கொண்டை ஊசி வளைவுகளில் ஓர் அழகிய பயணம்….

வார இறுதி நாட்களில் எங்காவது நீண்ட நெடிய பயணம் போக வேண்டும் என்று எண்ணுவது உண்டு. ஆனால் அடுத்த நாள் வேலைக்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டி இருப்பதால் யோசித்து வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த பயணம் இன்று நிறைவேறி விட்டது.

என் பெண்ணின் ஆசைக்கு இணங்கி அபுதாபி எமிரேட்டில் உள்ள Al Ainல் உள்ள மிருககாட்சி சாலைக்கு போகலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. துபாயில் இருந்து Al Ain செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். நாங்கள் பயணத்தை முடிவு செய்த போது மணி பதினொன்று. இதற்கு மேல் சமைத்து எடுத்து செல்ல முடியாது என்று முடிவு செய்து கையில் ஒரு சில ஜூஸ் பாட்டில்களும், சிப்ஸ் பாக்கெட்டுகளும் வாங்கி எடுத்துக் கொண்டோம்.

ஒரு பக்கம் கேமரா சார்ஜ் போடப்பட்டு தயாரானது. மற்றொரு பக்கம் வீடியோ கேமரா , தண்ணீர் பாட்டில் என்று பயணத்துக்கு தேவையானவை தயார் செய்யப்பட்டது. இப்படி தேவையானவற்றை தயார் செய்யது முடித்து பனிரெண்டு மணிக்கு வண்டி வீட்டை விட்டு கிளம்பியது.

அதிக வெயில் இல்லாத வானிலை பயணத்திற்கு இதத்தை சேர்த்தது. நீண்ட தொலைவு பயணங்களுக்கு ராஜா சாரின் பாடல்கள் இல்லாது எங்களின் கார் நகராது. ராஜாவின் ராகங்கள் மனதை தொட கார் நகரத்தை தாண்டியதும் வேகம் பிடிக்கத் தொடங்கியது. இருமருங்கிலும் பாலைவனத்தின் மணல் முகடுகள் உயர்ந்து நிற்க, காலை நேர வெயிலில் தங்கமென தகிதகிக்க கண்களின் விருந்து தொடங்க ஆரம்பித்தது.

Al Ain செல்லும் சாலை வளைந்தும்,நெளிந்தும்,உயர்ந்தும், தாழ்ந்தும் இருக்கும். காரின் முன் சீட்டில் அமர்ந்து பார்க்கும் போது முன்னே செல்லும் கார்களின் வேகமும், சாலைகளின் அழகும் ஒரு வித பயத்தையும், நம்முள் இருக்கும் ரசிப்புத் தன்மையையும் கொண்டு வரும்.

ஒன்றரை மணி நேர பயணத்தின் முடிவில் மெல்ல ஊருக்குள் நுழைந்தோம். அதுவரை மிருககாட்சிக்கு செல்லாம் என்ற முடிவுடன் இருந்தவர்கள் நீண்டு உயர்ந்தும் தெரிந்த மலை முகடை கண்டவுடன் மனதை மாற்றிக் கொண்டோம். அதோடு Al Ain ஊரின் வானிலையும் எங்களின் மனதை மாற்றிக் கொள்வதற்கு வழி செய்தது. மிதமான வெயிலுடன் ஊருக்குள் நுழைந்தவர்களை திடீரென்று வானில் கரு மேகங்கள் சூழ்ந்து கொண்டது. இரு புறமும் இருந்த மரங்கள் வேகமாக அசைந்து மழையை கலைக்க முயற்சி செய்ய, அங்கே மேகங்களுக்கும் காற்றுக்கும் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. முடிவில் மேகங்கள் வெற்றி அடைந்தாலும், தன் பாரத்தை மேற்கொண்டு சுமக்க முடியாமல் அங்கெங்கே பன்னீர் தூவலை தூவ ஆரம்பித்தது.

இந்த இதமான சூழலில் எங்களது வண்டி ஜபல் ஹபீத் சிகரத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இந்த மலையானது தரையில் இருந்து நாலாயிரம் அடிகள் உயர்ந்து நிற்கிறது. மேலே நீல வானமும் உயர்ந்து நிற்கும் மலை முகடு வெயிலின் தாக்கத்தில் பொன்னால் செய்த பாறையென மின்னி எங்களை வரவேற்க ஆரம்பித்தது.

கீழிருந்து மலை மீது சுமார் பதினொரு கிலோமீட்டர் அறுபது கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய சாலை இடப்படிருக்கிறது. போவதற்கு இரண்டு லேனும், திரும்பி வருவதற்கு ஒரு லேனும் உள்ளது. சுமாரான வேகத்துடன் மேலே ஏற ஆரம்பித்தோம். உயரே செல்ல செல்ல காதுகள் அடைத்துக் கொண்டது. போகிற வழியில் இருந்த viewing pointஇல் எல்லாம் நின்று அங்கிருந்த காட்சிகளை படம் பிடித்துக் கொண்டே சென்றோம்.

மலையின் முடிவிற்கு சென்று அங்கு இறங்கி நாங்கள் வந்த பாதையை அங்கிருந்து படம் பிடித்தோம். அது மிகப் பெரிய மலைபாம்பு போன்று அந்த மலை மீது வளைந்து நெளிந்து படுத்திருப்பது போல் தோன்றியது. அங்கிருந்து கீழே இருந்த ஊரை பார்க்கும் போது மிகச் சிறிய புள்ளிகளாக தெரிந்தது.

சிறிது நேரம் அழகை எல்லாம் ரசித்து முடித்து கொண்டு கீழே இறங்கினோம். அப்போது இப்படி காரில் ஏறுவதற்கே இவ்வளவு கடினமாக உள்ளதே, இந்த சாலையை இடுவதற்கு எத்தனை தொழிலாளர்கள் தங்களின் உழைப்பையும், உயிரையும் பணயம் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றியது. ஒவ்வொரு முறை இங்கே பயணம் மேற்கொள்ளும் போது அழகை கண்டு மகிழ்ந்தாலும்  மனிதனின் முயற்சியை கண்டும் பிரமித்து போவேன்….

 

Advertisements