2646e389-1a88-4a9a-864a-bce7774d745awallpaper1

 

அல்லாருக்கும் வணக்கோம்…நான் தான் அல்டாப்பு அழகு ராஜா. ஏன்னா பாக்குறீங்க இவன் இன்னாடா திடீர்ன்னு இங்க வந்து குந்துகின்னு நம்மளாண்ட வணக்கோம் சொல்லிக்கிறான்னு பாக்குறீங்களா? அது ஒன்னும்மில்ல என்னோட காதல் கதைய  யாராண்டவாவது சொல்லிகினும்ன்னு ஆசை வந்துச்சு சரின்னு ரோசிச்சு உங்களாண்ட சொல்லிகிலாம்ன்னு முடிவு பண்ணிகின்னே.

 

எனுக்கு இந்த பொட்டில எப்புடி எலுதனும்ன்னு தெரில அதால நம்ம சென்னைல கீற வகீதா அக்கா கிட்ட போய் யக்கோவ் நான் கதைய சொல்றேன் நீ அந்தால உள்ள பொட்டில எலுதி போடுன்னேன். சரி சரி தம்பி உட்கார்ந்து சொல்லுன்னுச்சு அக்கா.

 

“யக்கா எனுக்கு நமீதான்னா ரொம்ப இஷ்டம்னேன்.”

“இரு இரு முதல்ல நமீதாவுக்கு எத்தினி எலுத்து வரும்ன்னுச்சு?”

 

“நான் பள்ளிகொடம் பக்கம் போனதில்லக்கா அப்படின்னேன்.”

 

“சரி விடு நீ மேல சொல்லுன்னுச்சு.”

 

“எனுக்கு நமீதா மாதிரி ஒரு பொண்ணை கட்டிகனும்ன்னு ஆசைன்னு சொன்னேன்.”

 

“நமீதாவோட எடை என்னான்னு தெரியுமா?”

 

“அதெல்லாம் தெரியாதுக்கா ஆனா அத்த எனுக்கு பிடிக்கும்ன்னேன்.”

 

“நமீதா மாதிரி செவத்த குட்டியா கட்டிகினும்ன்னு ஆசைன்னேன்.”

 

“இங்க பாரு அழகு நமீதாவோ இல்ல நமீதா மாதிரி உள்ள பொண்ணை கட்டிக்கனும்ன்னு ஆசை பட்டா மட்டும் போதாது அதுக்கு முன்னாடி எல்லா விஷயத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கணும். இப்போ பாரு நான் கேட்ட ரெண்டு கேள்விக்கு கூட உன்னால பதில் சொல்ல முடியல அப்புறம் எப்படி நீ நமீதாவை கட்ட முடியும் சொல்லு.”

 

‘இன்னாடா இது இந்த அக்கா கிட்டே என் கதைய தானே சொல்ல வந்தேன் இது ஏன் இத்தினி கேள்வி கேக்குது ஷ்..ஷ்..ஷப்பா என் காதல் கதியே மறந்து பூடும் போல கீதே…இப்போ இன்னாடா பண்ணுறது…பேசாம அக்கா கால்ல ஊந்து மன்னிச்சு வுட்ருக்கா நான் போய் பதில் கண்டு புச்சு கொண்டாறேன் அது பின்னாடி கதைய எலுதிக்கலாம்ன்னு சொல்லிபோட்டு எஸ் ஆயிட வேண்டியது தான்.’

 

“யக்கா நீ சொல்றது சரி தான் நான் போய் பதில் கொண்டாறேன் அப்பால எலுதிக்கலாம் .”

 

“சரி அடுத்த முறை வரும் போது என் கேள்விக்கெல்லாம் சரியான பதிலோட வந்தா நான் நல்லா எழுதி தரேன்.”

 

“அங்கே இருந்து துண்டை காணும் துணிய காணும்ன்னு வெளில வந்து ரோசிச்சேன் இனி ஆர வச்சு என் கதைய எளுத சொல்லலாம்ன்னு பார்தா. மும்பைல கீற சுசித்ராக்கா ஞாபகம் வந்துடுச்சு, அவங்களை எலுத சொல்லி கேக்கலாமின்னு போனை போட்டேன்.

 

“ஹலோ மே ஐ நோ ஹூ இஸ் ஸ்பீகிங் ?”

 

“யக்கோவ் நான் தான் கா அல்டாப்பு அழகு பேசுறேன்.நான் தான் பேசுறேன் உனுக்கு எப்படிக்கா தெரியும் எடுத்தவுடனே திட்டிகினு கீற.”

 

போனை கீழே வைத்து விட்டு ‘இன்னைக்கு யார் முகத்தில முழிச்சேன் காலையிலேயே இவன் கிட்ட மாட்டிகிட்டேனே.’

 

“அல்லோ அல்லோ யக்கா லைன்ல தான் கீறியா?”

 

‘இருக்கேன் இருக்கேன் சொல்லு எதுக்கு போன் பண்ணினே.”

 

‘ஒன்னியுமிள்ளக்கா என்னோட காதல் கதைய எலுதனும்ன்னு முடிவு பண்ணி வகீதாக்கா வூட்டுக்கு போனேன் அது கேள்வியா கேட்டு தொரத்தி வுட்ருச்சு…அதான் உன்னாண்ட கேக்கலாமின்னு போனை போட்டேன்.”

 

“என்னது காதல் கதையா? அதுவும் உன் கதை அதை நான் எழுதி தரணுமா? என்னை என்னன்னு நினைச்சே? அதுவும் காதல் கதை என்னை பார்த்து மரியாதையா போனை வச்சிட்டு ஓடி போய்டு.”

 

“அட என்னாங்கடா இது! இந்த அக்கா இப்படி பாயுது.யக்கா காதல் கதைக்கா நல்லா வரும் எலுதுக்கா.”

 

“இங்க பாரு அழகு கதைகளிலே எனக்கு பிடிக்காதது காதல். பக்கம் பக்கமா அதையே கொட்டி எழுதுவது. கதை  எழுதுறதை பத்தி பேசுறதா இருந்தா எனக்கு போன் பண்றதா இருந்தா பண்ணாத.”

 

“ஸ்…ஸ்…..அப்பா காதே வலிச்சு போச்சு இப்போ என்னா சொல்லிபுட்டேன்னு இந்த அக்கா இப்படி கோவப்படுது.”

 

இனி ஆர வச்சு எலுதுறதுன்னு ரோசனை பண்ணிட்டே ரோட்டிலே நடந்து போய்கினு இருக்கும் போது அங்கால இந்த கம்பூட்டர் பொட்டி நிறைய வச்சு கடை ஒன்னு இருக்குமே, அதான்பா ஊர் நாட்டுல உள்ளவன் கிட்டே எல்லாம் பேசுவாங்களே அந்த கடை தான். அத்த பாத்தவுடனே பேரிக்கால கீற தனு தங்கச்சி நனவு வந்துச்சு. சரி இந்த பொட்டி கடைல போய் அதாண்ட பேசி பாப்போம்ன்னு உள்ளே போனேன்.

 

கடைக்காரன்கிட்ட தங்கச்சி எதாவது பேசணும்னா இதுல பேசு என்று ஒரு சீட்டுல  எழுதி கொடுத்ததை காட்டினவுடனே ஒரு பொட்டி முன்னாடி உக்கார வச்சி கோயில கலர் பல்பு போட்ட மரம் கணக்கா என்னை சுத்தி ஒயரை போட்டு மண்டைல கொம்பை மாட்டி பேசுன்னு சொன்னான் . அந்த பொட்டில மணி அடிச்சுது.

 

“ஹலோ..”

 

“அல்லோ தங்கச்சி நான் அல்டாப்பு அழகு பேசுறேன்.”

 

“அண்ணே நீங்களான்னே நல்லா இருக்கீங்களா? பூங்கொடி அக்கா நல்லா இருக்கா?”

 

“அல்லாரும் நல்லா கீறோம்.மாப்பிளே , பாப்பா அல்லாம் நல்லா இருக்காங்களா?”

 

“ இருக்காங்கன்னே..ஐயோ!  இங்க பாப்பா தொல்லை பண்ணிட்டே இருக்கா.குட்டிமா ஓடாதடா.”

 

“தங்கச்சி என் காதல் கதைய எலுதலாமின்னு காலிலே இருந்து சுத்திகின்னு கீறேன் நீ எலுதி தரீயா?”

 

“ஷ்..ஆ….ஆ…ஐயோ அண்ணே பாப்பா சிஸ்டத்துல பால ஊத்திட்டா…ர்ர்ரர்ர்ர்…..டப்…”

 

“போச்சா..பாப்பா நீ கம்புட்டேர்ல மட்டும் பால ஊத்தல என் கதைக்கும்  ஊத்திட்டே.”

ஒரு கதையை எலுத வைக்க காலையிலே  இருந்து அலைஞ்சு நொந்து போய் ஒரு ஹோட்டல்குள்ளே போய் உக்காந்து புல் மீல்ஸ் உட்டுகட்டிட்டு மெதுவா நடந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கமா வந்தேன்.

 

திருவண்ணாமலை பஸ் அதோ அங்க நிக்குது வாங்கப்பா போலாம்ன்னு பேசிட்டு போனாங்க ரெண்டு பேர். அதை கேட்டதும் நம்ம ஏன் அதுல போய் சக்தி தங்கச்சிய கேக்க கூடாதுன்னு தோணிச்சு. :ஆனா அடுத்த நிமிஷமே அது என்னா சொல்லும்ன்னு நினைச்சேன். ஏண்டா இந்த மாதிரி மொக்கை கதை எல்லாம் காதல் கதைன்னு சொன்னா எனக்கு பிடிக்காதுன்னு தெரியுமில்லைன்னு சொல்லி கையில கிடச்சதை எடுத்து நடு மண்டைல போடும். ஏன் வம்பு கத எலுத சொல்ல போன இடத்துல பொணமாக்கிட்டா என்ன பண்ண..

 

சரி அடுத்தது ஆருகிட்டே சொல்லலாம்ன்னு யோச்சிகினு இருக்கும்போது திருச்சு பஸ் போனிச்சி அதுல ஓடி போய் ஏறிகின்னேன். நம்ம வித்யாக்கா இருக்க சொல்ல இன்னாத்துக்கு கவலை.ரா மூச்சுடும் தூங்கி விடிய காலையில அது வீட்டு வாசலிலே போய் உட்கார்ந்தேன். இந்த நேரத்துக்கு கதவை தட்டலாமா வேணாமான்னு ஒரே ரோசனை.விடிய கால நேரமில்ல, ஒரே பனி சரின்னு கட்டிகினு இருந்த லுங்கிய அவுத்து போத்திகின்னு ஒரு கேட் ஓரமா படுத்து போட்டேன். பஸ்ல வந்ததுல ஒரே அசதி நல்ல உறக்கம். திடீர்ன்னு ஒரு வாலி தண்ணி எம்மேல ஊத்திச்சு. வாரி சுருட்டிகின்னு எழுந்து பாத்தா நம்ம வித்யாக்கா காளி அவதாரம் எடுத்து நிக்கிது.

 

“ஏண்டா நீ படுக்கிறதுக்கு என் வீட்டு கேட் தான் கிடைச்சுதா ?”

 

நான் அசந்து போய் பாத்துகின்னே நின்னேன். மறுபடியும்  தண்ணிய எடுத்து எம் மூஞ்சி மேல ஊத்திச்சு. ’எனுக்கு அப்போ தான் தூக்கமே போய் எக்கோவ் என்ன நல்லா பாருக்கா! நான் தான் அல்டாப்பு! சென்னையில இருந்து உன்னைய பாக்க வந்த தம்பிய இப்படி குளிப்பாட்டி விட்டுடியேன்னேன்.”

 

“அட! அல்டாப்பா நீ எங்கேடா இந்த நேரத்துக்கு. நான் எவனோ ராப்பிச்சைக்காரன் படுத்து கிடக்கான்னு நினைச்சு தண்ணிய ஊத்துனேன்…..ஒரு வாலி தண்ணி வேஸ்ட்டா போச்சு போ.”

 

“எக்கா முதல்ல காபி தண்ணி கொடுக்கா.நேத்திலே இருந்து சுத்திகினே கீறேன் ஒரே பசியா கீது.”

 

“ஏண்டா உன் பொண்டாட்டி உன்னை வீட்டை விட்டே ஒட்டி விட்டுட்டாளா?”

 

“அதெல்லாம் இல்லக்கா அவளுக்கு ஒரு ஆசை.”

 

“இன்னுமாடா உங்க ஆசை முடியல. அவளுக்கு ஒன்னு உனக்கு ஒன்னு உங்க ஆத்தாளுக்கு ஒரு ஆசைன்னு ஏற்கனவே மூணாகி போச்சு.”

 

“இந்தா கா சும்மா என்னைய ஒட்டாத.நாங்க காதல் பண்ணினோமில்லை அந்த கதைய அல்லாரும் படிக்கிறாங்களே அந்த பொட்டியில எலுதி போட சொன்னா . அதுக்கு தான் நானும் சரி நம்ம அக்கா கிட்டே எல்லாம் கேக்கலாமின்னு போய் சுத்திகினு கீறேன் ஒருத்தரும் எழுதல நீயாவது எலுதி தறியாக்கா.”

 

“என்னது காதல் பண்ணுணீங்களா …ஹாஹா…என்னவோ கத்தரிக்காய் கறி பண்ண மாதிரி சொல்ற.ஏண்டா நீங்க பண்ணுனதுக்கு பேரு காதலா?”

“இன்னாக்கா நீயும் வகீதாக்கா மாதிரியே கேள்வி மேல கேள்வி கேட்டுகினு கீற.”

 

“சரி நீ சொல்லு உன் காதல் கதைல ரொமான்ஸ் இருந்துச்சா?”

 

“அப்படின்னா?”

 

“முதல் நாள் காதலை சொல்லி அடுத்த நாள் கட்டி புடிச்சு ஒரு பிரெஞ்சு கிஸ் அடிச்சு அடுத்த நாள் மேட்டர் முடிச்சு இருக்கணும்.”

 

“எக்கா இன்னமோ புச்சு புச்சா சொல்றே பிரெஞ்சு கிஸ்ன்றே மேட்டர்ன்றே.ஆமாம் மேட்டர்ன்னா இன்னாக்கா.”

 

“அடிங்க மூணு புள்ளை பெத்ததுக்கபுரம் மேட்டர் பத்தி கேக்குற..”

 

“ஒ…அதுவா….போ அக்கா எனுக்கு வெக்கம் வெக்கமா கீது…..எங்க கதைல அதெல்லாம் கிடையாதே .”

“அப்போ போ! உன் காதல் கதையை எழுதினா அது காதல் கதை என்று சொல்ல மாட்டாங்க, ஜனங்க ரசனை மாறுபட்டு பல காலம் ஆச்சு.”

 

“நீ ஒன்னு செய் நம்ம ரூபா கிட்ட கேளு எழுதி தராங்கலான்னு.”

 

“அது அல்லாரையும் ஓவரா நக்கல் அடிக்குமே அது எழுதுமா….”

 

“நீ சொல்ல போற கதைக்கு ரூபா போதும்.நீ என்னவோ ஓவர் பில்ட் அப் கொடுக்கிற உன் கதைய படிச்சிட்டு எத்தனை பேர் தலைவலியில் தவிக்க  போறாங்களோ?”

 

“அவங்க தவிச்சா நமக்கென்ன எலுதி போட்டுட்டு ஓடி போய்ட வேண்டியது தான். அது அந்த அக்கா பாடு படிக்கிறவங்க பாடு.”

 

அதன் பின்னாடி அங்கேயிருந்து கிளம்பி சென்னையில இறங்கி வூட்டுக்கு போக மனசேயில்லாம ஏர்போர்ட்டில கார்கோவுல  வேலை செய்ற  மாசானத்தை பார்க்க போனா, பாதி நைட் முழுக்க அங்கேயே பேசி பேசி ரெண்டு நாளா அலைஞ்சதில் உடம்பு ரொம்ப டயார்டா போச்சு. அதனால அவன்கிட்டேயே கேட்டு ஒரு ஓரத்தில படுத்து தூங்கிட்டேன்…தூக்கத்துல மனசு பூராவும் எம் பொண்டாட்டி ஆசைப்பட்டு எதுவும் என்னாண்ட கேட்டது இல்லை. எவளோ சொன்னாலாம் எப்படி எப்படியோ கத எலுதுறாங்க  உன்னோடதை எலுதி போடு நாலு பேர்க்கு தெரியுமுனு. அப்போல இருந்து மச்சான் நம்ம காதல் கதைய எதுலேயாவது எலுதி விடு அல்லாரும் படிச்சு சந்தோஷமாவட்டும்ன்னு தொணதொணப்பு. அவ சாதரணமா இருந்து கேட்டா பரவாயில்லை இப்போ எம் மூணாவது குட்டி அவ வயித்தில இருக்கு. மொத குட்டிக்கு நமீதா, ரெண்டாவது திரிஷா என்று பேர வைச்சு மூணாவது பொறக்க போறதுக்கு காசல்ன்னு வைக்கலாம் நினைச்சுகின்னு கீறோம்.இந்த மாதிரி இருக்கும் போது அவ ஆசைய நிறைவேத்தனும்ன்னு மனசு கிடந்து துடிக்குதே.

 

நல்ல தூக்கம் எம்புட்டு நேரம் தூங்குனேன்னு தெரில திடீர்ன்னு ஒரே சத்தம் யாரோ என்னை உலுக்குற மாதிரி இருந்துச்சு. எந்திரிச்சு பாக்குறேன் நிறைய சனம் நிக்குது .என்னைய சுத்தி பெரிய பெரிய அட்டை பொட்டியா கீது . அப்போ ஒரு வண்டி வந்து அங்க இருந்த சாமானை எல்லாம் ஏத்துச்சு. நானும் அந்த வண்டிக்குள்ள குதிச்சுபுட்டேன். வண்டி ஒரு பெரிய கட்டடத்துக்குள்ள போய் நின்னுச்சு ரெண்டு மூணு ஆளு வந்து அல்லா சாமானையும் இறக்குனாங்க. எனுக்கு ஒன்னியுமே புரில. அப்போ என்னை பாத்து மத்த ஆளுங்க ஏதோ சத்தம் போட்டாங்க. சரி நம்மளையும் அங்கே வேலை செய்யுறவன்னு நினைச்சு வேலை செய்ய சொல்றாங்க போலன்னு நானும் ரெண்டு பொட்டிய தூக்கி இறக்கி புட்டு அவங்க பின்னாடியே போயிட்டேன்.அப்பால அங்க வந்த ஒரு போலிஸ்கார் வந்து என்னவோ ஜாவ் ஜாவ்ன்னு சத்தம் போட்டாரு. அப்போ என் கூட வந்த ஆளுங்க எல்லாம்  அந்த போலீஸ்காரர் கிட்டே சாரின்னு சொல்ட்டு என்னைய புச்சு தள்ளிகினே வெளில வந்து என்னையா நீ நான் போய் எம்புட்டு நேரமாச்சு அதே இடத்திலையா நிப்பேன்னு சொல்லிட்டு சரி சரி நீ கிளம்புன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

 

எங்க பாத்தாலும் மண்ணா கீது. எனுக்கு தலயும் புரில காலும் புரில சரி என்ன தான் நடக்குதுன்னு பாப்போம் வெளில வந்தா பெரிய பெரிய ரோடு ஒரே காரா போய்கினு இருந்துது. நடந்துகினே இருந்தேன் நிறைய ஆளுங்க நம்ம ஊரு பொம்பளைங்க போடுவாங்களே நைட்டி அதுலேயே வெள்ளையில் போட்டுகினு இருந்தாங்க. அப்பால தான் எனுக்கு புரிஞ்சு போச்சு நாம ஏதோ ஷேக் ஊருக்கு வந்துகினோம் போல கீதுன்னு.

 

தண்ணி தாகமா அடிக்க ஆரம்பிச்சுது இன்னா செய்யுறதுன்னு தெரில. அப்போ ஒரு கார் வந்து பக்கத்துல நின்னுச்சு. அதுலே இருந்து ஒருத்தர் இறங்கினார். அவரை பாத்தா நம்ம ஊர்காரர் மாதிரி இருந்தார். அவர் பக்கத்துல ஒரு குட்டி பொண்ணு இறங்குச்சு. அத்த பாத்தாலே நம்ம ஊர் குட்டின்னு தெரிஞ்சுச்சு. அது கையில நம்ம ஊர் சரவணபவன் சாப்பாட்டு பை வேற.

 

“சார் நீங்க தமிலா சார் என்னை காப்பாத்துங்க சார்.”

 

“ஹலோ! ஹலோ யாருப்பா நீ? எதுக்கு இப்படி வந்து காலில் விழுற.”

 

“சார்! நான் இங்க எப்படியோ வந்துப்புட்டேன் சார் நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குது தண்ணி கூட கிடைக்கல.”

 

“உன் பேரென்ன நீ எப்படி பாஸ்போர்ட் விசா எல்லாம் இல்லாம இங்கே வந்த.?”

 

“என் பேரு அல்டாப்பு அழகு சென்னைல மெக்கானிக் கடை வச்சு இருக்கேன் சார். எப்புடி இங்கே வந்தேன்னே தெரில.இது இன்னா ஊரு சார்?”

 

“அது கூட தெரியாம எப்படி இங்கே வந்தேன்னே புரியல. அதுவும் உன்னை எப்படி உள்ளே விட்டாங்க?….இந்த ஊர் பேரு தோஹா.”

 

“இன்னாது தோசாவா.”

 

“தோசா இல்லப்பா தோஹா.”

 

“ஏன் சார் அக்காவுக்கு உடம்புக்கு மிடிலையா சாப்பாடு எல்லாம் வெளில வாங்கியார.”

 

லிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டே நீண்ட பெருமூச்சுடன்…”அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்கா” என்றார்.

 

லிப்ட் கதவு திறந்து வெளியில் வந்ததும் பார்த்தால் எதிரெதிர் திசையில் இரு கதவு இருந்தது. ஒரு கதவில் சாவியை போட்டு வீட்டை திறந்தார் “இவரு பொண்டாட்டி ஊருக்கு போய் இருக்கு போல அதான் மனுஷன் சோக கீதம் பாடிகினு கீறாரு. ஆனா, பொண்ணை இங்க விட்டுட்டு அந்த அக்கா எப்படி போச்சு….ஒன்னியும் புரியல…”

 

வீட்டை திறந்து உள்ளே போனதும் வீடு அமைதியாக இருந்தது. வரவேற்ப்பறையில் ஒரே ஒரு சிறிய லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

 

நட்ட நடு வீட்டில ஒரு மேசை மேல கம்பூட்டர் பொட்டிய வச்சிகினு அக்கா உட்கார்ந்துகின்னு இருந்துச்சு. சந்தோசத்துல தலகால் புரியலை, ரூபா கா சொகமா இருக்கீங்களா,எப்ப மெட்ராஸ்ல இருந்து வந்தீங்க, பார்த்தீங்களா என்னாண்ட கூட சொல்லாம வந்துட்டீங்க இல்ல..

 

“அல்லாரையும் ஒரு பார்வை திரும்பி பாத்து போட்டு மறுபடியும் அந்த பொட்டியவே உத்து உத்து பாத்துகினு இருந்துச்சு. எனுக்கு பொறுக்க முடில இன்னா சார் அக்காக்கு என்னா பிரச்சனன்னு கேட்டேன்.”

 

“ஒன்னும் இல்லப்பா. மொதல்ல நீ வந்து சாப்பிடு. அப்புறம் அந்த கதைய கேட்கலாம்ன்னு சொன்னாரு. இன்னடா இது! நான் கதை சொல்ல கிளம்பி எங்கே இருந்து எங்கையோ வந்துகினேன் இப்போ அவரு கதை சொல்றேன்னு சொல்றாரேன்னு நினைச்சுகின்னு. சாப்பிட ஆரம்பிச்சேன். அப்பப்போ அக்காவ பாத்தேன் . பொட்டிய கொஞ்சம் நேரம் பாக்கும் அப்புறம் விட்டத்தை பாக்கும் தலையை இப்படிக்கா அப்படிக்கா ஆட்டும் விரலை வச்சு காத்துல டிசைன் போடும் இப்படியே பண்ணிகினு இருந்துச்சு. எனுக்கு சத்தியமா புரிஞ்சு போச்சு ரூபா கா மெண்டலா ஆகி போச்சு , பாவம் இந்த சாரும் அந்த குட்டி பொண்ணும்ன்னு நினைச்சுகினேன்.

 

சாப்பிட்டு முடிச்சதும் அவரே ஆரம்பிச்சார். ’நீ எப்படிப்பா இங்கே வந்த அப்படின்னு.”

 

“நானும் என் கதையை யாரையாவது  எலுத வைக்கணும்ன்னு சொல்லி மொத நாள் பூர அலைஞ்சதை எல்லாம் சொல்லி அந்த அசதில பிளேன்ல ஏத்த வச்சு இருந்த பொட்டிங்க மேல தூங்க ஆரம்பிச்சேன். அப்படியே என்னையும் சேர்த்து ஏத்திபுட்டாங்க போல கீது சார் அதான் இங்கே வந்துட்டேன்னு சொன்னேன்.”

 

நான் இத்த சொல்லி முடிச்சதும் அப்பா பொண்ணு ரெண்டு பேரும் ஹேன்னு கத்துனாங்க. “அந்த குட்டி பொண்ணு அப்பா நாம தப்பிச்சோம். இந்த அங்கிள் நம்மள காப்பாத்திட்டங்கனு சொல்லி குதிச்சுது ”

 

“இன்னா சார் எனுக்கு ஒன்னியும் புரியலையே.”

 

“அழகு நீ எங்க சாப்பாட்டு பிரச்சனைக்கு முடிவு கொண்டு வந்துட்டே.ஒன்னும் புரியலையா..இரு சொல்றேன்.என் பொண்டாட்டி ஒரு கதை எழுத போறேன்னு சொல்லி உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சா. ஆனா ,அவளுக்கு யோசனையே வரல அதுக்காக எடுத்ததை முடிக்காம விட மாட்டேன்னு சொல்லி அங்கேயே உட்கார்ந்து இருக்கா. அதுவும் இப்படியே பித்து பிடிச்ச மாதிரி.நானும் என் பொண்ணு தினமும் ஹோட்டல வாங்கி தான் சாப்பிடுறோம்.இப்போ நீ வந்துட்டே இல்ல நீ உன் கதைய அவ கிட்ட சொல்லு அவ எழுதிடுவா .“

 

இப்படி தாங்க இந்த அக்கா கிட்டே என் கதைய கொடுத்து எழுத சொல்லிகிறேன். இது எப்படி எழுதுச்சுன்னு நீங்க அல்லாரும் என்னாண்ட வந்து சொல்லணும் சரியா.

                           அத்தியாயம் – 1

 

அடையாறு கெனால் பேங்க் ரோட்டில் மெக்கானிக் அல்டாப்பு அழகு என்றால் தெரியாதவர்களே இல்லை எனலாம்.அது அவனுடைய தொழிலுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பாகாது.அவனுடைய நடை உடை பாவனை அதிலும் அவன் பேச ஆரம்பித்தால் அதில் நக்கலும் நையாண்டியும் தான் இருக்கும்.ஆனால் அவன் பேச்சால் யாரும் இதுவரை காயப்பட்டதில்லை…அவனுடைய ஒரே லட்சியம் நமீதா மாதிரி ஒரு பொண்ணை கட்டுவது.

 

பல காலமாக பொறம்போக்கு நிலத்தில் அங்கிருந்த ஏரியாவாசிகள் கல் வீடு கட்டி ஜோராக குடித்தனம் நடத்தி வந்தனர். அந்த மாதிரி வீடுகளில் ஒன்று தான் நமது நாயகனின் வீடும்.

 

சிறிய சிறிய மூன்று அறைகளை கொண்ட வீடு. எட்டுக்கு பத்து என்ற அளவில் இருந்த அந்த அறையில் ஒரு ஓரம் சிறிய கட்டிலும் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. சிறிய அலமாரி ஒன்றும் இருந்தது. அந்த அறை நமது நாயகன் அழகுவின் அறை. கட்டிலின் மேலும் தரையிலும் ஆங்காங்கே லுங்கியும் உள்ளாடைகளும் இதர பிற பொருட்களும் இறைந்து கிடந்தது. அழகு குளித்து முடித்து இடுப்பில் துண்டுடன் வந்து ஊது பத்தியை ஏற்றி படங்களின் முன் வைத்து விட்டு கண் மூடி நின்று உருக்கமாக வேண்டிக் கொண்டிருந்தான்.

 

சுவற்றில் அவனின் தெய்வங்கள் அவனுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தது. இடுப்பை வளைத்து நெளித்து ஒரு கண் மூடி நின்ற காஜல் அகர்வாலும், மேலே ஒரு உள்ளாடை போன்ற டாப்சம் அரை டவுசர் போட்ட எமி ஜாக்சன் படமும் இவர்கள் இருவரின் படத்திற்கு நடுவே அவனின் இதய தெய்வம் நமிதா உதட்டை சுழித்து ‘மச்சான்’ என்று அழைப்பது போல உள்ள படமும் இருந்தது.

 

அவர்களின் முன் நின்ற அழகு மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தான். ‘நமீதா தாயே எப்படியாவது எனக்கு உன்ன மாதிரி பொண்ண கண்ணாலம் கட்டி குடு. ஆனா உடம்பு  இத்த தண்டி வேணாம் அப்பாலிக்கா நான் சம்பாதிக்கிற காசு முழுக்க அவ சாப்பாட்டுக்கே பூடும் என்று.

 

அவனின் வேண்டுதலை பார்த்து நமீதா சிரித்துக் கொண்டு இருந்தாள்.

 

தன் வேண்டுதலை முடித்துக் கொண்டு முக்கால் பேன்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு சட்டையை மாட்டி கண்ணாடி முன் நின்று தலையை சீவும் போது வெளியில் மணியின் குரல் கேட்டது. மணி அழகுவின் உதவியாளன். பதிமூன்று வயதாகிறது.

 

“அண்ணே! அண்ணே! சாவிய கொடுங்கன்னே கடைய தொரக்கனும்…..”

 

“ஏலே கிறுக்கா புள்ள சாமி கும்பிட சொல்லோ குறுக்க வராதேன்னு எத்தினி தபா சொல்றது.சாவி தானே வேணும் அத்த என்னாண்ட கேக்குறது.”

 

‘ஆமாம் அண்ணன் சாமியா கும்பிடுவாறு இருந்தாலும் இந்த ஆத்தாவுக்கு அண்ணாத்தை மேல இம்புட்டு நம்பிக்கை வேணாம்.’

 

“என்னாடா வாய்க்குள்ளேயே என்னத்தையோ சொல்லிகினு, அத்த மட்டும் வெளில சொல்லிரு மவனே எம் புள்ளையே தூக்கிப் போட்டு மிதிச்சிபுடுவான்.”

 

“இல்ல ஆத்தா, இன்னைக்கு எந்த கஸ்டமரு வாருவாங்கன்னு நினைச்சுகினு இருந்தேன்.”

 

“சரி! சரி! இந்தா சாவி முதல கடைய நல்லா பெருக்கி சுத்தம் பண்ணி சாமி படத்துக்கு பூவ போட்டு வையி.”

 

“ஆத்தா அண்ணாத்தை சாமி கும்பிட சொல்லோ உள்ளார போயி பார்த்து இருக்கீயா.”’

 

“அத்த நான் எங்க பாத்தேன்.அந்த அறைக்குள்ள என்னா வச்சிகினு இருக்கானோ பூட்டி பூட்டி வச்சி இருக்கான்.”

 

“எல்லா நடிகை படத்தையும் வச்சி கும்பிட்டுகின்னு இருக்காரு ஆத்தா.ஒருக்கா கதவு திறந்து கிடந்தப்ப நான் பாத்தேன்.”

 

“என்னாடா சொல்ற? அது எல்லா பசங்க அறையிலேயும் அப்படி தான் ஒட்டி வச்சிகினு இருப்பானுங்க.அதுக்காக சாமி கும்பிடுறதை போய் குறை சொல்லிகின்னு இருக்காத அது எல்லாம் எம் புள்ள தங்கம்.”

 

“நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.”

 

“ஏண்டா மணி நாஷ்டா துன்னியா?”

 

“இல்ல ஆத்தா நேத்து ராவுல அப்பாரு வந்து ஆத்தாவ அடிச்சு போட்டுடாரு.”

 

“இந்த சாராய கடையை மூடுங்கடான்னா எவன் கேக்குறான் வீட்டில குந்திகினு இருக்கிற பொம்பளைங்களுக்கு தான் பாடு.இருடா நாஷ்டா தரேன் துன்னுட்டு போ.”

 

“மணி நான் ராயபேட்டை வரிக்கும் போவனும் ஏதாவது வண்டி தேறுமா.அண்ணே வாரதுக்குள்ள சொல்லு..”

 

“ராசண்ணே வேணாமின்னே போன தபா கொடுத்ததுக்கே சாத்திபுட்டாறு என்னைய…மறுபடியுமா?”

 

“விடுடா! விடுடா! அடி வாங்குறது உனக்கு என்ன புச்சா..அண்ணாத்த கிட்ட ஏதாவது சால்சாப்பு சொல்லி சமாளி.”

 

“என்னாடா மணி நீ இன்னும் கடைய தொறக்கலியா?”

 

“இல்ல அண்ணே ஆத்தா நாஷ்டா தரேன்னுச்சு……என்றான் தலையை சொறிந்தபடி.”

 

“சரி நீ துன்னுட்டு வா ராசு சாவிய வாங்கிட்டு போய் கடைய தொறந்து சுத்தம் பண்ணி வை.”

 

“என்னாது நானா?”

 

“ஏன் தொரை இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டீங்களோ ?”

 

‘இல்ல அண்ணாத்த எனக்கு வண்ணாரபேட்டையில வேலை ஒன்னு இருக்கு…”

 

“ஏண்டா போற வேலை எங்கேன்னு கூட தெரியாம போவியாடா நீயு.அவனாண்ட ராயபேட்டைன்னே இப்போ என்னாண்ட வண்ணாரபேட்டைன்ற .”

 

“இப்போ என்னா உனக்கு கடைய சுத்தம் பண்ணனும் அதானே நான் பண்றேன் சாவிய கொடு.”

 

“உண்மைய சொன்னா எல்லா பயலும் பம்முறானுங்க.”

 

“அழகு அவன் போவட்டும் நீ உட்காரு உன்னாண்ட பேசணும்,”

 

“ஆத்தா நீ என்ன பேச போறேன்னு தெரியும் ராவுக்கு வேலை எல்லாம் முடிச்ச பொறவு பேசிக்கலாம்.”

 

“இந்தா நில்லு இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா கண்ணாலம் கட்டாம ஆட்டம் காட்டப் போற.”

 

“ஆத்தா நானா மாட்டேன்னு சொல்றேன் நான் சொன்ன மாதிரி பொண்ணை பாரு உடனே அங்கேயே தாலிய கட்டுறேன்.”

 

“ஏண்டா அறிவு கெட்டவனே நீ சொல்ற மாதிரி குட்டி எல்லாம் நம்ம சனத்துல இருக்காதுடா..அதெல்லாம் பெரியடத்து குட்டிங்கடா.”

 

“இதுக்கு தான் முதலியே சொல்லிகினு இருந்தேன் இப்போ பேச வேண்டாம்ன்னு வேலைய முடிச்சிகினு வரேன்.”

 

“டேய் நில்லுடா நம்ம பூங்கொடிக்கு என்னாடா குறைச்சல நல்லா கோயில் சிலை மாதிரி இருக்கா.”

 

“கோயில் சிலை மாதிரி இல்ல ஆத்தா தார் டின்னு மாதிரி இருக்கான்னு சொல்லு. உனக்கு நான் என்ன சொன்னேன் நமீதா மாதிரி கலர்ல வேணும்ன்னு கேட்டா நீ தார் கலர்ல உள்ளவள சொல்றீயே.”

 

“உன் வாய்க்கு வரவ கிட்ட நல்லா மொத்துபடுவே சொல்லிபுட்டேன்.”

 

“நமீதா மாதிரி இருந்தா மொத்து என்ன கத்தி குத்தே வாங்கலாம்….போ ஆத்தா போய் வேலைய பாரு.”

 

“காலையிலே பேசுற பேச்சை பாரு கத்தி குத்து அது இதுன்னு…சரி நீ கிளம்பு”.

                         

 

 

                                                                                 அத்தியாயம் – 2

கடையில் வந்து அமர்ந்தவனுக்கு வேலையில் நேரம் சென்றதே தெரியவில்லை.மதியம் வேலை குறைந்த நேரம் மணியை டீ வாங்கி வர சொல்லிவிட்டு அமர்ந்திருந்தான்.

 

“அண்ணே இந்தா டீயை குடி.”

 

“நீயும் எடுத்துக்கோடா “

 

“ஏண்ணே ஆத்தா அம்புட்டு சொல்லுது நீ கண்ணாலம் கட்டிகிட்டாதான் என்ன.”

“எங்கேடா நான் நினைக்கிற மாதிரி ஒரு குட்டியும் சிக்க மாட்டேனுதுடா.”

 

“நம்ம ஏரியால இருக்கிற பொண்ணுகள பிடிக்கலையா ?”

 

“ஹா….ஹா…..நீ வேறடா இதுகள கட்டுறதுக்கு பதிலா கார்ப்பரேஷன் கக்கூஸ்ல தூக்கு மாட்டிக்கலாம்டா.”

 

“ஹா..ஹா…ஏண்ணே இப்படி?”

 

“பின்னே என்னடா ஒரு பொண்ணை பார்த்தா மனசு புல் டேன்க் ரொப்புன வண்டி மாதிரி சும்மா பிச்சுகிட்டு ஈ.சி.ஆர் ரோட்டில போற மாதிரி போக வேண்டாமா.”

 

“நம்ம ஏரியா பொண்ணுகளை பார்த்தா அப்படி தோணலையாண்னே?”

 

‘எங்கேடா கல்லை கண்ட நாய் கணக்காவுல ஓடுது மனசு இவளுகளை கண்டால்.”

 

“ஏண்டா உன் வாய் அடங்கவே அடங்காதா? இந்த பேச்சு பேசிகினு இருக்கே.சரி! சரி! நானும் ராசுவும் பட்டினப்பாக்கம்  வார போயிட்டு வாரோம்.”

 

“இப்போ என்னாத்துக்கு அங்கே போறே ஆத்தா?”

 

“உனக்கு பொண்ணு கொடுன்னு கேக்கதான் போறேன்னு நினைச்சியாடா லூசுப் பயலே. ஆத்தாளுக்கு கூழ் ஊத்துறோம் இல்ல அதுக்கு வர சொல்லி சொல்ல தான்.”

 

“இந்தா! ஆத்தா எல்லாருக்கும் துணி எடுத்து குடு. துட்டு வேணுமா இல்லை வச்சி இருக்கியா.”

 

“அதெல்லாம் ஒன்னியும் வேணாம் நான் கிளம்பறேன். சோத்தை ஆக்கி வச்சு இருக்கேன் நீயும் இவனுமா துன்னுங்க.”

 

பட்டினப்பாக்கம்—

கன்னியம்மாள் அழகுவின் அத்தை . அவர் கணவன் முருகேசன் குடித்து குடித்தே குடும்பத்தை பாராமல் இரண்டு பெண்களுடன் கன்னியம்மாளை தனிமையில்  போராட விட்டு விட்டு உலகத்தை விட்டே சென்று விட்டான். கன்னியம்மாளோ வறுமையின் காரணமாகவும் கணவனிடம் பட்ட கஷ்டத்தின் காரணமாகவும் உடல் நிலை சீராக இல்லாமல் அவதி படுபவர். அதனால் சிறு வயதில் இருந்தே மூத்தவள் பூங்கொடி தான் ஒரு ஆண் பிள்ளை போல குடும்பத்தை தாங்கி நிற்கும் தூணாக இருக்கிறாள். பூங்கொடி சிறு வயதில் இருந்தே வாழ்க்கையின் எல்லாவிதமான போராட்டங்களை கண்டறிந்தவள் என்பதால் அவளுக்கு பெண்மையின் மென்மையான குணம் என்னவென்றே தெரியாது. அவள் தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ள தன்னை சுற்றி ஒரு முள் வேலியை எழுப்பிக் கொண்டாள். அதுவே அவளின் இயல்பாகி போனது. ஒரு சண்டி ராணியாகவே வலம் வந்தாள்.

 

 அழகுவின் அம்மா பொன்னம்மாவிற்கு பூங்கொடியை தன் மருமகளாக்கிக் கொண்டு அவர்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம். ஆனால் அழகோ பல கனவில் இருக்கிறான். அழகு பணக்காரன் இல்லை என்றாலும் வயிற்றுப் பசியை அறியாதவன். ஓரளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். இந்த இரு துருவங்களும் இணைய போராடும் பொன்னம்மாவிற்கு வெற்றி கிடைக்குமா???

 

“சுந்தரி நான் மார்கெட்டுக்கு போயாறேன்.நீ சோத்தை பொங்கி வச்சிட்டு துணியை தொவச்சி போடு.”

 

“அக்கா இன்னைக்காவது நான் சொன்னதை வாங்கியாரியா?”

 

“வியாபாரம் ஆரதை பொறுத்து தான் முடியும் சுந்தரி.”

 

“இல்லக்கா வெளியில போவையில வெறிக்க வெறிக்க பார்க்குறானுங்க பெருசா கிழிஞ்சு போச்சு ரவிக்கை.”

 

“பொம்பள சென்மம் பாவப்பட்ட சென்மம்டி.சரி இன்னைக்கு எப்படியாவது வாங்கியாறேன்.”

 

“பூங்கொடி எனக்கும் இருமல் மருந்து தீந்து போச்சு வாங்கியார முடியுமா?”

 

“ஆத்தா ஒரு ரெண்டு நாளு பொறுத்துக்கோ. சுந்தரிக்கு ரவிக்கைய வாங்கி கொடுத்துபுட்டு அப்புறம் உனக்கு மருந்து வாங்கியாறேன். “

 

“வயசு பொண்ணை சம்பாதிக்க விட்டு போட்டு படுத்து கிடக்கேனே என்ன செய்ய..”

 

குடிசைக்கு வெளியில் பூங்கொடிக்கு கடன் கொடுத்த சரோஜா கத்திக் கொண்டிருந்தாள்.

 

“அடியே சீமை செறுக்கி! கடன வாங்கிபுட்டு நல்லா மூணு வேளையும் மூக்கு பிடிக்க துண்ணுப்புட்டு வீட்டுக்குள்ளாரேயே உட்கார்ந்து இருந்தா எப்படி என் கடன அடைப்ப.”

 

கதவை திறந்து கொண்டு வெளியே வந்த பூங்கொடி ”இந்தா உன் கடன அடைக்கிறது எம் பாடு. அதுக்காக என் ஊட்டு முன்னாடி நீ ஒன்னும் காவ காக்க வேணாம் சொல்லிபுட்டேன்.”

 

“ஆமாம்டி! உனக்கு கடன கொடுத்துட்டு உம் பின்னாடி சுத்துறேன் பாரு எம் பொழைப்பு நாய் பொழைப்பா தான் போச்சு.”

“போக்கா போ போயி இன்னும் யாருக்கு கடன கொடுக்க முடியும்ன்னு பாரு .இங்கே நின்னு உம் பொழப்பையும் கெடுத்துகிட்டு எம் பொழப்பையும் கெடுக்குற.”

 

‘சுந்தரி கதவை சாத்திகிட்டு வேலை செய். தொரந்திருந்தா கண்ட நாயெல்லாம் ஊடு பூந்துரும்.”

 

ஐஸ்ஹவுஸ் பக்கம் சென்று ஒரு நூற்று அம்பது ரூபாய்க்கு மீன்களை வாங்கி கொண்டு மார்கெட்டிற்கு வந்தாள். தான் எப்பொழுதும் கடை போடும் இடத்தில் வந்து அமர்ந்து தன்னிடம் இருந்த மீன்களை தரம் பிரித்து அடுக்கி விட்டு வியாபாரத்தை கவனித்தாள். அன்று எதிர்பார்த்ததை விட ஓரளவு வியாபாரம் நன்றாக நடந்தது.

 

“ஏன்கா உன் அயித்தை மவனை கட்டிக்கிட்டு சோலிய பாக்க போவாம ஏன் இங்கே கிடந்தது சாவுற?”

 

“ஆமாம், அவன் என்னை பார்த்து மயங்கி ஈன்னு இளிச்சுகிட்டு கட்டிகிட போறான் பாரு. நீ வேற ஆவுற பொழைப்ப பாரு.”

 

“அதிலைக்கா ரெண்டு பொட்டைகுட்டிகள வச்சுகிட்டு ஆத்தா பயந்துகிட்டு கெடக்கு இல்லை.”

 

“அதுக்கு என்னாங்குற இப்போ நான் கண்ணாலம் கட்டிக்கிட்டு போயிட்டா எங்கா ஆத்தாளுக்கு நீ கஞ்சி ஊத்தப் போறியா ?”

 

“ஏன்க்கா நல்லா தானே போய்கிட்டு இருக்கு. ஏன் இப்படி வெடுக் வெடுக்குன்னு பேசிகினு இருக்கே?”

 

“பின்ன என்னாடா சொம்மா கண்ணாலத்தை பத்தியே பேசிக்கின்னு இருந்தா கடுப்பாகுது . சுந்தரிக்கு ஒருத்தனை பாத்து தள்ளி விட்டா போதும் .”

“உன் மச்சான உனக்கு பிடிக்கலயாக்கா?”

 

பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து அவன் மேல் போட்டு “டேய் அப்படியே ஓடி போய்டு. நானும் அப்போலே இருந்து பார்த்துகினே இருக்கேன் வியாபாரத்தை பார்க்காம என்னைய கேள்வி கேட்டுகுனு இருக்கே.மவனே இன்னொருக்கா கேளு மண்டைய உடைச்சு போடுவேன்.”

 

“ஏம்மா அயிரை என்னா விலை சொல்ற?”

 

“வா சாரே என் கிட்ட அயிரை வாங்கி குழம்பு வச்சீன்னா குழம்பு அள்ளிக்கும் சாரே விலையெல்லாம் பார்க்காத.”

 

“அதனால தான் உன் கிட்ட வந்து வாங்குறேன்.சரி சொல்லு விலையென்ன?”

 

“ஒன்னும் அதிகமில்ல சாரே….சும்மா எடுத்துப் போடு.”

 

“நீ எப்பவும் இங்க தான் வியாபாரம் பண்ணுவியா? உன் கிட்ட இருக்க மீனும் உன்னை மாதிரியே சும்மா கும்ம்ன்னு இருக்கு..”

 

“என்னா பேச்சு ராங்கா போகுது  நாங்க எல்லாம் வயத்து பாட்டுக்காக தான் வியாபாரம் பண்றோம் அதுக்காக எல்லாத்தையும் விட்டுடுவோம்ன்னு நினைக்காதே.”

 

“ஹாஹா..இந்த மாதிரி எத்தினி பேரை பார்த்து இருப்பேன்.சும்மா சொல்லு குட்டி உனக்கு எவ்வளவு வேணும்னு.”

 

“அடிங்க! யார் கிட்ட வந்து என்னா பேசுற. ஏழை பாழைன்னா என்னாத்த வேணாலும் பேசிபுடலாமா கத்தி எடுத்தேன் இங்கேயே கூறு போட்டுடுவேன் அப்படியே ஓடி போய்டு.”

 

‘என்னாக்கா ஏதும் பிரச்சனையா?”

 

“அது ஒன்னும் இல்லடா சாருக்கு மீனோட என்னைய ரொம்ப பிடிச்சு இருக்காம் அதான் மீனை விலை பேசாம என்னைய விலை பேசுறாரு.”

 

‘யோவ்! உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா வந்துட்டானுங்க சாவு கிராக்கிங்க.போயா அக்கா கையாள அடி வாங்காம போய் சேரு.”

 

“இந்தாமா உன்னை மாதிரி எத்தினி பேரை பார்த்து இருப்பேன்.சரி விடு, மீனை எடுத்து போடு நான் வந்த வேலைய முடிச்சிட்டு போறேன்.”

 

“வேற எங்கேயாவது போய் வாங்கிக்க. உன் காசுல சோறாக்கி துன்ரதை விட நாண்டு கிட்டு சாவலாம். யோவ் நீ ரொம்ப நேரம் இங்க நிக்கா.த உன் வீட்டுல வேற எவனாவது வியாபாரம் பண்ணிட்டு போய்ட போறான் சாக்கிரத.”

 

“லூசுப் பயலுங்க பொழப்ப கூட பாக்க விட மாட்டுறானுங்க” என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்டு மீனை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு போக கிளம்பினாள்.

                               அத்தியாயம் – 3

 

‘அக்கா கிளம்பிட்டியா! ஆத்தா உன்னை கூட்டியார சொன்னிச்சு அயித்தை வந்து இருக்குக்கா.”

 

“நீ ஏண்டி இங்கே வந்தே எத்தனை தபா சொன்னாலும் கேக்காத.”

“ஆத்தாளுக்கு கூழ் ஊத்துராங்கலாம் அதுக்கு வர சொல்லிட்டு போக தான் வந்து இருக்குக்கா.”

 

“ராசுவும் வந்து இருக்கானா? அவனை விட்டுபுட்டு நீ எப்படிடி வந்த?”

 

“போக்கா உனக்கு வேற வேலை இல்லை.”

 

“அட! இங்க பாருடா! என் தங்கச்சிக்கு வெட்கமெல்லாம் வருது மாமனை பார்த்தவுடனே.”

 

“அயித்தைக்கு உன்னை அழகு மாமாவுக்கு கட்டி வைக்கணும்ன்னு ஆத்தா கிட்டே சொல்லிட்டு இருந்திச்சுக்கா.”

 

“அடபோடி இவளே! அதுவே ஒரு லொடுக்கு பாண்டி. அதுக்கு இருக்கிற ஆசைக்கு அளவே இல்லை. அத்த போய் என்னைய கட்டிக்க சொல்றியே.நீ வேணா போ கூழ் ஊத்த நான் வரல அந்த லொடுக்கு பாண்டி வீட்டுக்கு.”

 

“ஆமா ரெண்டு பேரும் இப்படி பேசியே எங்க கன்னாலத்துல பினாயில ஊத்திடுவீங்க போல.அழகுமாமா என்னாடான்னா உன்னைய கண்ணாலம் பண்ண சொன்னதுக்கு தார் டின்னு மாதிரி இருக்கேன்னு வேணாம்ன்னு சொன்னிச்சாம் .”

 

“என்னாது தார் டின்னா? யாருடி சொன்னது அந்த ஆளு இப்படி சொன்னான்னு?”

 

“மச்சான் தான் சொன்னிச்சுக்கா.”

 

“இருந்தாலும் அந்த கஸ்மாலத்துக்கு இம்புட்டு வாய் கூடாது.அது வாயில சானிய கரைச்சு ஊத்தணும் பேசியபடியே வீட்டிற்குள் நுழைந்தவுடன் ”வா அயித்தே எப்படி இருக்கே?”

 

“நல்லா இருக்கேன் கண்ணு.இப்படி வா வந்து குந்து வேலை வேலைன்னு சுத்தி கருவாடட்டமா சுருங்கி போய் இருக்கே.”

 

“என்ன செய்ய அத்தே! உன்னை மாதிரி எங்க ஆத்தா புள்ளைய பெத்து வைக்கலியே.”

 

“சரி அத்த விடு! நம்ம ஆத்தாளுக்கு கூழ் ஊத்துறோம் அடுத்த வாரம் அல்லாருமா கிளம்பி அங்க வந்துடுங்க ரெண்டு நாள் முன்னாடியே.”

 

“வாரோம் ஆனா ரெண்டு நாள் முன்னாடி வந்து இன்னா செய்ய போறோம் அத்தே.”

 

“அட! என்னா அப்படி சொல்லிபுட்டே நம்ம அழகே கடைய சாத்திபுட்டு இருப்பானா பார்த்துக்கோயேன் . மொத ரெண்டு நாளு அம்மாவுக்கு அலங்காரம் பண்ணி பூசை பண்ணுவாங்க அன்னைக்கே கோடாங்கிய கூப்பிட்டு ஊருக்காக குறி கேப்பாங்க. மூணாவது நாளு தான் கூழ் ஊத்துவாங்க. அன்னிக்கு ராவுல அம்மா ஊர்வலம் வரும்.”

 

“மூணு நாளு உன் வீட்டில வந்து குந்துறது எல்லாம் வேலைக்கு ஆகாது மூணாவது நாள் வரோம்.”

 

‘அடியே இவளே சும்மா சலம்பிகினு இருக்காமா ஒழுங்கா மொத நாளே வந்து சேரு. அடியே சின்ன குட்டி அக்காளையும் ஆத்தாளையும் இட்டார வேண்டியது உன் பொறுப்பு சொல்லிபுட்டேன்.”

 

“அதெல்லாம் சரி அத்தே இது ரெண்டுக்கும் எப்போ கண்ணாலம் பண்ணி வைக்கப் போறே. பாரு ரெண்டும் நம்ப முன்னாடியே ரயிலு ஒட்டினுகினு இருக்குதுங்க..”

 

“அது உன் கையிலேயும் அழகு கையில தான் இருக்கு கண்ணு. அவன் சொம்மா வாய் பேசுவான தவிர நல்லவன் தான் கண்ணு. நீ தான் அவன வழிக்கு கொண்டாரணும்.”

 

“இன்னா அத்தே பேசுறே அதுக்கு புச்ச பொண்ணா பாத்து கட்டி வைக்கலாம் இல்லை அத்த விட்டு போட்டு என் கிட்ட சொன்னா நான் என்ன செய்ய.”

 

“அது ஏதோ பொண்ணு ஒன்னு சொன்னானே. அந்த பேர் கூட என் வாயில நுழையல. சினிமால பார்க்கிற மாதிரி எல்லாம் பொண்ணு வேணுமின்னா நான் எங்க போவேன். அந்த பொண்ணு இவனை பார்த்தா ஓடி பூடாது. வேலைய செஞ்சு புட்டு கிரீஸ் சட்டையோட  நிக்கிற இவனை போய் அந்த பொண்ணு கட்டிக்குமா?”

 

“அது உனக்குப் புரியுது. உம்புள்ளைக்கு தெரியலையே இன்னா செய்யுறது.”

 

“அதெங்கே அவனுக்கு தெரியுது. எவளாவது வெள்ளை தோளா இருந்தா அவ பின்னாடியே போய்டுவான் போல இருக்கு.”

 

“சரி! சரி! நாங்க வாரோம். நெத்திலி போட்டு குழம்பு வைக்கிறேன் துன்னுட்டு போங்க,.”

 

“ஏலே ராசு சொம்மா அவ மூஞ்சிய பார்த்துகிட்டு உட்காராம வாங்கிகினு வந்த துணிய கொடுப்பியா?”

 

“எதுக்கு அயித்தே துணி எல்லாம் வாங்கியாந்தே, உன் வீட்டுக்கு வர சொல்ல இப்படி கிழிஞ்ச துணியோட வர வேணாமின்னா?”

 

“ஏண்டி இவளே இப்படி கொடுக்கா கொட்டுற உங்க அயித்தை நானு. உங்களுக்கு ஒரு துணி எடுத்து கொடுக்கிறதுல கூட நொட்டு நொள்ளை பேசணுமா?”

 

“அவ கிடக்கா பொன்னு. நீ ஒன்னும் மனசில வச்சிக்காதே.அவ வாய் தான் உனக்கு தெரியுமே.”

 

“அதனால் தான் எம்புள்ளைக்கும் இந்த வாயாடிக்கும் கட்டி வச்சா சரியா இருக்குமின்னு தோணுது.”

 

“ஏன் பூங்கொடி? உனுக்கு அண்ணாத்தைய புடிக்கும் தானே.உண்மைய சொல்லு.”

 

“புடிக்கும் தான். ஆனா அதுக்கு என்னைய புடிக்கலையே அப்புறம் என்னா செய்ய.”

 

“தா! அது அப்படித்தான் சீன் காட்டினுகினு இருக்கும். அது ஆளு பாக்கத்தான் உதார் விட்டுகினு திரியும் நீ கண்டுக்காம பிடிச்சு போடு.”

 

“இந்தா பேச்சை பாரு அது இன்னா மீனா புச்சு போட……..”

 

“பூங்கொடி நான் சொன்னா மாதிரி பண்ணிகின்னேன்னு வையி எங்க அண்ணாத்தை உம் பின்னாடி தான் சுத்தும்.”

 

“அத்த அங்க வாரப்ப பாத்துக்கலாம் விடு ராசு.”

 

நாட்கள் ஓடியது ஒரு பக்கம் வேளையில் மும்மரமாக இருந்தாலும் தனக்கான நமீதா  தேடலிலும் ஈடுப்படிருந்தான் அழகு. அதற்கு தூணாக நின்று உதவிக் கொண்டிருந்தது மணி என்னும் பெரியவர். சில பல  ஐடியாக்களை கொடுத்து உதவி என்ற பெயரில் அவனை உருப்புடாம ஆக்கினான்.

 

“அண்ணாத்தே புதுபேட்டைக்கு சாமான் வாங்க போவையில வண்டியில போவாம பஸ்ஸில போய் பாரு. பஸ்ஸில நிறைய வெள்ளை பிகருங்க வரும் அத்த பாத்து கரெக்ட் பண்ணிகிலாம் இல்ல.”

 

“ஏண்டா மணி உனக்கு எத்தினி நாளா என் பேருல காண்டு என்னைய போட்டு பார்க்க முடிவு பண்ணி இப்படி ஒரு ஐடியாவ கொடுக்கிற.”

 

“இல்ல அண்ணாத்தே உனுக்கு நல்ல தானே ஐடியா கொடுக்கிறேன் இப்படி சொல்லிகிரியே.”

 

“போடா இவனே உன்னை நம்பி போனேன்னு வையி ஊர்ல உள்ளவன் எல்லாம் எம் முதுவுல தாளம் போட்டுடுவான். “

 

“அப்போ எப்படி தானே அண்ணிய கண்டு பிடிக்கிறதாம்.”

 

“வருவாடா அவளே என்னத் தேடி வருவா. அப்படிக்கா வரும்போது புது என்ஜினை போட்ட வண்டி கணக்கா மனச்சு ஜிவ்வுன்னு பறக்கும். அப்பால அவள கரீட் பண்ணி கண்ணாலம் கட்டினேன் வையி அல்லா சனமும் வாய பொளந்துக்கும் இவனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியான்னு.”

 

“சரி தான் அண்ணாத்தே நீயும் அப்பப்போ உண்மிய தான் பேசிக்கிற.”

 

“சரி நீ இப்படியே வேலையை செய்யாம என்ன டபாய்ச்சிகினு கீறே போய் நாலாம் நம்பர் ஸ்பானரை எடுத்தாந்து குடு.”

                                                                        அத்தியாயம் – 4                

 

ஒரு வாரம் போன நிலையில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக வானம் இருட்டிக் கொண்டு மேக மூட்டத்துடன் இருந்தது. கருகருவென்று குமியத் தொடங்கிய மேகங்கள் நகரத்தை அப்படியே இருட்டாகியது. மக்கள் மழை வந்து விடுமோ என்று அஞ்சி நடையை எட்டி போட்டு மழையை முந்திக் கொண்டு வீடு போய் சேர்ந்து விட முயன்றனர்.  மழையோ என்னில் நனையாமல் வீடு போய் சேர்ந்து விட முடியுமா என்று சவால் விட்டு பெரிய பெரிய தூறலாக போட்டு மக்களை நனைக்க ஆரம்பித்தது. முதலில் மெதுவாக தொடங்கிய தூரல் சிறிது நேரத்தில் அடை மழையாக பெய்ய ஆரம்பித்தது. நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே இருந்த கடைகளிலும் ஒதுக்கமான இடத்திலும் மழையில் நனையாமல் பாதுக்காப்பாக நின்று கொண்டனர்.

 

அழகுவின் கடையிலும் ஒரு சிலர் வந்து ஒதுங்கினர். ரெண்டு மூன்று பள்ளிக் குழந்தைகளும் , ஒரு பாட்டியும் , கல்லூரி பெண் ஒருத்தியும் கடை ஓரமாக நின்றனர்.  அவர்களை பார்த்த அழகு இன்னும் உள்ளே வந்து நின்று கொள்ளும் படி கூறி விட்டு தன் வேலையை பார்க்கலானான். தன் வேலையில் மூழ்கி இருந்தவன் தன்னை யாரோ கவனிப்பது போல உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான். அந்த கல்லூரி பெண் அவனையே வைத்த கண் வாங்காமல் குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அழகுவின் மனதில் மணி அடிக்க ஆரம்பித்தது. மெல்ல அந்த பெண்ணை ஆராய ஆரம்பித்தான். நமீதா  மாதிரி பூசிய உடல் வாகு இல்லை என்றாலும் நிறம் மட்டும் ஓரளவு அவன் எதிர்பார்த்த நிறமாக இருந்தது. பெரிதாக அழகு இல்லை என்றாலும் நமக்கு நிறம் தானே முக்கியம் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு தானும் அவளை நோட்டமிட ஆரம்பித்தான். இந்த பெண்ணை இதுவரை இந்த பக்கம் பார்த்தது இல்லையே யாராய் இருக்கும் என்று மனதிற்குள்ளேயே அவளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான்.

 

அந்த பெண்ணும் முதலில் அவன் பார்வையை கண்டு கொள்ளாமல் நின்றவள் பின்னர் சிறிது வெட்கத்துடன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அவளின் அந்த வெட்கம் அதிலும் தன் பார்வையில் முகம் சிவந்தவளை கண்டு “ஷாக் அப்சொர்பேர் நல்லா உள்ள வண்டி மேடு பள்ளத்தில் போற மாதிரி கீதே என்று நினைத்தான்.”

 

அந்த நேரம் மணி ஷெட்டில் இருந்த ரேடியோவை போட….

             உசுரே போகுது உசுரே போகுது

             உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில

           ஒ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்

            மனசே தாடி என் மணிக் குயிலே….

என்று பாட அழகுவின் மனமோ குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவளோ இவன் பக்கம் திரும்பாமல் மழையை பார்த்துக் கொண்டே நின்றாள்.

 

சிறிது நேரத்தில் மழை நிற்கவும் அவள் இவனை திரும்பி ஒரு பார்வை பார்த்து லேசாக சிரித்து விட்டு ஓடி விட்டாள்.

 

இதை எல்லாம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த மணிப் பயல் ”அண்ணே என்னான்னே நடக்குது. அந்த அக்கா உன்ன பார்த்து சிரிச்சிட்டு போவுது…..”

 

“எனுக்கும் அதாண்டா புரில. அதாருடா புச்சா இருக்கு குட்டி இது வரிக்கும் நம்ப இங்க பார்த்ததே இல்லையே.”

 

“எனுக்கு எப்டி தெரியும் அண்ணாத்தே. நானும் உன் கூட தான கடையில் இருக்கேன்.”

 

“சொம்மா சொல்லுடா உனுக்கு தெரியாம புது ஆளு வர முடியுமா.”

 

“அதுவா ஜோசியர் வுடு இருக்குதே அங்க தான் புச்சா வந்து இருக்கு. அப்பாரு ஹார்பர்ல வேலை செஞ்சுகின்னு இருக்காரு. இது ஒரே பொண்ணு காலேசுல படிக்கிதாம்.”

 

“பேரு என்னாடா?”

 

‘மாலதியாம் அண்ணே.”

 

“இன்னாடா இது, அவங்க அப்பனுக்கு அறிவே இல்ல இப்படி ஒரு பேர வச்சி இருக்கானே. திரிஷா, நமீதா , ஹன்சிகான்னு எத்தினி பேரு இருக்கு அத்த விட்டு போட்டு மாலதி.”

 

“கண்ணாலத்துக்கு அப்புறம் நீ மாத்தி வச்சிடுன்னே.”

 

‘ஏண்டா இது மடியுன்ர.”

 

‘மடிஞ்சுடும்ன்னே.”

 

“வந்தேன்னா தொடப்பகட்டையால ரெண்டு சாத்து சாத்தி நிஜார உருவி புடுவேன் ராஸ்கோலு. நீதான் உருப்புடாம பேசுறேன்னு பாத்தா சின்ன பயலையும் கெடுத்துகினு.”

 

“ஆத்தா டீ போட்டு குடேன்.”

 

“எதுக்கு கையில் டீய வச்சிகினு ரோட்டில போற வார பொண்ணை மடியுமா மடியாதன்னு பாக்கவா. ஏலே மணிப் பயலே என் கையில கண்டி சிக்குன மவனே நொறுக்கி புடுவேன் ஓடி பூடு.”

 

அன்று ஆரம்பித்த பார்வை பரிமாற்றம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்தது. மாலதி தினமும் கல்லூரிக்கு செல்லும் போது அழகுவை பார்த்து ஒரு க்ளுக் சிரிப்பை உதிர்த்து விட்டு சென்று கொண்டிருந்தாள். அதில் விழுந்தவன் முற்றிலுமாக மந்திரித்து விட்டவன் போல் அலைந்து கொண்டிருந்தான்.

 

காலையில் எழுந்ததில் இருந்து மாலதி புராணம் தான்.

 

“ஆத்தா நமக்கு அந்த மாதிரி செவத்த குட்டி எல்லாம் கிடைக்காதுன்னு சொன்னியே இப்போ பாத்தியா அவளே என்ன தேடி வந்துட்டா.”

 

அவன் செய்த அலம்பலில் வீட்டில் இருந்தவர்கள் என்று அவன் தங்களிடம் மாட்டுவான் என்று காத்திருந்தார்கள்.

 

தினமும் காலை நேரம் சுப்ரமணியபுரம் காட்சிகள் ஓடியது. இவன் தன் கடையில் இருந்து அவளை பார்க்க அவள் நடந்து போகையில் இவனை திரும்பி பார்த்து சிரிக்க,மணி இவர்களை பார்த்துக் கொண்டு வாயை பிளந்தபடி நிற்க.

       கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

       என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென

                  சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை

                  தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்….

 

இப்படி அவளிடம் பேசாமலேயே தன் காதலை நெஞ்சுக்குள் பொத்தி வைத்து மகிழ்ந்து கொண்டிருந்தான். அதற்கு ஒரு நாள் மிகப் பெரிய ஆப்பாக வந்தது.

 

‘அண்ணே எத்தினி நாளிக்கு பார்த்து கிட்டே இருக்க போறீங்க. அண்ணி கிட்டே போய் உங்க லவ்வ சொல்லுங்க.”

 

‘சின்னப் பயலே உன்ன தாண்டா முதல்ல விரட்டி விடனும். அவனே பைத்தியக்காரன் மாதிரி சுத்திகினு இருக்கான். நீ இன்னமும் சுத்தி விடுறியா.”

 

“இப்போலாம் என்னப் பார்த்தா பைத்தியகாரனாட்டமாத் தான் தெரியும் என் நமீதா  என்னாண்ட லவ் சொன்ன பொறவு இருக்கு உங்களுக்கெல்லாம் கச்சேரி.”

 

“ஆமாம் பெரிய நமீதா …”

‘தோ வரா, நான் போய் சொல்றேன் பாத்துக்கோ. அவ உடனே என்னைய பாத்து வெட்கப்படுவா பாரு.அத்த பாத்து கத்துக்கோ வெட்க்கமின்னா என்னான்னு என்று சொல்லி விட்டு மாலதியை நோக்கி சென்றான்.

 

“இந்தா மாலதி உன்னாண்ட பேசனும் கொஞ்சம் நில்லு.”

 

மாலதி என்ற அவன் அழைப்பில் திடுக்கிட்டு நின்று அவனை திரும்பி பார்த்தவளின் பார்வையில் காதலோ வெட்கமோ இல்லை. அதற்கு பதிலாக பயமே இருந்தது.”நீங்க எதுக்கு என் கிட்டே பேசணும்.”

 

இத்தனை நாள் அவள் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்பை காணவில்லை என்று எண்ணிக் கொண்டே..”இந்தா மாலதி எனுக்கு சுத்தி வலிச்சு பேசத் தெரியாது உன்னை ரொம்ப புச்சு கீது என்ன கண்ணாலம் கட்டிகிரியா.”

 

“என்ன சொல்றீங்க?கல்யாணமா என்ன ஏன் என் கிட்டே கேட்கறீங்க.”

 

“நீ ஒன்னியும் கவலைபடாத கண்ணு உங்கப்பனை கண்டு பயப்படாம சொல்லு நான் வுடு பூந்து இஸ்துகினு வந்துடுறேன்.”

 

“என்ன சொல்றீங்க அண்ணே? நான் எதுக்கு எங்க அப்பாவை கண்டு பயப்படனும்.  நீங்க எதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசிட்டு இருக்கீங்க. “

 

“இந்தா! என்னா அண்ணனேன்னு சொல்றே? இன்னா விலாடுரியா மவளே எதுக்குடி என்னை பாத்து பாத்து சிரிச்சிட்டு போன.”

 

“அதுவா உங்களப் பார்த்தா இந்த காதல் படத்துல கடைசி சீன்ல வர பரத் மாதிரியே இருந்துச்சு அது தான் எனக்கு சிரிப்பா வரும் .”

 

“ஒ..அப்போ நான் ஹீரோ மாதிரி கீறேன் நினைச்சு தானே சிரிச்சே.”

 

“ஐயோ! அண்ணாத்தே அக்கா சொல்லுது நீ அந்த படத்துல வர பையித்தியகார பரத் மாதிரி கிரீயாம்.”

 

“என்னாது!” என்று அதிர்ச்சியாகி தலையில் கை வைத்தபடி ரோட்டிலேயே உட்கார்ந்து விட்டான்.

 

“இப்படி தான் ஆவும்ன்னு எனுக்கு முன்னாலேயே தெரியும். ஏண்டா தெருவுல போறவ கிட்ட எல்லாம் லூசு பயன்னு பேச்சு வாங்கன்னும்ன்னு தலை எழுத்தா.”

 

அன்று முழுவதும் அதிர்ந்த நிலையிலேயே அமர்ந்திருந்தான். எல்லோருக்கும் அவனின் நிலை சிரிப்பை அளித்தாலும் ஒரு பக்கம் பாவமாக இருந்தது. இரவு நேரம் மெதுவாக எழுந்து சென்று ஒரு பாட்டில் சாராயத்தை வாங்கி கொண்டு அமர்ந்தான். அதை பார்த்த பொன்னம்மாள் ராசுவிடம் கண்ணை காண்பித்து அவனை குடிக்க விடாமல் செய்யுமாறு சொல்ல, ராசு அழகுவிற்கு தெரியாமல் சாராய பாட்டிலை எடுத்து விட்டு பெப்சியை அதில் ஊற்றி வைத்து விட்டான்.

 

மெல்ல பாட்டிலை தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டவன் அது உள்ளே இறங்க இறங்க “என்னை பாத்து எப்படி டா பைத்தியகாரன்னு சொன்னா?”

 

“நான் என்ன லூசு மாதிரியா இருக்கேன்.அதெப்படிடா என்னை பாத்து லூசுன்னு சொன்னா.”

 

“ஏண்டா! நீ பெப்சின்னு தானே சொன்னே இவன் என்ன இப்படி தண்ணி போட்ட மாதிரி பேசிகினு இருக்கான்.”

 

அதானே நம்ம அண்ணாதே எல்லாத்துலையும் ஸ்பெஷல் தானே. தண்ணி போடாமலேயே தண்ணி போட்ட மாதிரி பேசிகினு இருக்கு பாரு.”

 

         அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை

         அவ நிறத்த பாத்து சிவக்கும் சிவக்கும் வெத்தல

         அவ அலக சொல்ல கூட வார்த்தை பத்தல

         அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

 

“டேய்! இன்னாடா இவன்! கண்ணாலம் கட்டுரதுக்குள்ள நம்மள கொண்டு கீழ்பாக்கத்துல கொண்டு விட்ருவான் போல கீது.”

 

“ஆமாம், இப்போ இது பாடுறதை பாத்தா எனக்கு அந்த சரக்கை எடுத்து அடிச்சிடுவேன் போலருக்கு. சொம்மா டென்ஷன் ஏத்திகினே இருக்கு இந்த அண்ணாத்தே.‘விடு ஆத்தா நாளை காலையில தெளிஞ்சிடும்.”

 

“ஏண்டா குடிச்சா தான டா தெளியுரதுக்கு. இவன் தானே குடிக்கவே இல்லியே.”

 

“அது உனுக்கும் எனுக்கும் தெரியும். காலையில எழுந்துகினு நமீதா படம் முன்னாடி ரெண்டு கும்பிடு போட்டுசுன்னா அல்லாத்தையும் மறந்திட்டு வேலைய பாக்கும். நீ போய் தூங்கு ஆத்தா.”

 

                               அத்தியாயம் – 5

 

அவன் சொன்னது போல காலையில் எழுந்த அழகு எதுவுமே நடக்காதது போல வேலையை பார்க்க ஆரம்பித்தான். ஆனால் மனதினுள் அவள் சொன்ன வார்த்தைகள் ஊசி தைத்தது போல் இருந்ததை மட்டும் உணர்ந்து நாமளும் எத்தினி பேர இந்த மாதிரி நினைச்சு இருப்போம் என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.” இருந்தாலும் எனக்கு நமீதா  மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கட்டும் சாமி என் தம்பிக்கு மொட்டை அடிச்சு விருந்தே வச்சிடுறேன்.”( இத்த மட்டும் அவன் கேக்கணும் ஓட ஓட விரட்டி அடிக்க மாட்டான்)’ படத்தில் இருந்த நமீதா அவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு மச்சான் எவ்வளவு பட்டாலும் நீ திருந்தவே மாட்டியா என்று அடித்துக் கொண்டாள்.’

 

 

பொன்னமாளும் ராசுவும் வந்து சென்று பதினைந்து நாட்கள்  ஆன நிலையில் கூழ் ஊத்தும் விழாவிற்கு செல்ல மூவரும் கிளம்பி அடையாறு வந்து சேர்ந்தனர். பொன்னமாள் வீட்டு விழா போல அவளின் அண்ணன் குடும்பமும் வந்து இறங்கி இருந்தது. அந்த ஏரியாவே தோரணம் கட்டி எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய ஸ்பீக்கர் கட்டி பாட்டு அலறிக் கொண்டிருந்தது. மக்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விசேஷம் போல கூடி கூடி பேசிக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அழகு அந்த நிர்வாகிகளுள் ஒருவன் அதனால் கோவில் வேலைகளில் மும்மரமாக இருந்தான். இவர்களை பார்த்தவுடன் வந்து வா அத்தே என்று சொல்லி அயித்தையை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்.

 

“என்னா சுந்தரி எப்டி கீறே. ஆளு நல்லா தான் வளந்து நிக்கிறே.”

 

நீ தான் எங்களை பார்க்க வாறதே இல்லியே மாமா அதான் அப்படி தெரியுது.”

 

“நான்தான் வாறது இல்ல நீயும் உங்கொக்கா மகாராணியும் வரலாமில்லை.”

 

“டேய்! வந்தவுடனே அவ கிட்டே மல்லு கட்டாதே. அவளை பத்தி உனக்கு தெரியாது .”

 

“அவ என்ன அம்புட்டு பெரிய அப்பாடக்கரா?”

 

அவன் மறுபடியும் பேச வாயை திறக்கும் நேரம் “அண்ணாத்தே பூக்கடையிலே இருந்து ஆள் வந்து இருக்கு. பூ அலங்காரத்துக்கு எவ்வளவு பூ வேணும்ன்னு கேக்கணுமாம் உன்னை வர சொல்லுறாங்க .”

 

“இந்த வரேன். அத்தே எனக்கு வெளில வேலை இருக்கு முடிச்சிட்டு வந்து உங்களாண்ட பேசுறேன்.”

 

“சரி அழகு நீ போய் வேலைய பாரு.”

 

 

 

எல்லோரிடமும் சகஜமாக பேசிய பூங்கொடி அழகுவிடம் மட்டும் பேசாமல் அவனை தவிர்தாள். வந்த அன்றே அவளை பார்த்தவுடன் அழகுவின் மனதில் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. போகப்போக அவள் அவனை தவிர்க்கவும் மற்ற அனைவரிடமும் சகஜமாக பேசவும் அவள் மேல் கோபம் வர ஆரம்பித்தது.

 

மூன்றாவது நாள் கூழ் ஊற்றும் அன்று வழக்கம் போல தன் அறையில் கதவை தாளிடாமல் கும்பிட்டுக் கொண்டு நின்றிருந்தான் அழகு. அப்போது வேகமாக உள்ளே நுழைந்து கதவின் மேல் சாய்ந்தவாறு நின்று கொண்டாள் பூங்கொடி.

 

“இன்னா பூங்கொடி நீ ஏன் இங்கே வந்தே?”

 

“உன் ரூம்ப பாக்கலாமுன்னு வந்தேன் மச்சான்.”

 

“இதென்ன பொருட்காட்சியா சுத்தி பாக்க போ புள்ள வெளிய.”

 

“அதென்ன அல்லா நடிகை படத்தையும் வச்சிகினு கீற.”

 

“எனுக்கு புச்சிகீது வச்சு இருக்கேன் உனக்கென்ன .”

 

“வாத்து மாதிரி இருக்கிறப்பவே இந்த பேச்சு பேசுறியே மச்சான். நீ மட்டும் இன்னும் கொஞ்சம் உசரமா இருந்தா என்னா ஆட்டம் போடுவே?”

 

“ஏய் இன்னா கொழுப்பா வாத்துன்ற ?”

 

மெதுவாக அவனருகில் வந்து நின்று இடுப்பில் கை வைத்தபடி” நீ மட்டும் என்னை தார் டின்னுன்னு சொல்லுவே நான் சொன்னா வலிக்கிதோ?”

 

“இந்தா! இங்கே இருந்து மொதல்ல வெளில போ. ஆத்தா பாத்தா அசிங்கமா பூடும்.”

 

“தோ பாருடா! நான் என்னவோ இவரை கலீஜ் பண்றா மாதிரி சீன் போடுறாரு.”

 

“ஏண்டி நீ பொண்ணு தானே! மாமனை பார்த்தா வெட்கப்படனும் இப்படி நின்னுகிட்டு பேசிகினு இருக்க கூடாது.”

 

“அந்த வெட்கத்தை வெச்சி ஒரு குடம் தண்ணி பிடிச்சார முடியுமா. ஆனாலும் நீ ரொம்ப கெட்டு போயிட்டே அழகு.”

 

“என்னாது அழகா ? அடிச்சேன்னா மூஞ்சி முகரை எல்லாம் திருப்பிக்கும் சொல்லிபுட்டேன் அழகாம் அழகு இவ பேர் வச்ச மாதிரி இல்ல கூப்பிடுறா.”

 

“ஆமாம் நீ என்னவோ கண்ணாலம் பண்ணிக்க மாட்டேங்குரியாமே அயித்தை போறவங்க வாரவங்க கிட்டே புலம்பிகினு கிடக்கு .”

 

“அத்த பத்தி உனுக்கு ஏன் இம்புட்டு கவலை?”

 

பேசிக் கொண்டே அவள் அவன் புறம் நகர அவனோ பின்னே செல்ல அதற்கு மேல் செல்ல முடியாமல் சுவர் வந்து விட அதில் சாய்ந்து விட்டான். அவளோ அவனின் இருபுறமும் கையை வைத்துக் கொண்டு நிற்க.

 

“ஏய் இன்னா பண்ற நீயு…”

 

“ஏன் படம் பாத்ததில்ல. அதில இந்த ஹீரோ ஹீரோயினிய இப்படி தான் புடிப்பாரு..”

 

“அதுக்கு நீ ஏண்டி என்ன புடிச்சு இருக்கே…”

 

“இல்ல நீ இந்த நமீதவா கட்டணும்ன்னு சொல்லிகிரீயே அது மட்டும் உன்னாண்ட பக்கத்துல இப்படி நின்னுச்சு வச்சிக்கோ. நீ அது இடுப்பளவு கூட வர மாட்டியே உனுக்கு என்னா ஆசை.”

 

அவளின் நெருக்கத்தில் மனம் சஞ்சலமடைய ஆனால் தன்  கனவை நினைத்து அதை தடுக்கும் முயற்சியில் இறங்க அவளின் முகத்தை பார்க்காவண்ணம் அவளிடம் இருந்து தப்பிக்க பார்க்க.

 

“என்னாது இது ஆம்பளகனக்கா பண்ணிகினு கீறே.”

 

‘பின்ன இன்னா செய்ய சொல்ற மச்சான். அல்லா படத்துலேயும் ஹீரோவே ஹீரோயினைய இப்படி புடிபாரா அதுக்கு தான் மாத்தி நான் உன்னைய புச்சேன் .”

 

“கருவாடு வாசம் சும்மா கும்முன்னு தூக்குது புள்ள” என்றான் அவனறியாமல்.

 

“ச…நாதாரி பொம்பள புள்ளைய வாசம் புடிக்காம கருவாட்டு வாசனைய புடிக்குது இதெல்லாம் கட்டிக்கிட்டு.”

 

இனி, இப்படியே இருந்தால் அவளை கட்டுவதற்கு சம்மதம் சொல்லிவிடுவோம் என்று உணர்ந்து அவளை தன்னிடம் இருந்து பிரிக்க அவளை வார்த்தையாலேயே காயப்படுத்த தொடங்கினான்.

 

“வாடி வா! இதுக்கு தானே வரிஞ்சுகினு வந்தியா , யாரையாவது மடக்கி போட்டா சோத்துக்கு பஞ்சமில்லாம போய்டும்ன்னு வளைச்சு போட பாக்குறியா?”

 

ரெண்டு நாட்களாக அவள் தன்னை கண்டு கொள்ளாமல் தவிர்த்து அவள் சுற்றியது  மனதில் அவள் மேல் ஈர்ப்பு இருப்பதை உணராமலே அவளை காயபடுத்தும் வார்த்தைகளை அவளை நோக்கி வீசி விட்டான். வீரியமிக்க வார்த்தைகள் வெளி வந்த பின்னரே என்ன பேசினோம் என்று உணர்ந்து அதிர்ந்து விட்டான்.

 

அவனின் வார்த்தைகள் அவள் மேல் கொதி நீரை ஊற்றியது போல் உணர்ந்தாள். என்ன வார்த்தை சொல்லி விட்டான். தந்தை இறந்ததில் இருந்து தாயையும் தங்கையையும் பார்க்கும் முழு பொறுப்பை பனிரெண்டு வயதில் இருந்து செய்து கொண்டு இருக்கிறேனே. ஒரு நாளாவாது யாரிடமாவது கை ஏந்தி இருக்கிறேனா என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டான். அவனிடம் எதுவுமே பேசாமல் பொம்மை போல அறையை விட்டு வெளியில் வந்து நின்றாள்.

 

அவள் வெளியில் சென்ற பின்னரே தான் சொன்ன வார்த்தைகளை நினைத்து ஐயோ அன்னைக்கு என்னை பார்த்து ஒருத்தி சொன்னப்போ எனுக்கு இப்படி தானே வலிச்சுது இப்போ அவளுக்கு அப்படி தானே இருக்கும் என்று அவள் பின்னே ஓடி வந்தான். கோவித்துக் கொண்டு போக போகிறாள் எப்படி அவளை தடுத்து நிறுத்துவது என்று.

 

வெளியில் ஒருவரையும் காணவில்லை பொன்னமாள் மட்டும் உட்கார்ந்திருந்தார்.

 

“எங்க ஆத்தா ஒருத்தரையும் காணும். இந்த பூங்கொடி வந்தாளே எங்கே போனா?”

 

“அல்லாரும் கோயிலாண்ட போய்கினாங்க அழகு.”

 

“இன்னாது கோயிலான்டையா ?”

 

“நான்தான் போவ சொன்னேன். ஆத்தா பொடவை எல்லாம் ஏலம் போடுறாங்க இல்ல அத்த போய் பாத்துபுட்டு ஆளுக்கு ரெண்டு பொடவைய எடுத்தார சொன்னேன்.”

 

“இன்னாது..”

 

“ஐய! இன்னா நீ மொதலே இருந்து இப்படிக்கா கரென்ட் அடிச்ச நாய் கணக்கா நின்னுகின்கிரே..”

‘எம் மேல் காண்டு ஆகி இருப்பான்னு நினைச்சேனே இன்னா ஆச்சு அவ பாட்டுக்கு என்னிய புலம்ப விட்டுட்டு போயிட்டாளே.”

 

“உனுக்கு இன்னாதான்டா ஆச்சு? புலம்பிகினே கீறே போய் வேலைய பாரு அழகு.”

 

தலையை சொரிந்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தவன்.அவளுக்கு வார கோவத்துக்கு என்னை தூக்கி போட்டு மிதிக்கணும் இல்ல. இங்கே இருந்து போயிருக்கணும் ரெண்டும் செய்யல. என்னிய மண்டைய காய விட்டுட்டு அவ போய் கோவிலாண்ட நின்னுகினா.

 

அதன் பின்னர் வந்த இரு நாட்களும் திருவிழாவில் சென்றது.பூங்கொடி இவன் பக்கமே திரும்பாது எல்லோருடனும் இருந்தாள். அழகுவிற்கு அவளின் ஒதுக்கமே அவள் பேரில் ஒரு ஈடுப்பாட்டையும் மனதில் இருந்த குற்ற உணர்ச்சியும் சேர்ந்துக் கொள்ள அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ஆரம்பித்தான்..

 

திருவிழா முடிந்த பின்னர் எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்று விட்டனர். அழகுவின் மனமோ எதிலும் நிலை கொள்ளாமல் தவித்தது . அவ என்னை கன்னாபின்னான்னு கத்தி இருந்தாலாவது கண்டுக்காம போய் இருக்கலாம் ஆனா, இந்த புள்ள ஒன்னும் சொல்லாம எம் மனசை அலைபாய விட்டுபோட்டு போயிட்டாளே.

 

ஒரு வாரம் மந்திரித்து விட்ட கோழி போலவே அலைந்தவன் இனியும் தாங்காது என்று எண்ணி பட்டினபாக்கதிற்கு கிளம்பினான்.

 

 

                                 அத்தியாயம் – 6

அவளைப் பார்க்கலாம் என்று கிளம்பி விட்டாலும் மனதில் அவளை பேசிய வார்த்தைகள் வந்து வந்து நெஞ்சில் மோதியது. உள்ளுக்குள் பயத்துடனே அவள் தன்னை எப்படி எதிர்கொள்வாளோ என்ற எண்ணத்துடனே அவளின் வீட்டை நோக்கி நடந்தான்.

 

அவளின் வீட்டை நெருங்க நெருங்க வீட்டின் வாசலில் யாரோ ஒரு பெண் நின்று கத்திக் கொண்டிருந்தாள். அக்கம்பக்கம் உள்ளவர் யாரும் இது ஏதோ நிதமும் நடக்கும் நிகழ்ச்சி போல அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். பூங்கொடிக்கு கடன் கொடுத்தவள் போல கடனை திருப்பி கேட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

சுந்தரி கையை பிசைந்து கொண்டு அழும் நிலையில் நின்று கொண்டிருந்தாள். பூங்கொடியை காணவில்லை. அயித்தையும் இருமலுடன் நின்று கொண்டிருந்தார். அவர்களின் நிலையை கண்டு உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த வீரம் பொங்கி எழுந்தது.

 

“யக்கா இன்னாக்கா, ஆம்பள இல்லாத வுட்டுல வந்து கூவிகினு கீறே.”

 

“ஏய்! ஆருடா அது சம்மன் இல்லாம ஆஜரவுறது.”

 

“நான் யாரா இருந்தா இன்னா உனக்கு? எம்புட்டு காசு கொடுக்கணும் சொல்லு.சொம்மா பொம்பள புள்ளைய மிரட்டிகினு.”

 

“ஒ…அம்புட்டு பெரிய ஆளா நீயு.சரி பத்தாயிரத்த எடுத்து வையு.அந்த சிறுக்கி ஐயாயிரம் வாங்குனா வட்டி ஒரு ஐயாயிரம்.”

 

“இன்னாது பத்தாயிரமா?பொம்பள புள்ள இளிச்ச வாயா இருந்தா இப்படி தான் ஏமாத்துவியா?”

 

“டேய்! கபாலி இன்னாடா இவன் ஏரியாக்கு புச்சா என்னாண்ட இப்படி பேசிகினு கீறான்.”

 

“ஏய் பேமானி அக்கா ஆருன்னு தெரியாம பேசுறே.”

 

“யாரா இருந்தா எனுக்கு இன்னாடா.ஐயாயிரம் தரேன் தூக்கின்னு ஓடி போய்கினே இருங்க.”

 

நம்ம அல்டாப்பு நிலைமையின் தீவிரத்தை உணராமல் அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்க சரோஜாவின் ஆட்கள் அவனை ரவுண்டு கட்ட,சரோஜாவின் கணவன் அந்த ஏரியாவின் தாதா. இதை எல்லாம் அறியாமல் உதார் விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.சுந்தரி பயந்து போய் ஒரு பொடியனை அழைத்து பூங்கொடிக்கு செய்தி சொல்லி அனுப்பினாள்.

 

மார்கெட்டில் இருந்து பூங்கொடி ஓடி வருவதற்குள் இங்கே சரோஜாவின் கணவன் அல்டாப்பை ஒரு கையால் தூக்கி சுத்திக் கொண்டிருந்தான்.

 

“யக்கா இன்னாக்கா இது நான்தான் கடனை அடைச்சிபுடுறேன்னு சொன்னேன் இல்ல.அத்த இறக்கி வுட சொல்லுக்கா.”

 

“அவன் இன்னா பேச்சி பேசுறான். நான் கண்டி இல்லேன்னு வையு பசங்க பொருள எடுதாந்துட்டாங்க.இந்நேரம் கொடலு வெளில வந்துகினு இருக்கும்.”

 

“யக்கா அதுவே புள்ள பூச்சிக்கா.சொம்மா உதார் உடுமே தவிர அதுனால ஒன்னும் பண்ண முடியாதுக்கா வுட்டுட சொல்லுக்கா.”

 

‘தா பூங்கொடி! எம் புருஷனை பத்தி தெரியுமில்ல தம்மாதூண்டு இருந்துகினு என்னா பேச்சு பேசிபுட்டான் இந்த கிறுக்கன்.”

 

“யக்கா போனா போகுதுன்னு மன்னிச்சு வுட்ர சொல்லுக்கா.”

 

“இந்தா அத்த கீழ வுடு பூங்கொடி நான் பாத்துக்கின்னு சொல்து..அவன் சொம்மா உதார் பார்ட்டியாம்..இந்தா பாரு பூங்கொடி இன்னும் ரெண்டு நாளுல என் காசு கைக்கு வந்தாகணும்.இவன் பண்ணின அலம்பல என் பொழைப்பே போச்சு.”

 

“நீ போக்கா நானே கொண்டாந்து கொடுக்கிறேன் காசை.”

 

அவர்கள் அனைவரும் சென்ற பின்னர் தலை கிறுகிறுத்து போய் நின்ற அல்டாப்பை வீட்டுக்குள் கூட்டி வந்து அமர வைத்து தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள். சற்று நேரத்தில் நிதானத்திற்கு வந்தாலும் உடல் வெட வெடவென்று நடுக்கிக் கொண்டிருந்தது.

 

“ஏன் மச்சான் உன் அல்டாப்பை எல்லாம் என்னாண்ட,  உங்க ஆத்தவாண்ட காட்டுற சரி.வெளில போய் காட்டுன என்ன கதிக்கு போவோம்ன்னு தெரிஞ்சுகினியா.நான் மட்டும் வரலேன்னு வையு. இந்நேரம் உனக்கு சங்கு ஊதி இருப்பானுங்க.ஒவ்வொருத்தன் கையிலேயும் பொருள் இருந்துச்சு.ஆராண்ட இன்னா பேசுறதுன்னு கணக்கு வேணாம்.என்னவோ போ சுந்தரி மட்டும் சொல்லிவுடலேன்னு வையு.நாளைக்கு பால் தான்.”

 

தலையை நிமிர்ந்து பார்க்காமல் உட்கார்ந்திருந்தான் அல்டாப்பு.

 

“பூங்கொடி விடு தம்பி பயந்து போய் கிடக்கு. நீ வேற.”

 

அல்டாப்பு மனதில் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் ஒரே நாளில் மாயமாய் மறைந்து போன மாதிரி உணர்ந்தான். சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினாலும் மனமோ அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை. ஒரு பக்கம் சரோஜாவின் கணவன் நடந்து கொண்ட முறையில் அதிர்ச்சி அடைந்தாலும் தன் அத்தையின் குடும்ப கஷ்டத்தை முதன்முதலாக நேரடியாக பார்த்த அதிர்ச்சி வேறு எல்லாமும் சேர்ந்து அவனை சிந்திக்க விடாமல் செய்தது.

 

பொன்னமாள் தான் அவனின் தவிப்பை முதலில் உணர்ந்தவர். எப்பொழுதும் எதையாவது பேசிக் கொண்டே திரியும் தன் மகன் அமைதியாய் இருந்ததே ஏதோ பிரச்சனை என்று உணர்த்த என்னவென்று அறியாமல் அவனிடம் சென்று அமர்ந்து அவன் தலையை தடவிக் கொடுத்து ”என்ன ராசா என்ன ஆச்சு ? எப்பவும் இப்படி இருக்க மாட்டியே. எதுனாலும் இந்த ஆத்தா கிட்ட சொல்லுப்பா” என்றாள்.

 

அதுவரை மனதை போட்டு குடைந்து இருந்தவன் தாய் மடியில் படுத்துக் கொண்டு “ஏன் ஆத்தா ஒரு பொண்ணுக்கு வீராமா தகிரியமான ஆம்பளையத் தானே  பிடிக்கும்.”

இன்னா கேக்குற அழகு .”அப்படி எல்லாம் ஒன்னியுமில்ல.அல்லா பொண்ணு தகிரியமானவ தான் கட்டுவேன்னு சொன்னா அப்புறம் தகிரியம் இல்லாதவங்கள கட்டுறது ஆரு.”

 

‘இல்ல ஆத்தா, அதுவே நம்மள நம்பி வருது. அத்த எந்த பிரச்சனை வந்தாலும் முன்னாடி நின்னு தகிரியமா காப்பாத்த வேணாமா? அது இல்லாட்டி ஒரு ஆம்பளையா இருந்து என்ன பிரயோசனம்.”

 

‘இங்கே பாரு அழகு தகிரியமா நின்னு சண்டை போடுறவன் மட்டும் ஆம்பள இல்ல. தன் கூட இருக்கிறவங்களுக்கு அல்லாம் செய்யணும் நினைக்கிறான் பாரு அவனும் ஆம்பள தான்.உன்னைய ஆரு இப்போ என்னா சொன்னான்னு இப்படி புலம்பிகினு கீற.”

 

“இத்தினி நாளு நாம் பாட்டுக்கு என் வாய போட்டு உலப்பிகின்னு இருந்தேன். இப்போ தான் புத்தி தெளிஞ்சு கீது.பூங்கொடிக்கு என்னைய புடிக்குமான்னு ரோசிச்சேன்.”

 

“இன்னாது மெய்யாலுமா சொல்ற அழகு உனுக்கு பூங்கொடிய கட்டிக்க விருப்பமன்னா  சொன்னே .எம்மவனை கட்ட அந்த சிறுக்கிக்கு என்ன கசக்குதா.”

 

‘உனுக்கு உம்மவன் பெரிய ஆளு ஆத்தா.”

 

“இந்தா பாரு அழகு! நீ ஒன்னியும் கவலைபடாத நான் போய் பேசி அவளை இட்டாரேன்.”

 

“அதெல்லாம் ஒன்னியும் வேணாம் ஆத்தா. நான் நாளிக்கு போறேன் போய் அவ வாங்கி வச்சி இருக்க கடனை அடைச்சி புட்டு அல்லாரையும் இங்கேயே கூட்டியந்துடுறேன்.”

 

“என் ராசா இப்போ தான் நல்ல முடிவெடுத்து இருக்கே.உனுக்கு கண்ணாலம் பண்ற அன்னிக்கே ராசுவுக்கும், அந்த சின்ன குட்டிக்கும் பண்ணிடுவோம் .அதுங்களும் எத்தினி நாளைக்கு தான் பாத்துகினே இருக்கும்.”

 

அடுத்த நாள் காலை நேரே சென்று சரோஜாவிடம் பணத்தை கொடுத்து கடனை எல்லாம் அடைத்து விட்டு பூங்கொடி வீட்டிற்கு சென்றான். பூங்கொடியை நேருக்கு நேர் பார்க்க மிகவும் தயங்கினான். முதலில் அவனின் தயக்கம் புரியாத பூங்கொடி அவன் மீது தன்னை அறியாமலேயே கோவம் கொண்டாள். என்ன இது என் மூஞ்சியை பார்க்க கூட பிடிக்கலையா இந்த மனுஷனுக்கு என்று. பின்னர் அவன் கடன் அடைத்த விபரங்களை தன் அத்தையிடம் கூறியதை கேட்டு மலைத்து விட்டாள். தன்னை அறியாமலேயே அவன் தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்ததை உணரவில்லை.

 

அதுவரை அத்தையிடம் பேசிக் கொண்டிருந்தவன் மெதுவாக எழுந்து “அவளருகில் வந்து என்னைய மன்னிச்சிடு பூங்கொடி. அன்னைக்கு உன்னை கண்டபடி பேசிபுட்டேன். எங்க ஆத்தாவே அல்லா கஷ்டத்தையும் தாங்கி என்னிய வளர்ததாலும் நான் ஆம்பளையா இருக்கிறதால உங்களுக்கு இருக்கிற கஷ்டமும் புரியாம பேசிபுட்டேன். உனுக்கு என்னிய பாக்க கூட புடிக்காது தான், தகிரியமே இல்லாத ஆம்பளைய எந்த பொம்பளைக்கு தான் புடிக்கும்.’

 

அவன் வாய் மேல் கையை வைத்து “வேணாம் மச்சான். அப்படி எல்லாம் சொல்லாத. அன்னைக்கு உனுக்கு உலகம் தெரியாது. பொம்பளைங்க கஷ்டம் என்னான்னு புரியாம பேசிபுட்டே. நீயெல்லாம் ஆம்பள சென்மம் எங்கே வேணா படுக்கலாம் எப்படி வேணா இருக்கலாம். ஒருவேளை சோத்துக்கு நிக்கலையா ஒரு நாளாவது நிம்மதியா தூங்கனுமின்னு ஆசைப்படுவோம். ஏன் தெரியுமா? ஆம்பள துணை இல்லாத வீடு ராத்திரியானா எவனாவது குடிச்சிட்டு வந்து கதவை தட்டுவான். சிலநாள் குடிக்காதவன் கூட கதவை தட்டுவான். குடிசை வீடு எவன் எந்த நேரம் உள்ளே நுழைவானொன்னு கையில் கழிய வச்சு கிட்டு உட்கார்ந்து இருப்பேன். தோ அங்க வந்து இருந்த ரெண்டு நாளும் நல்லா தூங்குனோம்.”

 

“உனக்கு இந்த கஷ்டம் எல்லாம் புரியாது உங்க ஆத்தாவ கேட்டா அது சொல்லும் ஆயிரம் கதை. அதுவும் என்னைய மாதிரி தனியா இருந்து தானே உன்னைய வளர்த்துச்சு.”

 

“ஆனா, தகிரியம் இல்லாத ஆம்பளைய புடிக்காதுன்னு சொன்னியே ..எதுயா மனசு? இதோ எங்க கஷ்டத்தை பாத்து உடனே ஓடி வந்து உதவி பன்றியே இது தான்யா உண்மையான மனசு. இதுதான் ஆம்பளைக்கு அழகு. எனுக்கு உடம்பால சண்டை போடுற ஆம்பள வேணாம் .அடுத்தவங்க கஷ்டம் பாத்து ஓடி வரியே இந்த ஆம்பள போதும்மையா.”

 

“நிசமாலுமா சொல்றே புள்ள. உனுக்கு என்னைய புடிச்சு இருக்கா? எங்க ஆத்தா சொல்லும் உன் வாய்க்கு எங்கியாவது அடிபட போறேன்னு ஆனா, இப்படியாகும்ன்னு நினைக்கல பூங்கொடி. அன்னிக்கு நான் இங்க வந்ததே உன்னாண்ட மன்னிப்பு கேக்கலாமின்னு தான். ஆனா, பாரு நீ என்னை காப்பாத்திபுட்டே புள்ள.”

 

 

 

“சரிதான் வுடு மச்சான்.இனிமே கண்டி ரோசிச்சு பேசு.”

 

“அதெல்லாம் மாத்திக்க முடியாது.”

 

“அப்போ எவனாண்டையாவது உதை வாங்கிகினே இருக்க போறேன்கிரியா.இன்னைக்கு நான் இருந்தேன் காப்பாத்த.”

 

“என்ன மன்னிசிடுபுள்ள.இனி, என்னைய காப்பாத்த நீ எப்பவும் என் கூட இருக்கணும்.என்னைய கட்டிகிரியா?”

 

‘தோ பாருடா! இவரு பேசுறத பேசிபுட்டு கிழவிய தூக்கி மனையில வைன்னு சொல்லுவாராம் நாங்களும் ஈ இளிச்சுக்கிட்டு இவருக்கு கழுத்தை நீட்டனுமாம்.’

 

“உனுக்கு தான் என்னிய பத்தி நல்லா தெரியுமில்ல.”

 

“ அதுக்கு நீ எவனாண்டையாவது வம்பு இளுத்து வைப்பே அவன் தூக்கி போட்டு மிதிப்பான். நான் அவன் காலில வுந்து உன்னைய காப்பத்தனுமா.”

 

“வுடு வுடு இனி நீ இதெல்லாம் பழகிக்க வேனாவா?”

 

“அது சரி! நீ என்னவோ நமீதாவ மாதிரி பொண்ணு வேணுமின்னு சொல்லிகின்னு திரிஞ்ச.”

 

“இப்போ நீ தான் என் கண்ணுக்கு நமீதா.”

 

“இருக்கும் இருக்கும்..ஏன்யா உனுக்கு வெக்கமா இல்ல ஹீரோ தான் ஹீரோயினிய காப்பத்தனும்.இங்கே உன்னைய காப்பாத்த நான் வேணுமா?”

 

“அதுக்கு இன்னா இப்ப! அல்லாரும் ஹீரோவா இருந்துகினா என்னை மாதிரி டம்மி பீசும் இருந்தாதானே ஆட்டம் கலை கட்டும். உனுக்கு என்னைய பாத்தா ஆசை வரவே இல்லையா பூங்கொடி”

 

“உன்னைய பாத்தா ஆசையா?வாந்தி தான் வருது.இன்னாத்த சொல்ல.”

 

‘பாத்தியா பூங்கொடி..என்னைய பாத்தவுடனே வாந்தி எடுக்க வைக்கிறேனா நான் விவரமான ஆளு தானே.”

 

தலையில் அடித்துக் கொண்டு…”.இந்த அல்டாப்புக்கு ஒன்னும் குறைச்சலில்லை .”

 

இதானுங்க என்னோட காதல் கதை..நமீதா மாதிரி பொண்ணு வேணுமின்னு நினைச்சு கடைசில விஜயசாந்தி மாதிரி  என்னிய காப்பாத்தின பூங்கொடியவே கண்ணாலம் கட்டிகிட்டேன்..அவளுக்கு என்னாண்ட புச்சதே என் அல்டாப்பு தான்..இப்பவும் அங்ககே வாய வுட்டுபோட்டு வாங்கி கட்டிக்குவேன்…ஆனா என்ன என் பூங்கொடி கீறா என்னிய காப்பாத்த..

Advertisements