புல்லுகிழவி !!!

என்னடா இது புதுவிதமான தலைப்பா இருக்கேன்னு பார்க்குறீங்களா? இவங்க நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாட்டி. இவங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கு என்றே தோன்றுகிறது. இவர்களை சந்திக்காமல் என்னுடைய பயணம் நிறைவடைந்ததில்லை சில வருடங்களாக.

புல்லுகிழவிக்கு எண்பது வயதிருக்கும். இன்று யாருமில்லாத அநாதை. இவருக்கு ஒரு பெண்ணும், பையனும் இருந்ததாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இருவருமே இறந்துவிட்டதாகவும் , பெண் எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் ஒரு சிலர் சொல்லுவார்கள்.

யாருமில்லாத அநாதை என்றோ,கழிவிரக்கம் கொண்டு யாராவது உதவுவார்கள் என்றும் எதிர்பாராமல் அக்கம்பக்கத்தில் இருக்கும் அலுவலகங்களில் புல்லு எடுக்கும் வேலையை செய்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். அவரால் நிமிர்ந்து கூட  நடக்க இயலாது.

இன்றைய இளைஞர்கள் நேரம் தவறாமையை கடைபிடிப்பதில்லை. இந்த பாட்டி தான் செய்வது புல்லு எடுக்கும் வேலை என்றாலும் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் வேகவேகமாக அவர் செல்வதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும்.

அதேபோல அவரின் பிறருக்கு உதவும் குணமும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.இந்த முறை ஊருக்கு சென்று ஒரு மாதம் வரையிலும் அவரை பார்க்கவே முடியவில்லை. என் மனதில் இனம் புரியாத ஒரு படபடப்பு. பாட்டிக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று.

எங்கள் வீட்டின் எதிரில் இருந்த கோவிலுக்கு எப்போதும் வந்து தன்னாலான உதவிகளை செய்து விட்டு போவது பாட்டியின் குணம். அதனால் கோவில் குருக்களிடம் அவரை பற்றி விசாரித்தேன். அவர் சொன்னதை கேட்டதும் மனதில் பாரமேறிக் கொண்டது.

பாட்டிக்கு அதிக வயதான காரணத்தால் வேலையை விட்டு எடுத்துவிட்டதாக கூறினார். அதனால் தினமும் சிற்றுந்தில் ஏறி மெயின் ரோட்டிற்கு சென்று பிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு கோவில் வாசலில் பாட்டியை கண்டேன். செய்து கொண்டிருந்த வேலைகளை எல்லாம் தூக்கி வைத்து விட்டு ஓடிச் சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்டேன்.

என்னை பார்த்ததும் அவரும் மகிழ்ந்து போய் “ என்னை பெத்த ராசாத்தி நல்லா இருக்கியா? நேத்து உன்னைப் பார்க்க வந்தேன். வீடு பூட்டி இருந்துதே” என்று ஆசையாக கேட்டார்.

அவரின் அந்த உண்மையான பாசத்தில் திளைத்து அகம் மகிழ்ந்து “ஏன் பாட்டி உங்களை பார்க்கவே முடியல?” என்று கேட்டேன்.

“ஒரு பதினஞ்சு நாளா ஆஸ்பத்திரியில் வச்சு ஊசி ஏத்துனாங்க ராசாத்தி. வயசாகி போச்சு அடிக்கடி மேலுக்கு முடியாமப் போகுது” என்றார்.

அப்போது தான் பார்த்தேன் அவர் கைகளில் ட்ரிப்ஸ்  போட்ட  அடையாளங்களை. போன வருடம் பார்த்ததற்கு உடல் மெலிந்து போய் இருந்தது. அந்தநேரம் “என் கைகளில் இருந்த நூறு ரூபாயை அவரிடம் கொடுத்து இதை வச்சுக்குங்க பாட்டி” என்றேன். “எப்போ என்ன தேவை என்றாலும் கேளுங்க பாட்டி என்று சொல்லிவிட்டு வந்தேன்.”

கோவிலில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடந்து கொண்டிருந்ததால் பாட்டிக்கு மனதில் இந்த முறை தன்னால் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணத்தில் இருந்தவர். நான் கொடுத்து சென்ற பணத்தை எடுத்துச் சென்று நிர்வாகிகளிடம் கொடுத்து என் சார்பாக எழுதிக் கொள்ளுங்கள் என்றார்.அவர்கள் அதை வாங்கிக் கொள்ளவில்லை. உனக்கு அவசர தேவைக்கு நீ வைத்துக் கொள் என்று சொல்லிவிட்டார்கள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவரின் செய்கை மனதை தாக்கியது. எல்லாம் இருந்தும் அடுத்தவருக்கு நம் கையில் இருப்பதை கொடுக்க மனம் முரண்டுகிறது. ஆனால் எண்பது வயதில் நடக்கவே இயலாத போதும் தன்னால் இயன்ற உதவியை உழைப்பால் தந்து அதை மீறி தனக்கு கைக்கு கிடைக்கும் சொற்ப உதவியையும் பிறருக்கு கொடுக்க எப்படிப்பட்ட மனம் வேண்டும்.

புல்லுகிழவி என் மனதிற்கு மிகவும் நெருங்கியவர். அவர் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்…

Advertisements