வரவேண்டியவங்க எல்லாம் வந்தாச்சே எடுத்திடறது நல்லது என்று சொன்னார்கள்.

உடனே நான் ஆர்வமாக அந்த பெண்ணின் முகத்தை பார்த்தேன் இப்போது கதறி அழப் போகிறாள் என்று. ஆனால் அவளோ எழுந்து வந்து தன் கணவனின் பிணத்தருகே சற்று நேரம் நின்று பார்த்தாள் பிறகு சரி எடுத்திடுங்க என்றாள்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஒரு கணவனின் இழப்பில் ஒரு மனைவியால் அழாமல் எப்படி இருக்க முடியும் என்று அவள் முகத்தையே பார்த்திருந்தேன். அவளோ எதுவுமே நடக்காத மாதிரி மறுபடியும் பழைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.

எல்லோரும் சேர்ந்து அவனுக்கு நடத்த வேண்டிய சடங்குகளை செய்தார்கள். அவன் மனைவியோ வேறு யார் வீட்டு இழவிற்கோ வந்த மாதிரி இருந்தாள். அவன் மகன் கூட அதிகம் அழவில்லை . எல்லாம் முடிந்தது.

வந்தவர்கள் அனைவரும் சென்று விட்டனர். அவளுக்கு துணையாக ஒரு பாட்டி மட்டும் கூட இருந்தது. நான் இன்னும் அந்த கூடத்தில் தான் அமர்ந்திருந்தேன். அவன் படத்தின் அருகே அமர்ந்திருந்த அவளிடம் சென்ற பாட்டி கண்ணு மனசுலேயே வச்சுக்காம அழுதிடு இல்லேன்னா பாரமா போய்டும். நாளை பின்ன உன் குழந்தைங்களை பார்க்க வேண்டாமா என்றார். அவள் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் சுருட்டிக் கொண்டு படுத்து விட்டாள்.

 அவள் மகன் மெதுவாக எழுந்து அவளிடத்தில் சென்று அம்மா அம்மா என்று அழைத்தான்……உடனே எழுந்து அவனை தன்னருகில் இழுத்துக் கொண்டு அவன் தலையை வருடினாள்….அம்மா அப்பாவை எல்லோரும் கெட்டவன்னு சொல்றாங்க ….அப்பாவும் உன்னை எப்பவும் அடிப்பாங்க ….ஏன்மா அப்பா முன்னாடி எல்லாம் நல்லா தானே இருந்தாங்க ? கொஞ்ச நாளா என்னையும் பாப்பாவையும் கொஞ்சறது கூட இல்ல…அப்பா எப்பவாவது பழைய அப்பாவா வருவாங்கன்னு நினைச்சேனே ஆனா இனி வரவே முடியாத இடத்துக்கு போயிட்டாங்களேம்மா என்று அழுதான்…

அவ்வளவு நேரம் இறுகி போன முகத்துடன் அமர்ந்திருந்தவள் மகன் அழவும்…..ஆமாடா நானும் அப்படி தானே நினைச்சேன் இத்தனை நாள் என்னை அடிச்சாலும் உதைச்சாலும் எனக்கு வெளில ஏதாவது கஷ்டம் வந்தா அவர் தோளில ஒரு நிமிஷம் சாஞ்சா போதுமே என் கஷ்டம் எல்லாம் பறந்து போய்டுமே இனி என்ன செய்வேன் என்று மகனை கட்டிக் கொண்டு அழுதாள். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு காலத்தில் என்னிடம் அன்பாய் இருந்தவர் தானே அவரின் உள் மனதிற்குள் என் மீதுள்ள பாசம் இருந்தாலும் பாழாய் போன குடியால் தானே எல்லாவற்றையும் கெடுத்து கொண்டார் என்று கதறினாள்.

அப்படியே அதிர்ந்து விட்டேன் அவளின் புறக்கணிப்பில் வராத அழுகை லாரியில் அடிப்பட்டு நசுங்கி கூழான போது வராத வலி என் மகனின் பேச்சிலும் மனைவியின் இந்த பதிலிலும் மரண வலியை உணர்ந்தேன்….ஐயோ என்ன செய்து விட்டேன் இப்படி ஒரு மனைவி குழந்தைகளை தவிக்க விட்ட பாவியாகி விட்டேனே என்று கதறினேன்….

ஓடி சென்று அவள் காலடியில் அமர்ந்து என்னை மன்னித்துவிடடி வாழும் காலத்தில் உன் அருமை புரியாமல் வாழ்க்கையை நரகமாக்கி விட்டேனே ….குழந்தைகளை கூட அருகில் வர விடாமல் செய்த பாவியாகிவிட்டேன் என்று சொல்லி கதறினேன் ஆனால் நான் பாவ மன்னிப்பு கேட்டது யாருக்குமே கேட்கவில்லை…..கையில் கிடைத்த சொர்க்கத்தை நழுவ விட்ட பாவி நான்.

 

Advertisements