மார்கழி திங்கள் அல்லவா மதி கொஞ்சும் ஞாழல்லவா –

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

 

ஒலிப்பெருக்கியின் குரலில் அடித்து பிடித்து எழுந்தாள் யாழினி. கண்கள் தன்னை அறியாமலேயே கடிகாரத்தை நோக்க ஐந்தே கால் ஆகி இருந்தது மணி. தன் தலையில் நன்றாக அடித்துக் கொண்டு ‘போச்சு இன்னைக்கு செத்தேன் அப்பாயி காலையிலேயே ஏழரையை கூட்டிடுமே’ என்று நினைத்துக் கொண்டு அவசரமாக சென்று தலையை திருத்தி, முகம் கழுவி விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

கொல்லைபுறம் சென்று வாளியில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவள், பரபரவென்று பெருக்கி சிறிய கோலத்தை போட்டு விட்டு உள்ளே சென்றாள்.

 

சமயலறையில் காப்பி போட்டுக் கொண்டிருந்த வேலாம்பா திரும்பி மகளை பார்த்தவர் “ என்ன யாழு இவ்வளோ நேரமா தூங்குவ, உன் அப்பாயி ஆரம்பிச்சிடுச்சு சவுண்ட் செர்விசை அப்போவே.”

 

அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்தவள் அம்மா ஓடுதத காப்பியை உறிஞ்சி கொண்டே “ என்னத்தை சொன்னுச்சு அப்படி?”

 

மற்றவர்களுக்கு காபியை எடுத்து டம்பளரில் ஊற்றி கொண்டே” இது தான் சாக்குன்னு என்னை நாலு மொத்து மொத்துனுச்சு. என்ன பொண்ணு வளர்த்து இருக்கேன்னு.”

காப்பி டம்ளரை எடுத்து சென்று கொல்லையில் போட போனாள் யாழினி. அங்கே இருந்த கல்லில் அமர்ந்திருந்த  பாட்டி இவளை பார்த்ததும்ஏண்டி நல்லா தான் பொண்ணை வளர்த்து இருக்கா உங்க அம்மா. இம்புட்டு நேரமா தூங்குவே. போற இடத்தில விளக்கமாத்து அடி தான் வாங்க போற” என்று வாய் ஓயாமல் திட்ட ஆரம்பித்தது.

 

மெல்ல பாட்டியின் புறம் திரும்பி பார்த்த யாழினிஏன் அப்பாயி உனக்கு எங்க அம்மாவை எதுவும் சொல்லனும்னா அதுக்கு என்னை சாக்கா வச்சு ஏசுரியா நீ?”

 

உட்கார்ந்திருந்தவர் வேகமாக எழுந்து” அடியே சீமை சித்துராங்கி. உன் அம்மாவை சொல்றதுக்கு எனக்கென்ன பயம். ஆனாலும் உன் ஊர்பட்ட வாய்க்கு வாராவன் கிட்ட நல்லா தான் வாங்குவ போ போய் கிளம்பு.”

 

அப்பாயியை பார்த்து ஒரு நொடிப்பு நொடித்துக் கொண்டு தன்னறைக்கு சென்றவளுக்கு அன்று கல்லூரி நியாபகம் வந்தது. ‘ இன்னைக்கு அந்த கப்பலோட்டிய தமிழன் வந்து கேள்வி கேட்டே கொன்னுடுவாறே. நான் வேற படிச்சு தொலையல.நேத்து டிவில படத்தை பார்க்கும் போது அந்த ஆளு மூஞ்சி நியாபகம் வரல வந்திருந்தா ஒழுங்க படிச்சு இருக்கலாம் என்று தன்னை தானே திட்டிக் கொண்டே புத்தகங்களை எடுத்து வைத்தவள் ‘எவ்வளவோ பார்த்திட்டோம் இதை பார்கமாட்டமா யாழு…சும்மா ஜமாய்ச்சிடலாம் விடு’ என்று தன் தோளிலேயே தட்டிக் கொடுத்துக் கொண்டாள்.

 

அதன் பின் மடமடவென்று குளித்து கிளம்பியவள் பேருந்து நிலையத்திற்கு அவசரம் அவசரமாக ஓடினாள். அங்கு அவளுக்காக அவள் தோழிகள் காத்திருக்க அனைவரும் பஸ்சில் ஏறினர். சிறிது தூரம் சென்றதும் பஸ்சில் இருந்த சில இளைஞர்கள் “ஏன்ப்பா அந்த ரெகார்டை போட்டு விடேன். சும்மா வைக்கவா இருக்கு” என்று டிரைவரை நோக்கி கத்தினர்.

இவனுங்களோட இதே இம்சையா போச்சு என்று புலம்பி கொண்டே ரேடியோவை ஆன் செய்தார்.

பாடல் ஒலிக்கவும் பஸ்சில் இருந்த இளவட்டங்கள் அந்த பாடலுக்கேற்ற அபிநயம் பிடித்து தங்களை கவர்ந்த பெண்களின் மனதை வெல்வதில் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

யாழினி எல்லாவற்றையும் கண்டும் காணாதவாறு ரசித்துக் கொண்டிருந்தாளே அன்றி ஒருவரின் முகத்தையும் நேராக பார்த்தாள்  இல்லை.

ஆனால் கூட்டத்தில் நின்றிருந்த ராஜுவின் மனமோ அவளை சுற்றி சுற்றியே வந்தது. அவளின் காதுகளில் ஆடிய சின்னஞ்சிறு தொங்கட்டானோடு அவன் மனமும் ஆடிக் கொண்டிருந்தது.

கடந்த ரெண்டு வாரங்களாக தான் அவன் அவளை கவனிக்கிறான். அதிலும் அவளின் ஒவ்வொரு செய்கையையும் மனதில் பொக்கிஷமாக பூட்டி வைத்து அதை எண்ணியே நாள் முழுவதும் ஓட்டினான். அவன் தான் அவளை பார்த்தானே தவிர அவள் அவன் புறம் திரும்பியதே இல்லை.

யாழினியும் அவனை நேருக்கு நேர் பார்க்கவில்லையே தவிர அவன் பார்வைகளை உணர்ந்தே இருந்தாள். மெல்ல அவளுக்குள்ளும் அவன் மீதான உணர்வுகள் எழத் தொடங்கி இருந்தது.

யாழினி இப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறாள். ராஜு இன்ஜினியரிங் கல்லூரியில் ரெண்டாம் வருடம் படிப்பவன். தந்தை இறந்த பிறகு தாயின் கடின உழைப்பிலும், குறைந்த  வருமானத்திலும் குடும்ப  சுமையை உணர்ந்து வளர்ந்தவன்.

பதின்ம வயதிற்கே உரிய ஈர்ப்பு ராஜுவை தடுமாற செய்து கொண்டிருந்தது. அதிலும் என்று யாழினியை முதன் முதலாக பேருந்தில் சந்தித்தானோ அன்றில் இருந்து அவன் மனம் தடுமாற ஆரம்பித்தது.

ஒரு மாதம் இருவரும் பார்வையிலேயே ஒட்டிக் கொண்டிருக்க அவர்களை அறியாமலேயே இருவரின் இதயங்களும் இடம் மாறி இருந்தது.

அன்று கல்லூரி விடுமுறையாதலால் தோட்டத்தையும்  வீட்டையுமே சுற்றி வந்து கொண்டிருந்தாள். ஏனோ அன்று வீட்டில் இருந்தவர்கள்  யாரும் இயல்பாக இல்லை என்றே தோன்றியது. அப்பாவும், அண்ணன்களும் பயங்கர கோவத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அம்மாவும், பாட்டியும் பதட்டத்துடன்  இருந்த மாதிரி தோன்றியது.

கூடி கூடி பேசுவதும் வெளியில் போய் விட்டு வருவதும், யார் யாரோ வந்து பேசுவதுமாக இருந்தார்கள். என்னவென்று அறிந்து கொள்ளலாம் என்று அம்மாவிடம் சென்று கேட்டதற்கு “உனக்கு தேவை  இல்லாத விஷயத்தில் தலையிடாத” என்று விரட்டினார்.

அதன் பின்னர் அதை எதையும் பற்றி கவலைபடாமல் மதியம் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றாள். அடித்து போட்ட மாதிரி உறங்கி எழுந்தவள் வாயிலருகே இருந்த ஜன்னலில் அமர்ந்து கொண்டாள். அப்போது அந்த பக்கம் இருவர் பேசுவது காதில் விழுந்தது.

இருவரில் ஒருவர் தன் அப்பா என்பதையும் உணர்ந்து கொண்டாள்.

நான் சொன்னபடி செய்றது தான் நம்ம இனத்துக்கு நல்லது. கண்ட பயலையும் நம்ம வீட்டு பொண்ணு மேல ஆசைபடவா பெத்து வச்சு இருக்கோம்.”

அவனை மட்டும் குறை சொல்லி என்ன ஆகப் போகுது. என் பொண்ணும் இல்ல அசிங்கம் பண்ணி வச்சு இருக்கா.”

அதெல்லாம் விடு மாணிக்கம். நான் சொன்ன மாதிரி காரியத்தை முடிச்சிடுவோம். அப்புறம் பத்து நாளுக்குள்ள ஒருத்தனை பிடிச்சு தாலியை கட்டி உன் பொண்ணை அனுப்பிட்டு நம்ம கெளரவத்தை காப்பாத்திக்க வேண்டியது தான்.”

ஆனா போலீஸ் கோர்ட்ன்னு மாட்டிக்கிட்டா?”

அதுக்கெல்லாம் கவலைபடாதே மாணிக்கம். எல்லா இடத்திலேயும் தான் நம்ம பயலுக இருக்கானுங்க. நமக்கு இப்போ அந்த பயலை போட்டு தள்றது தான் முக்கியம். ஆனா ஒன்னு உன் பொண்ணு காதுக்கு மட்டும் இந்த விஷயம் போகாம பார்த்துக்கோ.”

தெரிஞ்சா என்ன சம்முவம். அந்த சனியனையும் சேர்த்து போட்டுட்ட வேண்டியது தான். நமக்கு சாதி  தானே  முக்கியம்.”

சரி சரி, நீ கிளம்பு நான் முடிக்க வேண்டிய வேலையை  முடிச்சிட்டு சொல்லி விடுறேன். அதுவரை எதுவும் தெரிஞ்சுக்காத மாதிரியே இரு.”

இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் மனம் அதிர்ந்து போய் இருந்தது. காதலித்த இருவரில் ஒருவரை கொலை செய்ய முடிவு செய்து விட்டார்கள் என்பது புரிந்தது. தன தந்தையை அன்பானவராக மட்டுமே அறிந்தவளுக்கு அவரின் இந்த குணம் பேரதிர்ச்சியை கொடுத்தது.

தங்கள் இனத்தில் நடந்த ஒரு காதலுக்கே இப்படி முடிவெடுக்கிறார் என்றால் தன் காதலை பற்றி அறியும் போது என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை அறிந்து மனம் பரிதவித்து போனது.

அடுத்த நாள் பேருந்தில் ஏறியதும் அவளை அறியாமலே கண்கள் ராஜுவின் பக்கம் பார்த்தது. அவளின் முதல் பார்வையில் அவன் மகிழுந்து போய் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவளின் மனமோ முதல் நாள் கேட்டவைகளை சுற்றி சுற்றியே வந்தது.தன்னால் ஒரு உயிர் போவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படியாவது அவனிடம் இன்று சொல்லி விட வேண்டும் என்று முடிவுடன் அவனை நெருங்கினாள்.

அவன் அருகில் சென்றதும் “நான் உங்க கிட்ட பேசணும். எங்க காலேஜ் கிட்ட ஒரு பார்க் இருக்கு அங்கே வாங்க” என்று கூறினாள்.

அவள் தன்னிடம் வந்து பேசியதும், தனிமையில் பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்ததும் காதல் கொண்ட அவனது மனம் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

அந்த நேரம் பேருந்தில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது ..

சொல்லிட்டாளே அவ  காதல..

சொல்லும் போதே சுகம் தாளல..

பல வித கனவுகளுடன் அவள் சொன்ன பூங்காவிற்கு சென்று அவளுக்கு முன்னதாக காத்திருந்தான்.

அவளோ விழிகளில் மிரட்சியுடனும், தன்னை அறிந்தவர்கள் அங்கு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டே வந்தாள்.

அவனை பார்த்ததுமே முதல் வார்த்தையாக “ இந்த காதல் எல்லாம்  நமக்கு சரியா வராது . ப்ளீஸ் விட்டுடுங்க” என்றாள்.

அவள் தன்னிடம் காதலை சொல்ல தான் வர சொல்லி இருக்கிறாள் என்ற எதிர்பார்ப்புடன் வந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே தந்தது.

அவள் கண்களை பார்த்துக் கொண்டே “ஏன் எதிர்ப்பு வரும்ன்னு பயப்படுறியா?” என்றான்.

தன்னுடைய எண்ணத்தை கண்டிப்பாக அவனுக்கு தெரிவித்து விட வேண்டும் என்று  இருந்தவளுக்கு இப்போது தெளிவு வந்திருந்தது.

எதிர்த்து நிற்க உடம்பில் உயிர் என்று ஒன்று வேண்டும் இல்லையா?”என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு முகத்தை சுளித்து பார்த்தவன் “ கொன்னுடுவாங்கன்னு பயமா இருக்கா?”என்றான்.

உங்களுக்கு என்ன வயசாகுது? இருபதா? உங்களை உங்க அம்மா தான் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்கன்னு கேள்விபட்டேன். அவங்களோட வாழ்க்கையின் ஆதாரமே நீங்க தான். உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு இருப்பாங்க. நீங்க பெரிய வேலைக்கு போவீங்க தன்னை நல்லா கவனிச்சுப்பீங்கன்னு. ஆனா நீங்க ஒரு பெண்ணை காதலிச்சு அவ குடுமபத்தால கொல்லப்பட்டு இறந்து போனா அவங்க நிலைமை?”

இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னா நினைக்கிறே? எந்த காதலில் இல்ல எதிர்ப்பும் இழப்பும்?

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ எதிர்ப்பு மட்டும் இருந்து வாழ முடியும்னா சரி. ஆனால், இங்கே நீங்க என்னை காதலிக்கிற விஷயம் தெரிஞ்ச அடுத்த நொடி உங்களை கொன்னு கிணத்துக்குள்ளேயோ , நடுரோட்டிலோ, தண்டவாளத்திலோ விசிறிட்டு போய்டுவாங்க. இதிலே உங்க அம்மாவுக்கு நீங்க இழைக்கிற நம்பிக்கை துரோகமும், என்னோட  அப்பாவையும், அண்ணன்களையும் கொலை குற்றவாளி ஆக்கிட்டு அடுத்த பத்தாவது நாள் எனக்கு பார்த்து வச்சு இருக்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிட்டு மனசுல இருந்த காதலுக்கு சமாதி கட்டி வாழ்ந்தாகணும்”.

நீ தேவை இல்லாத கற்பனை பண்ற யாழினி.”

அவன் சொன்னதற்கு மறுத்து தலையாட்டியவள் “ இல்லை ராஜு..இந்த வயசில் வருகிற காதல் இருபாலரிடம் ஈர்ப்பே தவிர காதலே இல்ல. முதன்முதலா நம்மளை ஒரு பொண்ணு ஆர்வமா பார்க்கிறா என்று ஆணுக்குள்ளும், நம்ம அழகை ரசித்து பார்க்கிறான் என்று பெண்ணுக்குள்ளும் ஏற்படும் சிறு சலனத்தை தான் அவசரப்பட்டு காதல்ன்னு முடிவு பண்ணி எதையுமே சிந்திக்காம முடிவெடுத்திடுறாங்க. “

இப்போ நீ என்ன தான் சொல்ல வர?”

வேண்டாம் ராஜு.நீ வாழனும், என்னால உன் உயிர் போனதா இருக்க வேண்டாம்.தயவு செஞ்சு என் வழியில் இருந்து ஒதுங்கி போயிடு. உனக்கு இன்னும் காலம் இருக்கு என்னை மாதிரி பல பெண்கள் உன் வாழ்க்கையில் வந்து போவாங்க. வாழ்க்கையோட ஓட்டத்தில் இந்த சலனம் எல்லாம் அடிச்சுகிட்டு போய்டும்.என்னை குற்ற உணர்ச்சியில் உழல விட்டுடாதே.”

அப்போ என் மேல உனக்கு காதலே இல்லையா?” என்று அவன் மீண்டும் அதிலேயே நின்றான்.

அவன் கேட்டதும் அதுவரை தைரியமாக அவன் கண்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தவளின் விழிகள் கலங்கி கண்ணீர் கன்னத்தை தொட்டு விடுமோ என்ற அளவில் வந்து விட, பட்டென்று திரும்பி நின்று கொண்டு “நான் கிளம்புறேன்.இனி என்னை தொந்திரவு செய்யாதே”என்று கரகரப்புடன் கூடிய குரலில் சொல்லி விட்டு விடுவிடு என்று நடக்கத் தொடங்கினாள்.

அந்த நேரம் அம்மாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு “சொல்லுங்கம்மா” என்றான்.

ராசு ! காலையில வெறும் வயித்தோடவே போனியேப்பா. காயப்போடாம ஏதாவது சாப்பிடு ராசா” என்றார்.

அதுவரை காதலென்னும் சலனத்தில் சிக்கி உழன்று கொண்டிருந்தவனது மனம் வண்டாய் குடைய ஆரம்பித்தது. ‘ அவள் சொன்ன மாதிரி நான் அம்மாவை பற்றி நினைக்கவே இல்லையே. நான் சாப்பிடாமல் போனதற்கே அந்த மனம் தவிக்கிறதே, என் காதல் என்ற சுயநலத்தால் நான் உயிரை  இழந்தால் அது என் தாயை பாதிக்கும் என்பதை உணராமல் போனேனே’என்று உள்ளம் குமுறினான்.

 

              சொல்லிட்டாளே அவ காதல…

             சொல்லும்போதே சுகம் தாளல..

Advertisements