janagaraj

காலையிலிருந்தே வீடு பரப்பரப்பாக இருந்தது. ‘இந்த மே மாசம் வந்தால் இவளுக பண்ற அழும்புக்கு அளவே இல்லாம போச்சு’ என்று மனதிற்குள் ஒரு பக்கம் மகிழ்ச்சியுடனும், லேசான சலிப்புடனும் கடிந்து கொண்டிருந்தான் சரவணன்.

இன்று அவன் மனைவியும் குழந்தைகளும் மாமனார் வீட்டுக்கு செல்லுகிறார்கள். ஒரு பதினைந்து நாட்கள் எந்த தொந்திரவுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டான்.

“அக்ஷய் உன்னோட லீவ் ஹோம்வொர்க் பேப்பர்ஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கோ பத்திரமா. அப்புறம் அங்கே வந்திட்டு நான் எடுத்திட்டு வரலேன்னு சொல்லக் கூடாது” என்று கத்திக் கொண்டிருந்தாள் என் பிரிய மனைவி சாந்தி.

“சரிம்மா..சரிம்மா”என்று மிகவும் பவ்யமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தான் எனதருமை மகன் அக்ஷய்.

மூன்று வயது சிந்து கூட ஏதோ வேலை செய்வது போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. “பாப்பா! நில்லுங்க! அப்பாவை விட்டுட்டு ஊருக்குப் போகப் போறீங்களா?”.

“பெட்டி தூக்கி பாப்பா ட்ரைன்ல கூ..கூ…தாத்தா வீட்டுக்கு போய் ஜாலியா இக்கப் போகுது.”

“அப்பா வரட்டுமாடா ஊருக்கு?”

“நானாம்..அம்மா, பாப்பா..அண்ணா ஊருக்கு போவாம். அப்பா இங்கே”.

“பாருடா இந்த குட்டிக்கு இருக்க சாமர்த்தியத்தை” என்றவன் மகளை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றேன்.

அங்கே கட்டிலின் மீது பெட்டியை வைத்து பீரோவிலிருந்து துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன  அப்பா தோளில் ஏறியாச்சா?” என்றவள் “ஏங்க நீங்களும் லீவ் போட்டுட்டு எங்க கூட வரக் கூடாதா? நீங்க அங்கே வந்து ரொம்ப நாள் ஆச்சு” என்றாள்.

பெட்டியை சற்று நகர்த்தி வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து “ எனக்கு லீவ் கிடைக்காது சாந்தி. அப்படியே கிடைச்சாலும் என்னால உங்க வீட்டில் வந்து ப்ரீயா இருக்க முடியாது.”

“க்கும்..ஆனா ஊனா..இதை சொல்லிடுங்க. அப்போ லீவ் கிடைச்சா என்ன பண்ணுவீங்க?”

“நல்லா சாப்பிடுவேன். நிம்மதியா படுத்து தூங்குவேன் உங்க  தொந்திரவு எல்லாம் இல்லாம இருப்பேன். ஒரு லீவ் நாளாவது நிம்மதியா தூங்க விட்டீங்களா? எப்போ பாரு நை நைன்னு..அம்மா வீட்டுக்குப் போய் அம்மா கையால வேனுன்றதை செய்ய சொல்லி சாப்பிடுவேன்.”

அவன் பேசுவதை கேட்டு முகத்தை தோளில் இடித்தவள் “ நல்லா நிம்மதியா  இருங்க யார் வேணாம்ன்னு சொன்னது” என்றவள் பெட்டியின் மூடியை வேகமாக அடித்து சாத்தினாள்.

அதன்பின் வீட்டில் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது, என்று பல்வேறு விதமான அறிவுரைகளை அள்ளி வீசிவிட்டு மனைவி என்கிற புயல் கிளம்பியது. ரயிலில் ஏற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும் நடிகர் ஜனகராஜ் மாதிரியே என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று கத்தாத குறைக்கு கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்தேன்.

இரவு வெகு நேரம் வரையில் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளையும் ஒன்று விடாமல் பார்த்துவிட்டே தூங்கினேன். காலையில் அலாரம் வைக்க மறந்து போய் ஏழரை மணி வரை நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கி, முகத்தில் வெளிச்சம் பட அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தேன்.

அப்போதுதான் ஞாபகம் வந்தது மனைவி ஊருக்கு போயிருப்பது. “ஐயோ” என்றானது ‘காலையில் காப்பியிலிருந்து எல்லாத்துக்குமே சிங்கி அடிக்கனுமா’ என்று நினைத்ததுக் கொண்டு அவசரம் அவசரமாக வேலைகளை செய்தேன்.

 மனைவி ஊருக்கு சென்ற முதல்நாளே  இந்த கதியில் இருக்கிறதே எண்ணிக் கொண்டு அன்று மிகவும் லேட்டாக அலுவலகத்துக்குச் சென்றேன்.

ஒருவாரம் இதே நிலையில் கழிந்தது. முதல் இரண்டு நாட்களில் இருந்த உற்சாகம் மெல்ல மெல்ல குறைந்து மனைவியின் மீது கோபமே வந்தது. ‘வருஷா வருஷம் மே மாசம் வந்தா இது ஒன்னு வச்சிருக்கா! விட்டுட்டு அப்பன் வீட்டுக்கு ஓடிடுறது. இங்கே மனுஷன் கிடந்தது அவஸ்த்தைபடுவானேன்னு நினைக்கிறதேயில்லை” என்று கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தேன்.

அடுத்த இரு நாட்களில் வெளியில் சாப்பிட்ட உணவு வயிற்றில் பிரெஞ்சு புரட்சியை உண்டாக்கியது. வீட்டில் படுத்திருந்தவனுக்கு கடமுடவென்று வயிற்றில் சப்தம் எழுந்தது. அடுத்த ஒருமணி நேரத்திற்குள் உடலிளிருந்தவை அனைத்தும் வெளியேறி இருக்க களைத்துப் போய் படுத்தேன்.

தண்ணீர் வேண்டும் போலிருந்தது, எழுந்து சென்று எடுக்க முடியாமல் நா வறண்டு போனது. இதற்குமேல் தாங்க முடியாது என்றெண்ணி டாக்டரிடம் சென்றேன். அவரோ வெளியில் சாப்பிட்ட உணவினால்தான் இவ்வாறு வந்திருக்கிறது என்றும் முடிந்தவரை வீட்டில் சாப்பிட பாருங்கள் என்று கூறினார்.

வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் பேசிய வீராப்பு பேச்சுகள் நினைவில் வந்தது. அந்த நேரம் சாந்தியிடமிருந்து போன் வர ‘ சாத்தனை பத்தி நினைச்சா உடனே போன் பண்ணுது’ என்று நினைத்துக் கொண்டு அவளிடம் பேசத் தொடங்கினேன்.

“ என்னங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்னம்மா ராஜா மாதிரி இருக்கேன். முக்கியமா உங்க தொந்திரவு எல்லாம் இல்லாம. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?”என்றேன்.

“இந்த வாய்க் கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சலில்லை.எங்களுக்கென்ன நல்லா இருக்கோம். அப்புறம் நாங்க இன்னும் ஒரு நாலு நாள் கூட தங்கிட்டு வரவா? ஏன்னா இங்கே அத்தை பொண்ணோட வளைக்காப்பு இருக்கு. வந்ததுதான் வந்தே முடிச்சிட்டே போன்னு அம்மா சொல்றாங்க” என்றாள்.

மனைவி சீக்கிரம் வந்துவிட்டால் தேவலாம் என்று மனம் நினைத்தாலும் வீம்பு தடுத்தது. “ நீ இருந்தே முடிச்சிட்டு வா. நான் இன்னும் நாலு நாள் நிம்மதியா இருப்பேன்.”

‘அதானே மனசுக்குள்ள நான் சீக்கிரம் வரணும்னு நினைச்சாலும் வாய்விட்டு சொல்லத் தோணாதே. இந்த வறட்டு கௌரவதுக்கு குறைவில்லை’ என்று எண்ணிக் கொண்டவள் “சரிங்க அப்போ முடிச்சிட்டே வரேன்” என்று சொல்லி போனை வைத்தாள்.

‘இன்னும் நாலு நாள் லேட்டா ஆகுமா அவ வர, அதுக்குள்ளே நான் ஒருவழி ஆகிடுவேன் போலருக்கே’ என்று பெருமூச்சு விட்டேன்.

அடுத்த இரண்டு நாட்கள் நண்பன் சிவா வீட்டிலிருந்து உணவு வர உடல்நிலை சிறிது சீரானது. தனியே வீட்டிலிருந்து கொண்டு எப்பொழுதும் டிவி பார்ப்பது அலுத்துப் போனது. ‘இதுக்கு பேசாம அவ கூட ஊருக்கு போயிருக்கலாம்’ என்று அலுத்துக் கொண்டேன்.

மேலும் ஒருநாள் சென்றிருக்க அதற்கு மேல் தாங்காது என்றெண்ணி ‘அவ மட்டும் அவங்க அம்மா வீட்டில் போய் ஜாலியா இருந்திட்டு வரா. நாம மட்டும் ஏன் இங்கே தனியா கிடந்தது கஷ்டப்படனும். நானும் கிளம்பி போய் எங்க அம்மா கையால சாப்பிட்டிட்டு வரேன். அம்மாவுக்கு சொல்லாம போய் நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கணும்’ என்று முடிவு செய்து கிளம்பினேன்.

பேருந்தில் ஏறி உட்கார்ந்ததுமே ஆயிரம் கனவு. இப்படி தனியா ஊருக்குப் போய் ரொம்ப நாள் ஆகுது. அம்மாகிட்ட உட்கார்ந்து எல்லா கதையும் பேசணும். சின்னக் கத்திரிக்காய் போட்டு குழம்பு வைக்க சொல்லி சாப்பிடனும் என்று பல கனவுகளுடன் சென்றேன்.

ஆவலுடன் வீடு நோக்கி சென்றால் அங்கே பெரிய திண்டுக்கல் பூட்டாகத் தொங்கியது. ‘இந்த நேரத்துக்கு எங்கே போயிருப்பாங்க?’ என்று யோசித்து பக்கத்து வீட்டில் சென்று விசாரித்தேன்.

“உங்க பெரியம்மா பொண்ணு வீட்டில் ஒரு காரியமாம் அதுக்குத்தான் போயிருக்காங்க’ என்றார்.

மனசுக்குள் நொந்து போனேன். என்னடா இது ஆரம்பமே களை கட்டுதே என்று.

“ சாவி கொடுத்திட்டு போனாங்களா சார்?”

“உள்ள வாங்க சார். சாவி கொடுத்திட்டு போகல. அவங்க வரவரைக்கும் இங்கேயே இருங்க” என்றார்.

அம்மா அப்பா வருகிறவரை அங்கேயே காத்திருந்து அவர்கள் கொடுத்த காப்பி பலகாரத்தை எல்லாம் சாப்பிட்டு முடித்து, அவர் பேசியவற்றுக்கெல்லாம் தலையாட்டி களைத்துப் போன பின்பே வந்தார்கள்.

“என்னடா இது! சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறே” என்றாள் அம்மா.

“உன்னை பார்க்கணும் போல இருந்துச்சும்மா அதுதான் கிளம்பி வந்துட்டேன்.’

“சரி! சரி! அவனை இங்கேயே வச்சு கேள்வி கேட்காம கிளம்பு” என்றார் அப்பா.

வீட்டிற்குள் சென்றதுமே “ என்னடா இப்படி இளைச்சு போய் வந்திருக்கே! உன் பொண்டாட்டி சமைக்கிறதே இல்லையா?” என்றாள் அம்மா.

“அவ ஊருக்குப் போனதில் வெளில சாப்பிட்டு வயிறு கெட்டுப் போச்சும்மா.”

“அதானே! லீவ் விட்டா போதுமே. உடனே சீராட கிளம்பிடுவாளே.எதுடா புருஷன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவானேன்னு நினைக்கிறதே இல்லை.”

இதற்குமேல் விட்டால் இன்று முழுவது என் மனைவியைப் பற்றி குறை கூறியே நேரத்தை ஒட்டிவிடுவாள் என்று பயந்து “சரிம்மா எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. நான் போய் படுக்கிறேன்” என்று எப்போதும் நான் வந்தால் தங்கும் அறைக்குள் நுழைய சென்றேன்.

“தம்பி! அங்கே போகாதேப்பா. நாளைக்கு காலையில கவிதா மாப்பிள்ளை எல்லாம் வராங்க. அதனால உன் அறையைதான் ஒழிச்சு வச்சேன். நீ அப்பா கூட அந்த ரூமில் படுத்துக்கோ”.

அன்றிருந்த அசதியில் எங்கே படுத்தால் என்ன என்று எண்ணி அந்த அறையில் சென்று படுத்து விட்டேன். காலையில் அம்மாவின் சமையல் மணம் என்னை எழுப்பியது.

காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியில் வந்தேன். சமையலறையில் அம்மா ஒரு அஷ்டாவதானி போல வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

“ என்னமா இந்த நேரத்துக்கே சமையல் எல்லாம் ஆரம்பிச்சிட்டே” என்றேன்.

“ஆமாம்பா மாப்பிள்ளை வரார் இல்லை. சாதரணமா செய்ய முடியாதே. தம்பி அந்த அடுப்பில பாலை வச்சிருக்கேன். பக்கத்துல டிகாஷன் இருக்கு. கொஞ்சம் காப்பியை கலந்துகோப்பா.”

அடுப்பிலிருந்த பாலை எடுக்கும் போது லேசாக மேலே தெறிக்க வலி உயிர் போனது. பாலை டம்ளரில் ஊற்றி டிகாஷனை ஊற்றி காப்பியை கலந்து எடுத்துக் கொண்டு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தேன்.

கையில் பேப்பருடன் செய்தியைப் படித்துக் கொண்டே காப்பியை உறிஞ்ச முகம் அஷ்டக்கோணல் ஆனது. டிகாஷனை அதிகம் ஊற்றி இருப்பேன் போல.பேப்பரை படித்துக் கொண்டே வேறு வழியில்லாமல் நான் கலந்த திரவத்தை முழுங்கித் தொலைத்தேன்.

அப்பா என்னிடத்தில் பேப்பரில் படித்த செய்தியை பற்றி பேச இருவரும் மெய்மறந்து பேச ஆரம்பித்தோம்.

சிறிது நேரம் கழித்து அங்கே வந்த அம்மா “ என்னங்க இது! அவன்தான் புரியாம உட்கார்ந்திருக்கானா நீங்களும் இப்படி உட்கார்ந்திருந்தா என்ன செய்ய.மாப்பிள்ளையும் பொண்ணும் வந்துடுவாங்க. சீக்கிரம் போய் குளிங்க. சரவணா நீ போய் கொஞ்சம் சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கிட்டு வாப்பா. பசங்க அடிச்சிக்கும்”.

அம்மா சொன்னதும் அவசரம் அவசரமாக போய் குளித்துவிட்டு வந்து, அப்பாவிடம் பைக் சாவியை வாங்கிக் கொண்டு கடைக்கு சென்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன்.

நான் வந்து சிறிதுநேரத்திற்குள் கவிதாவும் மாப்பிள்ளையும் வந்திறங்கினார்கள்.

“ என்னம்மா இப்படி இளைச்சு போயிட்டியே” என்றாள் அம்மா கவிதாவிடம்.

நானோ சும்மா இல்லாமல் “ அம்மா! என்னம்மா நீங்க மாப்பிள்ளைதான் இளைச்சு போயிருக்கார்.கவி நல்ல குண்டாதான் இருக்கா. என்ன கவி மாப்பிள்ளைக்கு சமைச்சு போடுறியா இல்லையா?” என்றேன்.

அம்மா என்னை பார்த்து முறைத்துக் கொண்டே “ இவன் ஒருத்தன் விளையாட்டுத்தனமா பேசிகிட்டு” என்றவள் கவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

நானும் அப்பாவும் மரியாதைக்காக மாப்பிள்ளையிடம் சிறிது நேரம் பேசினோம். அப்புறம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருக்க, அவரோ ஓய்வெடுக்க வேண்டும் என்றார். அப்பா உடனே ஓடிச் சென்று என்னுடைய அறையில் இல்லாத தூசியை எல்லாம் தட்டி சுத்தப்படுத்திவிட்டு வந்தார்.

அவர் சென்று படுத்தும் கவிதாவின் பிள்ளைகள் இரெண்டும் என்னிடம் விளையாட ஆரம்பித்தது. இருவரையும் வாசலுக்கு அழைத்துச் சென்று விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த அம்மா “ சரவணா மாப்பிள்ளைக்கு காளான் பிரியாணி பிடிக்குமாம். நீ போய் காளான் வாங்கிட்டு வரியா?” என்றாள்.

அதைக் கேட்டதும் அதிர்ந்து விட்டேன். நிம்மதியா அம்மா கையால சாப்பிட்டு, நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தா சாப்பாட்டுக்கும் ஆப்பு அடிக்க மாப்பிள்ளை வந்துட்டாரே என்று நொந்து போனேன்.பின்ன மாப்பிள்ளைக்கு பிடித்த ஐட்டம் எல்லாம் சாப்பிட்டால் எனக்கு அலர்ஜியாகும். அதை அம்மாவிடம் சொன்னதும் “உனக்கு ரசம் வச்சு தரேன். இப்போத்தானே வயிறு சரியாகி இருக்கு. நீ அதை சாப்பிட்டா போதும்” என்றாள்.

‘சரி விதி வலியது! எங்கே போனாலும் நம்மை துரத்துது’ என்று எண்ணிக் கொண்டு காளான் வாங்க கிளம்பினேன். கவிதாவின் பிள்ளைகளும் கூடவே கிளம்பியது.

“ஜாக்கிரதையா கூட்டிட்டு போயிட்டு வாடா” என்று ஆயிரத்தெட்டு முறை சொல்லி அனுப்பினாள் அம்மா.

‘எனக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறன்பதை கவியின் பிள்ளைகளை பார்க்கும் போது மறந்தே போய் விடுவாள் அம்மா.’

கடைக்கு அழைத்துச் சென்று பிள்ளைகளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொண்டு, அம்மா சொன்னவற்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.

மதியம் தடபுடலாக சமையல் நடந்தது. டைனிங் டேபிளில் அமர்ந்து மாப்பிள்ளையுடன் சாப்பிடும் போது அவருக்கு பார்த்து பார்த்து பரிமாறப்பட்டது. நானோ வெறும் ரசம் சாதத்தை சாப்பிட, அதை பார்த்து கேட்ட மாப்பிள்ளைக்கு “அவனுக்கு உடம்பு இப்போத்தான் சரியாகி இருக்கு மாப்பிள்ளை.நீங்க சாப்பிடுங்க” என்று எனக்காக பேசினாள் அம்மா.

என்னன்ன சாப்பிட வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டு வந்ததென்ன, இப்போ சாப்பிட்டுக் கொண்டிருப்பதென்ன என்று மனம் சலித்துப் போனது.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து படுக்கப் போனதும், நான் மெல்ல சமையலறையில் இருந்த அம்மாவிடம் சென்று “ அம்மா மாப்பிள்ளை இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருப்பார்” என்று கேட்டேன்.

பாத்திரங்களை ஒழித்துப் போட்டுக் கொண்டிருந்த அம்மா எரிச்சலுடன் என்னைத் திரும்பி பார்த்து “ என்னடா இது கேள்வி! கவிதா காதில் விழுந்தா வருத்தப்படுவா. கல்யாணம் ஆனதில் இருந்து இப்போத்தான் இங்கே தங்குற மாதிரி வந்துருக்கார்னு நினைச்சு சந்தோஷப்பட்டுகிட்டு இருக்கேன்.ஏடாகூடமா பேசிகிட்டு” என்று கடுப்படித்தாள்.

“இல்லம்மா எனக்கு நாலுநாள் தான் லீவ். மாப்பிள்ளை எத்தனை நாளைக்கு இருப்பார்னு கேட்டேன்.”

“ஒருவாரம் இருப்பாருடா. நை..நைன்னு கேள்வி கேட்காம போடா. கவிதா என்னவோ நாம ரகசியம் பேசுறோம்ன்னு நினைச்சுக்குவா” என்றாள்.

“ஒருவாரமா! என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

ஒருவாரம் தங்கப் போகிறார் என்கிற அதிர்ச்சியிலேயே அப்பா இருந்த அறைக்குள் நுழைந்தால், அங்கே அப்பா பலத்த சத்தத்துடன் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சத்தத்தில் உறங்க முடியாது என்றெண்ணி பாயை எடுத்துக் கொண்டு ஹாலில் இருந்து சிறிய அறைக்குள் சென்று படுத்தேன்.

மனமோ என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று புலம்பித் தள்ளியது. பத்து  லீவ் போட்டு நிம்மிதியா இருக்க முடியாம என்ன நிலைமை என்று புலம்பியது. அவ மட்டும் அம்மா வீட்டுக்குப் போயிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்து , ஊர் சுத்திட்டு பளபளான்னு வருவா. நான் இப்போ இருக்கிற நிலைமையை பார்த்தா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி போய் நிற்பேன். இந்த வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம வீராப்பா வேற பேசினேன். என்னைப் பார்த்து நக்கலா சிரிக்கப் போறா என்று மனம் பிராண்டியது.

இப்படி பல யோசனைகளுடன் படுத்திருந்தவன் என்னையும் மீறி கண்ணயர்ந்தேன். அப்போது என்னை சுற்றி  குழந்தைகள் ஓடும் சத்தம் கேட்டது.கண்ணைக் கசக்கிக் கொண்டு என்ன என்று எழுந்து பார்க்கும் முன்பு ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு என் முகத்தின் மீது விழ, தலை வேகமாக உதட்டில்பட்டு உதடு கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது.

அதுவரை மனதிற்குள் இருந்த எரிச்சலிலும், உதட்டின் வலியிலும் கையில் கிடைத்த குழந்தையை இழுத்து பிடித்து நன்றாக முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தேன்.அது ‘ஒ’ வென்று அலற ஆரம்பித்தது.

அதற்குள் சப்தம் கேட்டு அம்மாவும், கவிதாவும் ஓடி வந்தார்கள்.

என் உதடு கிழிந்து ரத்தம் வருவது யார் கண்ணிலும் படவில்லை. கவிதாவின் பிள்ளையை தூக்கி சமாதானப்படுத்தி விசாரித்து, அது நான் அடித்தேன் என்று சொன்னதும் ஆரம்பமானது.

“ஏன் அண்ணே நான் வந்தது உனக்கு பிடிக்கலேன்னு தெரியும். அதுக்காக இப்படி என் புள்ளைய போட்டு அடிப்பியா நீ?” என்று அழ ஆரம்பித்தாள்.

இதற்கு அம்மாவும் ஒத்துப் பாட ஆரம்பிக்க, அப்போது அங்கே வந்த மாப்பிள்ளை சார் “ என்ன கவிதா இது, இப்படித்தான் உங்க வீட்டில் பிள்ளையை பார்த்துகுவீங்களா?இதுக்குத்தான் அங்கேயிருந்து எங்க வீட்டுக்குப் போகணும்னு குதிச்சுகிட்டு கிளம்பினியா?” என்று ஆட ஆரம்பித்தான்.

அம்மாவும், அப்பாவும் அவனிடம் சமாதானம் பேச, நானும் காலில் விழாத குறையாக அவனிடம் மன்றாடி இனி, ஒருதடவை இப்படி நடக்காது என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொண்ட பின்னரே அடங்கினான்.

அது முடிந்தபின் அம்மா ஒருபக்கமும், அப்பா ஒருபக்கம் தனித்தனியாக அட்வைஸ் செய்து காதில் ரத்தம் வரவழைத்தார்கள்.

அம்மா வீட்டிற்கு வந்து ஒருநாளில் மண்டை காய்ந்துபோய், ஏண்டா வந்தோம் என்றானது. அடுத்தநாள் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டிவிட்டு, மறுநாள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஊரை நோக்கி கிளம்பி விட்டேன்.

அம்மாவோ, அப்பாவோ யாரும் வாய் வார்த்தையாக கூட இன்னும் ரெண்டுநாள் இருந்துவிட்டு போயேன் என்று சொல்லவில்லை.

என் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்தான் நிம்மதியாக இருந்தது. அடுத்தநாள் காலை லீவும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று ஆபிசிற்கு கிளம்பினேன். அந்தநேரம் போன் பண்ணிய அம்மா “என்னடா சரவணா, என்கிட்ட கோவிச்சுகிட்டியா? நான் என்னடா செய்வேன். பொண்ணை கட்டிக் கொடுத்திட்டு அவ போற இடத்தில் நல்லா வாழனுமேன்னு ஒரு பயம்தான். உன்னை அப்புறமா சமாதனப்படுதிக்கலாம் ஆனா மாப்பிள்ளையை அப்படி பண்ண முடியுமா?” என்றாள்.

“சரிம்மா..விடு. என்ன நான் ரொம்பநாள் கழிச்சு உங்ககூட இருக்கலாம்னு வந்தேன்.இப்படி ஆகும்னு நினைக்கல. நான் ஒன்னும் கோவிச்சுக்கல. நீ கவலைப்படாதே.”

அம்மாவிடம் பேசிவிட்டு லீவ் முடியும்முன் ஒருநாள் முன்னதாகவே ஆபிஸ் சென்ற என்னை கிண்டலாக வரவேற்றான் என் நண்பன் கணேசன்.

“என்னடா அம்மா கையால சாப்பிட்டு சும்மா கும்முன்னு வருவேன்னு பார்த்தா, இளைச்சு போன அனுமார் மாதிரி வந்துருக்கே. உதடு வேற இவ்வளவு பெருசு வீங்கி இருக்கு” என்று கேட்டான்.

கான்டீனிற்கு அழைத்து சென்று நான் லீவ் போட்ட அன்றிலிருந்து நடந்தவைகளை சொல்ல அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து பிரண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“நானே நொந்து போய் வந்துருக்கேன். நீ வேற ஏண்டா சிரிக்கிற” என்றேன்.

“ராசா மே மாசம் அம்மா வீட்டுக்குப் போறது எல்லாம் நமக்கு ஒத்து வருமா?பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிட்டு அம்பாள் மெஸ்ல சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டோமா நாலு படத்தை பார்த்தமா நிம்மதியா தூங்கினோமான்னு இருக்கனும்டா” என்றான்.

“இனி, மறந்தும் மே மாசம் அம்மா வீட்டுக்கு போக நினைப்பேனா. மத்தநாளில் எப்போ வேணா போகலாம் ஆனா, இந்த மாமியார் வீட்டில் சீராட வருகிற மாப்பிள்ளை வரும் நேரத்தில் மட்டும் போகவே கூடாதுடா. நம்ம அம்மாவே நமக்கு எதிரி ஆகிப் போவாங்க” என்றேன்.

Advertisements