ராஜஸ்தான் மண்ணின் மனம்….

ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு மணம் உண்டு. இந்தியா பல்வேறு மாநிலங்களை கொண்ட பழம்பெரும் நாடு. இங்கு மக்களின் இனம், மொழி,உடை, உணவு என்று  கலாச்சாரம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.

நம் இந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளை போல் உலகெங்கிலும் தேடினாலும் கிடைக்காது. நம் உணவு வகைகளில் இருக்கும் அன்பும், பரிவான உபசரிப்பும் பீட்சாவிலோ, பர்கரிலோ கிடையாது.

அப்படி ஒரு உணவைத் தேடி இன்று எண்களின் பயணத்தை மேற்க்கொண்டோம். துபாயில் நம் இந்தியர்களில் எல்லா மாநிலத்தவர்களும் வசிப்பதால், எல்லா மாநில உணவு வகைகளும் கிடைக்கும்.

ராஜஸ்தானிய உணவு வகைகளில் எப்போதுமே எங்களுக்கு ஒரு ஆர்வமுண்டு. அதனால் இணையத்தில் தேடி ஷார்ஜாவில் இருக்கும் ராஜஸ்தான் அல் மலாய்கி உணவகத்தை கண்டு பிடித்தோம்.

எங்களின் மற்ற வெளி வேலைகளை முடித்துக் கொண்டு தொலைபேசியில் மப்பில் உணவகத்தின் பெயரை ஏற்றி அது சொன்ன வழியில் பயணித்தோம்…

காரில் விஜயின் பாடல் ஒலிக்க…”கூகிள்..கூகிள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே” என்று உணவகத்தை கூகிளில் தேடி அதன் வழியில் பயணிக்க ஆரம்பித்தோம்.

ஷார்ஜாவில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும் ஏறி இறங்கி மீண்டும் ஓர் இடத்திலேயே வந்து நின்றோம். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக கண்டு பிடித்தோம்.

சிறிய கட்டிடமாக இருந்தாலும் அதன் அமைப்பு எங்களை கவர்ந்தது. வாயிலேயே ராஜஸ்தானிய பாரம்பரிய உடை அணிந்து தலையில் அழகான சிகப்பு டர்பன் அணிந்து வரவேற்றார். உணவகத்தின் உள்ளேயும் அந்த மாநிலத்தின் கலை அலங்கார முறைப்படி அலங்கரித்திருந்தார்கள்.

நான்கு பேர் அமரக்கூடிய டேபிளில் மிகப்பெரிய எவர்சில்வர் தட்டு வைத்து அதில் ஒன்பது சிறிய காட்டோரி எனப்படும் கிண்ணங்கள் அடுக்கி வைக்கப்பிடிருந்தது.

உணவை பரிமாறுபவர்களும் பாரம்பரிய உடையே அணிந்திருந்தார்கள். முதலில் சாலடும், பிறகும் பூல் கச்சோரி, மூன்று விதமான இனிப்பு வகைகள், ஒரு சிறிய  பீஸ்டோக்ளா, தால்பாட்டி, தஹி பல்லா (நமது தயிர் வடை), காலிபிளவர் கறி, உருளைகிழங்கு மசாலா, பக்கோடாகடி, மோர்கடி, பிந்திகறி,இனிப்புதால், மங்கோலஸ்ஸி, பூரி, ரொட்டி,ஜீராரைஸ், கிச்சடி கடைசியாக மோர்.இவை எல்லாம் unlimited….நாம் சாப்பிட சாப்பிட போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

பரிமாறுபவர்களும் பயங்கர சுறுசுறுப்பாக ஒவ்வொருவரையும் நன்றாக கவனித்து போடுகிறார்கள். ருசியும் அருமை..ஒவ்வொரு பதார்த்தமும் அதன் அதன் சுவையில் இருக்கிறது. விலையும் ஒரு தாளி முப்பது திர்ஹம் மட்டுமே…..

உணவின் சுவை நாவினில் மட்டுமல்ல, அவர்களின் கவனிப்பில் எங்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டது….

Advertisements