2_172_948_nitya-menon-latest-stills-6

அத்தியாயம் – 1

வாழ்க்கை சிலருக்கு எல்லா வித சந்தோஷங்களையும் அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்.சிலருக்கோ அடிப்படை தேவைகளை கூட அடைய முடியாத நிலையில் வைத்திருக்கும்.பல இடர்பாடுகளிடையே அவ்வப்போது கிடைத்திடும் அந்த சிறிய சந்தோஷங்களே வரப் போகும் நாட்களை வண்ணமிகுந்ததாய் ஆக்கும்.

காலை நேரம் அந்த சின்னஞ்சிறிய அப்பார்ட்மெண்டில் விக்ரம் சமையல் வேளையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.  அவனுடைய வீட்டில் அவனும்,  மகள் சிந்து மட்டுமே. இரண்டு வருடங்கள் முன்பு அவன் மனைவி கான்சரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்து இருந்தாள்.

மனைவி நிர்மலாவின் இறப்பிற்கு பிறகு வாழ்க்கையே வெறுத்து போய் இருந்தான். அவன் வாழ்க்கையில் உயிர்ப்பை கொண்டு வந்தது அவன் மகள் மட்டுமே. ஆரம்ப நாட்களில் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். ஆனால் அவனின் சின்ன தேவதையோ அவன் நிலை உணர்ந்து முடிந்த வரை தொல்லை கொடுக்காமல் இருக்க பழகி கொண்டாள்.

சில மாதங்கள் அவன் பெற்றோர் வந்து குழந்தையை பார்த்துக் கொண்டனர். ஒரு ஆறு மாதங்களுக்கு பிறகு அவன் தாயார் குளியலறையில் வழுக்கி விழுந்து படுத்த படுக்கையானார். அதனால் அவன் தங்கை அவர்களை தன்னுடன் அழைத்து சென்று விட்டாள். நிர்மலாவின் பெற்றோரோ மகனை நம்பி இருந்ததால் அவர்களால் அவனுக்கு உதவ முடியாத நிலையில் இருந்தனர்.                                                     

பின்னர் தகப்பனும் மகளுமாகவே தங்களுக்கென ஒரு உலகத்தை உருவாக்கி அதில் வாழப் பழகி கொண்டனர்.

ஆதியும் அந்தமுமாக அவனை சுற்றி மகள் மட்டுமே. அவனின் ஒவ்வொரு நிமிடமும் மகளை சுற்றி சுற்றியே சுழன்றது.

“பா.பா…குட் மார்னிங்…பா..”

                                                                 

“வாங்க வாங்க குட்டி ஏஞ்செல்..நல்லா தூங்குனியாடா?” என்று சொல்லி பெண்ணை தூக்கி சுற்றினான்.

“பா..மம்மிக்கு குட் மார்னிங் சொல்லவே இல்லை போலாமா.”

“வாங்க வாங்க ரெண்டு பெரும் போய் சொல்லலாம்.”

“மம்மி குட் மார்னிங்..பா..எனக்கு இன்னைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரேன்னு சொன்னாங்க.”

“செல்லம்! மம்மி திட்டப் போறா மம்மிக்கு ஒரு கிஸ் கொடுத்திடு அப்போ ஓகே சொல்லுவா.”

“ம்ச்…ம்ச்…பா இன்னைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவீங்க இல்லை.”

“உனக்கு இல்லாததா செல்லம் கண்டிப்பா வாங்கித் தரேன் இப்போ போய் பிரஷ் பண்ணுவீங்களாம்.அப்பா பூஸ்ட் தரேன் குடிச்சிட்டு குளிக்கலாம் சரியா..”

“ம்ம்..சரிப்பா….பா…இந்த விவேக் என்னை அடிச்சிட்டே இருக்கான்.என் பென்சில் எல்லாம் எடுக்குறான்.”

“ஓகே டா! நான் வந்து இன்னைக்கு அவனை பத்தி டீச்சர் கிட்ட சொல்லிடுறேன். அப்புறம் அவன் உன்னை அடிக்க மாட்டான்.போங்க போங்க போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க.” இருவரும் பேசியபடியே குளித்து சாப்பிட்டு கிளம்பினர்.

 தங்களை சுற்றி ஒரு வட்டம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.எப்பொழுதாவது தங்கை வீட்டிற்கு சென்று பெற்றோரையும் தங்கையையும் பார்த்து விட்டு வருவார்கள்.நண்பர்கள் என்று அவனுக்கு பெரிதாக யாரும் இல்லாததால் சுகமோ துக்கமோ குழந்தையுடனேயே கழிந்தது.

சிந்துவிற்கும் தந்தையே உலகம்.தந்தையை தவிர வேறு யாருடனும் நெருங்கி பழகாமல் இருந்து வந்தாள்.

 

மந்தைவெளியில் ஒரு மூன்று மாடி அபார்ட்மெண்டின் படுக்கை அறையில் எழுந்திரிக்க மனமில்லாமல் படுத்து இருந்தாள் வனிதா.  அவளை எழுப்ப பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான் அவள் கணவன் நந்தா.

“ப்ளீஸ் ப்ளீஸ் நந்து! இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே.இன்னைக்கு மட்டும் ப்ளீஸ்.”

“நோ வே வனி! இன்னைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நீ எழுந்து வேலையை பாருமா.என்னால இன்னைக்கு ஒண்ணுமே முடியாது.”

“ஆமாம் எல்லாம் காதலிக்கிறப்ப கண்ணே மணியேன்னு கொஞ்ச வேண்டியது. கல்யாணம் பண்ணினவுடனே அப்படியே மாத்திக்க வேண்டியது.”

“ஹே என்னதிது சினிமால பேசுற மாதிரி பேசுற.”

“ஏன் நந்து நம்ம அம்மா அப்பா எப்பவுமே நம்மளை சேர்த்துக்க மாட்டாங்களா?”

“என்ன வனி இன்னைக்கு டல்லா இருக்கே ஏதேதோ பேசுற.”

“இல்லை நந்தா ரொம்ப அலுப்பா இருக்கு. நம்ம வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு ஒரு பயம் வருது. யாருமே இல்லாம நாம ரெண்டு பேர் மட்டுமே இப்படி எத்தனை நாளைக்கு?”

என்னடா இது காலையிலேயே மேடம் ரொம்ப மூட் அவுட்ல இருக்கீங்க.எல்லாம் சரியா போகும்.அவங்க பக்கமும் தப்பில்லை நம்ம ஆசைபட்டதுலேயும் தப்பில்லை. ஆனா, ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்க நாள் ஆகும்.சியர் அப் வனி.”

“ம்ம்ம்…நந்து நீங்க இன்னைக்கு ஆபிஸ் போயே ஆகணுமா?”

“வனிம்மா நேரமாகுது கிளம்பு, சாயங்காலம் வந்து பேசிக்கலாம்.”

 

அதற்குள் வனிதாவின் அலைபேசி அடித்தது.அதை எடுத்து பார்த்தவள் அவளின் பேஷன்ட்டிடம் இருந்து வந்த அழைப்பு என்பதை அறிந்து அதற்கான அடுத்த கட்ட வேலைகளை அலைபேசியிலேயே தன் உதவியாளருக்கு உத்தரவுகளை பிறப்பித்து விட்டு பணிக்கு கிளம்புவதற்கு தயாரானாள்.

நந்தாவும் வனிதாவும் காதல் மனம் புரிந்தவர்கள். நந்தா ஒரு மிகப் பெரிய ஐ.டி.கம்பனியில் டீம் லீடர் ஆக இருக்கிறான். வனிதா ஒரு மகப்பேறு மருத்துவர். அவள் சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவ மனையில் வேலை செய்கிறாள்.

நந்தாவின் தங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும் போது வனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்து பல எதிர்ப்புகளுக்கு இடையில் பெற்றோரை எதிர்த்து மனம் புரிந்தனர். இரு வீட்டினர் ஆதரவு இல்லாமல் நண்பர்களின் உதவியுடன் வாழ்க்கையை தொடங்கினர்.இவர்களின் காதல் வாழ்க்கைக்கு வயது ஒன்று ஆகிறது          

சில காதல் வெளியில் நின்று பார்க்கும் போது இனிக்கும். ஒன்றாக வாழும் போது கசந்து இருவரும் பிரியும் நிலைக்கு தள்ளும் ஆனால் நந்தா வனிதா

காதலில் நல்ல புரிதல் இருந்தது. அதனால் ஒரு வருடம் ஆன நிலையிலும் புதுமண தம்பதி போல்இருந்தனர்.

  “என்ன வனி எமர்ஜென்சியா ?”

“ஆமாம் நந்து என் பேஷன்ட் வித்யாவுக்கு லேபர் பெய்ன் வந்துடுச்சு . முதல் டெலிவரி என்கிறதால லேட் ஆகும். அதுக்கு தான் லாவண் கிட்ட எல்லாம் ரெடி பண்ண சொல்லிட்டேன்…இருந்தாலும் நான் ஒரு மணி நேரத்துக்குள்ள  அங்கே போயிட்டா நல்லது.”

“ஓகே அப்போ நீ கிளம்பு வனி நான் பார்த்துக்குறேன்.”

 

 

 “சாரி நந்து ரியலி சாரி பா!காலையில் சும்மா உங்களை சீண்டி பார்க்கனும்ன்னு தான் பண்ணினேன் ஆனா நிஜமாவே என்னால ஹெல்ப் பண்ண முடியலப்பா..”

“ஹே டெடி! எனக்கு உன்னை தெரியாதா இட்ஸ் ஓகே டா.நீ கிளம்பு நேரமாகிட போகுது பார்.”

“நான் கடவுளுக்குதான் நன்றி சொல்லணும் நந்து. உன்னை மாதிரி ஒருத்தனை கண்ணுல காட்டியதற்கு.”

“ஆஹா!ஒரு ஏமாளி கிடைச்சா நல்லா தலையில மிளகாவை அரைச்சிட்டு கடவுளுக்கு நன்றியா.”

“நந்து!இப்போ குட்டி பாப்பாவை வெளில கொண்டு வந்துட்டு உங்களை வச்சுக்கிறேன்.”

“நோ பேபி நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயாச்சு. இனி, வச்சுக்கலாம் முடியாது.”

‘உங்களை!சரிப்பா எனக்கு நேரமாச்சு நான் போய் குளிச்சிட்டு கிளம்புறேன்”

“ஓகே எனக்கும் வேலை முடிஞ்சிட்டா ஈவினிங் எங்கேயாவது போகலாம்.”

  “ம்ம்ம்….சரிப்பா.”

                                அத்தியாயம் – 2

விக்ரம் பெண்ணை பள்ளியில் விட்டு விட்டு ஆபிஸிற்கு சென்று தன் வேளையில் மூழ்கினான். இடையிடையே நிர்மலாவின் நினைவும் வந்து போனது. சிறிது நாட்களாக தன் மேலேயே கழிவிரக்கம் அதிகமாக இருந்தது. தனக்கு மட்டும் வாழ்க்கை ஏன் இப்படி பட்ட மரமாக போனது என்றும் மகளுக்காக மட்டுமே வாழ வேண்டி இருக்கிறது என்றும் எண்ணி தன்னையே வருத்திக் கொண்டான். வேலை நேரங்களில் தெரியாத அலுப்பு இரவு உறங்கும் நேரம் வாழ்வின் அனைத்து துயரங்களும் தன் மேல் பாரமாக அமர்ந்து கொண்டதாக எண்ணி நினைத்து மனம் புழுங்கியபடியே உறக்கத்தை தேடுவான்.

சிறிது நாட்களாக இந்த எண்ணங்கள் அவனை மிகவும் ஆட்டிப்படைத்தது.  வயதின் காரணமாக அவனின் தேடல்களுக்கு வடிகால் இல்லாததால் தன்னை பற்றிய சுயபச்சாதாபம் எழுந்தது. தன் மகளின் மீது இருந்த அன்பின் காரணமாக அனைத்தையும் தாங்கி கொள்ளும் பக்குவம் இருந்தாலும் அவ்வப்போது மற்றவரை பார்த்து மனம் ஏங்க தான் செய்தது.யார் தான் விரும்ப மாட்டார்கள் தன்னை ஒருவர் காதலால் அன்பால் ஆட்டிவைப்பதை. சில நேரங்களில் அவனின் இந்த தடுமாற்றம் அவனின் வேலைகளையும் பாதித்தது.

அவனின் குட்டி தேவதையை எண்ணியே தடுமாற்றங்களை குறைத்துக் கொள்வான். தன் வாழ்வின் வசந்தமாக வந்தவளை கொண்டாட கூட இயலாமல், மனைவியின் இழப்பினால் சோர்ந்து போய் இருக்கிறோமே அவளையாவது சந்தோஷமாக வைத்ததுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். இன்று எங்காவது மகளை அழைத்து சென்று அவள் மகிழ்ச்சியுடன் சிரிப்பதை கண்டு களிக்க வேண்டும். இனி, எக்காரணத்தை கொண்டும் போனவற்றை எண்ணி நிஜத்தில் இருக்கும் சந்தோஷங்களை இழக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தான் .அன்று முடிக்க வேண்டிய வேலைகளை அவசரம் அவசரமாக முடித்து கொண்டு பெண்ணை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து உடை மாற்றி மகளுக்கு பிடித்த கார்டூன் படத்திற்கு அழைத்து சென்றான். சிந்து படத்தை பார்த்து  ரசிக்கும் அவளின் அழகை தனக்குள் பொக்கிஷமாக புதைத்துக் கொண்டான். வெகு நாட்களுக்கு பிறகு மகளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தான்.

மருத்துவமனையில் பிரசவம் முடிய நிறைய நேரம் ஆனது.. காலையில் இருந்த மனச்சோர்வு வேலையின் காரணமாக தலையில் ஏறி அமர்ந்து கொண்டது. தலை வின் வின் என்று தெரித்தது. ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு வருவோம் என்று கான்டீன் நோக்கி சென்றாள்.

 

காப்பியை வாங்கி கொண்டு அமர்ந்தவள் தன் அருகில் யாரோ அமர்வது போல இருந்ததும் யாரென்று விழியை உயர்த்தி பார்த்தாள்.

“ஹாய் வனிதா என்ன இந்த நேரம் இங்கே இருக்கீங்க?”

“ஹாய் ராம்! டெலிவரி அதுவும் நார்மல் டெலிவரி எதிர்பார்த்ததை விட நேரம் ஆச்சு. ஆமாம் நீங்க எங்கே இந்த நேரத்தில்?”

‘எனக்கும் ஒரு எமர்ஜென்சி இப்போதான் முடிஞ்சுது.”

ராம் ஒரு புகழ் பெற்ற நியுரோ சர்ஜன். தன் டாக்டர் தொழிலில் ஒரு சாதனையாளனாக இருப்பவன் வாழ்வில் தோற்று வாழ்க்கையை இழந்து நிற்பவன்.அவன் மனைவி அவனிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டாள். வனிதாவும் அவனும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். வனிதாவிற்கு இரண்டு வருடம் சீனியர். வனிதாவின் மேல் இருந்த காதலை  அவளிடம் சொல்லும் முன் அவளின் காதலை பற்றி அறிந்து தனக்குள்ளேயே தன் காதலை புதைத்துக் கொண்டான். அதன் பின்னர் தாயாருக்காக ஒரு பெண்ணை மணந்து அவளுக்கு உண்மையானவனாக நடந்து கொண்டாலும் அவளுக்கு இவனுடன் ஒன்ற முடியாமல் பிரிந்து சென்று விட்டாள்.

 ‘அம்மா எப்படி இருக்காங்க ராம்.”

“நல்லா இருக்காங்க வனிதா.என்ன வயசாச்சு அதுக்கு உண்டான உடல் உபாதைகள் அதிலேதான் கஷ்டப்படுறாங்க.”

“நான் வந்து பார்க்கிறேன் ராம்.நானும் வந்து ரொம்ப நாள் ஆச்சு.”

“ஆமாம் அம்மா கேட்டுட்டே இருக்காங்க அப்புறம் நந்தா எப்படி இருக்கார்? அவரையும் அழைச்சிட்டு வா.”

“அவருக்கென்ன எப்பொழுதும் சந்தோஷமா அனுபவிச்சிட்டே இருப்பார் கவலைன்னா என்ன விலைன்னு கேட்பார்.”

 

 “அது ரொம்ப உத்தமமான குணம் அது மாதிரி கிடைக்கிறது கஷ்டம். யு ஆர் வெரி லக்கி வனிதா நந்தா மாதிரி ஒரு ஆள் கிடைக்க.”

“நீங்களுமா ராம் ஏற்கனவே அவனுக்கு ஏகப்பட்ட விசிறிகள் இருக்கு. அதில நீங்களும் சேர்ந்தாச்சா?”

“நிஜமாவே வனிதா! நந்தா மாதிரி இருந்திட்டா வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளையும் சாதாரணமா சந்திச்சிடலாம்.”

அவன் கைகளின் மேல கையை வைத்து “ராம் எல்லாமே நாம நினைக்கிற நினைப்பில் தான் இருக்கு. எதையுமே மனசில சுமந்துகிட்டு இருந்தோம்னா பாரம் அதிகமாகி மன வருத்தம் தான் அதிகமாகும். பழசை எல்லாம் குப்பையா நினைச்சு தூக்கி போடுங்க.உங்களை நம்பி பல உயிர்கள் இருக்குப்பா.”

“தேங்க்ஸ் வனிதா! உன்னை மாதிரி தோழமைகள் இருக்கிறதுனால தான் நான் இந்த அளவிற்கு நடமாடிக்கிட்டு இருக்கேன்.”

“எல்லோருக்குமே ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் வலிகள் இருக்கத் தான் செய்யுது. இனி வரும் காலங்களில் வலிகளுடனான வாழ்க்கை வாழப் பழகிடும்.”                            

“ தெய்வமே! இப்படி நீ தினமும் பேசினா நந்தா சீக்கிரம் சாமியாராகிடுவான்.”

“ஹா..ஹா..ராம் இப்போ தான் பழைய பார்ம்க்கு வந்துட்டீங்க.”

“சரி எனக்கு நேரமாச்சு. இன்னைக்கு மேத்தா ஹோஸ்பிடலில் அவுட் பேஷன்ட்சை பார்க்கணும் பை.”

“ஓகே ராம் டேக் கேர்.”

வீட்டிற்கு வந்து வேலையை முடித்து விட்டு இரவுக்கு என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நந்தாவிடம் இருந்து போன் வந்தது. அன்றிரவு சமைக்க வேண்டாம் என்றும் வெளியில் சென்று வரலாம் என்று தெரிவித்தான். அதன் பின்னர் நிதானமாக ஓய்வு எடுத்து குளித்து முடித்து நன்றாக அலங்கரித்துக் கொண்டாள். சரியாக அந்த நேரம் வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. நந்தாவாக தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு திறந்தாள். ஆனால் அங்கு நின்றதோ நந்தாவின் சகோதரி. மனதிற்குள் எழுந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு உள்ளே வாங்க என்றாள்.

“நீ டாக்டர் தானே இல்லை சினிமால நடிக்கும் ஆளோ என்று நினைச்சேன் இப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டு நின்னுதான் என் அண்ணனை எங்க வீட்டு பக்கமே விடாம வச்சு இருக்கியா?”

“அக்கா என்ன இது இப்படி பேசுறீங்க?”

“ச்..ச்…இந்த நடிப்பு எல்லாம் என் அண்ணனோட வச்சுக்கோ நானெல்லாம் நம்பத் தயாரா இல்லை.”

“…………”

“சரி சரி அண்ணன் எப்போ வருவாங்க?.மசமசன்னு நிற்காம போய் ஏதாவது டிபன் செஞ்சு கொண்டு வா.”

  இப்போ வர நேரம்தான்.நான் போய் டிபன் எடுத்திட்டு வரேன்”

சமையலறைக்குள் சென்றவள் மனதிற்குள் ‘என்ன திடீர்ன்னு வந்து இருக்காங்க ஏதும் பிரச்சனை இருக்குமோ?’ என்று எண்ணியவாறே வெங்காயத்தை நறுக்கி கடலை மாவை போட்டு பக்கோடா போடுவதற்கு பிசைந்து கொண்டிருந்தாலும் எண்ணமோ நாத்தனாரை சுற்றியே சுழன்றது.அதற்குள் வெளியில் நந்தாவின் குரல் கேட்டது..

“ஹே விது! என்னடா திடீர் விஜயம்.நான் எதிர்பார்க்கவே இல்லை.”

‘இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் அண்ணா அப்படியே பார்த்துட்டு போகலாம்ன்னு.நீங்க தான் எங்களை எல்லாம் மறந்துடீங்க.”

 “அதை விடு என் மருமக எப்படி இருக்கா? குழந்தையை தூக்கிட்டு வந்து இருக்கலாம் இல்லை.”

“அம்மாதான் கண்டவங்க இருக்கிற இடத்துக்கு எல்லாம் குழந்தையை தூக்கிட்டு போகாதேன்னு சொன்னாங்க” என்று பக்கோடாவுடன் வந்த வனிதாவை பார்த்தபடியே சொன்னாள்.

அவளின் இந்த பேச்சில் முகம் மாறினாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்தபடி இந்தாங்க அக்கா என்று சொல்லி தன் கையில் இருந்த டிபன் தட்டை அவள் முன்னே வைத்தாள்.

அவளின் முக மாறுதலையும் அவள் சமாளித்துக் கொண்டதையும் கவனித்தவன் ”விது சீக்கிரம் சாப்பிட்டிட்டு நீ வீட்டுக்கு கிளம்பு நானும் வனியும் வெளில போறோம்.”

“என்ன அண்ணா இது! தங்கச்சி வந்து இருக்கேன் இப்படி கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளாத குறைக்கு பேசுறீங்க.”

‘வேற என்ன பண்ண முடியும் விது? உங்க அண்ணி எனக்கு மதிப்பு கொடுத்து என்னோட தங்கையை உட்கார வச்சு உபசாரம் பண்றா. ஆனா, நீ என் கூடவே பொறந்து வளர்ந்தவ. நீயே எனக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை கொடுக்கலையே.அவ உன் அண்ணி இனி என் வாழ்க்கையே அவதான் நீ என்னை மதிச்சு இருந்தேன்னா அவளுக்கும் மரியாதை கொடுத்து இருப்பே.”

‘இல்லை அண்ணன் இவளால தானே நீங்க எங்க எல்லாரையும் பிரிஞ்சு இருக்கீங்க.”

“வேண்டாம் விது இதுக்கு மேல நீ பேசாதே.இனி அவளுக்கு மரியாதை கொடுக்கிறதா இருந்தா இந்த வீட்டுக்கு வா.”

‘போதுமா உனக்கு என் கிட்ட ஆசையா இருந்த எங்க அண்ணனை எப்படி மாத்திட்டே நீ நல்லாவே இருக்க மாட்ட!” என்று கத்தி விட்டு அங்கிருந்து சென்றாள்.

அதை கேட்டு வந்த அழுகையை அடக்கி கொண்டு உள்ளே செல்ல முயன்றாள். அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன். ”வனி விடும்மா அவளுக்கு தன் அண்ணனோட அன்பை பகிர்ந்துக்க ஆள் வந்தாச்சுன்னு ஆங்காரத்தில் கத்திட்டு போறா. போக போக எல்லாம் சரியாகிடும்மா.”

“ஏன்பா எல்லோரும் என்னை தப்பாவே புரிஞ்சுக்குறாங்க.எங்க வீட்டிலேயும் சரி உங்க வீட்டிலேயும் சரி எல்லோரும் என்னை வெறுக்குறாங்கலே என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.”

“மை டியர் டெடி இதுக்காகத்தான் சீக்கிரம் ஓடோடி வந்தேனா? இந்த அழுமூஞ்சியை பார்க்க.”

“போ நந்து உனக்கு கொஞ்சம் கூட எந்த கவலையும் இல்லை.”

“சரி சரி முகத்தை கழுவிட்டு கிளம்பு வெளில போயிட்டு வரலாம்.நானும் குளிச்சிட்டு பிரெஷ்அப் பண்ணிட்டு வந்துடுறேன்.”

“ம்ம்ம்…..அக்காவுக்காக பக்கோடா போட்டு வச்சேன் சாப்பிடாம கிளப்பி விட்டுடீங்க.”

“போனா போகுது விடு நாம சாப்பிட்டுடலாம்.”

                               அத்தியாயம் – 3

சிறிது நேரம் கழித்து இருவரும் கிளம்பி கடற்கரைக்கு சென்றனர்.  மணலில் அமர்ந்தது தங்களின் எதிர்கால வாழ்க்கை கனவுகள் என்று பலவற்றை பற்றி பேசினார். பல நாட்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக வெளியில் வந்ததால் மனம் விட்டு பல விஷங்களை பேசினர்.

“எனக்கு எல்லாத்தை விட நம்ம ரெண்டு குடும்பங்களும் ஒண்ணா சேரனும் எல்லோரையும் போல மாமியார் நாத்தனார்னு எல்லோரோடையும் சேர்ந்து வாழனும் ஆசையா இருக்கு.”

“மேடம் விட்டா தத்துவ ஞானி ஆகிடுவீங்க .இந்த புடவையில ரொம்ப அழகா இருக்கே வனி.”

 “அப்போ இந்த புடவையில மட்டும் தான் நான் அழகா?”

‘அது இல்லாம இருந்தாலும் என் டெடி அழகுதான்.”

“சீ…பேச்சை பாரு சரி கிளம்புங்க இப்போவே நேரமாச்சு.”

ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் காண்டில் லைட் டின்னெர் சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளின் மன சோர்வுகளை துறந்து இருவரும் காரில் வீடு நோக்கிப் பயணித்தனர். இருவருக்குள்ளும் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு வாழ்வின் அனைத்தையும் வென்றுவிட்ட சந்தோஷத்தில் வனி நந்தாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு வண்டியில் ஒலித்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் வனி இன்னைக்கு டெலிவரி பார்த்தியே என்ன பேபின்னு சொல்லவே இல்லை?”

“ஹையோ ஆமாம் நந்து மறந்தே போயிட்டேன் அது ரெட்டைப்பா ஒரு பொண்ணு ஒரு பையன், ரெண்டும் செம கியூட்.”

“ஒ..சுப்பர்….ஆனா எங்களை மாதிரி ஆட்களுக்கு தான் அந்த குழந்தையோட முதல் ஸ்பரிசம் புதுசா இருக்கும் நீ தான் தினமும் பார்க்குறியே அதனால உனக்கு பெருசா தெரியாது.”

 “இல்லைப்பா! எனக்குமே ஒவ்வொரு முறையும் குழந்தையை கையில் வாங்கும் போது ஒருவிதமான அனுபவம் அதை சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை. குழந்தைகள் குடும்பத்தின் பொக்கிஷம்.”

“ஹ்ம்ம்…ஹ்ம்ம்….புரியுது புரியுது” என்றவாறு சொல்லி அவளை பார்த்து கண்ணடித்தான்.

மகளை சினிமாவிற்கு அழைத்து சென்று விட்டு ஹோட்டலில் உணவு வாங்கி கொடுத்து அழைத்துக் கொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் தந்தையும் மகளும். காரில் ஏறி உட்கார்ந்ததில் இருந்து சிறிது நேரம் படத்தை பற்றி வளவளத்து கொண்டு வந்த சிந்து பிறகு தூங்க

ஆரம்பித்தாள். அதுவரை தெரியாத தனிமை பெண் உறங்கியதும் தெரிய ஆரம்பித்தது . அதனால் சீடியை ஒலிக்க விட்டவன் மனமோ அதில் ஒலித்த பாடல் வரிகளில் தன் மனைவியுடன் மகிழ்ந்திருந்த நாட்களை எண்ணியபடியே வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான். அப்போது ஒருபாடல் அவர்கள் வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தை நினைவுப்படுத்த அந்த நினைவில் அவனின் கைகளில் வண்டி ஒரு நிமிடம் தடுமாற அதே நேரம் எதிரில் நந்தாவும் வனிதாவும் வந்த வண்டி வர, இரு வண்டிகளும் பெரும் சத்தத்துடன் மோதியது. என்ன நடந்தது என்று உணரும் முன் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

வனிதாவிற்கு எதிரில் வந்த வண்டி சற்று தாறுமாறாக வருகிறது என்று உணர்ந்து சுதாரித்து நந்தாவை பார்க்கும் முன் இரு வண்டிகளும் மோதி இருந்தது. அவள் நினைவை இழப்பதற்கு முன் நந்தாவை திரும்பி பார்த்தாள் அவன் ஸ்டியரிங்கில் சாய்ந்திருந்தான். தலையில் கண்ணாடி துகள்கள் பட்டு  ரத்தம் வழிந்து கொண்டிருந்தது நினைவிழந்து இருந்தான். அதை பார்த்து என் நந்தாவுக்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டே அவளும் நினைவை இழந்தாள்.

விக்ரமோ தன் தடுமாற்றத்தை உணர்ந்து விபத்தை தடுக்க முனைவதற்குள்  நடந்து முடிந்திருந்தது. வண்டி மோதிய வேகத்திலேயே விக்ரமின் நெஞ்சு ஸ்டியரிங்கில் மோதி இதயத்தில் அதிர்வை கொடுத்தது. கண்ணாடியும் உடைந்து முகமெங்கும் கிழித்து ரத்தம் வடியத் தொடங்கியது. அந்த நிலையிலும் தன் குழந்தையை தேடினான். சிந்து சிறு குழந்தையாக இருந்ததால் வண்டி மோதிய வேகத்திற்கு பெல்ட் போட்டு இருந்ததால் சீட்டிலேயே இருந்தாள். ஆனால் மயக்கத்தில் இருந்தாள். அவன் மனம் தவிக்கத் தொடங்கியது ஐயோ! என் குழந்தை அநாதை ஆகிவிடுவாளே நான் இறந்து விட்டால் என்று எண்ணியவன் கண்களில் வலியை மீறி பெண்ணிற்காக கண்ணீர் வழிந்தோட தொடங்கியது. பெண்ணின் தலையை கோதிவிட உயர்ந்த கை பெண்ணை ஆசிர்வதிப்பது போல குழந்தையின் தலை மீது வைத்து இருக்கும் போதே விக்ரமின் உயிர் பிரிந்தது.

வருங்காலத்தை பற்றி ஆயிரம் கனவுகளுடன் இருந்த நந்தாவும் தன் குழந்தையின் கனவுகளை நிஜமாக்கிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த விக்ரமும் இரு உயிர்கள் தங்களின் பயணத்தை பாதி வழியிலேயே முடித்துக் கொண்டு தங்களுக்காக வாழ்ந்தவர்களின் மனதை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டன.

வனிதாவும் சிந்துவும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.  நந்தாவின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விக்ரமின் தங்கைக்கும் தகவல் அனுப்பப்பட்டதும் அவர்களும் அடித்துப்பிடித்து ஓடி வந்தனர். வனிதாவிற்கு தலையில் அடிபட்டிருந்ததால் நினைவு திரும்ப இரு நாட்களுக்கு மேல் ஆகும் என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்.

சிந்துவிற்கும் அதிர்ச்சியின் காரணமாக வந்த மயக்கம் தெளிந்ததும் தந்தையை தேடி அழ ஆரம்பித்தாள். விக்ரமின் தங்கை குடும்பம் வந்து அண்ணனின் உடலை வாங்கி காரியங்கள் செய்து முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து குழந்தையை பொறுப்பில் எடுக்க வேண்டும் என்ற போது பிரச்சனை எழுந்தது. தங்கை கணவன்  குழந்தையை தங்களுடன் வைத்துக் கொள்ள விருப்பம் இல்லை என்று பலமாக தன் ஆட்சேபனையை தெரிவித்தான்.

விக்ரமின் பெற்றோரின் நிலையோ சொல்ல முடியாமல் இருந்தது . தாங்களே அடுத்தவரை நம்பி இருக்கும் போது மகனின் குழந்தையை தங்களுடன் வைத்துக் கொள்ள அடுத்தவரை யாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்று மனம் புழுங்கினர். அதேநிலை தான் சிந்துவின் தாய் வழி உறவுகளுக்கும் . அதனால் விக்ரமின் தங்கை கணவன் மருத்துவமனையில் சென்று குழந்தையை எங்காவது அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுமாறு சொல்லி விடுகிறான்.

அந்த ஐந்து வயது குழந்தை பிறந்து ரெண்டு வருடங்களிலேயே தாயை இழந்து தாய் பாசத்தை காணாமல் வளர்ந்து தந்தையே தாயுமானவனாகி வளர்த்து வரும் சூழ்நிலையில் அவனையும் இழந்து தன்னை சுற்றிலும் அனைத்து உறவுகள் இருந்தாலும் அவரவர் சூழ்நிலையால் அக்குழந்தை முற்றிலும் அனாதையாகி விட்ட காலத்தை எவர் பழிப்பது.

மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் சிந்துவின் மேல் பாசமும் பரிதாபமும் இருந்ததால் அவளை அங்கிருந்த தாதியரில் இருந்து மருத்துவர் வரை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர். அடுத்து அவளை அநாதை ஆசிரமத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதே அனைவருக்கும் துக்கம் எழுந்தது. இப்படியே நான்கு நாட்கள் கடந்தது.

வனிதாவிற்கு நினைவு திரும்பியவுடன் நந்தாவின் பெற்றோர்கள் அவனின் உடலை வாங்கி செல்லும்போது வனிதாவிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை அவளை பற்றி எங்களுக்கு தெரியாது என்று சொல்லி சென்று விட்டதால் அவளை வந்து பார்க்க யாருமின்றி அவசர சிகிச்சை பிரிவில் தனியாகவே இருந்தாள். நந்தாவின் பெற்றோர்கள் உடலை வாங்கி சென்று தாங்களே அனைத்து காரியங்களையும் முடித்து தகனத்தையும் செய்து முடித்தனர்.

அன்று டாக்டர் ராமிற்கு அந்த மருத்துமவமனையில் வேலை இருந்ததால் அங்கு வந்தான். வனிதாவிற்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமின் நண்பன்            

என்பதால் வனிதாவின் நிலையை பற்றி அவனுக்கு சொல்லி  ராம்   வந்தவுடன் அவளின் கேஸ் ஹிஸ்டரியை தெரிவித்து தான் அளிக்கும் சிகிச்சையை பற்றி அவனிடம் ஆலோசனை கேட்டான்.

“ஒ…கிருஷ் நான் உன் பேஷண்ட்டை பார்க்கலாமா?”

“ஒ..எஸ் வா ராம்.”

இருவரும் ஐ.சி. யு. விற்குள் சென்றனர். அங்கு இருந்தவர்களை பார்த்துக் கொண்டே வந்தவர்கள் வனிதாவின் அருகே அழைத்து சென்றான். தலையில் மிகப் பெரிய கட்டுடன் படுக்க வைக்கப் பட்டிருந்த வனிதாவை பார்த்ததும் ராமிற்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை.

நான்கு நாட்களாக மருத்துவமனைக்கு வரவில்லை என்பதால் அவள் யாருக்கும் எந்த உத்தரவும் தராமல் திடீரென்று வராமல் இருப்பதால் உடல் நிலை சரியில்லையோ என்று அவளின் அசிஸ்டன்ட் டாக்டர் அவள் வீடு வரை சென்று பார்த்து வந்தாதாகவும் வீடு பூட்டி இருப்பதாக தெரிவித்தாள். அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது நந்தா வனிதா இருவரும் நான்கு நாட்கள் முன்னர்  மாலை எங்கோ வெளியில் சென்றனர் அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த செய்திகளை மற்றவர் வாயிலாக அறிந்த்திருந்தான். சரி ஏதோ ஒரு அவசர வேலையாக சொல்லாமல் போய் இருக்கிறார்கள் போல என்று தான் எண்ணி இருந்தான். ஆனால் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘கிருஷ் இது டாக்டர் வனிதா என் க்ளோஸ் பிரெண்ட்.”

“என்ன சொல்ற ராம் இவங்களை உனக்கு தெரியுமா?”

“ஆமாம் இவங்க ஆர்.ஆர். மருத்துவமனையில் தான் வேலை செய்றாங்க. கைனகாலஜிஸ்ட்.

“ஒ..தென் ஓகே நீயே போய் பேசு ராம் உன் குரல் அவங்களுக்கு பழக்கமா இருக்கும் இல்லையா?”                                                                  

“ஒன் மினிட் வெளில வா கிருஷ்.இவங்க ஹஸ்பண்ட் நந்தா எப்படி இருக்கார்?”

“அவர் அந்த இடத்திலேயே போய்ட்டார்.”

“வாட்…அப்போ அவங்க பேரண்ட்ஸ் வரலையா கிருஷ்.”

“வந்து நந்தா உடலை வாங்கிட்டு இவங்களை எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.

இவங்களோடது லவ் மேரேஜா?”

“ம்ம்ம்…..வனி பாவம் நந்தாவோட இழப்பை எப்படி தாங்குவா?”

 “இந்த லவ் மேரேஜ்ல இது ஒரு தொல்லை. இவங்க பேரண்ட்ஸ்க்கும் தகவல் கொடுத்தோம் ஆனா அவங்க எங்களுக்கு அப்படி ஒரு பொண்ணே இல்லேன்னுட்டாங்க.”

“சரி கிருஷ் நான் போய் வனிதா கிட்ட பேசுறேன்.”

அவள் அருகில் சென்று அமர்ந்து வனிதா என்று அழைத்து அவளிடம் பேச முயற்சி செய்தான். நீண்ட நேரத்துக்கு பிறகே அவன் குரல் அவளின் மூளையில் பதிய ஆரம்பித்தது மெதுவாக கண் விழித்து பார்த்தவளின் கண்கள் அறையை சுற்றி வலம் வந்து நந்தாவை தேடி ஒவ்வொரு இடமாக சுற்றி கடைசியில் ராமிடம் வந்து நின்றது.

அதிர்ச்சியிலும் உடல் வேதனையிலும் குரல் எழும்பாமல் மெதுவாக “நந்தா..நந்தா எங்கே ராம் ? நெத்தி எல்லாம் ஒரே ரத்தம் . நான் பார்க்கணும் ராம். எங்கேன்னு சொல்லுங்க?”

“நந்தாவுக்கு ஒன்னும் இல்லை நல்லா இருக்கார் கைல மட்டும் கொஞ்சம் அடி அதுதான் பக்கத்து ரூம்ல டாக்டர் பார்த்துகிட்டு இருக்காங்க.”

“நிஜமா நந்தா நல்லா இருக்காரா?”

      “ஆமாம் வனிதா பயப்பட வேணாம். நீ தூங்கி எழுவதற்குள் நந்தா உன்னை பார்க்க வந்துடுவார்.”

                                                                                  அத்தியாயம் – 4

அதை கேட்டு மெல்ல கண்களை மூடியவள் நினைவில் விபத்து அன்று நடந்தைவைகள் எல்லாம் வந்து ஆழ்ந்த உறக்கத்தில் தள்ளியது. பிறகு மெதுவாக கண்களை திறந்து அங்கிருந்த காலண்டரில் தேதியை பார்த்தவளுக்கு உரைத்தது நான்கு நாட்களாக இருந்து மருத்துவமனையில் இருக்கிறோம் என்று. ஆனால் ராம் ஏதோ இன்று தான் விபத்து நடந்தது போல தன்னிடம் சொல்கிறான். அப்படி என்றால் நந்தாவிற்கு ஏதோ நடந்து விட்டது என்று உணர்வு வந்து தொண்டையை அடைத்தது.

 

திரும்ப விழிப்பு வரும் வரை அங்கேயே இருந்தவனை பார்த்து “ராம் உண்மையை சொல்லுங்க நந்தாவுக்கு என்ன ஆச்சு?ராம் சொல்லுங்க ராம்! என் நந்தா எங்கே உண்மைய சொல்லுங்க ராம் என் நந்தா எங்கே?”

“வனிதா முதல நீ இந்த ஊசியை போட்டுக்கோ நான் சொல்றேன்.”

“இது என்ன தூக்க மருந்தா சொல்லுங்க ராம் தூக்க மருந்தா எத்தனை நாளைக்கு என்னை தூங்க வைக்க முடியும் நிஜத்தை சொல்லுங்க என்ன ஆச்சு என் நந்தாவுக்கு இருக்காரா இல்லையா?”

“வனிதா இப்போ இந்த மருந்தை போட்டுக்கிட்டு தூங்கி எழுந்திரி அப்புறம் பேசிக்கலாம்.”

“அப்போ என்னை விட்டுட்டு போயிட்டானா வாழ்நாள் எல்லாம் என் கூடவே இருப்பேன்னு சொன்னான்னே அதெல்லாம் பொய்யா?”

“வனிதா சொல்றதை கேளுமா.”

“என் உலகமே அவன் தானே அவனை சுத்தி தானே எல்லாமே இருந்தது இப்படி என்னை பாதில விட்டுட்டு போகவா இவ்வளவு அன்பை காண்பிச்சான்.சொல்லு ராம் ஏன் என்னை விட்டு போனான் சொல்லு?” என்று கேட்டு அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

    “வனிதா இப்போ உன் உடம்பு இருக்கிற நிலையில் இவ்வளவு உணர்ச்சி வசப்படக்கூடாது.”

“ஐயோ! என்னால முடியலையே .எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருக்கே. எனக்கு எல்லாமே என் நந்தா தானே. ராம் ராம் ப்ளீஸ் எனக்கு என் நந்தாவுடைய முகத்தையாவது கடைசி தடவையா பார்க்கணும் என்னை அவன் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போங்களேன் ப்ளீஸ்.”

“வனிதாம்மா! ப்ளீஸ்! தயவு செஞ்சு கொஞ்சம் பொறுமையா இரும்மா.உன் நந்தாவோட உடலை அவங்க பேரண்ட்ஸ் வாங்கிட்டு போய்ட்டாங்க.”

எனக்கு பார்க்கணும் ராம். ப்ளீஸ்! அவன் முகத்தை கடைசியா ஒரு முறை பார்க்கணும் ராம்..என்னை கூட்டிட்டு போ ராம். ப்ளீஸ்!” என்று கையெடுத்து கும்பிட்டு கதறத் தொடங்கினாள்.

“நாலு நாள் ஆச்சு வனிதா அவங்க உடலை வாங்கிட்டு போய் இந்நேரம் எல்லாமே முடிஞ்சு இருக்கும்.”

‘ப்ளீஸ் ராம் .எதுவும் சொல்லாதே என்னை கூட்டிட்டு போ!

“சரிம்மா இரு. நான் ஏற்பாடு பண்றேன் பொறுமையா இரும்மா. சிஸ்டர் கொஞ்சம் பார்த்துக்கோங்க.”

அவன் போனதும் நந்தா தன்னிடம் முதல் நாள் பேசியது அனைத்தும் நினைவில் வந்தது. எத்தனை எத்தனை ஆசைகளை மனதில் சுமந்து இருந்தான். தன்னை பற்றி மட்டும் நினைக்காமல் தங்களின் இரு குடும்பத்தாரின் நலன்களையும் மனதில் கொண்டு ஒவ்வொன்றையும் யோசித்து வைத்திருந்தான். தன்னிடம் அவன் கொண்டு இருந்த காதல். என்ன செய்தேன் அவனுக்கு இப்படி ஒரு அன்பை கொடுத்தானே. எல்லோரும் அவரவர் மனைவியை உள்ளங்கையில் தாங்கினால் இவன் என்னை தன் நெஞ்சில் அல்லவா சுமந்து இருந்தான். அதை என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாமல் போய் விட்டதே என்று எண்ணி கண்ணீர் சிந்த ஏற்கனவே அடிபட்டதில் பலவீனமாய் இருந்த உடம்பு மேலும் சோர்வுற்று

       மனதையும் அழுத்த கதறி அழக் கூட சக்தியில்லாமல் வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது பக்கத்து பெட்டில் இருந்து மெல்லிய அழுகை சத்தம் கேட்டது.

“அப்பா வேணும்! அப்பா கிட்ட கூட்டிட்டு போங்க!” என்று ஒரு குழந்தை வனிதாவின் இரு பெட் தள்ளி இருந்த பெட்டில் படுத்த வண்ணம் அழுது கொண்டிருந்தது.

 

தன் துயரத்தின் நடுவே குழந்தையின் அழுகையை பார்த்ததும் தன் அழுகையை நிறுத்தி விட்டு சிஸ்டரிடம் குழந்தையை பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள்.

முதலில் குழந்தையின் மேல் பரிதாபம் வந்தாலும் தான் இன்று இருக்கும் நிலைக்கு காரணமே இந்த குழந்தையின் தகப்பனால் தானே என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. தன் நந்தாவின் இழப்பிற்கு காரணமானவனின் ரத்தம் என்ற வெறுப்பு வந்தது. குழந்தையை பார்க்காமல் அதன் அழுகையை கேட்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சிறுது நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி வாங்கி வனிதாவை அழைத்துக் கொண்டு நந்தாவின் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றான். ராமுடன் சென்று காரில் இருந்து இறங்கியவளைப் பார்த்து அங்கிருந்த உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே ஓடி சென்று தகவல் தெரிவித்து விட்டு வந்தார்.

காரில் இருந்து இறங்கியவள் வேகமாக உள்ளே சென்று நந்தாவை பார்த்து விட வேண்டும் என்ற வேகத்துடன் வீட்டினுள்ளே நுழைய போனாள். அப்போது நந்தாவின் தாயாரும் அவன் தங்கையும் அவளை தடுத்து நிறுத்தினர்.

“போடி வெளியே! எங்கே வந்த? உன்னோட இருந்ததுக்கு என் புள்ளைய மொத்தமா மண்ணுக்குள்ள புதைச்சிட்டியேடி.”

 “அம்மா உங்க காலில விழுறேனம்மா தயவு செஞ்சு நந்தாவை பார்க்க விடுங்கம்மா.”

“போதும் எங்க அண்ணன் இருந்தப்ப நீ ஆடின ஆட்டம் எல்லாம். உயிரோட இருந்தப்பதான் எங்க அண்ணனை எங்ககிட்ட சேர விடாம பண்ணின. இப்பவும் வந்து பிரச்சனை பண்றியா? நாங்க கழுத்தை பிடிச்சு வெளில தள்ளுறதுக்கு முன்னாடி நீயே வெளில போய்டு.”

 

 “ப்ளீஸ்! யாராவது சொல்லுங்களேன் நான் ஒருமுறை அவரோட முகத்தை பார்த்துட்டு போயிடறேனே, என் நந்தாவோட முகத்தை பார்க்கணுமே ப்ளீஸ் அத்தை ப்ளீஸ்.”

“போன்னு சொல்றேன் இல்லை! ஏற்கனவே எங்க பையன் உயிரை எடுத்தது பத்தாதா? எங்க உயிரையும் எடுக்கணுமா?”

“உங்க பையன்! உங்க பையன்னு! இவ்வளவு சொல்றீங்களே உங்க பையன் உயிரா நினைச்ச என்னை அவர் முகத்தை கடைசியா பார்க்க விட மாட்டேன்றீங்களே.”

“ஆமாம்டி நாங்க பார்த்து கூட்டிட்டு வந்தவ பாரு! குறுக்கு வழியில வந்தவ தானே.”

இறந்து நாளு நாள் ஆச்சு இன்னும் வீட்டிலேவா வைத்து கொண்டு இருப்போம் என்று சொன்ன மாமியாரின் பேச்சில் இருந்ததை புரிந்து கொண்டவளுக்கு அழுகையுடன் சேர்ந்து அதிர்ச்சியே மிஞ்சியது.

“ஏன் இப்படி பேசுறீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணினது தப்பா, உங்க மனசை எல்லாம் உடைச்சு கல்யாணம் பண்ணிகிட்டதுக்குதான்  இப்போ பலனை அனுபவிக்கிறேன். நாங்கதான் சின்னவங்க எங்க தப்பை மன்னிச்சு நீங்க எல்லாம் நல்லா இருக்கணும்னு வாழ்த்தி இருக்க கூடாதா? நானும் நந்தாவும் நல்லா வாழ்ந்து இருப்போமே என்று வாசலிலேயே விழுந்து கதறி தீர்த்தாள்.                                                   

வனிதாவின் சிகிச்சைக்காக வந்து போன ராம் குழந்தை சிந்துவை பற்றி அறிந்து தினமும் அவளுடன் சிறிது நேரம் உரையாடி போவான்.. தனக்கென யாருமில்லை இந்த பரந்த உலகில் என்பதை அறியாமல் இருந்த ஒரே உறவான தந்தை இழந்த பிறகு அழுகையிலே கரையும் குழந்தையை பார்த்து அவனை அறியாமலேயே ஒரு பாசம் வந்தது.

விபத்தின் மூலம் ஒரு பக்கம் வனிதா கணவனை இழந்து சுற்றிலும் உறவுகள் இருந்தாலும் காதல் திருமணத்தால் அநாதையாகி நிற்கிறாள்.

குழந்தை சிந்துவோ தாயாரை இழந்து இருந்தாலும் தந்தையின் பாசத்தில் வளர்த்தவளுக்கு இந்த விபத்தின் மூலம் உலகமே நிராதரவாக போயிற்று. ராமிற்கு விதியின் மீதே கோபம் வந்தது. அழகானதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நான்கு ஜீவன்களின் வாழ்க்கையை கலைத்து போட்டு விட்டதே என்று.

 

                                                                                     அத்தியாயம் –5

தன் தாயாருடன் வந்து வனிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்கள் .

மருத்துவமனையில் இருந்த அனைவரிடமும் ஒதுங்கினாலும் ராமிடம் இருந்த ஏதோ ஒன்று சிந்துவை அவனிடம் கட்டிப்போட்டது. ராமிற்கும் அந்த சின்னஞ்சிறிய குழந்தையின் நிலையும் அவனுக்கென்று அவன் அம்மாவை தவிர யாருமில்லாத காரணத்தால் அவன் மனமும் அக்குழந்தையிடம் நெருங்கியது.

தாயில்லாமல் தந்தையுடனே வளர்ந்த சிந்துவிற்கு ராமின் அன்பான பேச்சும் அவன் தன்னிடம் காட்டும் பாசமும் தந்தையை காணாமல் தவித்த மனதிற்கு ஒரு நெருக்கத்தை கொடுத்தது. சிந்துவிற்கு உடல்நிலை சரியானதும் தாயின் அனுமதியுடனும் மருத்துவமனையின் அனுமதியுடனும் சிந்துவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

இதன் நடுவே வனிதாவும் தன் நிலையில் இருந்து தெளிந்து நடந்தவைகளை அறிந்து மனதளவில் உடைந்து போனாள். அவள் உடல்நலம் தேறியதும் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்ட போது நந்தா இல்லாமல்                                                                          

வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் அழுத அழுகையில் மற்றவர்களின் மனது கரைந்தது.. ராமின் தாயார் தான் உடனிருந்து அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டார். ராமிற்கும் அவன் அன்னைக்கும் அவளை அங்கே தனியே விட மனமில்லை தங்களுடன் அழைத்து சென்று வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அவளிடம் கேட்டனர். அதற்கு வனிதா மறுத்து விட்டாள்.

 

நாட்கள் யாரையும் எதிர்பார்க்காமல் அதன் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வனிதா வேலைக்கு திரும்பி விட்டாள். ஆனால் மன நிலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. அவளுடன் வீட்டில் யாராவது இருந்தாலாவது மனம் மாறுவதற்கு வாய்ப்புகள் இருந்து இருக்கும். அதற்கும் வழி இல்லாமல் தனிமையிலே நந்தாவின் நினைவுகளுடன் கழித்து வந்தாள். அப்படி இருக்கும் நிலையில் ஒரு நாள் மருத்துவமனையில் தன் அறையில் வேலைகளை முடித்து விட்டு வந்து அமர்ந்திருக்கும் போது ராம் வந்தான். அவன் கையில் ஓர் அழகிய குழந்தை கண்கள் ரெண்டும் துரு துறுவென்று அலைபாய தலையில் ரெட்டை சிண்டு போட்டுக் கொண்டு பார்த்தவுடன் அள்ளிக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது. விபத்து நடந்தபோது அவள் இருந்த மனநிலையில் குழந்தையை சரியாக கவனிக்காததால் அவளுக்கு சிந்துவை அடையாளம் தெரியவில்லை.

“வாங்க ராம்..யார் இந்த குட்டி ஏஞ்செல் ?”

“எப்படி இருக்கே வனிதா? “

“எனக்கென்ன கேடு நல்லா தான் இருக்கேன். ஆமா நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லல யாருப்பா இது?”

“என் பொண்ணுதான் வனிதா.”

“உங்க பொண்ணா? என்ன ராம் சொல்றீங்க?”

“ இவளை நான் தத்தெடுத்து இருக்கேன்.”

          “ஏன் ராம் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்கலாமே ஏன் இப்படி ஒரு முடிவு?”

“ கடவுள் ஒவ்வொருத்தரையும் படைச்சதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இந்த குழந்தையை பாரு! உன் நிலைமைதான் தன்னை சுற்றி எல்லா உறவுகள் இருந்தும் அனாதையா நிற்குது. இந்த குழந்தையை என் கண்ணில் பட வச்சு எனக்கும் இவளுக்குமான ஒரு பாசப் பிணைப்பை உருவாக்கி என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உண்டாக்கி இருக்கார். பாரேன்!  அம்மா கிட்ட கூட ஓட்ட மாட்டேன்றா.”

“அப்படியா குட்டி பொண்ணு உங்க பேர் என்ன ? பாருங்க ராம் அங்கிளை இப்படி மயக்கி வச்சு இருக்கீங்க..என் கிட்ட வாங்க பார்ப்போம் என்று குழந்தையை நோக்கி கையை நீட்டினாள்.

சிந்து வனிதாவிடம் போக மறுத்தாள்.

“விடுங்க ராம்! நான் அவளுக்கு புதுசு இல்லையா ஒரு ரெண்டு மூணு முறை பார்த்ததா அப்புறம் வந்துடுவா .”

“ஆமாம் என் கிட்டேயே இப்போ தான் நெருங்கி இருக்கா . நீ அடிக்கடி வீட்டுக்கு வா வனிதா உனக்கும் சேஞ்சா இருக்கும்.”

“கண்டிப்பா இனி இந்த மேடம்காக வந்திட மாட்டேன்.”

“பார்த்தியா சிந்து இந்த அநியாயத்தை நான் கூப்பிட்டா வர மாட்டாங்களாம் ஆனா, உனக்காக வருவாங்களாம்.”

“அது அப்படி தான். இனி உன்னை விட எங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் சிந்து தான்..இல்லையாடா குட்டி. உங்க அப்பாவை பாரு! இப்படியா சொல்லாம தூக்கிட்டு வருவாங்க உனக்கு கொடுக்க ஒண்ணுமே இல்லை.”

“விடு வனிதா! நான் இவளுக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வந்தேன் வர வழியில அப்படியே உன் கிட்ட காண்பிச்சிட்டு போகலாம்ன்னு தான். சரிமா எங்களுக்கு நேரமாச்சு இன்னொரு நாள் பார்க்கலாம்.”

         அதன் பின்னர் வந்த நாட்களில் வனிதா ராம் இருவரும் சந்திக்க முடியாதபடி வேலை நேரம் இருவருக்கும் மாறி மாறி வந்தது. ஒருவர் ப்ரீயாக இருக்கும் போது அடுத்தவருக்கு வேலை இருந்தது. அதனால் ராமிற்கு வேலை இல்லாத போது சிந்துவையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து வனிதாவை அவ்வப்போது பார்த்து செல்வான். அப்படி வரும் நாட்களில் சிந்து ராமிடம் தான் இருப்பாள். வனிதாவிடம் நெருங்கவில்லை என்றாலும் அவளின் சிறுசிறு தொடுகைகளை அனுமதித்தாள். தனக்கு தெரிந்தவர்களின் வட்டத்திற்குள் வைத்துக் கொண்டாலும் கிட்டே நெருங்காமல் இருந்தாள். அப்படி ஒருநாள் ராம் சிந்துவை தூக்கி வந்து இருந்தபோது சிந்துவிற்கும் வனிதாவிற்கும் வாழ்க்கை ஏற்படுத்தி இருந்த சிக்கலை கூறினான்.

“இவளை உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன் வனிதா. நீங்க ரெண்டு பேரும் ஒரே விபத்தில்தான் உங்கள் சொந்தங்களை இழந்தீங்க.”

“என்ன சொல்றீங்க ராம்.”

“ஆமாம் வனிதா உங்க கார் மேல மோதின கார் இவங்க அப்பாவோட கார் தான்.”

நாற்காலியில் அமர்ந்திருந்தவள் சட்டென்று எழுந்து நின்று விட்டாள். கைகள் நடுங்கத் தொடங்கியது. “தயவு செஞ்சு இவளை இங்கே இருந்து தூக்கிட்டு போய்டுங்க ராம். என் நந்தா இழப்புக் காரணமானவனோட ரத்தம். என்னால சில விஷயங்களை ஜீரணிக்க முடியாது. ப்ளீஸ்!”

“என்ன சொல்ற வனிதா அதுக்கு இந்த குழந்தை என்ன செய்யும்.”

“என் வாழ்க்கை பறி போக காரணமே இவங்க அப்பாதான். என்னால இந்த குழந்தையை எப்படி மற்ற குழந்தைகளை மாதிரி பார்க்க முடியும்.”

“நீ ஒரு டாக்டர். அதுவும் குழந்தைகளை இந்த உலகத்துக்கு கொண்டு வருகிற புனிதமான தொழிலில் இருப்பவள். இப்படி ஒரு குழந்தையை வெறுக்கலாமா?”

      “ஏன் ராம்? டாக்டருக்கு தனிப்பட்ட உணர்வுகளே இருக்க கூடாதா? நானும் மனுஷிதான் . என் உணர்வில் உதிரத்தில் கலந்த என் உயிரை பிரிய காரணமாயிருந்தவனின் குழந்தையை வெறுப்பதில் என்ன தவறு.?”

 “இத்தனை நாள் இந்த குழந்தை கிட்ட தெரியாத ஒன்று ஏன் உனக்கு இப்ப தெரியனும்? இப்படி மாத்தி யோசி வனிதா இந்த குழந்தை அநாதை ஆனதுக்கு நீங்க காரணம்னு சொன்னா சரியாகுமா?”

“அப்போ எனக்கு தெரியாதே ராம். என் தனிமைக்கு காரணம் இவங்க அப்பா தான்னு. அதெப்படி ராம் யோசிக்க சொல்றீங்க அவங்கப்பா தானே வண்டியை சரியா ஒட்டாம எங்க வண்டி மேல இடிச்சு என் வாழ்கையை சூனியமா ஆக்கினது.”

‘அதெல்லாம் சரி தான் ஆனா அவங்க வண்டி தடுமாறினப்ப எதிரில் உங்க வண்டி வராமல் இருந்திருந்தா இத்தனை பாதிப்பு இருந்து இருக்காது இல்லையா? அதுக்கு யாரைப் பழி சொல்வது சொல்லு?”

“இதெல்லாம் தேவை இல்லாத பேச்சு ராம்.”

“நீ இன்னைக்கு நந்தாவை நினைச்சு துடிக்கிற மாதிரி அன்னைக்கே இந்த குழந்தையோட தகப்பன் துடிச்சு இருப்பார் வனிதா. நீயாவது உன்னை பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறே ஆனா இந்த குழந்தை? இல்லம்மா நிதானமா யோசிச்சு பாரு நான் சொன்னது எல்லாம் புரியும்.”

                           அத்தியாயம் – 6

அதன்பின்னர் ராமும் வனிதாவும் வேலை நேரங்களில் சந்தித்துக் கொண்டாலும் குழந்தையை பற்றி பேசிக் கொள்ளவில்லை இருவரும். குழந்தை சிந்துவும் ராமிடமும் அவன் தாயாரிடமும் மெல்ல நெருங்க ஆரம்பித்து இருந்தாள்.

ஒரு நாள் ராமின் தாயாருக்கு உடல்நலமில்லாமல் போக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் வனிதாவிடம் குழந்தையை விட்டுட்டு சென்றனர்.                                                          

இருவரும் ஹாலின் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து கொண்டனர். சிந்துவிற்கு டி.வியில் கார்டூன் சானலை போட்டு விட்டு சிறிது ஸ்நாக்ஸ் எடுத்து கொடுத்து விட்டு இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

 சிந்துவும் வனிதாவை மருத்துவமனையில் பார்த்து பழகி இருந்ததால் அங்கிருக்க பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. மிகவும் இயல்பாக காலை நீட்டி போட்டுக் கொண்டு உட்கார்ந்து கார்டூன் பார்க்க ஆரம்பித்தாள். முதலில் வனிதா வைத்த ஸ்நேக்சை எடுக்கத் தயங்கினாலும் கார்டூனில்ல் ஒன்றி மெல்ல பக்கத்தில் இருந்த தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டுக் கொண்டே பார்க்க ஆரம்பித்தாள்.

சிந்துவை  சோபாவில் உட்கார வைத்து விட்டு வேறு பக்கம் திரும்பி அமர்ந்து கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக அவளை பார்க்க கூடாது என்று அமர்ந்து இருந்தாள் வனிதா. ஆனால் எல்லாம் சிறுது நேரமே கார்ட்டூனில் வரும் காட்சிகளில் லயித்து போய் அவ்வப்போது மெல்லிய குரலில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையை பார்க்கும் ஆவல் எழுந்தது வனிதாவிற்கு. திரும்பி பார்க்கும் எண்ணத்தை அடக்கி கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

அப்போது டாம் அண்ட் ஜெர்ரியை பார்த்து தன்னை அறியாமல் சிந்து சிறிது சத்தமாக  சிரிக்க அதுவரை இழுத்து பிடித்து இருந்த பிடிவாதத்தை விட்டுவிட்டு சிந்துவை ஆசை தீர பார்த்தாள். மனது பல நாட்களுக்கு பிறகு லேசானது போல் உணர்ந்தாள். நந்தா இறந்து ஒன்பது மாதங்களாக தனிமையிலே கழித்தவளுக்கு சிந்துவின் சிரிப்பு வீட்டையும் மனதையும் நிறைத்தது.

எழுந்து வந்து சிந்துவின் அருகில் அமர்ந்து அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அதன் மென்மையை ரசித்தாள். சிந்துவும் வனிதாவின் செயலுக்கு எதிர்ப்பு எதுவும் காட்டாமல் இன்னும் நன்றாக வனிதாவின் மேல் சாய்ந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தாள். கடந்த ஒன்பது மாதங்களாக மனதை வருத்திக் கொண்டிருந்த நந்தாவின் பிரிவை கூட இந்த சின்னஞ்சிறிய குழந்தையின் ஸ்பரிசம் மறக்க செய்து விட்டது என்று எண்ணி சிந்துவை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

 

ராம் திரும்பி வரும் ரெண்டு மணி நேரத்திற்குள் இருவரும் மிகவும் நெருங்கி இருந்தனர். வனிதாவின் மடியில் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டே இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

திரும்பி வந்த ராமிற்கும் அவன் தாயாருக்கும் அவர்கள் இருந்த நிலை மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

“அடடே என் செல்ல குட்டி அழகா உட்கார்ந்து ஆன்ட்டி கிட்ட சாப்பிட்டிட்டு இருக்காளே.”

‘ரொம்ப சமத்தா இருக்கா ஆன்ட்டி. இவ இருக்கிறது உங்களுக்கு ரொம்ப தெம்பா இருக்குமே.”

“ஆமாம் வனிதா! வீட்டில் குழந்தைகள் இருந்தால் சந்தோஷம்தான். ஆனா, என்ன என் வயசுக்கு இவ பின்னால ஓட முடியல.”

“சாப்பிட்டிட்டு போகலாம் ராம். நான் டிபன் செஞ்சு வச்சு இருக்கேன்.”

“இருக்கட்டும்மா வனிதா. நாங்க இன்னொரு நாளைக்கு வரோம்.”

“இல்லை ஆன்ட்டி சாப்பிட்டிட்டே போகலாம் எனக்குதான் இங்கே யாருமே வரது இல்லையே. தனியாவே இருந்து ரொம்ப அலுத்து போச்சு. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்திட்டு போங்க .”

அவள் இப்படி சொன்னதும் ராமும் அவன் தாயாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நானே கேட்கணும்னு நினைச்சேன் வனிதா. இப்படியே எத்தனை நாளைக்கு உன் வாழ்க்கையை தனிமையிலே கழிக்கப் போற.”

“என்னால நந்தாவை மறந்துட்டு இன்னொரு வாழ்க்கையை ஏற்றுக்க முடியாது ஆன்ட்டி.”

உனக்கு சின்ன வயசும்மா இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. என்னதான் நீ வீட்டை விட்டு வெளில வந்து மனிதர்களை பார்த்தாலும் வீட்டுக்குள்ள நம்மை சுற்றி நமக்காக சிந்திக்கிற மனிதர்கள் இருக்கணும். இல்லேனா ஒரு வெறுமை சூழ்ந்து வாழ்க்கையை வெறுத்து போய்டும். அனுபவப்பட்ட சொல்றேன்ம்மா புரிஞ்சுக்கோ.

“நீங்க சொல்ற நியாயங்கள் எல்லாம் புரிஞ்சாலும் என் மனசு சிலதை விட்டுக் கொடுக்க தயங்குது.”

“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதே.நீயும் ராமும் திருமணம் பண்ணிக்கிட்டா இந்த குழந்தைக்கும் சரி உனக்கும் அவனுக்கும் ஒரு அன்பான குடும்ப சூழ்நிலை அமையும்.”

“அம்மா என்ன சொல்றீங்க? இப்படி எல்லாம் பேசாதீங்க!

“ஏண்டா! சொன்னா என்ன தப்பு? உங்க ரெண்டு பேருக்கும் நடுல நல்ல ஒரு புரிதல் இருக்கு. இந்த குழந்தைக்காக நீங்க ரெண்டு பேரும் ஏன் சேர்ந்து வாழ கூடாது?”

“ஆன்ட்டி ராம் என் பிரெண்ட்.அது மட்டும் இல்லாம நந்தா இருந்த இடத்தில என்னால வேற யாரையும் நினைச்சு பார்க்க முடியாது.”

“ஒருத்தர் இடத்தை இன்னொருத்தர் பிடிக்க முடியாது வனிதா. அவரவர் இடம் அவரவருக்கு. அதுக்காக நந்தாவோட நினைவில் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும். இங்கே நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கான துணையை தேடல. திருமணதிற்கு ஆதாரம் தாம்பத்தியம் தான் இல்லேன்னு சொல்லல. ஆனா, இங்கே உங்க திருமணத்தோட ஆதாரம் இந்த குழந்தை. .உங்க ரெண்டு பேருக்குள்ள நல்லதொரு தோழமை இருக்கு. அது உங்க வாழ்க்கைக்கும் இந்த குழந்தையோட எதிர்காலத்திற்கும் நல்லதா அமையும். இந்த திருமணமே உங்களோட தனிமையை போக்கவும் குழந்தைக்காகவும்ன்னு நினைச்சு ஆரம்பிங்க பின்னாடி மாற்றங்கள் வருவது காலத்தின் போக்கில்.”

“இப்பவே முடிவு பண்ண சொல்லல பொறுமையா சாதக பாதகங்களை பத்தி யோசிங்க. ரெண்டு பேரும் மனம் விட்டு பேசுங்க. அப்புறம் முடிவெடுங்க.”

                                                                                  அத்தியாயம் – 7

வனிதா வீட்டிற்கு வந்து ராமின் தாயார் திருமணத்தை பேசிய பின்னர் இருவரும் அதை பற்றிய சிந்தனையிலேயே நாட்களை ஒட்டினர். நடுநடுவே ராம் வீட்டிற்கு சென்று சிந்துவையும் ராமின் தாயாரையும் பார்த்து வந்ததால் மூவருக்குள்ளும் நல்லதொரு பிடிப்பு வந்து இருந்தது. வனிதாவும் மெல்ல மெல்ல அந்த சூழ்நிலையை விரும்ப ஆரம்பித்து இருந்தாள்.

ராமின் தாயாரின் அன்பான கவனிப்பும் குழந்தையின் துறுதுறுப்பும் அவளை அந்த சூழ்நிலையில் ஒன்ற செய்தாலும், சிந்துவை பார்க்கும் போது நந்தாவை கடைசியாக ரத்த வெள்ளத்தில் பார்த்த நியாபகமே மனதில் வந்து அழுத்த சிந்துவின் குழந்தைத்தனத்தை ரசித்தாலும், அவளுடன் மனதளவில் நெருங்க முடியாமல் உள்ளுக்குள் தவித்தாள். அவளை அணைத்துக் கொள்ளும் போதெல்லாம் இன்று என் தனிமைக்கு காரணமானவனின் உடமை என்றே எண்ணியது. மூளைக்கு தன் எண்ணம் தவறானது என்று தெரிந்தாலும் மனதிற்கு அது புரியவில்லை. மனதிற்கும் மூளைக்கும் நடந்த போராட்டத்தில் மிகவும் களைத்து போனாள்.

அதனால் சில நாட்கள் ராமின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்தாள். ஆனால் சிறிது நாட்களே பழகி இருந்தாலும் சிந்துவை அவள் மனம் நாடியது. அதை கண்டு தன்னை தானே கடிந்து கொண்டாள். என்ன இது நெருங்கி போனால் விலகி விட துடிக்கிறேன் ஆனால் விலகி நின்றால் நெருங்கி நிற்க மனம் துடிக்கிறது. என்ன மாதிரி மனநிலை எனக்கு ஏன் இந்த குழப்பம்..

ஏன் நந்தா நீங்க என்னை விட்டு போனதால் தானே எனக்கு இந்த நிலைமை ஏன் என்னை விட்டு போனீங்க என்று கணவனின் போட்டோ முன்பு நின்று அழுதாள்.

அப்போது தாங்கள் காதலித்த காலத்தில் இரு வீட்டினரின் எதிர்ப்பை கண்டு பயந்து அழுத போது நந்தா சொன்னவை நியாபகம் வந்தது.”நமக்கு எது வேண்டும் என்பதில் நாம தெளிவா இருக்கணும். அப்படி ஒன்றை நினைச்சு                                                          

முடிவு பண்ணிடோம்னா அதில் இருந்து பின்வாங்க கூடாது. அது மாதிரி வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்களுக்கு அடுத்தவங்களை பழி போட்டு அதுக்காக அவங்களை ஒதுக்கிறது ரொம்ப தப்பான விஷயம்.”

அது நினைவு வந்ததும்ஏன் நந்தா இது தப்பில்லையா உங்க சாவுக்கு காரணமானவன் குழந்தை மேல எப்படி எனக்கு பாசம் வந்தது. அந்த குழந்தை மேல தப்பிலேன்னாலும் ஏனோ எனக்கு ரொம்ப தவிப்பா இருக்கு. என் மூளை அந்த குழந்தையை உன்னுடைய குழந்தையா நினைன்னு சொல்லுது. ஆனா, இந்த மனசு ஒரு மனசா இல்லாம ரெண்டு பக்கமும் கிடந்தது அடிச்சுக்குது சிந்துவை ஏற்க துடிக்குது ஒரு மனசு. இன்னொரு மனசு அந்த குழந்தையை ஏற்பதின் மூலம் உங்களுக்கு துரோகம் பண்றேன்னு சொல்லுது. இந்த போராட்டத்துக்கு முடிவே இல்லையா?

அவளின் இந்த கேள்விகளுக்கான பதில் அடுத்த நாள் கிடைத்தது. அன்று மாலை நிம்மதியை தேடி பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்து விட்டு அங்கே வெளிபிரகாரத்தில் போய் அமர்ந்தாள். அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி ஒரு ஜோடி அமர்ந்திருந்தனர். அவர்கள் பேசுவது வனிதாவின் காதில் விழுந்தது.

“அந்த குழந்தை என்ன பண்ணும் சொல்லு ராஜி. அதுவே அறியாத குழந்தை அது எப்படி இந்த தப்புக்கு காரணமாக முடியும். அது மட்டுமில்லை எந்த தகப்பனாவது தன் குழந்தையை கையில் வச்சு கிட்டு வேணும்னே அப்படி செய்வானா? அது அவன் குழந்தையை பாதிக்கும்னு தெரியாதா? அனாவசியமா சொல்லக் கூடாதுமா. அங்கே நடந்தது எதிர்பாராதது. அதுக்கு காரணம் அந்த குழந்தையின் தகப்பனோ குழந்தையோ கிடையாது.”

“ஆனா பாதிப்பு எனக்கு தானே.”

“ஏன்? அந்த குழந்தைக்கு பாதிப்பு இல்லை?”                                                                        

    “புரியுது கணேஷ் என்னால முடிஞ்ச வரை குழந்தையோட இயல்பா பழக ட்ரை பண்றேன்.”

அவர்கள் பேசியது தனக்காக மாதிரி தோன்றியது. நந்தாவே அவர்களிடம் பதிலை கொடுத்தனுப்பியது போல் உணர்ந்தாள். மனம் சற்று தெளிவடைந்தது. சிந்துவை ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று புரிந்தது. ஆனால் ராமுடனான திருமண வாழ்க்கை என்று கேள்வி எழுந்து மறைந்தது.உடனே சிந்துவை பார்க்கும் ஆவல் வந்து கோவிலில் இருந்து ராம் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் சிந்துவிடம் விளையாடிக் கொண்டிருந்து விட்டு வீட்டிற்கு வந்தாள்.

ராமின் மனமோ வனிதா தன் வாழ்க்கை துணையாக வருவதை விரும்பினாலும் முடிவு அவளே எடுக்கட்டும் அது எத்தகையதாக இருந்தாலும் என்று அமைதியாக இருந்தான். தன்னுடைய மனதில் உள்ளதை வெளியிட்டு அது அவளை காயப்படுத்திவிடுமோ என்று பயந்து அவளின் முடிவிற்காக காத்திருந்தான்.

வனிதாவின் முடிவிற்காக காத்திருந்து ரெண்டு மாதங்கள் முடிந்த நிலைமையில் அவளிடம் இருந்து போன் வந்தது.

“ராம் இன்னைக்கு சாயங்காலம் நீங்க ப்ரீயா? எதுக்கு கேட்குறேன்னா சிந்து குட்டியை கூப்பிட்டு பீச்க்கு போயிட்டு வரலாமா?”

“ம்ம்ம்..இப்போ வரை ஒன்னும் ப்ரோக்ராம் இல்லை.நீ கிளம்பி ரெடியா இரு நானும் சிந்துவும் வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறோம்.”

மாலை சிந்துவும் ராமும் வந்து வனிதாவை அழைத்துக் கொண்டு பீச்சிற்கு சென்றனர்.

சிந்துவை மணலில் விளையாட விட்டு விட்டு இருவரும் அமர்ந்து கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வனிதாவிற்கு அவனிடம் பேச வேண்டும் என்று  இருந்தாலும் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல்                                                                        

ஓயாமல் ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். மனமும் அந்த அலைகள் போல முட்டி மோதிக் கொண்டிருந்தது.

அவளின் முகத்தில் தெரிந்த மாற்றங்களில் இருந்தே அவளின் மன நிலையை உணர்ந்த ராம் அவள் கையை பற்றி “வனிதா! ரொம்ப எமோஷனலா ஆகாதே! நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே. அதுக்காக உன்னை வருத்திக்காதே” என்றான்.

“என் முடிவு எல்லோருக்கும் சாதகமான ஒன்று தான் ராம். ஆனா, எனக்கு சில விஷயங்கள் தெளிவுபடுத்திக்கணும். அதை எப்படி பேசுறதுன்னு தெரியாமதான் தவிச்சுகிட்டு இருக்கேன் .”

“எனக்கு உன்னுடைய எண்ணங்கள் என்னன்னு தெரியுது வனிதா . எதை பற்றி பேசத் தயங்குரே  என்று எனக்கு தெரியும். செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை . அதை தாண்டி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. நம்ம வாழ்க்கையை தொடங்க போறது சிந்து குட்டிக்காக தான். அதில எந்த மாற்றமும் இல்லை. அதை தவிர உனக்கொரு நல்ல துணையும் பாதுகாப்பையும் என்னால தர முடியும். அதே மாதிரி உன் கிட்டே இருந்து நான் எதிர்பார்க்கிறது சிந்துவுக்கு நீ கொடுக்க போகிற தாயன்பும் தோழமையும் மட்டுமே. இதில் காலப் போக்கில் மாற்றங்கள் வரலாம் வராமலும் போகலாம். ஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் உனக்கு முதலில் நல்ல தோழன் . என்னை நீ தாராளமா நம்பி உன் வாழ்க்கையை என்னோடு பகிர்ந்துக்கலாம்.”

“தேங்க்ஸ் !தேங்க்ஸ் ராம்! நான் என்னென்ன கேட்கணும்ன்னு நினைச்சானோ அதை எல்லாம் நான் கேட்காமலே புரிய வச்சுட்டீங்க.இது போதும் எனக்கு.  நான் சிந்துவை என் மகளா நினைக்க ஆரம்பிச்சு பல நாட்கள் ஆச்சு ராம். அவளுக்கு நான் நல்ல ஒரு தாயா இருப்பேன்.”

விபத்தின் மூலம் சொந்தங்களை இழந்த வனிதாவும் திருமணத்தின் மூலம் தன் உறவை  தொலைத்த ராமும் வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில்                                                                  இணைய அவர்களை இணைக்கும் பாலமாக அவர்களின் ஆகாய கங்கையாக சிந்து.

 

Advertisements